(26) ஜெ. ஆட்சியின் நயவஞ்சக வேலை!
ஒரு வேன் நெறைய மஃப்டி போலீஸ்காரங்க நக்கீரன் ஆபீஸ் முன்னாடி வந்து திபுதிபுன்னு இறங்குறாங்க. வேன்ல "போலீஸ்'னு சின்னதா ஒரு ஸ்டிக்கர் மட்டும் ஒட்டியிருக்கும். ஆபீஸ் பக்கத்துல கொண்டு வந்து நிறுத்தியிருந்தாங்க. டைரக்ட்டா டெலிகாஸ்ட் பண்ணுவாங்கள்ல அந்த மாதிரி ப்ளானோட வந்திருக்காங்கன்னு தம்பிங்க சொன்னாங்க. இங்கிருந்து லைவ்வா டெலிகாஸ்ட் பண்ணுறாங்கன்னா வேறொரு பெரிய எடத்துல யாரோ ஒருத்தங்க அத பாத்துக்கிட்டிருக் காங்கன்னு நினைக்கிறேன். அந்த வேனுக்கு மேல பாத்தீங்கன்னா ஆன்டனா மாதிரி ஒண்ணு இருக்கு... ஏதோ டெக்னிக்கலா வடிவமைச்ச வண்டி மாதிரிதான் இருக்கு. அது மூலமா இங்க நம்ம ஆபீஸ்ல நடக்குறத, நாம அனுபவிக்கிறத, ஆபீஸ அடிச்சி ஒடைச்சி தாக்குறதயெல்லாம் ஒரு எடத்துல இருந்து பாக்குறாங்களோ இல்ல... நெறைய எடத்துல இருந்து பாக்குறாங்களோ நமக்குத் தெரியாது.
அதாவது ஒரு ஜனநாயக நாட்டுல பட்டவர்த்தனமா பத்திரிகை ஆபீஸ அடிக்கிறாங்க. அடிக்கிறதுக்கு முன்னாடி முன்னேற்பாடா ஒரு போலீஸ் வேன். ஆபீஸ்ல யார், யாரெல்லாம் இருக்காங்க, என்ன நடக்குதுங்கிறதெல் லாம் அந்த வேன்ல இருக்குற கருவி மூலமா கவர் ஆகும் போல... அந்த அளவு வேன்ல உயரமா, அதுக்குமேல கேம ராவ பொருத்தியிருக் காங்க. ஏன்னா, அவங்க போலீஸ்காரங்க மூலமா நேரடியா ஆபீஸ்ல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்க முயற்சிபண்ண வேண்டாம். அது எல்லாத்தையுமே அந்த வேன் மூலமா பாத்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்.
ஆக இதெல்லாம் எதைக் காட்டுதுன்னா... கொஞ்சம் பின்னோக்கி போவோம்...
கலைஞர் அரெஸ்ட். அன்னிக்கு கலைஞர முடிச்சிரணும்னுதான் திட்டம் போட்டிருந் திருக்காங்க. உ.ந.ட. முருகேசன்ங்கிற ஆஜானுபாகு வான ஒருத்தர் மூலமா கலைஞர தூக்கிட்டு வந்து, போயஸ் கார்டன் கேட்ட தொறந்து அவர தூக்கி காமிக்கிறதுக்கு... அத பார்த்து அவங்க ரசிக்கிறதுக்கு திட்டம் போட்டிருந்திருக்காங்கன்னு முன்பு ஒரு செய்தியில சொல்லியிருப்போம். அது மாதிரி நக்கீரன்ல அவுங்க அடிபொடிகள் வந்து கலாட்டா செஞ்சு, துவம்சம் பண்ணும்போது... ஐயோ, ஐயோ...ன்னு கத்தி கதறுவாங்கல்லியா... அதப் பார்த்து ரசிக்கிறதுக்குன்னு எப்பவுமே ரெக்கார்ட் பண்ணிக்கிட்டிருந்துருக்காங்க.
பொதுவா ஜெயலலிதாவோட இயல்பு என்னன்னா... எப்பவுமே தான் ரசிக்கிற மாதிரி ஒரு விஷயம் நடந்ததுன்னா... அத அவங்க நேரே நின்னு பாத்தமாதிரி அத கேக்கணும். அதுக்கு என்னன்ன வழி இருக்கோ... (ஆளப் போட்டுத் தாக்குறது, கொத்துப்பரோட்டா போடுறது எல்லாம் சேர்த்துதான்) அதைப்பூரா பண்ணுவாங்க.
அதாவது... நக்கீரன் ஆபீஸ தீ வைச்சுக் கொளுத்தி சாம்பலாக்கிடணும்... நக்கீரன் கோபால எந்த வழியிலயாவது குளோஸ் பண்ணிறணும்... ஆபீஸ் உள்ளுக்குள்ள புகுந்து குறைஞ்சது அஞ்சு பேரையாவது போட்டுத்தள்ளிறணும்...னு ஏற்கனவே பல கொலைகளச் செய்த பழைய ரவுடிகள வச்சு ப்ளான் பண்ணுனாங்கல்லியா...? இப்போ... நானும், எங்க நக்கீரன் குடும்பமும் படுற அவஸ்ûதைகள டைரக்ட்டா, லைவ்வா பார்க்கணும்... அதுக்கு என்ன வழின்னு யோசிச்சி இப்படிச் வேன கொண்டு வந்து நிறுத்தி அரேஞ்ச் பண்ணியிருக்காங்கன்னு தோணுச்சு.
ஒரு அரசாங்கம் தன்னோட மொத்த அசுர பலத்தையும் சாதாரணமான ஒரு பத்திரிகைக்கு எதிரா தில்லா பிரயோகிக்கிது. இத நாம யார்கிட்ட போய் முறையிடுறது? இப்பதான் 7-1-2012-ல எழவு நடந்தப்ப எடுத்த போட்டோ ஃபைல்களப் பாக்கும்போது அப்படியே... ரத்தம் கொதிக்குது.
நான் மொதல்ல சொன்ன மாதிரி போலீஸ்காரங்க மஃப்டில வந்தத நம்மட்ட இருந்த சீனியர் சென்னை நிருபர் தம்பி சேது போன்ல சொன்னார். "அண்ணே... எனக்கு சந்தேகமா இருக்கு... மஃப்டி போலீஸ் கொஞ்சபேர் அக்கம் பக்கம் நிறைய திரியிறாங்க''ன்னாரு.
தம்பி பிரகாஷும் அப்போ லைன்ல வர்றார். நான் பதறிப்போய்... "எங்க இருக்கீங்க தம்பி?''ன்னேன். (இந்த மேட்டரோட சூத்ரதாரில ஒருத்தரு) இவருதான் செய்தி எழுதுனவருன்னு வெளியே இருக்குற மரமண்டைகளுக்குத் தெரிஞ்சா என்னாவுறது? ஆத்தாடி...
"நான் ஜாம்பஜார் போலீஸ் ஸ்டேஷன் முனைல இருக்கேன்... கொஞ்சபேர் மஃப்டியில நம்ம ஆபீஸ் பக்கம் போறத பார்த்தேண்ணே. நம்ம சேதுவும் அந்தக் கடைசியில நம்ம தெரு முக்குல... அதாவது மீர்சாகிப் மார்க்கெட்டுக்கு 4 முக்கு ரோட்டுல நிக்குறாருண்ணே. சேதுவும் இந்த செய்தியைத்தான் எனக்கு சொன்னாப்ல. நிறைய பிரஷர நமக்கு எதிரா ஜெயலலிதா போட்டுக்கிட்டே இருக்காம். எந்த எழவு நடந்தாலும் கண்டுக்கக்கூடாதுன்னு கமிஷனர் திரிபாதிக்கும் இன்ஸ்ட்ரக்ஷனாம்''னு சொன்னாரு.
தம்பி, தலைமை நிருபர் இளையசெல்வனும் இதை உறுதி செஞ்சாரு. உள்துறை செயலாளர், தலைமைச் செயலாளர் யாரும் லைனுக்கே வரமாட்டேங்குறாங்கன்னாரு இளையர்.
"சரி நீங்க பத்திரம்... நீங்கதான் பிரகாஷ்னு தெரிஞ்சா பிரிச்சு மேய்ஞ்சுருவாய்ங்க... ஜாக்கிரத தம்பி''ன்னு மறுபடியும் பிரகாஷை எச்சரித்தேன்.
மக்களோடு மக்களோ கலந்து நின்னா, வந்திருக்கிறது போலீஸ்தான்னு யாருக்கும் தெரியாதுல்ல. அப்படி நெனைச்சிதான் போலீஸ்காரங்க மஃப்டியில வந்துருக்காங்க. பொறுக்கிங்க கொஞ்சம்பேரு பக்கத்துல உள்ள பாய் வீட்டு மாடிக்குப் போயிருக்காங்க. அந்த பில்டிங் கீழதான் நக்கீரன் புக்ஸ்டால் இருக்கு. மாடியில அந்த வீட்டு ஓனர் ஷாஜகான்னு ஒருத்தரு இருக்காரு. மேல போனவங்க புக் ஸ்டாலுக்கு வச்சிருந்த நேம் போர்ட அருவாளால ஓங்கி ஓங்கி வெட்டுறாங்க. அதப் பார்த்த அந்த வீட்டு ஓனரம்மா, இதனால நமக்கும் பிரச்சினையாயிருச்சின்னு குய்யோ... முறை யோன்னு ஒரே கத்தா கத்துறாங்க. அதுக்கு என்ன காரணம்னா... வந்த போலீஸ்காரய்ங்க எங்க ஆபீசுக்கு பக்கத்துல இருக்குற வீடுங்க, அந்தப் பக்கம், இந்தப் பக்கம், எதுத்தாப்ல இருக்கிற குடியிருப்புகளுக்கெல்லாம் போயி அங்கி ருந்தவய்ங்ககிட்ட... இங்க நடக்கிற எல்லா பிரச்சினைகளுக்கும் நக்கீரன்தான் காரணம். அவங்களாலதான் ஒங்களுக்கெல்லாம் கஷ்டமும், நஷ்டமும்... அதனால "நக்கீரன் ஆபீஸ் இங்க இருக்கக்கூடாது'ன்னு நீங்கள்லாம் ஒங்க எதிர்ப்ப நக்கீரனுக்கு எதிரா காட்டுங்கன்னு சொல்லி அவங்கள ப்ரெய்ன்வாஷ் பண்ணியிருக்காங்க.
பக்கத்து வீட்டுக்காரன் திட்டுனாலோ அல்லது கொடைச்சல் குடுத்தாலோ... மூணு நாளைக்கு முக்கி முக்கி வேதனைப்படுறதத்தான் பாத்திருக்கோம். போலீஸ் வேற மஃப்டியில மொத்தமா போய் எழவ கூட்டிட்டாய்ங்க. இதுக்கு என்ன ரியாக்ஷன் வருமோன்னு யோசிச்சேன்.
நக்கீரன அடிக்கணும், ஒதைக்கணும், வேரோடு புடுங்கி எறியணும்னு ஒரு பக்கம்... இன்னொரு பக்கம்... இங்க நடக்குற கூத்துகளப் பார்க்குறதுக்கு லைவ் டெலிகாஸ்ட் பண்ற செட்டப்போட ஒரு வேன், நம்ம ஆபீஸ் பக்கத்துல இருக்குற மக்கள நமக்கு எதிரா திருப்பிவுடுறதுன்னு மறுபக்கம்... அப்பப்பா...!
நமக்கு எதிரா கரண்ட்ட கட் பண்ண வந்தாங்க. அப்புறமா ஆபீஸ்க்கு பக்கத்துல 7-வது வீட்டுல கட் பண்ணுனாங்க. நமக்கு கரண்ட் வந்தபாடில்ல. அதாவது, மக்கள் நக்கீரன எதுத்து வரணும், அரசாங்கத்தையோ இல்ல இ.பி.யையோ எதுத்து வந்துரக்கூடாதுன்னு ஒவ்வொரு வீட்டுக்கும் போயி அங்குள்ள மக்கள நமக்கு எதிரா திசை திருப்புறாங்க. மக்களையும் நாம குறை சொல்ல முடியாது. அவங்கவங்க குடும்ப சூழ்நிலை அப்படி.
இதுக்கிடையில நம்ம சீனியர் அட்வகேட் பெருமாள் சாரும் அவங்க ஜூனியர்கள் எல்லாரும் நமக்கு நடந்த கொடுமையச் சொல்றதுக்காக தலைமை நீதிபதியோட வீட்டுக்குப் போயிருந் தாங்கள்ல, அப்போ தலைமை நீதிபதி இவங்கள பார்க்காம வெளியே போயிட்டாரு. இத ஏற்கனவே பதிவு பண்ணியிருக்கோம். வேளச்சேரி அசோக் எம்.எல்.ஏ. போலீஸ் ஆதரவோட ஆபீசுக்கு பூட்டு போட்டது புகைப் பட ஆதாரத்தோட இப்ப தலைமை நீதிபதி கைக்கு கொண்டு போயிர ணும்னு தம்பி எஸ்.பி.சுந்தர் மூலமா கொடுத்தனுப்பிய போட்டோக்கள பெருமாள் சார் பார்த்திருக்காரு. உடனே பெருமாள் சார், என்னோட போனுக்கு வந்து, "அண்ணாச்சி இது போதும் அண் ணாச்சி. சீஃப்ட்ட இன்னிக்கு நாம ஆர்டர் வாங்கிர லாம்'' அப்படின்னு ஒரு நம்பிக்கைய குடுக்குறாரு. நமக்கும் கொஞ்சம் தெம்பு வந்துச்சு.
கொஞ்ச நேரத் துல தலைமை நீதிபதி வர்றாரு. அப்பவும் இவங்கள பார்க்காம அவசரமா உள்ளே போயிடுறாரு.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருத்தரு ஆபீசுக்கு பூட்டுப் போட்ட விஷயத்த ஒரு மனுவா எழுதி போட்டோக்களோட சேர்த்து தலைமை நீதிபதி வீட்டுல இருந்த வாசு ஸார்கிட்ட குடுக்குறாங்க. வாசு ஸார் அதப் படிச்சு பார்த்துட்டு உள்ள கொண்டுபோய் குடுத்துட்டு வந்துடுறாரு. நேரம் மதியம் 3:00, 3:30...ன்னு போய்க்கிட்டேயிருக்கு. அதுவரையிலும் எந்தப் பதிலுமே பெருமாள் சார்ட்ட இருந்து வரல.
அதுக்குள்ள தம்பி சேது போன்ல... "அண்ணே... மீர்சாகிப் மார்க்கெட் கார்னர்ல நம்ம தெரு மக்கள்லாம் ரவுண்ட்டா மனிதச் சங்கிலி போட்டு மொத்த டிராபிக்கயும் குளோஸ் பண்ணி போராடுறாங்க....''
???...???!
(புழுதி பறக்கும்)