(87) எச்சரித்த டாக்டர்!
சோதனைங்கிற பேர்ல கிரவுண்ட் ப்ளோர்ல மிஷின்லாம் இருக்கிற ஏரியாவுல தரைய தட்டித் தட்டிப் பாக்குறாங்க. ஒரு பக்கம் அவங்களோட நொள்ளக் கண்ணுல பின்னாடி ஆளு யாராவது வாட்ச்பண்ணுறாங்களான்னு பாத்துக்குறாங்க. அத நம்ம ஆட்களும் வாட்ச்பண்ணிக்கிட்டி ருக்காங்க.
நக்கீரன் ஆபீஸ்ல ஸர்ச் நடக்கிறது ஒண்ணும் புதுசு இல்ல. 1991, செம்டம்பர் மாதம். அப்போ ஒருநாள் நம்ம ஆபீஸ் முன்னாடி போலீஸ் ஜீப் வந்து நின்னுச்சு. நாம ஹாரிங்டன் ரோட்டுல இருந்தோம். ஜீப்ல வந்த ஒரு குரூப் போலீஸ், ஆபீசுக்குள்ள திமுதிமுன்னு நுழையுது. செக்யூரிட்டிங்க அவங்கள்ட்ட என்ன விஷயமா வந்திருக்கீங்கன்னு கேட்டுருக்காங்க.
எதுவும் சொல்லாம உள்ள வந்திருக்காங்க. நான் அந்த நேரம் வெளியே இருக்கேன். அப்பவே "ஒவ்வொருத்தருக்குப் பின்னாடியும் ஒருத்தரு நின்னுங்க'ன்னு நான் சொல்லியிருந்தேன். அவிய்ங்கள உள்ள வராதேன்னு தடுக்க முடியாது... ஏன்னா நடக்குறது குண்டாஸ் ஆட்சி, குண்டா யிஸம் நெறைஞ்ச ஆட்சில்ல. உண்மையிலேயே போலீஸ்காரன்தான் வரானா... போலீஸ் வேஷத்துல வேற எவனாவது வர்றானான்னு தெரியல. வந்தவங்க, எதையோ தேடிக்கிட்டே இருக்காய்ங்க.
பொதுவா போலீஸ் வந்து வீட்ட ஸர்ச் பண்ணுனாலே கிதுக்... கிதுக்...னு இருக்கும். நமக்கும் அது ஒரு கனத்த அனுபவம் தான். அப்போ இருந்த ஆபீஸ் கொஞ்சம் சின்னது தான்... அதிக பட்சம் 1000 ஸ்கொயர் பீட்டுக்குள்ளதான் இருக்கும். நான் இப்ப சொல்றது 91-ல நடந்தது. திடீர்னு ஒரு போலீஸ், இன்னொரு போலீஸ்கிட்ட சொல்றான். "யோவ் அதெல்லாம் எதுக்குய்யா தேடுற? அங்கெல்லாம் தொடாத... நமக்குத் தேவை 3 செ.மீ. அளவுல பாக்ஸ் டைப்புல இருக்கிற பாம். அந்த மாதிரி பாம் இருக் கான்னுதான்யா தேடணும்' அப்படின்னு.
"டக்'னு நம்ம ஆளுங்க, "பாக்ஸ் டைப்பா... பாக்ஸ் டைப்பா... பாக்ஸ் டைப்பா...'ன்னு எக்கோ டைப்ல கத்த ஆரம்பிச்சிட்டாய்ங்க.
"என்ன சார்... பாக்ஸ் டைப்பா? அப்ப நீங்க கொண்டு வந்து வச்சுட்டு எடுக்கிறது மாதிரி எடுக்கப் போறீங்களா?''ன்னு எல்லாருமே எகிற ஆரம்பிச்சிட்டாங்க.
"அதெப்புடி சார்... பாம் இருக்குதுன்னு தேடுறீங்க சரி... ஆனா பாக்ஸ் டைப்புல இருக் கும்னு எப்படி சொல்றீங்க. 3 செ.மீ. அளவுல கரெக்ட்டா பாம் இருக்குமா? வச்சவனுக்குத் தான இதெல்லாம் தெரியும்? நாங்க என்ன காதுல பூ வச்சிக்கிட்டா இருக்கோம்?''னு காட் டமா எகிற... அவங்க முயற்சியில தோல்வியடைஞ்சி போயிட்டாய்ங்க. அது ஒரு பெரிய கத.
அதேமாதிரிதான் இப்ப ராயப்பேட்டை ஆபீஸ்ல கீழ் ப்ளோர்ல ஸர்ச்ங்கிற பேர்ல தேடிக்கிட்டிருக்காய்ங்க. ஸர்ச் பண்ண வந்தவங்க, ஏதோ ஒண்ண வச்சி எடுத்துரணும்னு பிரயத்தனப்படுற மாதிரியே நடந்துக்கிறாய்ங்க. நம்ம தம்பிங்க அவங்க கூடவே போறதுனால, ஒண்ணுமே பண்ண முடியலியேன்னு கையப் பிசையுறாய்ங்க. இரண்டாவது நாளும் ஆபீசுக்கு வெளியே நெறைய பத்திரிகைகள்ல இருந்து ஏகப்பட்ட செய்தியாளர்கள் வந்துட் டாங்க. டி.வி. மீடியாவுல இருந்தும் கேமரா சகிதம் நெறைய பேரு வந்துட்டாங்க.
இதையெல்லாம் பாத்ததுமே நம்ம சீனியர் அட்வகேட் பெருமாள் சார் சுதாரிச்சு, இப்படி ஒரு அராஜகம் நடக்குறத மொதல்ல வெளிய எல்லாருக்கும் சொல்லணும்ங்கிறதுக் காக அவரு ஜூனியர் அட்வகேட் எட்விக்கை வெளிய போய் செய்தியா சொல்லச் சொன்னாரு. எட்விக்கும், சிவகுமாரும் வெளிய கிளம்பறப்போ... "வெளியே போகக்கூடாது'ன்னு போலீஸ் தடுக்குது.
"ஹலோ... நான் அட்வகேட். என்ன வெளிய போகவிடாம தடுத்தீங்கன்னா, அது வேற இஷ்யூவா ஆகும்''னு சொல்லி அட்வகேட் எட்விக் மெரட்டுனவுடனே... விட்டுட்டாங்க. உடனே டக்னு விக்கெட் கேட்ட திறந்து வெளிய போனவரு... பத்திரிகைக்காரங்க, டி.வி.காரங்க எல்லாரும் வரவும், அவங்கள்ட்ட, "ஸர்ச்ங்கிற பேர்ல போலீஸ்காரங்க ரொம்ப கெடுபிடி பண்றாங்க. அவங்கமேல ரொம்பவே சந்தேகமா இருக்கு. ஏதோ பொருள வைக்கிறதுக்கு வந்தவங்க மாதிரியே தோணுது. அதவிட முக்கியம்... நக்கீரன் ஸ்டாப்புங்க எல்லாரும் அவங்க பின்னாடியே நின்னு அவங்க எதையும் வச்சிரக்கூடாதுன்னு ரொம்ப கவனமா நிக்கிறாங்க. ஆனா... அது அவங்களுக்கு தொந்தரவா இருக்குதுன்னு சொல்லி ஆபீஸ்ல உள்ள எல்லா ரையும் கைது பண்றதா ஒரு திட்டம் போடுறாங்க. அத தெரியப்படுத்துறதுக்காகத்தான் நாங்க ஒங்கள்ட்ட வந்தேன். நக்கீரன் ஆபீஸ்ல இருக்கிற மொத்தபேரையும் கைதுபண்ணி தூக்கிட்டுப் போறதுக்கு சதி நடக்குது. அத உங்ககிட்ட சொல்லணும்ங்கிறதுக்காகத்தான் நாங்க வந்தோம்''னு சொல்லிட்டு, மின்னல் வேகத்துல போனது மாதிரியே திரும்பவும் உள்ள வந்துட்டாரு.
இப்ப என் கத என்னன்னு ஒங்களுக்குத் தெரியப்படுத்தணும்ல. நான் அங்க ப்ளாட் பாரத்துல உக்காந்திருக்கேன். வெயில் ஏற... ஏற... அங்க உக்காந்திருக்க முடியாது. எத்தன டீயத்தான் குடிப்பீங்க? டீயா குடிச்சி... குடிச்சி... பித்தம் வேற தலைக்கேறிடிச்சி. வயித்துப் பசி... ரெண்டு வடைய வாங்கி புட்டு போட்டுக்கிட்டு, "ஐயப்பா வண்டிய எடு''ன்னு சொல்லிட்டு அப்படியே கோயம்பேடு பாலம் தாண்டி மதுரவாயல்... அதையும் தாண்டி பூந்தமல்லி ரோட்டுல போய்க்கிட்டிருக்கோம். பூந்தமல்லி ஹுண்டாய் கம்பெனியெல்லாம் தாண்டி அந்தப்பக்கமா நமக்கு ரொம்பத் தெரிஞ்ச டாக்டர் ஒருத்தருக்கு தோட்டம் ஒண்ணு இருக்கு. 20 ஏக்கருக்கும் மேல இருக்கும். அங்க போறதுதான் இப்போதைக்கு சரியா இருக்கும் அதை நோக்கிப் போயிட்டி ருக்கேன்.
இதுக்கிடையில நம்ம டாக்டருக்குத் தெரிஞ்ச போலீஸ் உயரதிகாரி, "உங்க பிரண்டு நக்கீரனுக்கு ஆபத்து. இன்னிக்கு ரொம்ப விகரஸா வரப்போகுதுன்னு சொல்றாங்க. அதா வது... ஆபீசுக்கு வந்து ஸர்ச்ங்கிற பேர்ல எதையோ பண்ணப் போறாங்கன்னு எச்சரிக்கையா சொன்னாரு''ன்னு, டாக்டர் நம்ம கிட்ட சொன்னார்.
உடனே டாக்டர்ட்ட, "ஸர்ச் பண்ண ஆரம்பிச் சிட்டாய்ங்கண்ணே... ஆபீஸ் பூராவும் ஒரே போலீஸ் பட்டாளம். உள்ளே புகுந்து கீழ எதையோ தேடிக்கிட்டிருக்காங்க. வேற எதுவும் செய்தி இருக்காண்ணே''ன்னு கேட்டேன்.
"ஒங்க ஆதரவோட ஒரு தீவிரவாதக்குழு இயங்குதுங்கிற மாதிரி ஒங்க ஆபீஸ சித்தரிக்க எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சி, அதுனால ஜாக்கிரதையா இருக்கச் சொல்றாரு''ன்னாரு டாக்டர்.
"எப்படிண்ணே ஜாக்கிரதையா இருக்குறது? நான் இங்க இருக்கேன். தம்பிகள்லாம் அங்க இருக்காங்க. போலீஸ் பட்டாளம் உள்ள இருக்கு. ஸர்ச்ங்கிற பேர்ல எதையோ வச்சி எடுக்கணும்ங்கிற ப்ளானோட அவங்க வந்தது மாதிரி நல்லாவே தெரியுது. என்ன நடக்கப்போகுதுன்னே தெரியல... என்ன பண்றதுன்னு கொஞ்சம் குழம்பிப்போய்தான் இருக்கேன்''ன்னு சொன்னேன்.
எனக்குத் தகவல் தந்தவரு சொன்னத வச்சிப் பாத்தா, "பெரிய லெவல்ல தீவிரவாதத்துக்கு ஆதரவா நீங்க செயல்பட்டதுக்கான ஆதாரங்கள் நெறைய இருக்குதுன்னு எஸ்டா பிளிஷ் பண்ணி நக்கீரன் ஆபீஸ இழுத்து மூடி சீல் வைக்கணும்னு பெரிய வேலைகள்லாம் பண்றாங்க அப்படின்னு என்னால புரிஞ்சுக்க முடியுது''ன்னாரு.
"அது உண்மைதான்ணே... என்னோட சொந்த ஊரு அருப்புக்கோட்டைக்கும் இப்ப ஸர்ச் பண்ண போயிருக்காங்க. அருப்புக்கோட்டைக்கும் மாட்டுக்கறி மேட்டருக்கும் என்ன சம்பந்தம்னு தெரியல. நம்ம தம்பிங்க வீடு, இணையாசிரியர் வீடுன்னு இருக்கிற வீடுகளுக்கெல்லாம் ஸர்ச் பண்றதுக்கான ஏற்பாடுகள பண்ணியிருக்காய்ங்க போல. எல்லா எடத்துலயும் போலீஸ நாம எதுத்து நிக்க முடியாது. ஏன்னா நமக்கு மேன் பவர் கம்மிதான? அவங்க ஆளுங்கட்சி... அதேநேரம் போலீஸ் போர்ஸ், குண்டாஸ்னு வேற நெறைய வச்சிருக்காய்ங்க. அவங்க வச்சதுதான் சட்டம், நாம அத எதுத்து ஒண்ணும் செய்ய முடியாதுதான் இருந்தாலும் வர்றது வரட்டும்... ரெண்டுல ஒண்ணு பாத்துருவோம்''னு நான் கொஞ்சம் தைரியத்தோடதான் இருந்தேன்.
"அண்ணே... நான் சொல்றத சொல்லிட் டேன்... நீங்க ஜாக்கிரதை''ன்னு சொல்லிட்டு போன வச்சிட்டாரு டாக்டர்.
தீவிரவாத முத்திரைய நம்ம மேல குத்துறது ஒண்ணும் புதுசு இல்ல. கிட்டத்தட்ட 1991-லயும், இதே மாதிரி என் மேல தீவிரவாத முத்திரைய குத்துறதுக்கு பெரிய பெரிய திட்டம்லாம் போட்டாய்ங்க. அத கடந்து வந்துட்டோம். அதுக்கடுத்து 2003-ல என்ன பொடாவுல அரெஸ்ட் பண்ணும்போது ஆயுதம் வச்சிருந்ததாதான் முதல்ல குற்றச்சாட்டு, அதுக்காக, லைசென்ஸ் இல்லாத கைத்துப்பாக்கிய காருல வச்சிருந்ததா சொல்லி அரெஸ்ட் பண்ணுனாய்ங்க. ஆபீஸ் பக்கத்துல வச்சி அரெஸ்ட் பண்ணிட்டு, ஏதோ வீரப்பன் காட்டுக்குள்ள வச்சி மெனக்கெட்டு அரெஸ்ட் பண்ணுன மாதிரி காட்டணும்னு வேற வேற திட்டம்லாம் போட்டாய்ங்க. அதுல மண் விழுந்துச்சு. இருந்தாலும், அவங்களே ஒரு துப்பாக்கிய செட்பண்ணி, அந்த துப்பாக்கிய வைக்கிறதுக்கு ஒரு பை.... அந்த பைய ஒரு ஐ.ஜி.தான் குடுத்திருக்காரு. "கை... கையில ஒரு பை... பைக்குள்ள ஒரு கள்ளத்துப்பாக்கி...' அதோடதான் நான் சுத்திக்கிட்டுத் திரிஞ்சேனாம். இப்படி சொல்லித்தான் என்ன தூக்குனாய்ங்க.
"ஒருபக்கம் நம்மள தீவிரவாதின்னு முத்திரை குத்த பெருமுயற்சி எடுக்குறாய்ங்க'ன்னு ஒரு பெரிய போலீஸ் ஆபீசரே நம்ம டாக்டர்ட்ட சொல்றாரு...
இன்னொரு பக்கம் பாத்தீங்கன்னா... பத்திரிகைத் துறையில நாம தொட்டுருக்கிற உயரம் இருக்குல்ல... நாம ஒண்ணும் அப்படி பெரிய உயரம் தொடல. ஏதோ பேரு சொல்ற அளவு தொட்டிருக்கோம். இது நெறைய பேரோட கண்ண உறுத்திருச்சு. அப்படி கண்ணு உறுத்துன ஆளுங்க கொஞ்சம்பேரு நமக்கு எதிரா டி.வி. செய்தி சேனல்ல உக்காந்து கன்னாபின்னான்னு பேசுன ஆளுங்கள்ல முக்கியமான ஒண்ணு, ரெண்டு பேரு இருந்தாய்ங்க. அதுல அதிமுக்கியமா ஞானின்னு ஒருத்தரு. இன்னொருத்தரு எஸ்.வீ.சேகர். இவங்க ரெண்டுபேரும் நமக்கு எதிரா நல்லாவே கல் எறிஞ்சாய்ங்க.
(புழுதி பறக்கும்)