ff

(72) இவரு போலீஸ் இல்லை...

வீரப்பனோட பிணைக்கைதியா மாசக் கணக்குல பத்திரமாத்தான இருந்தாரு நாகப்பா. பின்ன எப்படி திடீர்னு வீரப்பனே அவர சுட்டுக் கொன்னுருப்பாரு? "நாகப்பாவின் மரணத்துல நெறைய சந்தேகம் இருக்கு..., கூடவே அதிரடிப் படை மேலயும் சந்தேகம்...'னு நாகப்பாவோட சொந்தங்களும் ஜனதாதள கட்சிக்காரங்களும் கொந்தளிச்சிட்டாய்ங்க.

Advertisment

"வீரப்பனும், "எஸ்.டி.எஃப்.பால பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரெண்டு மாநில அரசாங்கமும் குடுத்த வாக்குறுதிகளயும்... உதவிகளயும் செய்யட்டும், நாகப்பாவை விட்டுர்றேன்'னு சொன்னார். அவர் எப்படி நாகப்பாவை சுட்டுக் கொன்னுருக்க முடியும்? இது அதிரடிப்படை போலீஸ் வச்ச குறிதான்'னு சொன்னாரு நாகப்பாவ முதல்நாள் உசுரோட பாத்த மகாதேவசாமி.

தூதர்கள அனுப்பணும்னு வீரப்பன் தொடர்ந்து கேட்டப்பவும், கடைசிவரை தூதரை அனுப்பாம தமிழக அரசு காட்டுன பிடிவாதம் தான், தங்களோட மாநிலத்தைச் சேந்த தலைவரின் உயிரைப் பறிச்சுருச்சுன்னு கன்னட அமைப்புல உள்ளவங்க, அங்க உள்ள தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள்ல இறங்கிட்டாங்க.

Advertisment

ff

தமிழ்நாட்டுல ஆளும்கட்சியா இருந்த ஜெயலலிதா அரசாங்கத்த நோக்கி கர்நாடக மக்களோட ஒட்டுமொத்த கோபமும் திரும்ப... ஜெ.வுக்கு ரொம்பவே பதட்டமாயிடுச்சு. அடுத்தவங்க மேல வீண்பழி சுமத்தத் தயங் காத ஜெயலலிதாவுக்கு, தன்ன நோக்கி உண்மையான பழி வருதுங்கிறது தெரிஞ்சவுடன பதறிப்போய்... அடுத்தடுத்த நாள்ல மறுப்பு அறிக்கைகள வெளியிட்டுக்கிட்டே இருந்துச்சு அந்த அம்மா...

"சில விஷமத்தனமான சக்திகள் இப்படிப்பட்ட வதந்திகளைப் பரப்பி, பிரச்சினையை உண்டாக்குவது துரதிர்ஷ்ட வசமானது. இது முழுவதும் பொய்யான செய்தி. கர்நாடக அரசு கேட்டுக்கொண்டதற் கிணங்க தமிழக அதிரடிப்படை வாபஸ் பெறப்பட்ட பின், கர்நாடகப் பகுதியில் அதிரடிப்படை எந்தவிதமான நடவடிக்கையை யும் மேற்கொள்ளவில்லை. கர்நாடக எல்லைக்குள் 40 கி.மீ தூரத்தில் உள்ள பகுதியில் நடந்த சம்பவத்திற்கும் தமிழக அதிரடிப்படைக்கும் எவ்வித தொடர்புமில்லை'' -ஜெயலலிதா.

இதோ இந்தப் படத்த பாருங்க... இதுல இருக்கிறவரு நம்ம தமிழ்நாடு எஸ்.டி.எஃப்.ல இருந்தவரு. இவரு பேரு மோகன் நிவாஸ். இவரு மேல அத்தன பாலியல் வழக்கு இருக்கு. ஆனா வீரப்பன் விஷயத்துல அந்தக் காட்டுல போலீஸ் ஆள்காட்டிங்கள ஏகத்துக்கும் உருவாக்குனது இந்த புண்ணியவான்தான். அந்த வகையில ஒன்மேன் ஆர்மியா (கெடுதல் செஞ்சதுல) காட்டுல அப்பாவி ஜனங்க மேல ஏடாகூடமா நடந்த எல்லாத்துக்கும் இவருதான் முதல் சுழி. உதாரணத்துக்கு...

ராஜ்குமார் கடத்தல். நான் காட்டுக்குள்ள பேச்சுவார்த்த நடத்திக்கிட்டிருந்தப்ப... வீரப்பன் ஒரு ஜூனியர் விகடன் புக்க காமிச்சாரு.

poorkalam

பெண்கள் விஷயத்துல வீரப்பன், ராமன் மாதிரி. தன் மனைவி முத்துலட்சுமியத் தவிர வேறெந்த பெண்ணயுமே ஏறெடுத்தும் பாக்க மாட்டாரு. அதனாலதான் மலைக்கிராமப் பெண்கள கொடூரமா கொடுமப்படுத்துன அதிரடிப்படை மேல அவ்வளவு ஆத்திரம்.

பெண்கள் விஷயத்துல இத்தனை கறாரா இருந்த வீரப்பன் மேல பெண் சம்பந்தப்பட்ட புகார சுமத்துனா... அத என்னன்னு சொல்றது? வீரப்பன் எங்கிட்ட கோபமா சீறுனதுக்கு அதுதான் காரணமா இருந்துச்சு.

ராஜ்குமார் மீட்புக்கு 4-வது முறையாக காட்டுக் குப் போனப்பதான், வீரப்பனோட கோபம் அப்படி வெளிப்பட்டுச்சு. கையில ஜூனியர் விகடன். அந்த அட்டையைக் காட்டி, "என்ன இது ஆசிரியரே?''ன்னு கேட் டப்ப... முகம் சிவந்து... நரம்புகள் புடைக்க... அப்படி ஒரு கோவம்.

"வீரப்பன் வாழ்க் கையில் இன்னொரு பெண்'-ங்கிற தலைப்புல வெளியாகியிருந்துச்சு அந்த செய்தி.

"புருஷன் இல்லாம மூணு புள்ளைகள வச்சுக் கிட்டு ரொம்ப கஷ்டப் பட்டுக்கிட்டிருந்தேன். இது அந்த சாமிக்கு (வீரப்ப னுக்கு) எப்படியோ தெரிஞ் சிருக்கு. சேத்துக்குளி கோவிந்தனையும், மாதேஸையும் அனுப்பி என்னை கூட்டிக்கிட்டு வரச்சொன்னாரு... போய் பாத்தேன். செலவுக்கு பணம் குடுத்தாரு.

சாமிய அடிக்கடி பார்க்கிற வாய்ப்பு எனக்கு கெடைச்சது. சாமிக்கு என்னவோ எம்மேல பிரியம் உண்டாயிடிச்சி. அதை அவரும் காட்டிக் கிடவே... என்ன அவருக்கு முழுசா கொடுத்துட் டேன். அதுக்குப் பிறகு அவர் கூப்பிட்டு அனுப்புனப்போல்லாம் போய் ரெண்டு மூணு நாள் காட்டுக்குள்ளே இருந்துட்டு வருவேன். அதனால நான் கர்ப்பம் ஆனேன். அந்த சமயம் காட்டுக்குள்ள போவாம வீட்டுலயே இருந்தேன். அவரு குழந்தை என் வயித்துல வளருறத கர்நாடக அதிரடிப்படை போலீஸ் எப்படியோ தெரிஞ்சுக்கிட்டு... நான் ஏழு மாச கர்ப்பமா இருக்கும்போது என் வீட்டுக்கு வந்தாங்க. "ஊரே தேடுற வீரப்பன் பிள்ளைய நீ சுமக்குறியாமே'னு சொல்லி கொடுமப்படுத்துனாங்க. புள்ளதாச்சியா யிருக்கேன்னுகூட பாக்காம மிருகத்தனமா என்னக் கெடுத்தாங்க. கரு கலைஞ்சு குழந்த செத்துப்போய் ரத்தப்போக்கு எடுத்து... வலியால துடிச்சேன். ஊர்க்காரங்கதான் என்னை ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கிட்டுப் போய் உசுரக் காப்பாத்துனாங்க. ஒன்பது வயசுல வீரப்பன் சாமிக்கு என் மூலமா ஒரு மகன் இருந்திருப்பான். அநியாயமா கருவுலயே கொன்னுட்டாங்க. இப்பவும் ஆளு நல்ல உரமாத்தான் இருக்காருன்னு சொல்றாங்க. என் மூணு பிள்ளைங்க மட்டும் இல்லேன்னா, நான் என் கடைசி காலத்தை அவரு கூடவே கழிச்சிருவேன்...''

-ஒரு திரைக்கதைக்குரிய சுவாரஸ்யங் களோடும் திருப்பங்களோடும் தன்னோட கதைய அந்த பத்திரிகையில சொல்லியிருந்தாரு விஜயலட்சுமிங்கிற அந்தப் பெண்மணி.

கையில வச்சிருந்த அந்த பத்திரிகைய என்கிட்ட காட்டி வீரப்பன் சீறுனதுக்கு அதுதான் காரணம்.

நான் அந்தப் பத்திரிகை தலைப்பு எல்லாத்தையும் பாத்துட்டு, தலைமேல கைய வச்சுட்டு போச்சு... போச்சு... எல்லாம் மண்ணாப் போச்சேன்னு அப்படியே குத்தவச்சுட்டேன்...

சார், நீங்களே சொல்லுங்க... ராஜ்குமார் கடத்தல் பெரிய மிஷன். கரணம் தப்புனா நக்கீரனுக்கு மரணம்னு உலகத்துக்கே தெரியும். தெரிஞ்சிருந்தும்... ஒரு ஈனப்புத்தி எஸ்.ஐ. குடுத் தாருன்னு எதையுமே விசாரிக்காம, இத்தனைக்கும் நான் காட்டுக்கு தூது போய்க்கிட்டிருக்கிற நேரம் மேப்படி செய்திய போட்டு, ஏன் கேக்குறீங்க... "ஒருவேள வீரப்பன் கோபம் வேற மாதிரி ஆகி, படார்னு துப்பாக்கிய நம்ம மேல திருப்பியிருந்தா...' இப்ப இந்த "போர்க்களம்' தொடர எழுத நான் இருந்திருக்க மாட்டேன். என்னா ஒரு நல்லெண்ணம் அந்தப் பத்திரிகைக்கு. இருக்கட்டும்... இருக்கட்டும்...!

வீரப்பன் வெறியா.... "என்ன எழுதியிருக் கான்? யாரு இவ? இவள நான் பார்த்ததுகூட கெடையாது. என்னப் பத்தி ஒனக்குத் தெரியும்ல. இப்படியெல்லாம் எழுதி எம்பேரக் கெடுத்து, கெட்டவனாக்கப் பார்க்குறாங்களா? இப்படியெல்லாம் செஞ்சா என்னோட கோரிக்கைய எல்லாம் விட்டுட்டு, ராசுகுமாரை விட்டுடுவேன்னு நினைக்கிறாங்களா? இது போலீசோட வேலை, இந்த போலீச நம்பி என்ன வா... வான்னு வேற கூப்பிடுற... நடக்காது...'' -பொரிஞ்சு தள்ளிட்டாரு வீரப்பன்.

ராஜ்குமாரயும் அவரோட கடத்தப் பட்டவங்களயும் மீட்டுட்டு வர்றதுக்கு மேற்கொண்டு இது ஒரு தடையா இருந்துச்சு. அதனால இந்த விஜயலட்சுமி விவகாரத்தோட பின்னணி என்ன?ங்கிற புலனாய்வுல நக்கீரன் களம் இறங்குனப்பதான்... விஜயலட்சுமி சொன்னதா வெளியான திரைக்கதை ஸ்கிரிப்ட்டை எழுதுனது யாருங்கிறது தெரியவந்துச்சு.

அதிரடிப்படைக்கு பயந்து, 15 கி.மீ. தூரத்துல உள்ள சொந்தக்கார வீட்டுல பதுங்கியிருந்திருக்கு அந்த விஜயலட்சுமி.

"உண்மையை மட்டும் சொல்லுங்க. உங்க ளுக்கும் வீரப்பனுக்கு என்ன தொடர்பு?''ன்னு நம்ம தம்பி ஜீவா, அவர்ட்ட கேக்க...

"சாமி... என் வூட்டுக்காரரு பேரு சித்தனன். எங்களுக்கு 3 புள்ளைங்க. ஒம்போது வருசத்துக்கு முன்னாடி ஒருநாளு மாட்டு லோனுக்கு பணம் கட்டுறதுக்குப் போன எம் புருசன, கர்நாடக போலீஸ்காரங்க, "ஏண்டா வீரப்பனுக்கு ரேஷன் வாங்கிக் குடுக்கத்தான போற...'ன்னு சொல்லி புடுச்சு இழுத்துக்கிட்டு போயிட்டாங்க. மூணுநாள் கழிச்சி கர்நாடக போலீசுக்காரங்க எங்க வூட்டுக்கு வந்து, என்னை மாறி மாறி கெடுத்துப்போட்டாங்க. ஏழு மாச கர்ப்பவதின்னுகூட பார்க்காம கொடுமப் படுத்துனதால கொழந்த என் வயித்திலேயே செத்துப்போய் வெளியே வந்தது. அதுக்கப்புறம் 5 வருசமா தமிழ்நாட்டு போலீஸ்காரங்க நெனைச்சப்பல்லாம் பன்னாரி கேம்ப்பு, ஆசனூர் கேம்ப்புன்னு இழுத்துட்டுப் போயி வீரப்பனை பத்தி விசாரிப்பாங்க. சாமி சத்தியமா எனக்கு எதுவும் தெரியாதுன்னு உண்மையச் சொன்னா லும் விடமாட்டாங்க. ரொம்ப சித்ரவதை பண்ணுவாங்க. என் புருஷன் கதி என்னாச்சுன்னு எனக்குத் தெரியல. இப்ப ராஜ்குமாரு அய்யாவ கடத்துன பெறகு ஒருநா... டி.வி.எஸ். வண்டியில சொசைட்டி ஏஜெண்ட்டு மகாதேவன் வந்து, மோகன் நிவாசு அய்யா கூட்டிட்டு வரச் சொன்னாருன்னு காலையில 10 மணிவாக்குல என்னக் கூட்டிட்டுப் போனாரு. என்ன, ஆசனூர் கேம்ப்புல விட்டுட்டு அவர் வெளியில நின்னுக் கிட்டாரு''ன்னு -உண்மையில நடந்த பின்னணி என்னங்கிறத சொல்லியிருக்கு விஜயலட்சுமி.

ஆசனூர் கேம்ப்.

உள்ள எஸ்.டி.எஃப். எஸ்.ஐ. மோகன்நிவாஸ் மட்டுமே இருக்காரு. முதல்ல நான் சொன்னேன் பாருங்க... இந்தாளுதான் எல்லாத்துக்கும் வில்லன்.

பயந்துக்கிட்டே உள்ளே போகுது விஜயலட்சுமி...!

(புழுதி பறக்கும்)