poorkalam

அடங்காத அராஜகம்!

க்கீரனின் ஒவ்வொரு இதழிலும் உலகப் பெருசுகளின் "பொன்மொழிகள்' பல பக்கங்களிலும் இடம்பெறும். முதலில், தம்பி கவிஞர் பொன்னுச்சாமி இதனை தொகுத்துக் கொடுத்தார். அடுத்து அந்தப் பணியை நமது தம்பி உதவி ஆசிரியர் செந்தில், செவ்வனே செய்கிறார். அதில் ஒன்று...

"வீரம் என்பது அடுத்தவர்களை அடித்து வீழ்த்துவது அல்ல,

Advertisment

அநியாயத்திற்கு எந்த நிûலையிலும் அடிபணியாமல் வாழ்வதே''

நக்கீரனுடைய போர்க்களத்திற்காக எழுதியது மாதிரி இருக்குல்ல...

இப்ப நம்ம சீனியர் அட்வகேட் பெருமாள் சார் தொடர்கிறார்..

Advertisment

oo

"உடனே நக்கீரன் கோபால் அண்ணனிடம், நான் தலைமை நீதிபதியை பார்க்க ஏற்பாடு செய்கிறேன் என்று என்னுடைய ஜூனியர் அட்வகேட்ஸை அழைத்துக்கொண்டு, நக்கீரன் அலுவலகத்தில் மேலே உள்ள கம்ப்யூட்டர் செக்ஷ னுக்குள் நுழைகிறோம். ஒரே அதிர்ச்சி... அ.தி.மு.க. ரௌடிகள் கல்லெறிந்ததில் முன்புற கண்ணாடிகள் உடைந்து, அந்த அறை முழுக்க கண்ணாடிச் சிதறல். சிஸ்டத்தில் ஒர்க் பண்ணுற எல்லோர் முகத்திலும் பீதி. இயல்பு நிலைக்கு அவர்களை வரச்செய்து, உயர்நீதிமன்ற தலைமை நீதியரசருக்கு ஒரு மனுவை தயார் செய்தேன். அந்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு நேரடியாக கொடுக்க முடியாது. ரிஜிஸ்ட்ரார் ஜெனரலுக்குத்தான் கொடுக்க முடியும். எனவே கனம் ரிஜிஸ்ட்ரார் ஜெனரல் அவர்களுக்கு நடந்த சம்பவங்களையெல்லாம் விளக்கிக் கூறி, "இன்னும் உயிருக்கு ஆபத்தான நிலை, ஏகப்பட்ட சேதங்கள் நடந்துகொண்டிருக் கின்றன, தண்ணீரை, மின்சாரத்தை கட் பண்ண முயற்சி செய்கிறார்கள் எனவே ஒரு ஸ்பெஷல் ஹியரிங் கேட்டு அதில் நீதிமன்றம் தலையிட்டு பாதுகாப்பு வழங்க வேண்டும்' என கோரிக்கைகள் அனைத்தையும் தலைமை நீதிபதிக்கு நீங்கள் தெரிவிக்க வேண்டும்'' என்று ஒரு மனுவை தயாரித்தோம்.

நான், எட்விக், சிவகுமார், வர்கீஸ் ஆகியோர் ரகசிய பாதை வழியாக வெளியேறி ஆட்டோ பிடிக்க முயன்றபோது, நாங்கள் கண்ட காட்சி இன்னும் பயங்கரம். ஒருத்தன் கையில் பெரிய கல். பள்ளிப் பிள்ளை தாயுடன் வருவதையும், பள்ளி யில் படிக்கும் தன் மகனை பைக்கில் அழைத்து வருபவரையும் கவனிக்காமல், அவர்களை இடித்துத்தள்ளிவிட்டு ஆவேசத்துடன் வரு கிறான். பக்கத்தில் சில குண்டர்கள் நக்கீரன் அலுவலகத்தின் எதிரில் நின்ற டூவீலர்களுக்கு தீ வைத்துக்கொண்டிருந்தார்கள். எதிரே நக்கீரன் அண்ணாச்சியின் மீசை போட்ட ஒரு மண் சட்டி, ஒருவன் கையில் வைக்கப்போர், பெரிய பெரிய கற்கள், கடப்பாரை, தீவட்டி... என வரிசையாக கோஷம் போட்டுக்கொண்டே மிகுந்த வெறி யோட வருகிறார்கள்.

இதற்கிடையே வர்கீஸின் நண்பர் வேல்முருகனிடம், எப்படியாவது சேம்பருக்கு சென்று அனைவருடைய கோட்டையும் கவுனையும் எடுத்துக் கொண்டு வரவேண்டும் என்று கூறினோம். அவர் கோட்டை யும், கவுனையும் எடுத்துக்கொண்டு, பீச் காந்தி சிலை பக்கம் வந்து நிற்பதாக சொன்னார். நாங்கள் அனைவரும் கலர் சட்டை அணிந்திருந்தோம். தலைமை நீதிபதி முன்பு வெள்ளைச் சட்டையுடன்தான் ஆஜராக வேண்டும். பைகிராப்ட்ஸ் ரோட்டில் ஆளுக்கொரு வெள்ளை சட்டை வாங்கி அணிந்துகொண்டு ஆட்டோவில் கிளம்பி, போகும் வழியில் வேல்முருகனிடம் கோட்டையும், கவுனையும் பெற்றுக்கொண்டு நேராக க்ரீம்ஸ் ரோட்டில் உள்ள தலைமை நீதிபதியின் ஹோம் ஆபீஸுக்கு (ஐர்ம்ங் ர்ச்ச்ண்ஸ்ரீங்) சென்றோம்.

நல்லவேளையாக அன்று தலைமை நீதிபதியின் நேர்முகச் செயலாளர் திரு.வாசு அங்கே இருந்தார். அது நமக்கு மிகவும் ஏதுவாக இருந்தது. காரணம், வாசு அவர்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். நான் நக்கீரன் வழக்குகளில் ஆஜராகி, பல உத்தரவுகளைப் பெற்றது அவருக்குத் தெரியும். அந்த பரிச்சயத்தில்தான்... "பெருமாள் சார் வாங்க... என்று அழைத்து என்ன விசயம்' எனக் கேட்டார்.

poorkalam

உடனே நாங்கள் கொண்டு சென்ற மனுவை அவரிடம் அளித்து, "நடந்த விசயத்தையெல்லாம் விளக்கிச் சொல்லி, தலைமை நீதிபதி அவர்களிடம் இந்த மனுவை கொடுத்து விளக்கிச் சொல்லுங்கள்; முடிந்தால் தொலைக்காட்சியை பார்க்கச் சொல்லுங்கள்; சட்டத்திற்கு முற்றிலும் எதிரான அராஜக செயல் களெல்லாம் ஓடிக்கொண்டிருக்கின் றன, அதனை பார்த்து சூழ்நிலைகளை தலைமை நீதிபதியே புரிந்து கொள்ளலாம்'' என்று கூறினேன்.

அப்போது நீதியரசர் இக்பால் அவர்கள் தலைமை நீதிபதியாக இருந்தார். எங்களை வரவேற்பு அறையில் உட்கார வைத்துவிட்டு, வாசு அவர்கள் தலைமை நீதிபதியை சந்திக்கச் சென்றார். வெகுநேரம் வெளியே வரவில்லை. நாங்கள் காத்திருந்தோம். எந்த பதிலும் இல்லை.

திடீரென தலைமை நீதிபதி தனது காரில் புறப்பட்டுச் சென்று விட்டார். எங்களை கவனிக்கவே இல்லை... பெரிய ஏமாற்றம்...?

இதுல சின்ன பிரேக்...

ஷாட்ட கட் பண்ணி மறுபடி யும் நக்கீரன் ஆபீசுக்குள்ள போவோம்.

ரகசிய பாதை வழியாக அண்ணன் ஜவஹர் வந்தாரு. அப்புறம் இம்மி, நம்ம நக்கீரன் நலம்விரும்பி. ஜவகர் அண்ணன்ட்ட பேசிக்கிட்டிருந்தேன். அப்போ ஜவகர் அண்ணன், நீங்க இன்னும் ஏன் இங்க இருக்கீங்க, உடனே கிளம்புங்கன்னார். நான் கேள்விப்பட்டதெல்லாம் தப்பா இருக்கே அப்படின்னாரு. என்னண்ணே... இங்க பாருங்கண்ணேன்னு சொல்லிட்டிருக்கும்போதே திடீர்னு கல்லு, பாட்டிலு, வௌக்குமாறு, செருப்பு எல்லாம் வந்து விழுது. "இன்னிக்கு நக்கீரனுக்கு ஒரு முடிவு எழுதப் போறது மாதிரிதான் தெரியுது. நாம எப்படி இத விட்டுட்டு... எங்கண்ணே போறது? நீங்க சொல்லுங்க... எங்க போறது?'' அப்படின்னு கேட்டுக்கிட்டிருக்கேன்.

poorkalam

இம்மியும், "இல்லண்ணே நானும் அதுக்காகத்தான் வந்தேன்''னாரு. அவரு செய்தி மக்கள் தொடர்புத்துறையில இருக்காரு. அவரும், "அண்ணே நான் கேள்விப்பட்டது நல்லால்ல.... நீங்க இங்க இருக்க வேணாம், மொதல்ல நீங்க கௌம்புங்க, நாங்கள்லாம் இருக்கோம்ல'' அப்படின்னு அவர் சொன்னாரு. எனக்கு ஒண்ணுமே ஓடல. இதுக்கு இடையில தம்பி சிவகுமார் போன்ல "அண்ணே ஜாம்பஜார் போலீஸ் ஸ்டேஷன்ல உங்க மேல பர்ஸ்ட் எப்.ஐ.ஆர். போட்டுட்டாங்களாம்''ன்னாரு. ஜெயலலிதாவின் அநியாயத்துக்கு அடிபணியாததாலதான் அந்தம்மா கட்சியில இருக்குற பொசகெட்ட பயலுக கொஞ்சம்பேர் இப்படி ராங்ரூட்ல நம்மள ரவுண்டு கட்டுறாய்ங்க.

அண்ணன் கலைஞர், திருமா, காங்கிரஸ் ஞானதேசிகன், ஜவாஹிருல்லா, என்.ராம்... இவங்களத் தவிர, அந்தம்மாவுக்குப் பயந்து நிறையபேர் போன்கூட பண்ணல. நல்லவேளையா சன் நியூஸ், கலைஞர் நியூஸ், புதிய தலைமுறை, மாலை முரசு எல்லாத்துலயும் நம்ம ஆபீஸ் அட்டாக் லைவ் போயிட்டிருந்தது.

பெருமாள் ஸார், சீஃப் ஜஸ்டிஸ பார்க்கப் போயிருந்தாங்க. அவங்ககிட்டயிருந்து நமக்கு இன்னும் பதில் வரல. இதுக்கிடை யில ஜவகர் அண்ணன், "நீங்க எவ்வளவோ செய்தி பண்ணியிருக் கீங்க, ஆனா இப்படி... இவ்வளவு ஆக்ரோஷம், என்னா வெறி... இது மாதிரி நான் கேள்விப்பட்டதே இல்லையே''ன்னு ஆதங்கப் பட்டார். ஆனா எல்லாத்தையும் மீறி ஒண்ணு இடிக்குதேண்ணே. இவ்வளவு எடக்கு மடக்கா நம்மள அழிச்சிரணும்ங்கிற வெறி அந்தம்மாவுக்கு ஏன் வந்துச்சு....? நான் நினைக்கிறேன், அது மாமியா இருந்துக்கிட்டு மாட்டுக்கறி சாப்பிட்டத நக்கீரன் அம்பலப்படுத்திருச்சேன்னு, தாறுமாறா ஆத்திரம் தலைக்கேறியதுக்கு காரணம் இல்லாம இல்ல. இதெல்லாம் வெளிய தெரிஞ்சதுன்னா, தேசத்துல நம்பர் ஒன் பதவில தன்னால எப்படி உட்காரமுடியும்கிற கேள்வி வேற அவங்கள பாடாய்ப்படுத்திருச்சு. இந்தியாவோட வடக்குல மாட்டை எந்த அளவுக்கு நேசிக்கிறாங்கங்கிறத, மாட்டை வச்சு அப்பப்ப நடக்கிற வன்முறை மூலம், நாமதான் செய்தியாவே, தெரிஞ்சுக்கிட்டுத்தான் இருக்கோம். அப்படி இருக்கும்போது, பிராமினான நான் மாட்டுக்கறி சாப்பிடறது தெரிஞ்சா, அப்புறம் பி.எம். ஆக முடியுமாங்கிறதுதான் அந்தம்மாவோட பெருங்கவலை.

இதென்னடா புதுக்கதையா இருக்குன்னு யோசிக்கிறீங்கள்ல....

(புழுதி பறக்கும்)