ss

(81) பொம்பள இடிஅமீன்

"அண்ணே... ரொம்ப ஆச்சரியமான விசயம்.

Advertisment

வாசக உணர்வுகளை ஒரே நேர்கோட்டுக்குள்ளே நீங்கள் பயணிக்கச்செய்துள்ள அசாத்தியமான தொடர் வெளிப்பாடுகள்.

குத்துயிரும் குலையுயுருமாய் நீங்கள் பட்ட ஆன்ம வேதனைகளை எண்ணி ஒருபுறம் நெஞ்சம் கருகுகிறது.

மறுபுறம் இதனை எப்படி இத்தனை இயல்பாய் வாசகனுக்குள் கடத்துவதில் நீங்கள் வெற்றி பெற்றிருக் கிறீர்கள் எனும் பிரமிப்பும் மனசைக் கவ்வுகிறது.

Advertisment

என்னைப் போலவே இந்த உணர்வு போர்க்களம் தொடரை வாசிக்கும் பலருக்கும் ஏற்பட்டு வருவதை இந்த இதழ் துவக்க வாசிப்பில் உணர்ந்து மெய்சிலிர்த்தேன்.

மிக அருமையாக உங்கள் காயங்களை தொடரில் நுட்பமான உணர்வலைகளோடு சொல்லி வருகிறீர்கள் என்று அந்நிய விமர்சகனாகக் கூற முனையும்போது ஒரு குற்ற உணர்வு ஏற்பட்டு கூனிக்குறுகுகிறேன். அமிஞ்சிக்கரை பிளாட்பாரம் மேட்டரையெல்லாம் எளிதாகக் கடக்க வும் முடியவில்லை, மனதுக்குள்ளேயே கரைக்கவும் முடிய வில்லை.

சம்மணம் போட்டு சாலையில் அன்று உட்கார்ந்த நீங்கள், எதிரியை சம்காரம் செய்து இன்று சரித்திர சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். ஆயினும், அந்த குருதிக்கள நினைவுகளை ஒளிப்பதிவு செய்யும்போது புத்தரின் ஞானத்துடன் உங்களின் ரத்த உறவு வாசகன் எப்படிக் கடந்து செல்ல முடியும்?'' -எழுத்தாளர் ஜெகாதா

ஜெயலலிதா, தன்னை ஒரு அயர்ன் லேடின்னு காட்டிக்கிட்டிருந்த ஒரு பொம்பள இடி அமீன். அப்படிப்பட்ட அந்தம்மாவ நாங்க சமாளிச்சு வந்தது எல்லாருமே ஆச்சரியப்படுற ஒரு விஷயம்னு சொல்றாங்க. அதுக்கு ரொம்ப பக்கபலமா நின்னது என்னோட நக்கீரன் தம்பிங்கதான்.

ff

நீங்க கவனிச்சீங்கன்னா தெரியும். காலையில நான் ப்ளாட்பாரத்துல சம்மணங்கால் போட்டு உக்காந்திருக்கேன். ஆபீசுக்கு போன் போடுறேன். வலிகளத் தாங்க முடியாததுக்கு பயம்தான் காரணம். பல நேரங்கள்ல துணிச்சல் உள்ளவங்க எவ்வளவு பெரிய வலியயும் தாங்கிக்கிறதுக்கு பக்குவப்பட்டுருவாங்க. வேற எந்த ஆபீஸா இருந்தாலும் எல்லாத்தையும் போட்டுட்டு "போங்கடா நீங்களும் உங்க வேலையும்...'னு ஒரே ஓட்டமா ஓடியே போயிருப்பாங்க. அத நான் அடிச்சு சொல்லுவேன். ஆனா... நக்கீரன்ல உள்ள தம்பிங்க எல்லாரும் சாப்பிடாம கொள்ளாம, அங்கயே தங்கியிருந்து, கரண்ட் கிடையாது... தண்ணி இல்ல, கொசுக்கடி... காத்து கெடையாது, வேர்த்துக் கொட்டும்... எல்லாத்தையும் சகிச்சிக் கிட்டு... யோசிச்சிப் பாருங்க...!

நான் சிறைச்சாலையில இருந்து தம்பிகளுக்கு கடிதம் எழுதுறப்ப, "சிறை எனக்கு; தண்டனை உங்களுக்கு'ன்னு சொல்லுவேன். இப்பவும் அதேதான். அன்னிக்கு ராத்திரி நான் எஸ்கேப். ஆனா அலுவலகத்துக்குள்ள அடைபட்டு தம்பிங்கதான் நெறைய கஷ்டத்த அனுபவிச்சாங்க. எங்க குடும்பத்துல பெரியய்யாவும், சம்பத் ஐயாவும் வயசானவங்க... இவங்களும் சேர்ந்து கஷ்டப்பட்டாங்க.

இதுக்கிடையில பெருசு என் போனுக்கு வந்து "அண்ணே... ஒரு போலீஸ்காரரு. "பிரகாஷ்ங்கிற பையன் யாரு?'ன்னு கேட்டாரு. நான் "அவரு இங்க இல்லை'ன்னு சொல்லிட் டேன். ஆனா பிரகாஷ் இங்கதான் இருக்காரு, என்ன செய்ய...?''ன்னு கேட்டாரு.

நான் உடனே, "ஐயோ... அந்தத் தம்பிய உடனே கிளப்பி விட்ருங்க. காமராஜை இவர்தான வண்டில வச்சுக்கிட்டு சுத்துனாரு... அப்புறம் எப்படி இங்கிட்டு வந்தாரு? ரெண்டுபேரும்தான் செய்திய எனக்கு குடுத்தவங்க. யாருன்னு போலீசுக்குத் தெரிஞ்சா சட்னிதான். அதிகப் பிரசங்கி... உடனே பிரகாஷை தலைமறைவாகச் சொல்லுங்க''ன்னு சத்தம்போட்டு அனுப்பச் சொன்னேன்.

நக்கீரன் டீம்தான், அ.தி.மு.க. கட்சிக்காரய்ங் களும் போலீஸ்காரய்ங்களும் பண்ணுற கூத்துகள தடுக்குறதுக்கு துரத்திக்கிட்டு ஓடுறது... ஆபீசுக் குள்ள நம்மள அடிக்க வெளியில திரியுற எந்த நாயும் உள்ள வந்துராம பாத்துக்கிட்டது... இதை யெல்லாம் சலிக்காம செஞ்சாங்க. எதுவந்தாலும் அத தைரியமா ஃபேஸ் பண்ணுவாங்கன்ற தைரியத்துலதான் நான் வெளியில இருந்தேன். நான் ப்ளாட்பாரத்துல நிர்க்கதியா நின்னாலும் தம்பிங்க எல்லாத்தையும் பாத்துப்பாங்கன்னு எனக்குத் தெரியும்.

ff

இன்னொரு பக்கம் வெளியூர்கள்ல மேப்படி கட்சிக்காரய்ங்க எழவெடுத்த சங்கதிக இருக்கே... ஆத்தாடி, அது வேற அழுகுணி ஆட்டம்!

"நீங்க நக்கீரன் ரிப்போர்ட்டரா? எங்க இருக்கீங்க? உங்க மேல புகார் வந்திருக்கு. திருவண்ணாமலை போலீஸ் ஸ்டேஷன் வரை வரமுடியுமா? உங்க மேலயும் உங்க ஆசிரியர் மேலயும் புகார் வந்திருக்கு. உங்க ஆபீஸ் எங்க இருக்கு? உங்க ஆசிரியர் வீடு இருக்கிற அட்ரஸ் உடனே சொல்லு''ன்னு ஒரு போலீஸ் அதட்டலா, நம்ம வேலூர் நிருபர் தம்பி ராஜா போனுக்கு வந்திருக்கார்.

இவரு என்ன, ஏதுன்னு யோசிக்கிறதுக் குள்ள அடுத்த போன் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து.

"உங்க அண்ணன் வீடு எங்க இருக்கு? உங்க ஆபீஸ் எங்க இருக்கு...?''

"அடேய்.. அடேய்... மாப்பிள்ளைகளா! மெட்ராஸ்... ராயப்பேட்டையில இருக்குற நக்கீரன் ஆபீஸ விடிய விடிய கொஞ்சம்கூட கேப் விடாம அடிச்சிக்கிட்டிருக்காய்ங்க... வந்தவய்ங்கள செவுளக்கட்டி நாலு இறுக்கு இறுக்கலாம்னு தான் இருந்தோம். என்ன.... எழவு, போலீஸ் கேஸ்னு நம்ம பக்கம் திரும்பிரும்னு பதவிசா கோவத்த யெல்லாம் மூட்ட கட்டி கோழிக் குஞ்சாட்டம் அடகாத்து கமுக்கமாக இருந்துட்டோம். நாமளும் அவிய்ங்களக் கணக்கா சின்னத்தனமா நடந்துக் கிட்டா முடிஞ்சது கத. அதனால நம்மகிட்ட இருக்கிற வாள மடக்கிக்கிட்டு, கேடயத்த மட்டும் வச்சுக்கிட்டோம். இவனுக இப்பதான் ஆபீஸ் அட்ரஸ், ஆசிரியர் வீடு எங்க இருக்கு?, உங்க அண்ணன் வீடு... நொண்ணன் வீடு எங்க இருக்குன்னு, அசலூர்ல இருந்துக்கிட்டு நாட்டாம செய்யுறானுக. அதான் டி.வி.யில வெளுவெளுன்னு வெளுக்குறத படமா போட்டுக் காமிச்சாங்களே... இவிய்ங்க கண்ணு என்ன அவிய்ஞ்சா போச்சு...

சின்ன அடிதடி, செயின் பறிப்பு... இப்படிப் புகார்க வந்தாலே புகாரைத் தூக்கி குண்டிக்கடியில வச்சுக்கிட்டு காசு குடுத்தாத்தான் சி.எஸ்.ஆரே போடுவாய்ங்க. இப்ப என்னடான்னா... போயஸ் கார்டன்ல இருந்து ஜெயலலிதா, சசிகலாவுக்கு எடுப்பு ஒருத்தரு இருந்தாரு... அந்தாளு பேரு பூங்குன்றன். அதே ஆளு மாவட்ட நிர்வாகிகளுக்கு, "யோவ்... கொஞ்சம்கூட லேட் கீட்... பண்ணாம நக்கீரன் கோபால் மேல போலீஸ்ல புகார் குடுங்க'ன்னு உத்தரவே போட்டாராம். ஜெயலலிதா வீட்டு ஆட்டுக்குட்டில்லாம் ஆர்டர் போட்டுருக்கு. ஆளப் பாத்தீங்கன்னா அப்படி... குள்ளக்கத்திரிக்கா கணக்கா உம்மணா மூஞ்சியா இருப்பாப்டி... ரொம்ப அழுத்தக்கார மனுசன் அந்தப் பூங்குன்றன்.

நமக்கு எதிரா அன்னிக்கு முழுசா காய் நகர்த் துனதுல முக்கியமான நபர்... மேப்படி தாடி வாலாதான். (பூங்குன்றன் எப்பவும் தாடியோடதான்) அந்தாளு என்னென்ன உத்தரவு போட்டுருக்கான் பாருங்க...

1. "நக்கீரன கண்டிச்சு ஊர், ஊரா உடனே ஊர்வலம் போங்க...

2. நக்கீரன் விக்கிற கடைகள அடிச்சு நொறுக் குங்க... நக்கீரன தீ வச்சுக் கொளுத்துங்க...

3. "நக்கீரன உடனே தடை செய்யணும்'னு கோஷம் போடுங்க...

ff

4. "நக்கீரன் ஆசிரியர், நிருபர்கள், ஏஜெண்டுகளை கைது செய்து, சிறையில் போடணும்'னு வலியுறுத்தி புகார் கொடுக்கணும்....

எப்படி, எப்படி எழுதணும்ங்கிற ஃபார்மேட்டையும் இந்த ஆளே அனுப்பிச்சிருக்கான்.

அந்த ஆளு போட்ட உத்தரவுக்கு இணங்கி திருவண்ணாமலை, வேலூர், அரக்கோணம், ஆரணி, திருப்பத்தூர், வாணியம்பாடி... இது மாதிரி முக்கிய மான ஊருகள்ல உள்ள கடைக்காரங்கள மிரட்டி, உருட்டி, நக்கீரன் ஏஜெண்ட்டுகளோட செல்போன் நம்பர் எல்லாத்தயும் வாங்கி, ஏஜெண்டுகளையும் மிரட்டியிருக்கானுக.

யப்பப்பா... தல சுத்துதுல்ல...! இது என்ன பிரமாதம்... இதவிட ஸ்பெஷல் ஐட்டம்லாம் இருக்குங்கிற மாதிரி...

வந்தவாசி எம்.எல்.ஏ. குணசீலன் ஒரே குஷியாகி, அனக்காவூர் போலீஸ் ஸ்டேஷன்ல, நம்ம பேருல ஒரு கம்ப்ளைண்ட் குடுக்க... அடுத்த ஒரு மணி நேரத்துல அவரே வந்தவாசி போலீஸ் ஸ்டேஷன்லயே மீண்டும் ஒரு கம்ப்ளைண்ட் குடுத்து, உடனே சி.எஸ்.ஆர். + எஃப்.ஐ.ஆர். போடச் சொல்லி போலீஸ்காரங்கள மிரட்டிட் டுப் போயிருக்காரு.

குற்ற வழக்குகள்ல சிக்குனவரு செய்யார் தொகுதி எம்.எல்.ஏ. முக்கூர் சுப்பிரமணி. இதுதான் சாக்குன்னு ஜெயலலிதாட்ட நல்ல பேரு எடுக்கணும்னு, செய்யாறு போலீஸ் ஸ்டேஷன்ல இவரும் நம்ம மேல ஒரு கம்ப்ளைண்ட் குடுத்தாரு. அவரு நெனைச்ச மாதிரியே அடுத்து அந்தம்மா பழசயெல்லாம் மறந்துட்டு இவர அமைச்சராக்கிருச்சு.

இப்ப புரியுதா... ஏன் எல்லாரும் என்மேலயும் நக்கீரன் மேலயும் விழுந்து பிராண்டுனாய்ங்கன்னு. என்ன அடிச்சாதான்... அவனுகளுக்கு சுடச் சுட தோசை... அதுதான் கணக்கு.

நம்ம மேல போலீஸ் கம்ப்ளைண்ட்டு தர்றதுல அ.தி.மு.க. நிர்வாகிகளுக்குள்ள கோஷ்டிச் சண்ட வேற. அமைச்சருக்கு, எம்.எல்.ஏ.க்கு, மா.செ.வுக்கு எதிரா இருந்தவ னுக, அவங்க ஆத்தாகிட்ட நல்லபேரு எடுக்கவேணும்னு போட்டி போட்டுக்கிட்டு, என்மேல போலீஸ்ல புகார் குடுத்து உடனே எஃப்.ஐ.ஆர்., இத்யாதி.... இத்யாதிய வாங்கி மேலிடத் துக்கு அனுப்பி... அவங்க அக்கவுண்ட்ல நல்லபேரு எடுக்க ரொம்பவே பாடுபட்டு ருக்காய்ங்க.

அப்படித்தான் திருவண்ணாமலை மா.செ. பாலசந்தருக்கு எதிரா இருந்த மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற மா.செ. எஸ்.ஆர்.தர்மலிங்கம், வானாபுரம் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் குடுத்தாரு.

ஆரணியில போட்டி போட்டு தொகுதி செயலாளர் சந்தானம், மாவட்ட மகளிரணி செயலாளர் குமுதவள்ளி, பாசறை மா.செ. கஜேந்திரன், நகரம் அசோக்குமார்... இப்படி வரிசையா என்மேல புகாரோ புகார்...னு குடுத்து டார்ச்சர் செஞ்சிருக்காய்ங்க.

ஊர், ஊரா ஒவ்வொரு கடைகளுக்கும் போய் நக்கீரன அடிச்சுப் புடுங்கி எரிச்சவிய்ங்க போக, கமுக்கமா நக்கீரன இடுப்புல சொருகிக்கிட்டு வீட்டுக்கு கொண்டு போனவய்ங்களும் இருந்தாய்ங்க. "எரியுற வீட்டுல புடுங்குனவரைக்கும் ஆதாயம்'னு நெனைச்சுட்டானுக... இருக்கட்டும்! இது வெறும் சாம்பிள்தான்...!

எஸ்.பி.சேகர் அண்ணன். நக்கீரன் நிருபரா விழுப்புரம், விருத்தாசலம், உளுந்தூர்பேட்ட, கடலூர் வரைக்கும் பாத்துட் டிருந்தாங்க. செய்தி கேள்விப்பட்டு, என் போனுக்கு வந்துட்டாரு. நான் அப்போ தம்பி ஐயப்பனோட போன்தான் வச்சிருந்தேன். ஆபீஸ்ல அந்த நம்பர கேட்டு வாங்கி எங்கிட்ட பேசுனாரு.

"அண்ணே... எல்லா இடங்கள்லயும் வழக்கு போடுறாங்கண்ணே...''

(புழுதி பறக்கும்)