கொந்தளித்த அண்ணன் வைகோ!
அரசியல் அரங்குல என்னுடைய கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்குங்கிறது அப்ப எனக்குத் தெரியல. வெளிய வந்த பிறகுதான் தெரிஞ்சுக்கிட்டேன். மதுரையி லிருந்து சென்னைக்கு விமானத்துல வந்த வேகத்துல கார்ல வரும்போதே கண்டன அறிக்கைய டிக்டேட் செஞ்சு அனுப்பிட்டு நேரா அண்ணன் வைகோ சிந்தாதிரிப்பேட்டை ஸ்டேஷனுக்கு வந்துட்டாரு.
தான் ஒரு வழக்கறிஞராக வந்திருக்கிறதாவும் நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதிக்கணும்னு தன்னோட வழக்கறிஞர் அட்டையைக் காட்டி போலீஸ்கிட்ட அனுமதி கேட்டிருக்காரு. ஆனா அவருக்கு அனுமதி குடுக்கல.
அங்க இருந்த மீடியாக்கள்ட்ட பேசுன வைகோ, "நீதித்துறையையும் காவல்துறையையும் கேவலமான வார்த்தைகளால் விமர்சனம் செய்த எச்.ராஜாவை அழைத்து விருந்து வைக்கிறார் கவர்னர். ஆனால் பத்திரிகையில் ஒரு செய்தி வெளியிட்டதற்காக விமான நிலையத்தில் வைத்து கைது செய்திருப்பது சர்வாதிகார நடவடிக்கை. நக்கீரன் கோபால் இந்த சிறைக்கெல்லாம் அஞ்சமாட்டாரு''ன்னு சொன்னதோட, அங்கேயே நடு ரோட்டுல உட்காந்து தர்ணால ஈடுபட்டாரு. அவர் கூட பத்திரிகையாளர்களும் சேர்ந்து ஆர்ப்பாட்டத்துல ஈடுபட்டாங்க. என்னை விடுதலை செய்யும்படி அவங்களும் முழக்கம் போட்டாங்க. அதனால அந்தப் பகுதி முழுசும் போக்குவரத்து ஸ்தம்பிச்சது. இதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் முத்தரசன் வந்தாரு. அவரும் என் கைதுக்கு கடுமையா கண்டனம் தெரிவிச்சாரு. மறைமுகமாக சர்வாதிகார ஆட்சி நடப்பதா அவர் குற்றஞ்சாட்டுனாரு.
கூட்டம் சேந்துருச்சு. நம்மகூட வேல பாக்குற ஆபீஸ் தம்பிங்கள்லாம் வந்தாச்சு. பத்திரிகை சங்கங்கள்ல உள்ள பொறுப்பாளர்கள், மத்த பத்திரிகை நண்பர்கள், நலன்விரும்பிகள்னு ஸ்டேஷன சுத்தி ஜே... ஜே.... ஜே...ன்னு ஒரே கூட்டமா இருக்கு. என்னைய ஒரு மூலைல உட்கார வச்சிருந்ததுனால எனக்கு சவுண்ட்லாம் கேக்கல, கூட்டத்த மட்டும் எட்டிப் பாத்தேன். அதுக்கும் போலீஸ்காரய்ங்க அனுமதிக்கல.
"டீ வேணுமா?''ன்னு கேட்டாய்ங்க. ஒண்ணும் வேண்டாம்னுட்டேன். ஏன்னா ஏதாவது விஷத்த குடுப்பான்... எதாவது ஒண்ண குடுத்துருவாய்ங்கள்ல! எதுக்கு சனியன். மயக்க மருந்த கூட குடுப் பாய்ங்க...ன்னு, ஒண்ணும் வேணாம்னுட் டேன்.
"நீங்கதான் டீ நெறைய சாப்பிடு வீங்களே...''அப்படின்னான்.
"அதெல்லாம் இல்ல நிறுத்திட் டேன்''னுட்டேன்.
கொஞ்சநேரம் ஆச்சு. பரபரப்பா அவிய்ங்களுக்குள்ளயே பேசிக்கிறாய்ங்க... "வைகோ என்னய்யா இப்படி வேகமா பேசுறாரு... ஃபைட் பண்றாரு'ன்னு.
மறுபடியும் வைகோ, "நான் அட்வகேட், கோபால உடனே பாக்கணும். அவர பாக்குற உரிமை எனக்கு இருக்கு''ன்னு சட்ட பாயிண்டுகள எடுத்து வச்சு கடுமையா வாக்குவாதம் பண்ணியிருக்காரு.
என்ன பண்றது, ஏது பண்றதுன்னு தெரியாம இவிய்ங்க கையைப் பிசைஞ்சுக்கிட்டிருக்காய்ங்க.
என்ட்ட வந்து, "வைகோ சார் உங்கள பாக்கணும்கிறாரு... அவரு உங்க அட்வகேட்டா?''ன் னாங்க.
"ஆமாங்க, ரொம்ப சீனியருங்க அவரு. எங்க வழக்குக்கு... ரொம்ப முக்கியமான விஷயம்னா பாராளுமன்றம், ஹைகோர்ட், உச்சநீதிமன்றம்னு எங்களுக்காக வந்து வாதாடுவாரு''ன்னேன்.
ஆனா அவிய்ங்க, எங்க வைகோ நம்மளப் பாத்தா சட்டம் கிட்டம்னு ஓங்கிப் பேசி அவிய்ங்க போட்ட ரூட்ட மாத்தி கேஸ ஒண்ணுமில்லாம பண்ணிட்டா?... இதுக்கெல்லாம் திட்டம் போட்டுக் குடுத்த மேலிடம்... அது எந்த மேலிடம்னு இதுவரைக்கும் தெரியல. என்ன வழக்குன்னு ஒரு பயலும் சொல்லல. ஆனா வைகோ மாதிரி பெரிய தலைகள, நம்மள பாக்க விட்டுறக்கூடாதுன்னு குறியா இருந்தது தெரியுது.
ஒரு கைதுக்கு இப்படி ஒரு பரபரப்பு வரும்னு அவிய்ங்களும் கனவுல கூட நினைச் சிருக்க மாட்டாய்ங்க. அதனால அவ்வளவு யோசிக்கிறாய்ங்க.
கொஞ்சநேரம் ஆச்சு... "சிவகுமார்னு ஒருத்தரு வந்திருக்காரு, உங்களப் பாக்க...''ன்னாங்க.
"முதல்ல வைகோ அண்ணன வரச்சொல் லுங்க''ன்னேன்.
"இல்ல... சிவகுமார்ங்கிறவரத்தான் அனு மதிக்கச் சொல்லியிருக்காங்க''ன்னாங்க.
"நோ ப்ராப்ளம்'
வந்தாரு... எங்க அட்வகேட்தான்.
"தம்பி, இதுவரைக்கும் என்ன கேஸ்னு சொல்லல. கைதிய இழுத்துட்டு வர்றது மாதிரிதான் இழுத்துட்டு வந்தாய்ங்க. ரொம்ப பெரிய டிராமால்லாம் நடந்துச்சு'' அப்படின்னேன்.
அவர்ட்ட என்னோட உடமைகள் எல்லாத்தையும் குடுக்கச் சொன்னாய்ங்க.
மோதிரம், கழுத்துல போட்டிருந்த உத்திராட்சக் கொட்டை மாலை, நான் வச்சிருந்த பை எல்லாத்தையும் வாங்கி அவர்ட்ட ஒப்ப டைச்சிட்டு, குடுத்துட்டோம்னாங்க. அப்புறமா "இந்த இந்த பொருள் எல்லாம் ஒப்படைச்சிட் டேன்னு கையெழுத்துப் போடுங்க'ன்னாங்க.
"அதெல்லாம் போடமாட்டேன், அங்கயே வாங்கிக்குங்க''ன்னுட்டேன்.
"இல்ல சார்... நீங்க கண்டிப்பா போட்டாகணும்''னாங்க.
"அப்படின்னா அரெஸ்ட்டா... எதுக்காக அரெஸ்ட்?னு சொல்லுங்க போடுறேன்''னேன்.
"கையில இருக்கிற மோதிரம், கழுத்துல உள்ள செயின், இடுப்புல கட்டியிருக்கிற அரைஞாண் கயிறு... இதையெல்லாம் அரெஸ்ட்பண்ணி ஜெயிலுக்கு கொண்டு போகும்போது வாங்குவாய்ங்க. நீங்க வாங்கிட்டீங்க... அப்படின்னா என்ன அர்த்தம்? எந்த ஜெயிலுக்கு கொண்டு போறீங்க?'' அப்படின்னு நான் கேக்குறேன்.
அப்பயும் ஒண்ணும் சொல்லல... என்ன வழக்குக்காகன்னு.
"அப்படின்னா நான் ஏன் ஒத்துழைப்பு குடுக்கணும்... அதெல்லாம் முடியாது''ன்னு சொன்னேன்.
அப்போ சிவகுமார் கேக்குறாரு... அஸ் எ அட்வகேட் கேப்பாருல்ல. அவரு, "எங்க ஆசிரியர எதுக்காக அரெஸ்ட் பண்ணியிருக்கீங்க?''ன்னு கேக்குறாரு.
"தம்பி என்னைய அரெஸ்ட்பண்ணி ஏர்போர்ட்ல இருந்து அடிக்காத குறையா கொலைக் குற்றம் பண்ணுன மாதிரி இழுத்துட்டுத்தான் வந்தாய்ங்க. அப்ப இருந்தே நான் கேக்குறேன் சொல்லவே இல்ல தம்பி.''
"சார் அவங்க மேல ஒரு குற்றச்சாட்டு பதிவாகியிருக்கு சார்...'' அப்படின்னுதான் சொன்னாய்ங்க.
"என்ன குற்றச்சாட்டு?''
"என்ன வழக்கு, அதுக்கு என்ன செக்ஷன்னு எஃப்.ஐ.ஆர்.லாம் போட்டு அரெஸ்ட் பண்ணி மாஜிஸ்திரேட் முன்னிலைல ஒப்படைக்கணும்...'' அதுதான் வேலை. ஆனா... என்ன வழக்குங்கிறத மட்டும் சொல்லாம மறைக்கிறாய்ங்க.
"ஜெயலலிதா செத்தாலும், அடிப்பொடி களா இருக்கிறதுக இந்த வேலைகளச் செய்துக் கிட்டுதான இருக்கும்''னு நெனச்சுக்கிட்டேன்.
அப்பதான் தம்பி சிவகுமார் சொல்றாரு, "வைகோ தரையில உக்காந்து, அரசாங்கத்த கடுமையா விமர்சனம் பண்ணி போராட்டம் பண்ணிக்கிட்டிருக்காரு. வெளிய ரொம்ப பரபரப்பா இருக்கு. எல்லா பத்திரிகைக்காரங்களும், மீடியாவும் வந்துருச்சு. பெரிய அளவுல கூட்டம் வந்துருச்சு... போராட்டம் பெரிய லெவல்ல போயிட்டிருக்கு. "நான் ஒரு அட்வகேட். என்னை நக்கீரன் கோபால பார்க்க விடுங்க'ன்னு வைகோ, போலீஸ்கிட்ட சண்ட போட்டுக்கிட்டிருக்காங்க''ன்னு சொன்னாரு.
"அவரு அட்வகேட். நமக்காக வந்திருக்காரு, அவர வரச்சொல்ல வேண்டியதுதான?''ன்னேன். "இல்ல... அனுமதிக்கமாட்டேன்னுட்டாங்க''ன்னாரு.
"வைகோ, நமக்காக ரொம்ப நல்லா பேசுனாரு. காவல்துறையையும் நீதித்துறையை யும் ஒரே நேரத்துல கடுமையா விமர்சித்துப் பேசுனவரு ஹெச்.ராஜா. அந்த ஆள கூப்புட்டு, அவருக்கு கவர்னர் விருந்து வைக்கிறாரு. ஆனா பத்திரிகையில செய்தி வெளியிட்டதுக்காக ஆசிரியர கைது செய்றாங்க. இது எந்த வகையில நியாயம்? எங்களுக்கு நியாயம் வேணும். நான் ஒரு அட்வகேட். நான் அவர பார்த்தே ஆகணும். அதுக்காக எல்லா ரைட்ஸும் எனக்கு இருக்குன்னு சட்ட நுணுக்கங்கள எடுத்துச் சொன்னதோட, டி.கே.பாசு குடுத்திருக்கிற ஜட்ஜ்மெண்ட்ல என்ன சொல்லியிருக்கு? ஒருத்தர கைது பண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் என்னென்ன? இதையெல்லாம் ஏன் கடைப் பிடிக்கல?ன்லாம் கேட்டு கடுமையா பேசிக் கிட்டிருக்காங்க''ன்னு சிவகுமார் என்கிட்ட சொன்னாரு.
நமக்கு மனசுக்குள்ள சின்ன கர்வம். உண்மையச் சொல்லணும்னா... நாம ஒண்ணும் பெரிய ஆளு கிடையாது. பெரிய குடும்ப பின்னணி கிடையாது. ரொம்ப, ரொம்பச் சாதாரண ஆளு. ஒரு பத்திரிகை நடத்துறோம். உதிரத்த சிந்தி உலகம் பூராவும் பேர் எடுத்திருக்கிற ஒரு பத்திரிகையா இருந்தாலும்... அந்தப் பத்திரிகைக்காக நாம அரெஸ்ட் ஆனவுடனே... நமக்காக ஒரு பெரிய தலைவர் வந்திருக்காரு. தமிழ் இனத்துக்காகவும், தமிழீழத்துக்காகவும் பாடுபட்டவர். பெரிய பார்லிமெண்டேரியன், மக்கள் தலைவர். அவரு நமக்காக ஃபைட் பண்றாரு, ரோட்டுல உக்கார்றாரு அப்படிங்கிறதுல எனக்கு ஒரு சின்ன சந்தோஷம் இருந்துச்சு.
திடீர்னு "சார் நீங்க கிளம்புங்க'ன்னு அட்வகேட் சிவகுமார வலுக்கட்டாயமா கீழ கூட்டிட்டுப் போயிட்டாய்ங்க...
(புழுதி பறக்கும்)