(254) ஏ.சி. இல்லாத ரூமில்... கட்டாந்தரையில்... சாதா சேரில்...
எத்தனை நெருக்கடி!
எவ்வளவு ரத்தம்!
ஏகப்பட்ட மன உளைச்சல்?
எண்ணிலடங்கா தொல்லைகள்!
அதிகார வர்க்கத்தால், ஜெ.வின் ஆணவத்தால் நக்கீரனும் நானும், நம் தம்பிகளும் பட்ட ரணங்கள் கொஞ்சமல்ல. தினமும் "போர்க்கள'த்தில் எதிரிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை.
"சூரியன் மறைவதிலிருந்து உதிக்கும்வரை யுத்தம் செய்யக்கூடாது' என்பது போர் விதி.
எழுத்துரிமை கொண்ட ஜனநாயகவாதியான எங்களை, குறைந்தபட்ச யுத்த தர்மத்தைக் கூட கடைப்பிடிக்காமல் தாக்கியது ஜெ.வின் ஆணவ அரசு.
"அவங்களோட ஏன் மோதுறீங்க? அச்சகம், அரசாங்கத்தோட மோதலாமான்னு எச்சரிச்சவங்க கொஞ்ச பேரு. ரெண்டு, மூணு அடியைத் தாங்கிக்கிட்டீங்கன்னா, எல்லாம் பழகிப்போகும்; இதுவும் கடந்துபோகும்' என நலம்விரும்பிகள் போல சிலர் நயவஞ்சகமா என்கிட்ட சொன்னபோது... அச்சப்படவில்லை நாங்கள். அநியாயங்களை அம்பலப்படுத்தினோம், ஆதாரங்களை அடுக்கினோம், ஊழலின் தோலை உரித்தோம்; எங்கள் தோல் உரிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாமல்!
250 அத்தியாயங்களாக போர்க்களம் படித்துவந்த வாசகர்களுக்கு இவையெல்லாம் தெரியும்.
போர்க்களத்தில் நாங்கள் தோற்றதுபோல் தெரிந்தாலும்...
உண்மை என்ன?
நீதிபதி மைக்கேல் டி.குன்ஹாவின் நீதிமன்றத்தில் நடந்ததே நக்கீரன் வெற்றிக்கு, ஜனநாயகத்தின் வெற்றிக்கு சாட்சி!
இதோ...
ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞரான அண்ணன் நடேசன், 27.9.2014 அன்று நடந்ததை அப்படியே சொல்கிறார்... “
"2004-முதல் ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு சென்னையிலிருந்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றத் துக்கு மாற்றப்பட்டது. மாற்றப்பட்டது முதல் பேரா சிரியர் அன்பழகன் அவர்களால் நானும், நண்பர் பாலாஜிசிங்கும் இந்த வழக்கில் நியமிக்கப்பட்டு ஆஜராகிக்கொண்டிருந்தோம். இந்த வழக்கில் பிறழ் சாட்சிகளை எல்லாம் திரும்ப அழைத்து விசாரித்தார்கள். அப்போதே இந்த வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்படுவது உறுதியாகிவிட்டது. அதாவது 2010 கால கட்டத்தின்போதே.
27-9-2014 அன்று தீர்ப்பு. முந்தைய நாள் 26-ஆம் தேதி நாங்கள் நீதிமன்றம் சென்றோம். பெஞ்ச் கிளார்க் பிச்சைமுத்து, ஜெராக்ஸ் மிஷினை எடுத்துவைக்கச் சொன்னார். சிறிதுநேரம் கழித்து மொழிபெயர்ப்பாளர் ஹரீஷை வரச்சொன்னார். அப்போதே மறுநாள் தீர்ப்புக்கான அறிகுறி தெரிந்தது.
மறுநாள் 27ஆம் தேதி காலை 8.30 மணிக்கெல்லாம் கோர்ட்டுக்குச் சென்றோம். பரபரப்பாக இருந்தது.
நீதிமன்றத்தில் இரு தரப்பு வழக்கறிஞர்கள், பெஞ்ச் கிளார்க், நீதிபதி என மொத்தம் 22 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். நீதிபதி வந்ததும் நாங்களெல்லாம் எழுந்து வணக்கம் சொன்னோம்.
நீதிபதி குன்ஹா, எங்களைப் பார்த்து... "குற்றவாளிகள் வரும்போது யாரும் எழுந்து நிற்கக்கூடாது. அப்படி அவர்களுக்கு மரியாதை குடுக்கணும்னு நினைத்தால், இப்போதே எழுந்து நின்றுவிடுங்கள்' என்றாராம். நீதிபதி வாயிலிருந்து "குற்றவாளிகள்' எனச் சொன்னதுமே, எல்லோருமே ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டார்களாம். முக்கியமாக... குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள்.
பெஞ்ச் கிளார்க் பிச்சைமுத்து, "சைலன்ஸ்... today pronouncement of Judgement... அதாவது, இன்று தீர்ப்பு நாள்'' என்று சொல்லி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரனை அழைத்தார். குண்டூசி விழுந்தால் சத்தம் கேட்கும் அமைதி.
10:30 மணிக்கெல்லாம் சுதாகரன் கோர்ட்டுக்குள் வந்துவிட்டார்.
வந்ததும், வராததுமா கைகள தன் நெஞ்சுல வச்சு கண்ண மூடி பிரார்த்தன செய்ய ஆரம்பிச்சுட்டாராம்.
10:55க்கு கூண்டுக்குள் வரிசையா குற்றவாளிக் கூண்டுல நாலுபேரும் ஏறி நின்னாங்க. உட்கார சேர் இருந்தும் உட்கார மறுத்துவிட்டாராம் ஜெயலலிதா. கூண்டில் ஏறி நின்றதும் சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் நீதிபதிக்கு ஒரு வணக்கம் போட்டாங்களாம். ஜெயலலிதா வணக்கம் தெரிவிக்கவில்லை. ஜெயலலிதாவா கொக்கா... சும்மா கண்ட கண்ட நீதிபதிக்கெல்லாம் வணக்கம் போட்டுருமா என்ன? "இந்த கூண்டுல நிக்க வச்சுட்டல்ல உன்ன உசுரோடவே விடமாட்டேன்'னு மமதையோட ஒரு பார்வைய மட்டும் பாத்துருக்கு. ற்ட்ஹற் ண்ள் ஜெயலலிதா.
கோர்ட்டுக்குள்ள அரசு வழக்கறிஞர் பவானிசிங், அடிஷனல் பி.பி.முருகேச மர்டி, எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் நடேசன், பாலாஜிசிங், தாமரைச்செல்வன் எம்.பி., சரவணன்.
இத்தனை நாள் உடனிருந்து வழக்கை நடத்திய வழக்கறிஞர் குமரேசன் அன்று ஆப் சென்ட்.
ஜெயலலிதா, நீதி பதிக்கு வணக்கம் தெரி விக்கவில்லை. அமைதியாக நின்றார். சசிகலா அவரை கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டார். சந்தேகத்துக்கிடமின்றி இந்த வழக்கில், ஜெ., சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட தால் அவர்கள் குற்றவாளிகள் The prosecution prove the case beyond reasonable doubts. Hence accused persons No 1 to 4 found guilty. Hence convicted and the question of sentence at 1 p.m. என்றார் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா.
ஜட்ஜ்மெண்ட் சொன்னதும், "ஜெ.', சசியைப் பார்த்து திரும்பி ஒரு முறை முறைச்சுச்சாம். அதுக்கு நிறைய அர்த்தம் இருக்கு.
"என்னடி நீ சொல்லிக் கூட்டிட்டு வந்த. இங்க என்ன நடக்குது... போறோம், நிக்குறோம், அடுத்த ஒருமணி நேரத்துல போயஸ்கார்டன் வந்துட றோம். எல்லாரும் விடு தலையாவோம்னுதான கூட்டிட்டு வந்த. இங்க வேற மாதிரில்ல நடக்குது. என்னை தண்டிச்சிட்டான் இந்த நீதிபதி. உன்ன்ன்ன...'' அப்படி பல்லக் கடிச்சுட்டு ஒரு முரட்டு முறை முறைச் சிருக்கு.
அவர்களை 1 மணி வரை காத்திருக்கச் சொன்னார். "அதுவரை ரெஸ்ட் எடுக்கிறதுன்னா எடுங்க'ன்னார். அப்ப அரசுத் தரப்பு வக்கீல் அவங்களை ஏ.சி. கேர வன்ல ஏற்றுவதற்காக அழைக்கப் போனார். அப்ப நீதிபதி, "குற்ற வாளிகள்னு அறிவிச்சதால நீங்க பக்கத்து ரூம்லதான் இருக்கணும்'னு ஆர்டர் போட்டார். இங்கதான் ஒரு விஷயத்த நீங்க பாக்கணும். எங்கள வழக்கு.. வழக்குன்னும், கைது, மிரட்டல்னும் என்னா பாடுபடுத்துச்சு. உயிரக் காப்பாத்த நக்கீரனக் கொண்டுவர என்னென்ன கஷ்டமெல்லாம் பட்டுருப்போம். எத்தன, எத்தன அசிங்கத்துக்கு மேல படுத்துருப்போம். அதுக்குப் பதிலடியா விழுந்தது பாருங்க... ஒரு இடி.
"விழித்துப் பார்க்கும்போது எல்லாம்... பலித்துவிடாதா
என்றே தோன்றுகிறது சில கனவுகள்!''
இந்தக் கனவுதான் நக்கீரன் ரொம்ப நாளா கண்ட கனவு.
ஏம்மா ஜெயலலிதா, எங்கள என்ன பாடு படுத்துன? ஒண்ணா... ரெண்டா...
எங்க ஐயா பிரிண்டர் கணேசன் சாவுல இருந்து, எங்க மாமா ஆர்.எஸ்.பாண்டியன் சாவு வரையிலும்... எத்தன இழப்பு, எத்தன வழக்கு. அப்புறமும் விட்டபாடு இல்ல. ஒரே ஒரு செய்தி... அதுவும் இல்லாததையும், பொல்லாததையும் சொல்லல...
ஊரே சேர்ந்து 2012 ஜனவரி 7-ஆம் தேதி ரவுண்டு கட்டி பச்சப்புள்ளயள அடிச்சகணக்கா அடிச்சுப் பிறாண்டி... நடு ரோட்டுல உக்காந்து, நமக்கு பாடையப் போட்டு ஈமச்சோறு திண்டுபுட் டாய்ங்க. இதுக்கெல்லாம்தான் இந்தியாவுல விரல் விட்டு எண்ணுற உங்கள்ல ஒருத்தர், நீதிதேவன் டி.குன்ஹா அடிச்சாரு அடி.
"மேடம் நோ கேரவன்... ஒன்லி கட்டாந் தரை''ன்னதும் மனசு ரொம்ப குளிர்ந்து போச்சு.
கட்டாந்தரை, சாதா சேர்... அதுவும் பிளாஸ்டிக் சேர். ஏ.சி. இல்லாத ரூமு... போடு, போடு... -இதுதாண்டா... "கடவுள் இருக்காண்டா குமாருன்னு சொல்லுவாய்ங்கள்ல...' அது மாதிரி கடவுள் நம்பிக்கை இல்லாதவங்களுக்கு முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!
"ஏண்டா டேய்.. எங்க அம்மாவ கட்டாந் தரையில உக்காரவச்சது உனக்கு அவ்வளவு இனிப்பா'ன்னுதான கேக்குறீங்க. பின்ன கட்டாந் தரைன்னா என்னன்னு தெரியணும்ல.
ஒண்ணு தெரியுமா சார்...
ஊருல சொல்லுவாங்க, "எதுலயும் ஒரு அள வோட இருந்தா அவதிப்படவும் தேவையிருக்காது, அவமானப்படவும் தேவையிருக்காது'ன்னு. அது போலத்தான் ஜெயலலிதாவுக்கு... கட்டாந் தரைன்னா கேவலமா பாத்த மகராசிக்கு கட்டாந்தரைன்னதும் கேட்கவா வேணும்... இதுதான் உலகம்!
எங்களுக்கு கட்டாந்தரைய விட்டா வேற தெரியாது. அந்தம்மாவுக்கு கட்டாந்தரையின்னா என்னன்னே தெரியாது. கால் தரையில படாம இருக்க ரெட் கார்ப்பெட் பவனி... பன்னீர் குளியல்... இத்யாதிகள் நிறைய... நிறைய. அதுக்குள்ள போகல. ஆனா கட்டாந்தரையிலயும் சாதாரண மான பிளாஸ்டிக் சேர்லயும் உட்காரச் சொன்னதுமே அந்தம்மா செத்தே போச்சு.... இதுக்கு மேல நான் ஏன் இருக்கணும்னு.
சரி... அடுத்து நடந்தத அண்ணன் வக்கீல் நடேசன் தொடர்ந்து சொல்றாரு...
(புழுதி பறக்கும்)