ff

(41) பெண் ஹிட்லரின் பேயாட்சியில்...

Advertisment

92 கதை என்ன தெரியுமா?

அதுக்கு முன்னாடி 91-ல நடந்த ஒரு கதையையும் சொல்லிர்றேன். 1991, ஜுன் மாசம். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து 100 நாள் ஆன பிறகு... அக்டோபர்ல வெளியான நக்கீரன்ல அட்டைப்பட செய்தியா... "ஹிட்லர் ஸ்டைலில் ஜெயலலிதாவின் 100 நாள் ஆட்சி! ஒரு ஆவேச அரசியல்'னு மேட்டரு ஒண்ணு போட்டோம். அதப் பாத்துட்டு ஜெயலலிதா ஆடுன அராஜக ஆட்டம் கொஞ்சநஞ்சம் இல்ல. அப்பவும் ஆபீஸ்ல கரண்டு கட்... தொடர்ச்சியா தொந்தரவு...ன்னு பல வழியிலயும் பேயாட்டம் ஆடிச்சி.

92-ல ஜெயலலிதாவ பத்தி நக்கீரன்ல ஒரு செய்தி. அட... பெருசா ஒண்ணும் இல்ல. "இங்கே ஒரு ஹிட்லர்'னு ஒரு செய்தி. நக்கீரன் அட்டைப் படத்துல ஜெயலலிதாவ ஹிட்லரா படம் போட்டுப்புட்டேன். அது ரொம்ப சூப்பர் அட்டைப் படம். நக்கீரன்ல வந்த மிகச்சிறந்த அட்டைப் படங்கள்ல இதுவும் ஒண்ணு. அது தப்பா போச்சு. நாமதான் வீம்ப விலைக்கு வாங்கி கவுட்டுக்குள்ளயே வச்சுக்குவோமே.

Advertisment

poorkalam

ஆட்சிக்கு வந்ததும் வராததுமா... எங்கள ஜெயில்ல வச்சு நொங்கு... நொங்குன்னு நொங்கீருச்சு அந்தம்மா. எங்க பிரிண்டர் ஐயா கணேசனை, நான் தப்பிச்சுப் போனதால... எனக்குப் பதிலா புடிச்சுட்டுப் போய் கொன்னுடுச்சு. நம்மளயும் அடிக்கடி நோண்டிக்கிட்டே இருந்துச்சு அந்தம்மா.

பணம், அடிதடி, அராஜகம்னு அந்தம்மா ஆடுன ஆட்டத்த மத்தவங்க கண்டுக்காம விட்டாலும்... நாம விடாம நோண்டிக்கிட்டேதான் இருந்தோம். அப்படித்தான், ஹிட்லர் அட்டைப் படத்த பாத்துட்டு... அப்பவே நக்கீரன முடிச்சிரணும்னு வௌங்கொண்டு பஜாரி ஆட்டம் போட்டுச்சு அந்த நொம்மா.

அந்த சமயத்துல ஆபீஸ், வீடு, பிரிண்டிங் பண்ணுற எடம், பைண்டிங் பண்ணுற எடம்னு எல்லாத்தையும் ஊ.இ.காரங்க ஜீப்ல வந்து தரைய வேகமா நோண்டுவாய்ங்க. பொத்துனாப்ல நமக்கு சம்பந்தப்பட்ட இடத்துக்கு மட்டும் கரண்ட்ட கட் பண்ணிட்டு பொசுக்குன்னு கௌம்பிருவாய்ங்க. அன்னிக்கு முழுநாளும் ஊ.இ. டிபார்ட்மெண்ட் நமக்காகவே வேல பார்த்துச்சு.

அப்ப யாரு மினிஸ்டரு தெரியுமா? நம்ம ராஜ கண்ணப்பன் அண்ணன்தான். அவரு அப்ப இருந்த இடத்துக்கு விசுவாசமா இருந்தாரு. என்னத்த சொல்ல...?

எனக்குப் பின்னாடி எப்பவுமே நாலஞ்சு போலீஸ் வேவு பாக்குறதுக்குன்னு பொடனி பக்கம் வந்துக்கிட்டே இருக்கும். நான் கால் வைக்கிற எல்லா எடத்துலயும் கரண்ட் கட்தான். இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்குன்னு கேட்டுறாதீங்க. யாரும் நம்ப முடியாத அளவுலதான் எல்லாமே நடந்துச்சு. நான் கக்கூஸ் போனாக்கூட... மோப்பம் புடுச்சு, அந்த எடத்துல உள்ள கரண்ட்டயும் கூட கட் பண்ணீருவாய்ங்க.

திடீர்... திடீர்னு பிரிண்டிங் பண்ணுற இடம், பைண்டிங் பண்ணுற இடம், பிலிம் எடுக்குற இடம், டைப்செட் பண்ணுற இடம்... இப்படி சென்னையில பத்திரிகை சம்பந்தமா வேல நடக்குற எல்லா இடத்துக்கும் அரக்க... பரக்க... வருவாய்ங்க, "கோபால் இங்க வருவானா?'ன்னு கேப்பாய்ங்க. "ஆமா'ன்னு சொல்லிப்புட்டா போச்சு, அவ்வளவுதான்... உடனே கரண்ட கட் பண்ணிட்டு அவனுக பாட்டுக்குப் போயிருவாய்ங்க.

அதனாலயே, அப்போவரைக்கும் தோள்மேல கைய போட்டுப் பேசிட்டு இருந்தவனுக எல்லாம்... உதறிட்டுப் போறது ஜாஸ்தியா ஆயிடுச்சு.

இவ்வளவு அநியாயம் பண்ணுதே ஜெயலலிதா, அத தட்டிக் கேக்கணுமே... ம்ஹும்... கேட்க நாதியே இல்ல. 21 நாள் போராடி கோர்ட்டுக்குப் போய்தான் கரண்ட வரவச்சோம்.

சாகிற வரைக்கும் சர்வாதிகாரத்தனமான கொடுங்கோல் ஆட்சிய மட்டுமேதான் பண்ணுச்சு அந்தப் புண்ணியவதி.

வெங்கடேஸ்வரா ஆப்செட் பிரிண்டிங். தவமணி, ஆசைத்தம்பின்னு ரெண்டுபேரு சேர்ந்து அத நடத்துனாங்க. பத்திரிகை பைண்டிங்ல இருந்து பிரிண்டிங் பக்கம் வந்தாங்க. அப்போ நாம நெறைய எடங்கள்ல பிரிண்ட் பண்ணுவோம். நாம எங்கெல்லாம் பிரிண்ட் பண்ணுறோமோ, அங்கெல்லாம் தேடி வந்து... பிரச்சினைக்கு மேல் பிரச்சினையா பண்ணுனாங்க. கடைசியா யாருக்கும் தெரியாம வெங்கடேஸ்வரா ஆப்செட்டுக்கு கொண்டுபோய் பிரிண்ட் பண்ணுனோம். அது எல்லிஸ் ரோட்டுல இருந்துச்சு. பிரிண்டிங் உள்ள நடந்தாலும்... நமக்கு கிதுக்கு கிதுக்குன்னு மனசு அடிச்சிக்குது. எந்த பக்கியோ அதையும் தெரிஞ்சுக்கிட்டுப் போட்டுக் குடுத்துருச்சு, அந்த நாசமோ போறவிய்ங்ககிட்ட. வந்தவய்ங்க நக்கீரன் புத்தகத்துக்காக பிரிண்ட் பண்ணுன எல்லா பாரத்தையும் எரிச்சிட்டாய்ங்க. அதுனால பல வகையிலும் நமக்கு கஷ்டம்... கூடவே பண விரயமும் நெறைய.

பொசகெட்ட புழுக்கப் பசங்க கொஞ்சம்பேரு அப்போ நமக்கு எதிரா திரிஞ்சாய்ங்க. நக்கீரன்ல ஆரம்ப காலத்துல சமைக்க வந்த ஒருசில பிஞ்ச செருப்புகதான் அந்த வேலையச் செஞ்சது. அவனுகதான் நாங்க எங்கெங்கல்லாம் போறோம்னு எங்க சூ...க்கு பின்னாடியே வந்து காட்டிக் கொடுத்துட்டாய்ங்க. இப்படியெல்லாம் பட்டவர்த்தனமா எழுதுறேன்னு வருத்தப்படாதீங்க ஆத்திரம் தீரல... அத்தன வேதனைகளச் சந்திச் சிட்டோம்... அதான் வயிறெரிஞ்சு எழுதுறேன்.

ff

நக்கீரன எங்க பிரிண்ட் பண்ணுறோம்னு அந்த முண்டப்பயலுக சொன்னத வச்சு தெரிஞ்சுக்கிட்ட ஜெயலலிதாவோட உளவு வேல பாக்குற போலீசு, என்னென்ன வேலையெல்லாம் செஞ்சிருக்காய்ங்க பாருங்க...!

ராத்திரியோட ராத்திரியா வந்து ஊ.இ.காரய்ங்கள கூட்டிட்டு வந்து கரண்ட கட் பண்ணிட்டாய்ங்க. அடுத்த நாள் நக்கீரன் புக் வெளிவராம தடுத்துறணும்னே கொலையா வேல பாத்தாங்க.

காலையில எப்படியாவது கடைகள்ல பத்திரிகை விழுந்தாகணும்...ங்கிற வெறியோடே நாங்க ப்ளான் பண்ணுனோம்.

என்ன பண்றது? நாங்களும் சூதானமா ஜெனரேட்டர வாடகைக்கு எடுத்து பொத்துனாப்புல வச்சு ஓட்ட ஆரம்பிச்சோம். ஜெனரேட்டர் சவுண்ட கொறைக்க முடியல. அது டம...டம...ன்னு பொளந்து கட்டுச்சு.

எப்படியோ மூக்குல வேர்த்து மறுபடியும் அடியாட்களோட வந்துட்டாய்ங்க படுபாவிங்க. நாம ஏற்கனவே ரெண்டுபேர ஜெனரேட்டருக்கு காவலுக்கு போட்டிருந்தோம்... அவங்க அசந்த நேரமா பாத்து, குரங்கு கையில கொள்ளிக் கட்டைய குடுத்த மாதிரி... ஜெனரேட்டர் மேல பெட்ரோல ஊத்தி தீய வச்சிட்டுப் பஞ்சா பறந்துட்டாய்ங்க எடுவட்ட பயலுக.

ராத்திரி மூணு மணிக்கு எனக்கு தகவல் வந்துச்சு. அந்த நேரத்துல என்ன பண்றது? நான், பெருசு சுந்தர், மோகன், பார்வேடிங் சந்திரபாபு, கௌரி அஞ்சுபேரும் இதே வேலையா சுத்திக்கிட்டுத் திரிஞ்சோம். உடனே நாங்க ஸ்பாட்டுக்கு போய்... எல்லாத்தையும் மாத்தி, பைலட் தியேட்டர் பக்கமா இருக்கிற தேஷ் பிரிண்டர்ஸுக்கு எடுத்துட்டுப் போய் பிரிண்டிங் முடிச்சி, பைண்டிங் பண்ணி ஏஜெண்டுகள பைண்டிங் பண்ற இடத்துக்கே வரச்சொல்லி கடைகளுக்கு குறைஞ்ச அளவுல புக்குகள போட்டோம். அந்த வேலைய நம்ம சுரேஷ் சரியா பாத்துக்கிட்டாரு. அவருக்கு துணையா சின்ன அன்புன்னு ஒரு தம்பி இருந்தாரு. அவ்வளவு நெருக்கடிகளையும் தாண்டி நக்கீரன தடைபடமா கொண்டு வந்து அட்ராசக்க... அட்ராசக்க...ன்னு மார் தட்டிக்கிட்டோம்.

இதெல்லாம்தான் 91... 92-ல நடந்தது. தல சுத்துதுல்ல...!

மக்யா நாளு...

8-1-2012. ஞாயிறு...

"6:00 6:30-க்கெல்லாம் ஜெனரேட்டர் வந்துரும்ணே''னாரு, தம்பி ஆனந்த்.

"இல்ல தம்பி, 6:00 மணிக்கு முன்னமே ஆபீஸுக்கு கொண்டு வந்துருங்க. வந்ததும் உள்ள வச்சிட்டு கதவ சடசடன்னு கேப் விடாம மூடிருங்க. ஏன்னா, யாராவது பார்த்துட்டா... தொலைஞ்சோம். ஜென்செட்ட உள்ள கொண்டு போக வுடமா பண்ணிருவானுங்க''ன்னேன்.

"சரிண்ணே... நீங்க சொன்னது மாதிரியே செஞ்சிர்றேன்''னாரு ஆனந்த்.

"தம்பி... விடிஞ்சிருச்சின்னு வச்சிக்குங்களேன், ஒடனே எவனாவது எழவ கூட்டிருவானுக படுபாவிப் பசங்க. அதனாலதான் 6:00 மணிக்குள்ள ஜெனரேட்டர் உள்ள வர்ற மாதிரி ஏற்பாடு பண்ணிருங்க''ன்னு சொன்னேன்.

பிரச்சினைன்னு வந்துட்டா, அத விட்டுட்டு யாருமே போகமாட்டோம்ங்கிறதுக்கு உதாரணம் எங்க நக்கீரன் அலுவலகம்தான். அதாவது அன்னிக்கு காலைல இருந்தே பிரச்சினை ஓடிட்டிருக்கு. ஆனா யாருமே வீட்டுக்குப் போகல. எல்லாரும் ஒண்ணா இருந்து வேலை பார்த்தாங்க. ஒவ்வொருத்தன் ஒரு பிரச்சினைன்னா... பின்னங் கால் பொடதியில அடிக்க தெறிச்சு ஓடிருவானுங்க... ஆனா எங்க தம்பிங்க சேர்ந்து நின்னாங்க.

ஊருல ஒரு சொல் சொல்லுவாங்க... "நிக்கணும்னா எதுத்து நிக்கணும்... ஓடணும்னா தொரத்திக்கிட்டே ஓடணும்...'னு. அதாவது, நாமதான் அடுத்தவன தொரத்திக்கிட்டே ஓடணும்.

ஆபீசுக்கு ஜென்செட் வர்ற விஷயத்த "பெருசு' சுந்தருக்கு போன்ல சொன்னேன்.

"பெருசு, 1992-ல இதே மாதிரி ஒரு சந்தர்ப்பத்துல ஜென்செட்டுக்கு ஏற்பாடு பண்ணியிருந்தோம். அப்போ அத எரிச்சிட்டாங்க தெரியுமா... ஒங்களுக்கு ஞாபகமிருக்கா?''ன்னேன்.

"ஆமாண்ணே... தெரியும்ணே. வெங்க டேஸ்வரா ஆப்செட்ல வச்சு எரிச்சாங்க''ன்னாரு.

"அதனாலதான் சொல்றேன்... சனியனுங்க அந்த மாதிரி எதையும் பண்ணிரக்கூடாது... 6:00 மணிக்குள்ள ஜென்செட்ட உள்ள வச்சிரணும். அதுக்கு பாதுகாப்பா ரெண்டு பேர கூட வச்சிக்குங்க. எந்த அசம்பாவிதமும் திரும்பவும் நடக்காம பாத் துக்கங்க''ன்னு அவருக்கு டைரக்ஷன் குடுத்துட்டு, வாசல் பக்கமா வெளிய எட்டிப் பார்த்தேன்.

நம்மள எதிர்பார்த்து அங்கதான் வாசல்ல ஒரு கண்டம் நிக்குதே...

அதான் சார்... நம்ம லாட்ஜ் ஓனரு...?

(புழுதி பறக்கும்)