dd

(213) என்னைக் காப்பாற்றிய வாட்ஸ்ஆப்!

"யோவ்... என்னய்யா போச்சு... போச்சு...ன்னு புலம்பிக்கிட்டே இருக்கே. அதான் சார தூக்கிட்டோம்ல. பொறுய்யா''ன்னு முன்னாடி இருந்த ஆ.ஈ. கத்துறாரு.

"யோவ்... இப்ப என்ன ஜோலியில இருக்கோம். வாட்ஸ்ஆப் பாக்குற நேரமாய்யா... உன்ன...''ன்னு கடிக்கிறாரு.

Advertisment

"சார்ர்ர்... அது இல்ல சார், உங்க வாட்ஸ்ஆப்ப பாருங்க. அதுக்கு இல்ல சார்... சார அரெஸ்ட் பண்ணுனது அதுக்குள்ள வாட்ஸ்ஆப்புல வந்துருச்சு சார்...''

"என்னய்யா சொல்ற...?''

"ஆமா சார் வாட்ஸ்ஆப்புல சார். D.C.. சார் நீங்க, சுத்தி நாங்க இருக்குற படம் போட்டுட்டாய்ங்க சார்...''னு ரொம்ப வருத்தமா சொன்னாரு.

Advertisment

"எப்படிய்யா இவ்வளவு சீக்ரெட்டா பண்ணியும்?''னு தனது சொட்டைத் தலையத் தடவிக்கிட்டே தன் செல்போன ஓபன் பண்ணுனாரு A.C..

"நான், அப்பாடா...'' அப்படின்னேன்.

உடனே முன்னாடி உக்காந்திருந்த A.C.. சேவியர்ங்கிறவரு, "சார், என்ன சார்... எப்படி சார்...? எங்ககூடத்தான இருந்தீங்க, அதுக்குள்ள எப்படி...?''

"எனக்குத் தெரியல. சரி... சரி... எங்க வேணாலும் கூட்டிட்டுப் போங்க''ன்னேன்.

"சார், என்ன சார்? நீங்க இங்கதான் இருக் கீங்க, எப்படி சார்... எப்படி சார்?''னு மறுபடி யும், மறுபடியும் "எப்படி சார்?'னு கேட்டுக் கிட்டே இருந்தார்.

"ஹலோ... எனக்குத் தெரியாது. என் போன் உங்ககிட்டதான இருக்கு. நீங்கதானங்க புடுங்கிக்கிட்டீங்க. அதுலயும் வாட்ஸ்-ஆப் கிடையாது. வாட்ஸ்-ஆப் இல்லாத போன்தான் வச்சிருந்தேன். "நோக்கியா 303' ன்னு ஒண்ணு இருக்கும். ரொம்ப நாளா அந்த போன்தான் வச்சிருந்தேன்.

ஒண்ணு தெரியுமா உங்களுக்கு? இந்த ஜியோ... வாட்ஸ்ஆப் எல்லாம் வந்த பிறகு நாடு குட்டிச்சுவராப் போச்சு. அரிய கண்டுபுடிப்பு தான், ஆனா அது நெறைய பேர் வாழ்க்கைய வீணாக்கிருச்சு. அப்படித்தான் நெனச்சிருந்தேன். அதனால நான் நம்பர் போன்தான் பயன்படுத்துனேன். இந்தப் பூனை கண்ணை மூடுனா உலகம் இருண்டு போயிரும்னு நினைச்ச மாதிரி, நான் ஏதோ வாட்ஸ்ஆப் போன யூஸ் பண்ணா அவ்வளவுதான்னு நினைச்சது தப்பா போச்சு. அதே வாட்ஸ்ஆப்தான் அன்னைக்கு நம்மள காப்பாத்துச்சு.

வாட்ஸ்ஆப் எப்படிய்யா காப்பாத்தும்னு யோசிக்கிறீங்க. முதல்ல சொன்ன மாதிரி அந்த போலீஸ் பதறுனதப் பாத்தீங்கன்னா, போட்ட திட்டம்லாம் தவுடு பொடியானது மாதிரி லபோதிபோன்னு கத்த ஆரம்பிச்சுட்டாய்ங்க போலீஸ்காரய்ங்க. அந்த A.C.. வேற சொட்டத் தலைய சொறியுறாரு. உடனே முன்னாடி போயிட்டிருக்கிற D.C.கிட்ட ஏதோ குசுகுசுன்னு பேசுறாரு. A.C. How it is possibleà D.C..கேக்குறாருய்யான்னு A.C. புலம்புறாரு.

யாரோ, எந்த மகராசனோ ஏர்போர்ட்டுக்கு உள்ள இவனுக லெஃப்ட், ரைட்னு போட்டு என்ன ஏதோ பெரிய பாகிஸ்தான் தீவிரவாதி கணக்கா கூட்டிட்டு வந்தப்போ எடுத்து, சட சடன்னு பரப்பிட்டாய்ங்க. அந்தப் புண்ணியவான நான் இன்னிக்கு வரைக்கும் பாத்ததில்ல. அவருக்கு நக்கீரனோட தலைவணக்கம்!

அன்னைக்கி மட்டும் அந்த புண்ணியவான் என் கைதை வாட்ஸ்ஆப்ல எடுத்து ஷேர் பண்ணலைன்னா, நம்ம கத கந்தல்.... நேரா புழல்தான்! அதுக்காக வேற, வேற ஏற்பாடு நடந்திருக்க... இது தீயா பரவுனதால அப்படியே யு-டர்ன் அடிச்சு, போலீஸ்காரய்ங்க டவுசர் கிழிஞ்சிருச்சு. வண்டிக 4, 5ன்னு வரிசையா ஜீப்... கார்னு ஏதோ காஷ்மீர் தீவிரவாதிய கைது பண்ணுன மாதிரி ஒரு ரவுசு காட்டிப் போனவிய்ங்க மூஞ்சப் பாக்கணுமே... குண்டக்க மண்டக்க கிழிஞ்சு தொங்க ஆரம்பிச்சுருச்சு.

என்ன இருந்தாலும் அரெஸ்ட்டுன்னதும் உள்ளுக்குள்ள கிதுக்குன்னதான் இருந்துச்சு. மத்தவிய்ங்க சொல்ற மாதிரி பெரிய வீரனாட்டம் கைதை எதிர்கொண்டேன். நான் அந்தப் பரம்பரை, இந்தப் பரம்பரைன்னு உதார்லாம் விடல. கொண்டுபோய் எங்க வச்சு, என்ன பண்ணப்போறாய்ங்களோ? என்ன சனியன கூட்டப்போறாய்ங்களோன்னு வேற மனசுக்குள்ள ஒரே குழப்பம்.

என்ன கைதுபண்ண வந்ததுல முக்கால்வாசி பேரு பூரா பல்க்கா இருந்தாய்ங்க. புடிச்சு ரோட்ல கீட்டுல தள்ளி விட்டுட்டாய்ங் கன்னா?! ஒண்ணு தெரியுமா... போலீஸுக்குள்ள எஸ்.டி.எஃப்.ல இருந்த கொஞ்சம்பேரு சென்னை போலீஸ்லதான் இருக்காய்ங்க. அது வேற பக்... பக்...னு இருந்துச்சு. ஏன்னா, அந்த போலீஸ் வீரப்பன் மேல இருந்த கோபத்த... வீரப்பன் இல்லைன்னாலும் அந்தக் கோபத்த நம்ம மேல காட்டிட்டாய்ங்கன்னா....?!

2018-ல, அக்டோபர் மாசம் 18-ந் தேதி அன்னிக்கு காலைல அரெஸ்ட்டாகிற வரைக்கும் நான் அந்த நோக்கியா 303 போன்தான் வச்சிருந்தேன்.

"வாட்ஸ்-ஆப்ல வந்துச்சு'ன்னு சொன்ன வுடனே முன்னாடி உக்காந்திருந்த ஆ.ஈ.க்கு பின்னாடி உக்காந்திருந்தவனுக முகம் எல்லாம் ஒண்ணரை முழம் தொங்கிப் போனதப் பாத்தேன். நமக்கு அதுல ஒரு சந்தோஷம்.

என்னோட நெனைப்பெல்லாம் நம்ம கூட வந்த ரெண்டுபேரும், அதான் இணையதள இயக்குநர் வசந்த்தும், சித்தா மருத்துவர் ராமச்சந்திரனும் என்ன ஆனாங்களோன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன். அப்புறமேலத் தான் தெரிஞ்சது, அவங்க ரெண்டுபேரையும் கூட்டிட்டுப் போய் ஏர்போர்ட் என்கொயரி ரூம்ல வச்சிருக்காங்கன்னு.

ff

"எங்க போறீங்க, ஏன் போறீங்க? எதப் பாக்கப் போறீங்க? யார பாக்கப் போறீங்க?'ன்னு கேள்வி மேல கேள்வியா கேட்டிருக்காய்ங்க... எப்படி?

அவங்க சொல்லிருக்காங்க. இந்த மாதிரி "புனே'ல ஒரு பெரியவரு. அண்ணனோட ஃப்ரண்டு. "அவருக்கான வைத்தியத்துக்காகப் போறேன்', "யு-டியூப் விஷயமா போறேன்' அப்படின்னு ரெண்டுபேரும் காரணத்தச் சொல்லிருக்காங்க. உடனே அத அப்படியே எழுதி வாங்கிக்கிட்டு அவங்கள விட்டுருக்காங்க.

ஏர்போர்ட்ட விட்டு தாண்டி லெஃப்ட்ல வரிசையா கடைகள்லாம் இருக்கும். அந்த இடத் துல வண்டிய போட்டுட்டு... முன்னாடி வரிசையா வண்டிக நிக்குது. நான் உள்ள இருக்கேன். இறங்கி என்னச் சுத்தி பாதுகாப்பா நின்னுக் கிறாய்ங்க. எங்க கொண்டுபோறது? ஏன்னா வாட்ஸ்-ஆப்ல வந்துருச்சு. இவங்க என்னமோ திட்டம் போட்டிருக்காய்ங்க. ஆனா, எல்லாம் தவிடுபொடி ஆயிருச்சு போல. அதனால எங்க கொண்டுபோறதுன்னு முன்னாடி உக்காந்திருந்த அந்த டி.சி. எல்லாரும் சேர்ந்து தலைய சொறிஞ்சுக்கிட்டே டிஸ்கஸ் பண்ணுறாய்ங்க.

"சார் தண்ணி குடிக்கிறீங்களா? அது சாப் பிடுறீங்களா... இது சாப்பிடுறீங்களா..?''ன்னாய்ங்க.

அவிய்ங்க நல்லா தண்ணிய குடிச்சாய்ங்க. வாட்ஸ்ஆப்ல நம்ம சேதி வந்ததுதான் வந்துச்சு.... எல்லாரையும் தண்ணி குடிக்க வச்சிருச்சு. நமக்கும் வாட்ஸ்ஆப் மேல மருவாத சர்ர்ர்ன்னு கூடிருக்கு.

மறுபடியும், மறுபடியும் ஒருத்தர் மாத்தி, ஒருத்தர் "சார் டீ சாப்புடுறீங்களா?''ன்னு கெஞ்ச...

"ஒண்ணும் வேணாம்யா. எதுக்காக அரெஸ்ட்? அத முதல்ல சொல்லுங்க. எங்க கொண்டு போறீங்க? என்ன விஷயத்துக்காகன்னு எதையுமே காமிக்காம கொண்டு போறீங்க. என்ன எழவுக்காக கைது பண்ணு றீங்க''ன்னு நான் சொல்லிக்கிட்டே இருக்கேன். அதப்பத்தியெல்லாம் அவங்க கவலப்படல. செவுடன் காதுல சங்கு ஊதுன கதையா அவிய்ங்க ஒருத்தனும் கண்டுக்கவே இல்ல.

இதுக்கு இடையில "ஷாட்'ட கட் பண்ணுனா... நம்மள அரெஸ்ட்பண்ணி கொண்டுபோன அடுத்த ஒரு கால்மணி நேரத்துல, வைகோ அண்ணன் வெளியூர்ல இருந்து சென்னைக்குத் திரும்பியிருக்காங்க விமானம் மூலமா. விமான நிலையத்துல இருந்து வெளிய வந்தவர்ட்ட, இந்த மாதிரி "நக்கீரன் கோபால் அரெஸ்ட்'ங்கிறத சொல்லிருக்காங்க.

காருக்காக ஏர்போர்ட்ல வெயிட் பண்ணிக்கிட்டிருந் தவரு, "டக்'னு வண்டியில ஏறி, "அவர எங்க வச்சிருக்காங் களோ, அங்க தேடிப் போய்யா'ன்னு டிரைவர்ட்ட சொல்லிருக்காரு. அவருக்கு உடனே இன்டெலிஜென்ஸ் மூலமா சிந்தாதிரிப்பேட்டைக்கு கொண்டு போற தகவல் கிடைச் சிருக்கு. ஆனா எனக்கு எங்க கொண்டுபோறாங்கன்னு தெரியாது. ஏன்னா சுத்தி டைட்டா ஆளு உக்காந்திருக்கிறான். முன்னாடி ஆளு. தலையில முகமூடி போடல அவ்வளவுதான்... மத்தபடிக்கு அப்படியே கொண்டுபோறாய்ங்க. கடைசியா வண்டிய நிறுத்துறப்பதான் தெரிஞ்சது சிந்தாதிரிப்பேட்டை ஸ்டேஷன்னு. அதுதான் நமக்குப் பழக்கப்பட்ட ஸ்டே ஷன்தான. ஏற்கனவே "பொடா'வுல அரெஸ்ட்பண்ணி 6 நாளு ஜட்டியோட அந்த லாக்-அப்லதான் வச்சிருந்தாய்ங்க. இதுபூராவுமே நம்மள மாரலா அடிக்கிறது... நம்மள பயமுறுத்துறதுக்கான வேலை. அப்படியே "டக்... டக்... டக்...'னு வந்தாய்ங்க. நாம என்ன கொள்ளைக் கூட்டமா நடத்துறோம். 20க்கும் மேல போலீசு. அது இப்ப இல்ல... ஜெயலலிதா பீரியடு, இப்ப ஜெயலலிதாவுடைய முத்திரைய வச்சு எடப்பாடி... அவங்க ஆட்சி. அப்ப இன்னமும் எனக்குச் சொல்லவே இல்ல. மேலவந்து "டக்'னு என்ன கொண்டுவந்து விட்டவன் போய், இன்னொருத்தன் உக்காந்தான். எப்பவுமே பழக்கமான ஒருத்தன உக்கார வைப்பாய்ங்க. ஏதாவது தெரிஞ்ச ஆளா இருப்பான்.

"ஏங்க, என்ன வழக்குன்னு சொல்லச் சொல்லுங்க. எதுக்காக அரெஸ்ட் பண்ணுனாய்ங்க? அரெஸ்ட்டுன்னா எதுக்காகன்னு சொல்லணுமா, இல்லியா? எங்க இருக்கோம் நாம?'' அப்படிங்கிறேன்.

"ஸாரி... சார் ஸாரி... சார்''ங்கிறாய்ங்க.

வைகோ அண்ணன் பெரிய சவுண்டு விட்டுட்டே கார விட்டு இறங்குறாரு.... ஸ்டேஷனே அலர்றது என் காதப் பொளக்குது...!

(புழுதி பறக்கும்)