(85) ஹிட்லர் ஸ்டைல் ஜெயலலிதா!
இந்தப் படங்கள மொதல்ல மக்கள்ட்ட கொண்டுபோய் சேர்க்கணும். அப்படிச் சேர்த்தா தானே, என்ன மாதிரி நாசகாரத்தனத்த எப்படி யெல்லாம் அதிகார மமதையில ஆடுனாய்ங்கங்கிறது தெரியும். அந்தப் படத்த வச்சித்தான அதனோட கொடூரத் தாக்கத்த மக்கள்ட்ட கொண்டுபோய் சேர்க்க முடியும் அப்படிங்கிறதுனால, லெனின் தம்பிட்ட சொல்லி, படங்களுக்கு மாத்திரம் 4 பக்கம் எக்ஸ்ட்ரா வச்சிக்கலாம்ங்கிற மாதிரி டிஸ்கஸ் பண்ணுனோம். அப்பதான் தம்பி "ஆமா... அதுவும் நல்ல ஐடியாதான்ணே''ன்னு சொன்னாரு. அடுத்த இதழ்ல போலீஸ்காரய்ங்க நக்கீரன் ஆபீஸுக்குள்ள செஞ்ச அலப்பறைகள, பக்கம் பக்கமா படங்கள வச்சு சொல்றோம்.
பெருமாள் சார் என்ன சொன்னாருன்னா... "போலீஸ்காரங்க, நாம தகராறு பண்ணுவோம்னு நெனைச்சிக்கிட்டு கையில குண்டாந்தடியோடயும், லத்தியோடயும் உள்ள வந்து... நாம எதுத்து அராஜகம் பண்ணுவோம்னு நெனைச்சி, நம்மள வம்புக்கு இழுப்பாங்க. நாம அதுக்குப் பலியாகி அவங்க போடுற ஸ்கெச்சுல மாட்டிக்கக்கூடாது... ஜாக்கிரதை''ன்னு எச்சரிச்சாரு.
ஒரு பழமொழி சொல்லுவாங்க. "இறைக்கிறவன் இளிச்சவாயன்னா மாடு மச்சான்னு சொல்லுமாம்' அந்தக் கணக்கா நாம விவரமா இல்லாட்டா, வர்றவய்ங்க நம்ம தலையில மொளகா அரைச்சுப்புடுவாய்ங்க...
நாங்க அதுல ரொம்பவே தெளிவா இருந் தோம். நாம வர்றத எதித்து நிக்கிறோம். வந்தவன் அடிச்சாலும் அந்த அடிய வாங்கிக்கணும்ங்கிறதுல தெளிவா இருந்தோம்.
ஏன் நாம அடிவாங்க தயாரா இருக்கோம்னு சொல்றேன்னா... வந்தா நானும் இடுப்புல அருவா வச்சுருக்கேன் ஒரே சீவா சீவிருவேன்னுலாம் பந்தா பண்ண முடியாது, பண்ணவும் கூடாது. அப்படி ஏதாச்சும் அருவாளச் சுத்துனா ஜென்மத்துக்கும் எந்திரிச்சுடாம இருக்கிற மாதிரி... ஏழெட்டு கொலை முயற்சி வழக்கு போட்டு ஆயுசுக்கும் நம்மள டவுசரோட உள்ள வச்சுருவானுவோ... அம்புட்டுதான் நக்கீரன் சோ- முடிஞ்சுது.
அப்போ எடிட்டோரியல்ல இருக்கிற தம்பிகள் எல்லாருமே அவங்க செஞ்சுக்கிட்டிருந்த வேலைய விட்டுட்டு, ஒண்ணும் நடக்காத மாதிரி... அதாவது "பத்திரிகைக்கான எந்த வேலையும் நாங்க செய்யல' அப்படின்னு போலீஸ் நம்பணும்ங்கிறத சரியா பண்ணுனாங்க.
ஜெயலலிதாவோட இன்னொரு மூஞ்சி என்னன்னா...? இந்த அராஜகத்த யாரும் மக்கள்ட்ட கொண்டு போய் சேர்த்துறக்கூடாதுன்னுதான், முதல்நாள் இந்தச் செய்திய கவர் பண்ணுன பத்திரிகை, டி.வி.க்காரங்கள எல்லாம் தாக்குனாங்க. அதையும் மீறி செய்தி பேப்பர், டி.வி.ன்னு வந்துருச்சு. இப்ப நக்கீரன்காரங்க வேற ஸ்பெஷலா எடுத்து எல்லாத்தையும் புட்டு... புட்டு வச்சா அசிங்கமாயிரும்ல... அதனாலதான் அடுத்தநாள் அன்னிக்கு காலையிலயே மண்டகப்படிய கூட்டிட்டாய்ங்க. அவிய்ங்க நோக்கம் பெருசா ஒண்ணும் இல்ல... நான் உசுரோட இருக்கக்கூடாது. நக்கீரன் இனி வெளிவரக்கூடாது. நக்கீரன்ல ஜெனரேட்டர்லாம் வச்சு ஏதோ பண்றாங்கன்னு தெரிஞ்சுதான் இந்தக் கேணத்தனமான பொறுக்கி வேலையயெல்லாம் ஆரம்பிச்சிருக்காய்ங்க.
எப்பவுமே நாம நக்கீரன் புத்தகத்த மக்கள்ட்ட கொண்டுபோய் சேர்க்கிறத சரியா பண்ணுவோம். அப்போ... அத கொண்டுபோய் சரியா பண்ணலன்னா... நாம பட்ட கஷ்டங்கள்லாம் மக்கள்ட்ட போய் சேர்ந்திருக்காது. பத்திரிகைய எப்பாடு பட்டாவது வாசகர்கள்ட்ட கொண்டு போய் சேர்க்கணும். அந்த வேலையத்தான் தம்பிங்கள்லாம் டீமா பாத்துக்கிட்டிருக்காங்க... அத செய்யவுடாம தடுக்கத்தான் போலீஸ் இத்தன முக்கு முக்குது. ஏன்னா அவங்களுக்கும் தெரியும்ல... நக்கீரன இன்னிக்கு நேத்தா அடிக்கிறாய்ங்க? 1991-ல இருந்து இந்த மகராசி என்னிக்கு ஆட்சிக்கு வந்துச்சோ... அன்னில இருந்தே நம்மள பிதுக்க ஆரம்பிச்சிட்டாய்ங்க.
எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. "ஹிட்லர் ஸ்டைல்! ஜெயலலிதாவின் 100 நாள் ஆட்சி!' நக்கீரன் அட்டைப்படம்.
ஏன் கேக்குறீங்க... ஜெயலலிதாவோட 100 நாள் ஆட்சிய விமர்சனம் பண்ணி, அட்டை படச் செய்தி போட்டோம். நான் சும்மா இல்லாம, -நம்ம கலைஞர், எமர்ஜென்ஸி பீரியடுல இந்திராகாந்திய ஹிட்லரா கார்ட்டூன் பண் ணச் சொல்லி முரசொலியில வெளியிட்டாரு. அது ரொம்ப பிரபலமாகி அமெரிக்கா வோட "நியூஸ் வீக்' பத்திரிகையில பிப்ரவரி 16, 1976-ல் வெளியாகி ரொம்ப ஃபேமஸ் ஆச்சு. அவர் போட்ட பாதையில ஜெயலலிதாவ, ஹிட்லர் மாதிரி மீசை வச்சு தொப்பி, மிலிட்டரி டிரஸ், கையில ஸ்வஸ்திக் எல்லாம் போட்டு கம்பீரமாத்தான் போட்டுத் தொலைச்சேன். அவிய்ங்களுக்கு பொசுக்குன்னு கோவம் பொத்துக்கிட்டு வந்துருச்சு... என்னத்த சொல்ல!
பழனியில எனக்கு ஒரு டிபர்மேட்டிவ் வழக்கு. ஒரு அ.தி.மு.க. எம்.பி. போட்டுருந்தாரு. துரை அண்ணன் அப்ப எடிட் டரா இருந்தாரு. ஐயா கணேசன்தான் அப்ப பிரிண்டர். எங்க மூணுபேர் மேலயும்தான் வழக்கு. அப்ப நிருபர் சன் எங்ககூட இருந்தாரு. நாங்க எல்லாரும் பழனியில இருந்தோம். கோர்ட்டுக்கு போறதுக்கு முன்னாடி சன்னுக்கு தெரிஞ்ச ஒரு ஜவுளிக்கடையிலதான் உக்காந்திருந் தேன். அங்க இருக்கும்போது நான் ஆபீஸுக்கு தற்செயலா போன் பண்ணுனேன். அப்ப தான், எனக்கு தீயா ஒரு செய்தி வந்துச்சு....
"அண்ணே... எல்லா ஊருலயும் புத்தகத்த எரிக்கிறாங்களாம். நம்ம புக் விக்கிற கடைகளையும் அடிச்சு நொறுக்குறாங்களாம். ரொம்பவே அடாவடி பண்றாங்களாம்''னு பதட்டத் தோட... பரபரப்பா ஆபீஸ்ல இருந்து சேதி சொல்லுறாங்க. அன்னிக்கு முதநாள் ராத்திரி டிரெய்ன்ல நான் கௌம்புறதுக்கு முன்னாடியே எங்களுக்கு ஒரு போன் வந்துச்சு. அதாவது, "எல்லா ஊருக்கும் வந்து ஏஜெண்டுகளப் பத்தி விசாரிச்சிட் டுப் போயிருக்காங்க அ.தி.மு.க.காரய்ங்க. ஏஜெண்டுகளுக்கு பண்டல் எப்ப வரும்? கடைக்கு எப்ப பிரிச்சுப் போடுவாங்கன்னு எல்லாத்தையும் எல்லா ஊருலயும் விசாரிக்கிறாங்க'ன்னு தொடர்ந்து சேதி வந்துக்கிட்டே இருந்துச்சு.
உடனே நாம டக்குன்னு ஒரு கம்ப்ளைண்ட் எழுதி எடுத்துட்டு, அப்போ நக்கீரன் அட்வகேட்டா ராஜஇளங்கோ அண்ணன் இருந்தாங்க, அவர்ட்ட யும் டிஸ்கஸ் பண்ணிட்டு, டி.ஜி.பி. ஸ்ரீபால் சார்கிட்ட நேர்ல போய்ப் பார்த்தோம்.
ஸ்ரீபால் சார் என்ன சொன்னாங்கன்னா... "நோ... நோ... நோ... டோண்ட் வொர்ரி கோபால்... எந்தப் பிரச்சினையும் வராது. எதுவா இருந்தாலும் நீங்க லோக்கல்ல எஸ்.பி.ட்ட போய் கம்ப்ளைண்ட் குடுக்கச் சொல்லுங்க, எஸ்.பி. எல்லாருக்கும் நான் டைரக்ஷன் குடுத்துர்றேன், லோக்கல் ஸ்டேஷன்ல யும் கொண்டுபோய் குடுங்க'' அப்படின்னு ரொம்ப நம்பிக்கையாவும் கூலாவும் சொன்னாரு.
அத பெருசா நம்பி, "சரி... நமக்குப் பிரச்சினை வராது. நாமதான் டி.ஜி.பி.ட்டயே சொல்லிட்டமே அப்படின்னு'தான் அன்னிக்கி நான் கிளம்பி பழனிக்கு வந்தேன். அன்னிக்கு வழக்குக்கு வரலன்னா... அதுக்கு வேற கைது வாரண்ட் விழும். வாரண்ட் விழுந்துதுன்னா, அத காரணம் காட்டி நம்மள தூக்கிட்டுப் போயிருவாங்க, கைது பண்ணுவாங்க. அதனால அந்த வாரண்ட் விழுந்துறக்கூடாதுன்னு தடுக்குறதுக்காக வேண்டித்தான் நான் அப்ப பழனிக்கே போனேன்.
ஊர்பூரா எழவெடுத்தவய்ங்க ஆளு, பேருன்னு பாக்காம இப்படி இம்சையக் குடுப்பாய்ங்கன்னு சத்தியமா நெனைச்சே பாக்கல. யோசிச்சுப் பாருங்க... நான் ஏதோ ஒரு ஊர்ல கிடக்குறேன். டி.ஜி.பி.கிட்ட பேசுனதும், யார்...யாரெல்லாம் நமக்கு பிரச்சினைன்னு சொன்னாங்களோ அவங்க எல்லார்கிட்டயும், "ஏதாவது பிரச்சின வந்தா இந்தமாதிரி... இந்த மாதிரி டி.ஜி.பி.யே சொல்லிட்டாரு, லோக்கல்ல இருக்கிற எஸ்.பி.கிட்ட விரிவா கம்ப்ளைண்ட்ட இந்த மாதிரி... இந்த மாதிரி எழுதிக் குடுங்க, அவங்க இந்த மாதிரி... இந்த மாதிரி... பாதுகாப்பு தர்றதா சொன்னாங்க'ன்னு உறுதி குடுத்துட்டுத்தான் நம்பிக்கையா பழனிக்கு வந்தோம்.
பழனிக்கு வந்த பிறகுதான் தெரியுது டி.ஜி.பி. ஸ்ரீபால் வகுசு என்னன்னு. நான் அந்த ஜவுளிக்கடை யில உக்காந்தவன்... உக்காந்தவன்தான். கோர்ட்டுக்கே போகாம வரிசையா போன்பண்ணி கேட்டுக்கிட்டே இருக்கேன். அப்பவும் போலீஸ் நம்பிக்கை குடுத்துக் கிட்டிருக்கு... ஆனா, ஒரு எழவு புகாரையும் எடுத்துக்கல.
ந..ல்..ல்..ல்..லா டபுள் கேம் ஆடுறாய்ங்க. நமக்கு ஆபீசுல இருந்து வர்ற தகவல் எல்லாம் வயித்துல புளியக் கரைக்குது. டக்குன்னு நம்ம பெருசு சுந்தர், மோகன், கௌரி மூணு பேர்கிட்டயும் ஒரு வேலையக் குடுத்தேன்.
"நக்கீரன வேற இடத்துல பிரிண்ட் பண்ண ணும், தயாராகிக்கங்க. குறைஞ்சது 2 லட்சம் காப்பி உடனே தேவைப்படும். வேளச்சேரியில ஒரு பிரிண் டிங் பிரஸ் விலாசம் குடுத்து ரீல் இறக்கிருங்க. 10 பைண்டிங்ல கொடுக்கணும், ப்ளான் பண்ணுங்க... ரொம்ப கவனமா பண்ணச் சொல்லணும். அட் டைப்படம் மட்டும் சிவகாசியில அடிச்சு அனுப்புறேன். அட்டையிலதான் ஹிட்லராக்கி இந்த அம்மாவ டிசைன் பண்ணியிருப்போம்.... அந்தம்மாவுக்குப் பயந்து யாரும் அடிச்சுத் தொலையமாட்டாங்க. எல் லாத்தையும் செட்பண்ணி மதுரைக்கு அனுப்புங்க... நான் அங்க இருந்து சப்ளை பண்ணிக்கிறேன்''னு விநியோகம் பண்ற சுரேஷிடம் சொன்னேன்.
வேன் மூலம் சம்பந்தப்பட்ட அட்டை, ஃபிலிம், எல்லாத்தையும் உடனே கலெக்ட் பண்ணி சிவகாசி சபையருக்கு அனுப்புங்க. இல்லையா... யார் மூலமாவது பர்வீன் பஸ்ல குடுத்துவிடுங்கன்னு பரபரப்பா ஆர்டர் போட்டேன். சிவகாசியில நம்ம தம்பி ராமகிருஷ்ணன் நக்கீரன் முகவரா இருந்தாரு. அதேநேரம் அங்க பிரிண்டிங் பிரஸ்லயும் வேல பாத் தாரு. அவருக்கு போன்பண்ணி, இப்பவே சபையர் கண்ணன் அண்ணாச்சிகிட்ட போய் பழனி ஜவுளிக் கடை நம்பருக்கு போன் போடச் சொன்னேன்.
இதுக்கு இடையில, "நக்கீரன் எரிப்பு சம் பந்தமாவோ, நக்கீரன் முகவர்கள் தாக்கப்பட்டது சம்பந்தமாவோ எந்த புகார் வந்தாலும் கண்டுக் காம... குப்பையில போடுங்க'ன்னு அறிவுறுத்துனதே டி.ஜி.பி. ஆபீஸ்ல இருந்துதான்ங்கிறது பின்னாடி தான் எங்களுக்கே தெரியும்.
இதனால நான் பழனி கோர்ட்டுக்குள்ளயே போகல... அதுக்குள்ளதான் இங்க தீயா கிடக்கே? அண்ணன் பழனிச்சாமின்னு எங்களுக்கு பழனியில அட்வகேட் இருந்தாரு. அவர்கிட்ட நம்ம சைடுல உள்ள சீரியஸான நெலமைய எடுத்துச் சொல்லி, "எப்படியாவது ஒரு வாய்தா மட்டும் வாங்குங்க. இல்லன்னா நான் அதுக்காக உள்ள வந்து நின்னா... பிரச்சினை இன்னும் அங்க பெருசாயிரும்... நெறைய வேலைகள் இருக்கு, எப்படிப் போறது?''ன்னு கேட்டேன். அவரு உடனே "நான் பாத்துக் கிறேன்...'னு சொன்னார்.
இவ்வளவையும் ஏன் சொல்றேன்னா...
"கோர்ட்ல வாரண்ட் விழுந்தா கூட பரவால்ல... பத்திரிகைய சரியான நேரத்துக்கு கொண்டுவரணும்'கிற வேலைய பார்க்கணுமேங்கிறதுக்காகத்தான்.
பழனியில ஜவுளிக்கடைக்கு எதிரா நின்னு டீ அடிச்சிக்கிட்டிருந்தோம். அப்ப பழனி ஏஜெண்ட் செல்லமுத்து பரபரப்பா ஓடியாந்தார்.
"அண்ணே போச்சு... போச்சு...''
(புழுதி பறக்கும்)