(73) என்னை குறி வைத்த போலீஸ் துப்பாக்கி!
"வாடி... வா... வா... உட்காரு. உன்னால ஒரு காரியம் ஆகணும். அதை செஞ்சு கொடுத்தா உனக்கு நல்லது, இல்லைன்னா நீ மட்டுமில்ல... உன்னோட கொழந்தைகளும் சாக வேண்டியது தான்...'' -மிரட்டலான குரலக் கேட்டு ஒடுங்கிப்போய் நின்னுச்சு விஜயலட்சுமி.
"நான் சொல்றத அப்படியே இந்த டேப்ரெக்கார்டர்ல சொல்லணும் புரியுதா? வீரப்பனுக்கு நான் ரெண்டாவது பொண்டாட்டி. வீரப்பன் மூலமா காட்டுக்குள்ள எனக்கு ரெண்டு புள்ளைங்க பொறந்துச்சு. ஒரு கொழந்தை வயித்துல இருந்தப்பவே செத்துப் போச்சு. வீரப்பன் பொண்டாட்டி முத்து லட்சுமிக்கு நான் எந்த துரோகமும் செய்யல. அந்தக்கா வெளியே இருந்தது னால, வீரப்பனுக்கு நான் ஒத்தாசயா இருந்தேன். காட்டுல வீரப்பன் எனக்கு துப்பாக்கி சுட கத்துக் குடுக்குறதா சொன்னாரு....''
-தன் மேஜை மேல இருந்த சின்ன டேப்ரெக்கார்டர ஆன் செய்த எஸ்.ஐ. மோகன் நிவாஸ், "ம்... நான் சொன்னத அப்படியே திருப்பிச் சொல்லு... இல்லேன்னா உன் ஒடம்புல துணியும் இருக்காது; உசுரும் இருக்காது''ன்னு மிரட்ட...
மிரண்டு போய் கிளிப்புள்ள போல அப்படியே சொல்ல ஆரம்பிச்சது விஜயலட்சுமி. அது அப்படியே பதிவாச்சு அந்த சின்ன டேப்ரிகார்டர்ல. மோகன் நிவாஸ் சொன்னபடியே பேசி முடிச்சு... கண்ணத் தொடச்சிட்டு நின்னுது விஜயலட்சுமி.
"என்னடி பெரிய பத்தினி மாதிரி கண்ணக் கசக்குற. இதோ பாரு.. நான் சொல்லித்தான் நீ பேட்டி கொடுத்ததா யாருகிட்டேயாவது சொல்லி, அது வெளியில வந்துச்சுன்னா... உன் தோல உரிச்சி நடு ரோட்டிலே தொங்க வுட்டுருவேன் ஜாக்கிரதை...! இதோ பாருடி... கிராமத்துக்குப் போய் மூச்சு பேச்சு இல்லாம கெடக்கணும். ரெண்டு மூணு நாள்ல ஒரு பேப்பர்காரன அனுப்புவேன். உன்கிட்டே வந்து கேள்வி கேப்பாங்க. இந்த டேப் ரெக்கார்டர்ல என்ன சொல்லியிருக்கியோ அதத்தான் சொல்லணும் புரியுதா, போ... போ...''
"எங்க ஊரு பஞ்சாயத்து தலைவர் ஜடையன் தான், என்னைய மோகன் நிவாஸ்கிட்டே கூட்டிட்டுப் போனாரு....''ன்னு விஜயலட்சுமி சொல்லி முடிச்சிது.
இந்த இடத்துல என்ன நடந்ததுன்னு புரியுதா உங்களுக்கு?
எஸ்.ஐ. மோகன் நிவாஸ்தான் ஜூ.வி.க்கு, வீரப்பனுக்கு எதிரான செய்தியை... அதாவது, வீரப்பனை புரவோக் (டழ்ர்ஸ்ர்ந்ங்) பண்ணணும்னா என்ன செஞ்சா வெறியாகி மூர்க்கத்தனமா நடந்துக் குவாருன்னு எஸ்.டி.எஃப்.ல இருக்கிற மோகன் நிவாஸ் மாதிரி ஆட்கள் கொஞ்சம்பேருக்கு நல்லாவே தெரியும். அதுதான்... பெண் விஷயத்துல ஒழுக்கசீலரா இருந்த வீரப்பன சீண்டுறதுக்கு, நமக்கு சீனியரா இருக்குற தமிழ் பத்திரிகை ஜூ.வி.யை தேர்ந்தெடுத்து இந்த மிஷனை கெடுக்கவும், ராஜ்குமார் விடுதலைக்கு அண்டக் குடுக்கவும் பிளான்பண்ணி செஞ்சாரு அந்தாளு...
சரி... அந்தாளுதான் அப்படிப் பண்ணுனான்னா... இந்த ஜூ.வி.க்காரங்களாச்சும் கொஞ்சம் யோசிச் சிருக்க வேண்டாமா? என்னோட உசுருக்கே உலை வைக்கிற வேலய இவங்களும் சேர்ந்து பண்ணுனது எனக்கு ரொம்ப வருத்தம். எல்லாம் காலக்கெரகம்... என்னத்தச் சொல்ல?
இப்ப எல்லாருக்கும் புரிஞ்சிருக்குமே... வீரப்பன் மேல பழி போடறதுக்கு தேவாரத்தோட எடுபுடி எஸ்.ஐ. மோகன் நிவாஸ் எப்படில்லாம் கீழ்த்தரமா ப்ளான் பண்ணியிருந்திருக்காருன்னு!
தம்பி ஜீவா அவசர அவசரமா போன்ல வந்தார். "அண்ணே... ஜடையனை போலீஸ்காரங்க கையில எடுத்துட்டாங்க. இப்ப மோகன் நிவாஸ் பராமரிப்பில தான் இருக்காரு அந்த ஆளு.''
இந்த ஜடையன் யாருன்னா...?
வீரப்பன் வாயாலேயே சொல்றாரு... அதக் கேளுங்க.
"என் மனைவி முத்துலட்சுமி, அரக்க னுங்கட்ட இருந்து தப்பி ஓடி வடக்க போயி, நெப்புறாறு போயி ஒரு பட்டிக்குப் போயி ருக்கிறா. அந்தப் பட்டியில மூணு மாட்டுக் காரப் பசங்க இருந்திருக்கானுங்க. அவனுங்க கிட்ட தஞ்சம் புகுந்திருக்கா. "நான் வீரப்பன் மனைவி... என் பேரு முத்துலட்சுமி. என்ன எப்படியாச்சும் காப்பாத்திப்பிடுங்க...'னு கால்ல விழுந்திருக்கா.
அதாவது "போலீஸ்காரங்க வந்து பயங்கரமா ஈடு விட்டாங்க. நான் தப்பிச்சு வந்துட்டேன். என் புருஷன் ஒரு இடம் சொல்லியிருக்காரு. அந்த இடத்துல கொண்டுபோய் விடுங்க. உங்களுக்கு வேண்டிய பணம் தர்றேன்'னு சொல்லியிருக்கு முத்துலட்சுமி.
"எங்களுக்குத் தெரியாது'ன்னு சொல்லியிருக்கானுக. அதுக்குள்ள அவனுங்களுக்கு காதல் வேற வந்திருச்சாம். கையைப் புடுச்சு இழுத்துருக்கானுக.
"அடேய்... நான் வீரப்பன் பொண்டாட்டிடா...'
"நீ யாரா இருந்தா என்ன? எங்களுக்குப் தேவை பொம்பள...'
அப்ப பின்னாடியே போலீஸ்காரனுங் களும் வந்திருக்கானுங்க. 25 பேரு அப்படியே கவுந்துக்கிட்டாங்க. அவனுககிட்ட இருந்து அப்ப காட்டுக்குள்ள தப்பிச்சு ஓடிப் போயிட்டா இவ. அந்த நைட்டு ஒரு பெரிய மரத்தடியில படுத்திருந்திருக்கா. திடீர்னு பயங்கரமா மழை பேஞ்சுருக்கு.... பசி வேற. விடிஞ்சு 9 மணி ஆகியிருச்சாம்... பாவம் அவளுக்குத் தடம் தெரியல. மறுபடியும் அதே பட்டிக்கு வந்திருக்கிறா, வேற யாராவது வந்திருக்காங்களான்னு பார்க்க. அந்தப் பசங்களோட அப்பாமாருங்க அஞ்சுபேரு அங்க இருந்திருக்காங்க. பெரியவங்க வந்திருக்காங்க, இனி நம்மள ஏதும் செய்யமாட்டாங்க அப்படின்னு நம்பி பட்டிக்கு போயிருக்கிறா. அவங்க என்ன, ஏதுனு கேக்க... இவ விவரம் பூராவை யும் சொல்லியிருக்கா. நான் போகும் போது மாமரத்துப் பாறைக்குப் போறதா சொல்லிட்டுப் போனதுனால, அந்தப் பாறைல கொண்டுபோயி விடுங்க... அப்டின்னு சொல்லியிருக்கா. "என் உசுரக் காப்பாத்துங்க உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் வாங்கிக் கொடுக்கிறேன்'னும் சொல்லியிருக்கா.
"எங்களுக்குத் தெரியாது'னு சொல்லி பால் எடுத்துக்கிட்டு அங்கே கிளம்பிப் போயிருக்காங்க.
"ஐயா உங்க ஊர்லயாச்சும் விட்டுருங்க. பஸ் ஏறி பொறந்த ஊருக்காச்சும் போறேன்'னு சொல்லி கால்ல விழுந்து அழுதுருக்கா. மாடெல்லாம் ஓட்டிக்கிட்டு போயிருக்கானுக மூணுபேரும். இவளும் போயிருக்கா. ஒரு மலைமேல விட்டுட்டு, "நீ இங்கயே இரு... சாயந்தரம் நாங்க வருவோம், அப்ப வரலாம்'னு சொல்லிட்டு கூடிப் பேசிக்கிட்டு போயிருக் கானுங்க. போயி கோழிப்பாளையத்துல போலீஸ் காரனுங்ககிட்ட இன்பார்ம் பண்ணியிருக்கானுங்க. இந்த மாதிரி... வீரப்பன் பொண்டாட்டி வந்திருக்காள்னு. போலீஸ்காரனுக 25 பேரு வந்திருக்கானுங்க. போலீஸை கொண்டாந்து பக்கத்துல விட்டுட்டு வந்து என் பெஞ்சாதிகிட்ட, "அதோ அந்த பால்மரத்துக்கிட்ட போய் உக்காரு' அப்படின்னு சொல்லியிருக்கானுங்க. ஏதோ சொல்றாங்களேன்னு இவளும் அந்தப் பக்கம் போக, போய் உட்கார.... போலீஸ்காரனுங்க துப்பாக்கிய நீட்ட... அவள்தான் பட்டினியா கெடக்குறாளே... எங்க ஓடுறது?
அப்புறம் வந்து புடுச்சு வா போலாம்னு கூட்டிக்கிட்டு போயிருக்காங்க. கொண்டுபோய் உள்ள வச்சிருந்தாங்க. என்னென்னமோ கொடுமைங்க... நடந்த கொடுமைகளயெல்லாம் என் வாயால சொல்லவே கூசுது''ன்னு சொல்லி, வீரப்பன் தன் மனைவி முத்துலட்சுமி பட்ட துயரத்த சொல்லி முடிச்சாரு.
அதுக்குப் பதிலடியாத்தான்... எஸ்.டி.எஃப்.காரங்க குடுக்கிற எச்ச பணத்துக்காக தன்னோட மனைவி, அவரோட சேர்ந்த பொண்டு புள்ளைங்கள பாரஸ்ட்காரங்களுக் கும், எஸ்.டி.எஃப்.காரங்களுக்கும் காட்டிக் குடுத்த கெத்தேசால் ஊரச் சேர்ந்த ஏழு பேர புளிஞ்சூர்ல வச்சு அடுத்த நாளே சுட்டுக் கொன்னு போட்டாரு வீரப்பன். வீரப்பன் இப்படிச் செஞ்சத நியாயப்படுத்தல... ஆனா அப்பாவி மலைவாழ் ஜனங்கள, காட்டுவாசி மக்கள எப்படி ரெண்டு தரப்பும் பகடையா வச்சு உருட்டுச்சுங்கிறதுதான். காட்டிக் குடுத்தா வீரப்பன் கொண்டேபுடுவாரு... காட்டிக் குடுக்கலேன்னா எஸ்.டி.எஃப்.காரனுக ஆள காலிபண்ணீருவானுவோ. மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடிங்கிற மாதிரிதான் அந்த அப்பாவி காட்டுவாசிகளோட நெலம.
அப்படி வீரப்பன் கொன்ன கெத்தேசால் காரங்க ஏழு பேரோட சொந்தக்காரன்தான் இந்த ஜடையன். இப்படி வீரப்பன் மேல வெறியா இருக்குற ஒருத்தன தேடிக் கண்டுபுடிச்சு, நமக்கு எதிரா அவன் கையில துப்பாக்கியை யும் குடுத்து என்ன கொல்லச் சொன்னது வேற யாருமில்ல.. இதே மோகன் நிவாஸ் தான்!
"ஜடையனுக்கு வேலையே, வீரப்பன் பிடியில் உள்ள ஃபாரஸ்ட் வாட்சர்கள காப்பாத்துறதுக்காக நீங்க எப்ப வர்றீங்க...
எந்த வழியா போறீங்கங்கிறதை ஃபாலோ பண்ணுறதுதான். இந்த முறை உங்களைத் தப்பிக்க விடக்கூடாதுன்னு திட்டம் போட்டிருக்காங்க. உங்க உயிருக்கு குறி வச்சி, இந்த பயணத்த கெடுத்திடணும்ங்கிறதுதான் அவங்களோட திட்டம். மலைவாழ் மக்கள்தான் எனக்குத் தகவல் கொடுத்தாங்க. இந்தமுறை நீங்க மீட்பு முயற்சிக்குப் போறதைத் தவிர்த்திருங்கண்ணே... வேணாம்ணே... வேண்டவே வேண்டாம்'' ணேன்னு சத்தியம் வாங்காத குறையாச் சொன்னாரு தம்பி ஜீவா.
ஜடையன் கையில் மோகன் நிவாஸ் ஒரு துப்பாக்கியக் குடுத்து, காட்டுக்குள்ள உலவ விட்டிருக்கிற தகவல் எனக்கும் தெரியவந்துச்சு. என் உயிரைப் பறிச்சிட்டு, அந்தப் பழிய வீரப்பன் மேல போட்டு, அதனால வீரப்பன் கோபமாகி, தன் பிடியில உள்ள வனத்துறை ஊழியர்களோட உயிருக்கு ஆபத்தை உண்டாக்குனா... அதனால ரெண்டு மாநில அரசுகளுக்கும் நெருக்கடிய ஏற்படுத்தணும்... தேவாரம் போலீஸோட நல்லெண்ணம் இதுதான்.
போர்க்களம் தொடர தொடர்ந்து படிச்சுட்டு வர்ற ஒரு அதிகாரி, என்கிட்ட சந்தேகமா கேட்டாரு.
"ஏன் கோபால், வீரப்பன் விவகாரத்துல மொதல்ல இருந்து முடியுற வரைக்கும் எல்லாமே என்னாலதான்... என்னாலதான் நடந்துச்சுன்னு முந்திரிக்கொட்ட மாதிரி உங்ககூட காட்டுக்கு வந்த அந்த ஐந்தாம்படை பையன் வெளியில பொலம்பிக்கிட்டே இருக்கானே... அவ்வளவு ஒர்த்தான ஆளா இருந்திருந்தா, அந்தப் பையன் உசுருக்குத்தான ஜெயலலிதாம்மா குறி வச்சிருக்கணும்? ஏன் உங்கள மட்டும் சுட்டுத்தள்ளணும்னு வெறியா இருந்தாங்க? அப்ப அந்தப் பையன் உங்க பின்னாடி என்னத் தையோ தூக்கிட்டு வர்ற தொடுப்புங்கிறது தேவாரத்துக்கும், ஜெயலலிதாம்மாவுக்கும் தெரிஞ்சதுனாலதான...? இல்லேன்னா "இவன்தான் மெயின், இவன சுட்டுத்தள்ளு'ன்னு அந்தப் பையனோட கதய அப்பவே முடிச்சிருப்பாங் கள்ல?
உங்ககூட வந்த மத்த தம்பிக இந்த மாதிரி வாயாடல... அவங்கள இந்த இடத்துல பாராட்ட ணும்.
தலை எது, வால் எதுன்னு தெரிஞ்சுதான கோபாலை அரசு தூதரா கலைஞர் கவர்மெண்ட்டும் கிருஷ்ணா கவர்மெண்ட்டும் அனுப்புச்சுது. வீரப்பன் விவகாரத்துல உசுரப் பணயம் வச்சு காட்டுக்குள்ள இத்தன தடவ போயிட்டு வந்திருக்கீங்க. இன்னிக்குவரைக்கும் உங்களுக்குப் போராட்டமே வாழ்க்கைன்னு ஆயிருச்சு. ஆனா ஒதுங்க இடம் குடுத்த ஆலமரத்த வேரோட சாய்ச்சிடணும்னு, வாய்க்கு வந்தபடி பேசவும், முதுகுல குத்தவும், அந்த மாதிரி ஆளுங்களுக்கு எப்படித்தான் மனசு வருதோ? இந்த மாதிரி சில்லறத்தனத்த எப்படித்தான் சகிச்சிக்கிறீங்களோ?''ன்னு நக்கீரன் மேல உள்ள மரியாதையில உரிமையோடு என்கிட்ட கோபிச்சுக்கிட்டாரு.
"அத விடுங்கண்ணே.... அந்த மாதிரி ஆளுங்க அப்படித்தாண்ணே. நெல்லுன்னு நெனைச்சு அற்பப் புல்லுக்கு நீர் வார்த்துட் டேன்''ன்னு சிம்பிளா நான் சொல்லி முடிக்க.... அவருக்கு என்னோட பதில் போதுமானதா இல்லைங்கிறத அவரு வெளிப்படுத்துன ஆதங்கத்துல இருந்து தெரிஞ்சுக்க முடிஞ்சது.
தம்பி ஜீவா எச்சரிக்கை பண்ணுன அதே டைம்ல... "தமிழன் எக்ஸ்பிரஸ்' ஆசிரியரா இருந்த சுதாங்கன் என் லைனுக்கு வந்தாரு.
(புழுதி பறக்கும்)