dd

(212) சுற்றிவளைத்த போலீஸ் படை!

எதுக்கெடுத்தாலும் கிளிப்பிள்ள சொல்றது மாதிரி "எஸ்.பி. வர்றார்... எஸ்.பி. வர்றார்... எஸ்.பி. வர்றார்...'னு கீறல் விழுந்த ரெக்கார்டு மாதிரி சொல்லிக்கிட்டே யிருந்தாரு அந்த டி.எஸ்.பி.

என்ன கொடுமைன்னா... இந்த முட்டா மூளைக்கு எந்த இடத்துலயும் அப்ப சந்தேகம் வரல. ஆனாலும் 5 மணிக்கெல்லாம் அந்த ஜனார்த்தனம் வந்ததப் பத்தி ஒரு சின்ன நெருடல் இருந்துச்சு. ஆனா, பெரிய அளவுல சந்தேகப்படல. ரெஸ்ட்ரூம் போயிட்டு வெளிய வர்றேன்... வாசல்ல நிக்கிறாப்ல டி.எஸ்.பி. விஜயகுமார்.

Advertisment

""என்னங்க நீங்க... இங்க நின்னுக் கிட்டு...?''

""ஏன் சார் "பேக்'க கையிலயே வச்சுக்கிட்டு, என்கிட்ட குடுங்க சார்''னு கேக்குறாரு.

ஏதோ நான் அதிசயமா பேக்க கையில வச்சிருக்கிறது மாதிரி, "குடுங்க குடுங்க...'ன்னு கேட்டுக்கிட்டே இருக்காரு.

Advertisment

""அது ஒரு சின்ன பேக். இது என்னங்க பெரிய வெயிட்டா?''ன்னு சொல்லிக்கிட்டே கேட் நெ. 1-க்கு போகப் போனேன். என் கூட வந்த தம்பிங்க வசந்த்கிட்டயும், சித்தா டாக்டர்கிட்டயும் அவங்க போர்டிங் பாஸ குடுத்துட்டு, கேட் 1 பக்கத்துலயே இருங்கன்னு சொல்லிட்டுத்தான் நான் மேல வந்தேன்.

அதனால ""நான் "கேட்' பக்கமா போறேங்க. தம்பிங்க அங்க இருக்காங்க''ன் னேன்.

அதுக்கு விஜயகுமார்... ""இப்பவே ஏன் சார் போறீங்க. இன்னும் டைம் இருக்குதுல்ல உங்களுக்கு, இந்த வி.ஐ.பி. லௌஞ்ச்ல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம்''னாரு.

உண்மையிலேயே டைம் இருக்கு.

""ஏங்க வி.ஐ.பி. லௌஞ்ச்ல உட் காரலாம்னு முதல்லயே சொல்லியிருந் தீங்கன்னா, உள்ளே இருக்கிற ரெஸ்ட்ரூம யூஸ் பண்ணீருப்பேன்ல. அது கொஞ்சம் நீட்டா இருக்குமே?'' அப்படின்னு சொல் றேன்.

""ஸாரி சார்...''னு சொன்னாப்டி.

சரின்னு உக்காந்து, ""உங்களுக்கு எந்த ஊரு? பிள்ளைங்க என்ன பண்றாங்க?''ன் னுல்லாம் கேட்டுக்கிட்டிருக்கேன். அப்படியே ஒரு 10 நிமிஷம் கடந்திருக்கும். ப்ளைட்டுக்கு லேட்டாயிருச்சு, நான் கிளம்புறேன் சார்''னு சொல்ல...

""இன்னும் டைம் இருக்கு சார்...'' அப்படின்னு சொல்லிக்கிட்டிருக்காரு.

""சரி நமக்கென்ன? போலீஸ் அதிகாரிதான கொண்டுவந்து விடப் போறது. போர்டிங் பாஸ் வேற போட் டாச்சுல்ல''ன்னு நெனைச்சுக்கிட்டு உக்காந்திருந்தேன்.

என்னாச்சு... ஒரு 20 நிமிஷம்... 25 நிமிஷம்னு டைம் போய்க்கிட்டிருக்கு. அந்த விஜயகுமார் டி.ஸ்.பி. தேன் ஒழுக என்கிட்ட பேசிக்கிட்டிருக்காப்ல. கொஞ்ச நேரத்துல "சடார்'னு கதவத் தொறந்தாங்க. சுத்தியும் 20 போலீஸ்காரங்க, அவங்க மத்தியில ஒரு எஸ்.பி. சட... சட...ன்னு உள்ள வந்தாய்ங்க.

எஸ்.பி. வர்றாரு, அவர வழி அனுப்பத்தான் வந்தேன்னு அந்த டி.எஸ்.பி. விஜயகுமார் சொன்னாருல்ல... "இவருதான் எஸ்.பி.யா? வழியனுப்பவா?''ன்னு கேட்டு முடிக்கல...

டகால்னு வந்தாய்ங்க. என் கையில இருக்குற போன புடுங்குனாய்ங்க. பக்கத்துல வச்சிருந்த "பேக்'க தூக்குனாய்ங்க.

உடனே நான் விஜயகுமார பாத்து கேக்குறேன்... ""என்ன விஜயகுமார்? எஸ்.பி. இதுக்குத்தான் வர்றாரா? உங்க போலீஸ் புத்திய காமிச்சுட்டீங்களே சார்...''

அந்த ஆளு என் மூஞ்சப் பாக்க முடியாம வெலவெலத்து நின்னாப்ல

""சார் கிளம்பலாம்...'' அந்த எஸ்.பி. அவசரப்படுத்துனாப்டி. அவரு நார்த் இண்டியன்ங்கிறது தெரிஞ்சது. அவரு பேரு ஷசாங் சாய். அடையாறு டி.சி.

""என்ன விஷயம் சார்... ஏதும் அரெஸ்ட்டா?''ன்னேன்.

""இல்ல சார்... கிளம்புங்க...''

dd

""என்ன விஷயம்... எதுக்காக அரெஸ்ட்? சம்மன் இருக்கா?''

ம்ஹும்... அப்படியே நம்மள அலாக்கா தூக்கி நிக்க வைக்கப் பாத்தாய்ங்க. நான் கைய காட்டி "எங்களுக்கு எந்திரிக்கத் தெரியும்'னு சைகையில சொல்லிக்கிட்டே எந்திரிச்சேன். ரெண்டு பக்கமும் கைய புடிக்க வந்தாய்ங்க.

""என்னய்யா விஷயம்...? முதல்ல எதுக்காக போன புடுங்குறீங்க? எதுக்கு கைய புடிக்க வந்தீங்க... எதாவது பதில் சொல்லுங்கய்யா. என்ன விஜயகுமார் எல்லாம் உங்க வேலையா? டி.சி.யா நீங்க... ஹலோ சார் சொல்லுங்க. காரணத்தச் சொல்லாம நான் வரமாட்டேன்''னு சொல்ற துக்குள்ள அப்படியே கொத்தா என்னத் தள்ளிட்டு கதவுக்குப் போயிட்டாய்ங்க.

நல்லதுதான் கதவுக்கு வெளியிலதான கூட்டம் இருக்கும்னு நினைச்சு அவிய்ங் களுக்கு ஒத்துழைப்பு குடுத்தேன். ஒத்துழைப்பு குடுக்கலன்னா... அவிய்ங்க பாட்டுக்கு குண்டக்க மண்டக்க மேல கையக்கிய்ய வச்சுட்டாய்ங்கன்னா, பொதி சுமக்குறது யாரு... அசிங்கம் வேற! எதுக்கு வம்புன்னு ஒத்துழைக்க ஆரம்பிச்சுட்டேன். அந்த டி.சி. வேற ஒண்ணும் பேச மாட்டேங்கிறாரு. ஒரு அடியாள் தோரணை யிலதான் நடந்துக்கிட்டாரு.

எனக்கு, "என்னடா இது... மீண்டும் முதல் அத்தியாயம் மாதிரி இருக்கு... ஜெயலலிதா செத்தும், நம்மள விட மாட்டாய்ங்க போல'ன்னு நினைச் சுக்கிட்டே நடந்தேன் சும்மா. ரவுண்ட் போட்டு நம்மள சட... சட... சட...ன்னு அப்படியே கூட்டிட்டுப் போயிட்டாய்ங்க.

""எனக்கு ஒண்ணுமில்ல... என்கூட வந்தவங்க ரெண்டு பேரு கேட் பக்கம் வெயிட்பண்றாங்க சார்''னு சொல்றேன்.

நான் கடுப்பாகி ""மிஸ்டர், நான் சொல்றது காதுல விழுதா... இல்லையா? என்கூட வந்தவங்க ரெண்டுபேரு கேட்ல காத்துக் கிடக்குறாங்க. அவங்களுக்குத் தகவல் குடுத்து "போக வேணாம்'னு சொல்லணும். ஒண்ணு நீங்க சொல்லுங்க, இல்ல யாரையாவது ... அதான் அந்த ஜனார்த்தனம்... (என்னைக் காட்டிக் குடுத்த ஆளு), அந்தாளப் போய் சொல்லச் சொல்லுங்கன்னு கத்துனேன்.

மெல்ல வாயத் தொறந்தாரு அந்த டி.சி.

""மிஸ்டர் டோண்ட் ஒர்ரி... வி ஆல்ரெடி இன்பார்ம்டு''னு இங்கிலீஷ்ல தஸ்ஸு... புஸ்ஸுன்னு சொன்னாப்டி.

சனியன்... வாயில இருந்து ஏதோ பதில் வந்துச்சேன்னு திருப்தி ஆச்சு.

கொஞ்சநேரம்... என்ன யோசிச்சாரோ என்னவோ? மறுபடியும் என்னப் பாத்து ""சார்... மிஸ்டர் கோபால்.... We arrested you only not them. So... you don't bother,, நாங்க பாத்துக்குறோம் சார்...'' அப்படின்னு அதே தஸ்ஸு புஸ்ஸு இங்கிலீஷ்ல சொன்னாப்டி.

அப்பவும்... ""என்ன காரணத்துக்காக... எதுக்காக என்னக் கூட்டிட்டுப் போறீங்க?''ன்னு கேக்குறேன்.

பதிலே இல்ல.

அந்த நேரத்துல சுத்தி கொஞ்சம் வேடிக்கை பாக்கிறவங்களும் இருந் தாங்க.

"சரி... சத்தம் போடலாமா? கடத்து றாங்கன்னு சொல்லி சத்தம் போட்டா...? ஒருவேள கை வச்சுட்டா...? ஏன்னா எரும மாடு மாதிரில்ல சுத்தி வர்றாய்ங்க.'

என்னை நகர்த்தி அப்படியே கூட்டிட்டுப் போறாய்ங்க. அந்த ஆளு... ஜனார்த்தனம் ஒளிஞ்சு இருந்து பார்க்கிறத நான் பாத்தேன். அவன் அங்கயிருந்து என்னப் பாக்குறான்.

இப்பதான் எனக்குப் புரியுது. இந்த கைதுக்காகத்தான் காலைல 5 மணிக்கு ஜனார்த்தனம் இங்க வந்திருக்கான். என்ன மாத்திரம் பிரிச்சு கையில போர்டிங் பாஸ் குடுத்தது, நான் வேற எங்கயும் போயிறாம இருக்கணும்னு லிஃப்ட்ல கொண்டுவந்து விட்டது, அங்க லிஃப்ட்ல இருந்து நான் எங்கயும் போயிடக்கூடாதுன்னு டி.எஸ்.பி. விஜயகுமார் என்கூடவே பாத்ரூம் வரைக்கும் வந்து பாத் ரூம் வாசல்ல நின்னு... அப்புறம் அங்க இருந்து கூட்டிட்டு வந்ததுன்னு, என்ன தப்பிக்க வுடாம பாத்துக்கிறாய்ங்களாம். திட்டமிட்டு பெரிய டிராமால் லாம் போட்டு அப்படியே என்னத் தூக்குறாய்ங்க.

ஜீப்புல பின்பக்கமா ஏத்துறாய்ங்க. ஏத்தி கொஞ்சதூரம் கொண்டுபோய் அப்படியே ஜீப்ப ஒரு இறக்கத்துல இறக்குறாய்ங்க... அப்ப ஒரு போலீஸ்காரரு... ""சார்...''னு கத்துறாரு. டிரைவர் பிரேக் போட்டுட்டாரு. மத்த வண்டிகளும் பிரேக்! எனக்குப் பகீர்னுச்சு. ஏதோ ஏடாகூடமா ஏதாவதுன்னு திரும்பி உத்துப் பாக்குறேன்...

""சார்... போச்சு...''ன்னு மறுபடியும் அந்த போலீஸ்காரரு கத்துறாரு...

(புழுதி பறக்கும்)