(202) பாம்பேயில் போலீஸ் கெட்-அப்!
"டேய்... என்னடா தாய்ளி முடிய இப்படி வெட்டுறான், அடேய்... அடேய் போச்சுடா''ன்னு கத்துறேன் கண்ணாடில பாத்துட்டு. தலையில ஊத்துன தண்ணி கண்ணுல வடியுது, அவன் விடாம வெட்டிக் கிட்டே இருக்கான். "டேய் என்னடா இப்படி வெட்டிக்கிட்டே இருக்கான்... அடேய்... அடேய்...'ங்கிறேன். அவிய்ங்க ரெண்டுபேரும் பதறிப்போய் வர்றாய்ங்க. இவன் என்ன பண்ணிட்டான்? என் தலையில ஒரு போடு போட்டு "ஒழுங்கா உக்காருடா கழுத'ங்கிற வார்த்தய சொல்லாம சொல்லி, ஓங்கிப் போட்டான் மண்டையில. நான் "ஐயோ'ன்னு கத்துறேன். சம்பந்தமே இல்லாம ஒரு இந்திக் காரன்ட்ட மாட்டிக்கிட்டோமேடா சாமி...ன்னு தப்பிச்சாப் போதும்கிற மாதிரி ஆகிப்போச்சு. சத்தியமா சார், இன்னைக்கு வரைக்கும் அந்த நெனப்பு இருக்குன்னா, யோசிச்சுப் பாருங்க.... ரொம்ப கேவலப்பட்டுட்டேன் சார். ரெண்டு பேரையும் பாத்து ப்ச்சக்க.... ப்ச்சக்க...ன்னு ஏதோ இந்தி கெட்ட வார்த்தையில திட்டி ரெண்டுபேரையும் வெளிய அனுப்பி கதவ பூட்டிட்டான்.
போச்சுடா... பொலி போடப் போறான் போல இன் னிக்கு நம்மள. ஏன்னா அவனுக்குத் தெரிஞ்சு போச்சுபோல, தமிழ்க் காரங்க... இந்திக் காரய்கள திட்டிட்டுத் திரிவோம். பம்பாய்ல ஏதோ தமிழ் பேசிட்டுத் திரியுறோம். இவனுக்கும் தமிழ்க்காரங்களுக்கும் ஏதோ பூர்வ பகை இருக்கு. "தமிழ்க்காரன போட்டுரு வோம்'னு அவன் திட்டம் போட்டுத்தான் கதவச் சாத்துறானோ...?
அப்படியே கண்ணுல இருந்து தண்ணி ஆறா வருது. ஒட்ட வெட்டிட்டான் பாவி. இப்ப நான் வச்சிருக்கிற இந்த போலீஸ் வெட்டு பாம்பேல உருவானது.
முடிய குடுத்தாச்சு... முடியக் குடுத்துட்டு ரொம்ப சோகமா வெளிய வந்தேன். "பாம்பேல இப்படி ஒரு முடி வெட்டுறவன்கிட்ட கொண்டு விட்டுட்டியேடா? நான்பாட்டுக்கு இருந்த முடியோடவாவது போயிருப்பேன். வேலையும் கெடைக்கல... இந்த லெட்சணத்துல இருந்த முடியையும் ஒட்ட வெட்டிப்புட்டானுக. பாம்பே வந்து முடிய இழந்துட்டுப் போன ஒரே ஆளு நானாத்தான் இருக்கும். ஒட்ட வெட்டிட்டானுக. ஒட்டன்னா... இத்துனூண்டு அளவுலதான் முடி. ஆ.த.போலீஸ் வெட்டு. அதத்தான் சொன்னேன்... "வாழ்க்கையே தொலைச்சு'ன்னு. ஏன்னா, முடிய ஸ்கூல் டேய்ஸ், காலேஜ் டேய்ஸ்லல்லாம் எப்படி பாதுகாப்போம்? அதுலயும் காலேஜ் டைம்லல்லாம் ஒருநாளைக்கு நூறு தடவ தலமுடிய சீவுவோம். பவுடர பூசிட்டு, நெத்தியில திருநீறுபோல லேசா பவுடர வைப்போம். அத அதையெல்லாம் மெயின் டெய்ன் பண்ணுவோம். நம்மள இப்படி ஆக்கிட்டானேன்னு ரொம்ப சங்கடமாப் போச்சு. மனசே சரியில்ல. மறுபடி மறுபடியும் ப்ரெண்ட்டத்தான் திட்டுனேன். அவன் ஒரு ப்ரெண்ட்னு செருப்பு தைக்கிறவரு பக்கத்துல கொண்டுபோய் உக்கார வச்சான். இங்க ஒருத்தன், ப்ரெண்ட்னு முடிவெட்டுற ஒரு இந்திக்கார பயகிட்ட கொண்டுவிட்டு, அவன் இப்படிப் பண்ணிப்புட்டானேன்னு ரொம்ப வருத்தமாப் போச்சு.
அப்ப என் நண்பர் சௌந்தர் "கன்ஸ்ட்ரக்டர்'ங்கிற கப்பல்ல இருந்தாரு. அந்தக் கப்பல் கரை வந்திருந்துச்சு. அதேநேரம் நண்பன் பொன்னுச்சாமியும் "ஜே.எம்.பக்ஸி' கப்பல்ல வேல பாத்தான். அவரும் எங்களோட ஜாயின் பண்ண, எல்லாரும் சேர்ந்து சௌந்தர் கப்பலுக்குப் போறோம். நான் ஏற்கனவே ஊருக்குப் போகணும்ங்கிற முடிவுக்கு வந்ததுனால, "ரெண்டு மூணு இடங்கள பாத்துட்டுப் போயிருவோம்''னு சொன் னேன். (கேட் வே ஆஃப் இந்தியா, ரெட்லைட் ஏரியா...)
"ரெட்லைட் ஏரியா எங்கடா இருக்கு''ன்னு கேட்டேன்.
"அதுவா... வா... வா...''ன்னு பொன்னுச்சாமி சொன்னான். நாங்க எல்லாரும் அந்த ஏரியாவுக்குப் போனோம். சதை வியாபாரம்... பாவப்பட்ட ஜென்மங்க. அதுபத்தி நாம கேள்விப்பட்டிருக்கோம். அவங்க எப்படி அங்க வாழ்றாங்க? அவங்க வாழ்க்கை எப்படிப்பட்டதா இருக்கு?ங்கிறதெல்லாம் தெரிஞ்சுக்கணும்னு ஒரு ஆர்வம்தான் அதுக்குக் காரணம்.
இதக் கேளுங்க... அந்தப் படவா இந்திக்கார முடிவெட்டுறபய என் முடிய ஒட்ட வெட்டுனதுனால பாக்குறதுக்கு போலீஸ் கட் மாதிரி இருந்தது. அதோட நான் போட்டிருந்தது காக்கிச் சட்ட. அதுல பாத்தீங்கன்னா... ரெண்டு பக்க சோல்டர்லயும் ப்ளாப் இருக்கும். சட்டையில ரெண்டு பக்கமும் சோப்பு (பாக்கெட்). அந்த ரெண்டு சோப்புலயும் மேல மூடுற மாதிரி பட்டன் வச்சு.... போலீஸ்காரய்ங்க போடுற மாதிரி சட்டைய ஃபுல்ஹேண்ட்டா போட்டு, நான் பாக்கிறதுக்கு போலீஸ் ஃபோர்ஸ்ல இருக்கிற ஒரு கான்ஸ்டபிள் மாதிரியே இருப்பேன். கையில லத்தி மாத்திரம் இல்ல.
அந்த கெட்-அப்லதான் ரெட்லைட் ஏரியாவுக்குப் போனோம். "நாயகன்' படத்துல வர்ற "நான் சிரித்தால் தீபாவளி' ஸீன் மாதிரிதான் அது இருந்துச்சு. வரிசையா வீடுக... அறை, அறையா இருந்துச்சு. முன்னாடி ரெட்லைட் தொங்க விட்டுருந்தாங்க. வரிசையா வாசல்ல நின்னு இந்தியில கூப்புடுறாளுக. ஜி.பி.சாமி, அதான் பொன்னுச்சாமி என்ன பண்ணுனான்... "டேய் கோவாலு வாடா மேல போவோம். நல்ல, நல்ல ஐட்டம்லாம் இருக்கும்''னு கூப்புட்டான். நாங்க மூணுபேரும் மேல போறோம். படியில நின்னு கையப்புடிச்சு நம்ம சாமிய இழுக்குறாளுக. நம்மளத் தொடல, ஏன்னா... நம்மள போலீஸ்னு நினைச்சுட்டாளுக. இந்தியில, "ஏன் போலீஸ்காரன் உள்ள வர்றான்?'னு திட்ட ஆரம்பிச்சுட்டாளுக. எனக்கு ஒண்ணும் விளங்கல. சாமிதான் சொன்னான்... "அடேய்... உன்னத்தாண்டா போலீஸ்னு திட்டுறாளுக''ன்னு. அதுல ஒரு மாமாக்காரன், "டெய்லி காலைலயே வந்து மாமூல் வாங்குறீங்களேடா... இப்ப என்ன மயித்துக்கு வந்தீங்க? ஜாவ் ஜாவ்''னு இந்தியில திட்டிக்கிட்டே, என்னப் புடிச்சு கீழ கொண்டுபோய் விட்டுட்டான். நல்லதாப் போச்சு.
அந்த முடிவெட்டுன பய பண்ணுனதுல நல்ல விஷயமும் நடந்துச்சு. அப்படியே வேடிக்கை பாத்துட்டு திரும்பி வர்றப்ப, ராத்திரி 10 மணி இருக்கும். ஒரு டீ அடிக்கலாம்னு ரெட்லைட் ஏரியாவ ஒட்டி இருக்கிற "காரனேஷன்' ஓட்டலுக்குப் போனாம். அங்க ஹே... ஹே...ன்னு இருக்கு. ஒரே புகை மண்டலம்! சிகரெட்.... தண்ணி... ராத்திரி நேரம்... "அடடா... என்னடா இது இப்படி ஒரு உலகமா'னு இருந்துச்சு அது.
நம்பமாட்டீங்க மூச்சே முட்டிருச்சு. என்னடா ஜனம்... ரெட் லைட்டுக்குப் போயிட்டு நேரா இங்கதான் வருவாய்ங்க போல. ஒரே வாட... கெட்ட வாட. கண்ணு எரியுது. எதை எதையோ கண்ட கழுதைகள வாங்கி பேய்த்தீனி திங்கிறாய்ங்க, சே... கர்மம். உள்ள போயிட்டு வெளிய வர்றேன். உடம்பெல்லாம் சிகரெட் நாத்தம்.... தண்ணி நாத்தம். அடக்கருமமே... என்னடா பம்பாய்... ஒரே நாய்ப்பய ஊராவுல இருக்குன்னு நண்பன்ட்ட சொன்னேன். அவன் "கண்டுக்காத வா, இதாண்டா பம்பாய். இதெல்லாம் கண்டுக்காதே வா.. வா''ன்னு சொல்லி மறுபடியும் கையப்புடிச்சு வெளிய கூட்டிட்டு வந்தான். "சே... மனுசப்பயலுகளாடா இவிய்ங்க'ன்னு சொல்லிட்டு நாங்க எதுவும் சாப்பிடல... வெளிய வந்துட்டோம்.
நேரா சௌந்தர் கப்பல். அது மொரட்டுக் கப்பல். அவன் பெரிய மெரைன் இன்ஜினி யர். கப்பலுக்கு உள்ள போனோம். சூப்பர், சூப்பரா இருந்துச்சு கப்பல். ஓ... கப்பல்னா இப்படித்தானா? ஒரு சின்ன சபலம். கப்பல் நல்லா இருக்கே... நமக்குத்தான் பிச்சக்கார புத்தி இருக்கே. ஏன் கப்பல் வேலைக்குப் போனா என்ன? அந்தக் கப்பலப் பாத்ததும் ஒரு நப்பாசை. சௌந்தர் கப்பல சுத்திக் காமிச்சான். அவன் தங்குற அறை எல்லாம் பக்காவா இருந்துச்சு.
"சரிடா... கப்பல் வேலையவே பாப்போம்டா கோவாலு''ன்னு எனக்குள்ளயே சொல்லிக்கிட்டேன். கொஞ்சநேரம் கப்பல்ல இங்கிலீஷ் படம் போட்டான். டி.வி.ல பாத்துட்டு... "சரிடா விடிஞ்சிருச்சு வா... நம்ம கப்பலுக் குப் போவோம்னு பொன்னுச்சாமி சொல்ல... அவன் கப்பலுக்கு 5 கி.மீ. நடந்தே போனோம். சௌந்தர் வரல. நாங்க மட்டும் போனோம்.
அந்தக் கப்பல் பேரு ஜே.எம்.பக்ஸி. வெளிய இருந்து பாத்தா சூப்பரா இருந்துச்சு கப்பல். அடக்கமா இருந்துச்சு. நமக்கு இன்னும் வேற ஆசையத் தூண்டிருச்சு. மனசெல்லாம் டக்குன்னு மாறிருச்சு. வேல கப்பல்லதான். இனி கப்பல்ல வேலை பாக்குறோம். கப்பல்ல இருந்து இறங்குறோம். அந்தக் கக்கூஸ் வரிசைலாம் போகாம... அந்த எழவெடுத்த தீப்பெட்டி ரூமுக்குப் போகாம, அந்த ஹவுஸ்ஓனர் நாப்பயல பாக்காம... நேரா டிரெயின்ல ஏறி சென்னைக்கோ, மதுரைக்கோ ஓடிடுவோம். காசு கையில நெறைய இருந்துச்சுன்னா ப்ளைட்ல போவோம்னு மனசுல சொல்லிக்கிட்டேன்.
அந்த "ஜே.எம்.பக்ஸி' கப்பல்ல "பங்க்' மாதிரி இருக்கிற இடத்துல கேப்டன், சிப் சான்ஸ்லர்னு ஒருத்தர், (அவரு கப்பல்ல உள்ளவங்களுக்கு பலசரக்கு மாதிரி எல்லா சாமான்களும் சப்ளை பண்றவராம்.) பொன்னுச்சாமி, நான் எல்லாரும் உக்காந்து பேசிக் கிட்டிருந்தோம். அவங்க எல்லாரும் பீர், டிரிங்ஸ்லாம் அடிச்சுக்கிட்டிருந்தாய்ங்க. எனக்கு அந்தப் பழக்கம் கிடையாது. அதனால நான் அவிய்ங்க தண்ணியடிக்கிறத வேடிக்கை பாத்துக்கிட்டி ருந்தேன்.
நான் எப்பவுமே கையில பென்சிலும், மைக் ரோ பென்னும் வச்சிருப் பேன். அப்ப அவங்க தண்ணி யடிக்கிறத ஒரு பேப்பர் வாங்கி போர்ட்ரைட்ல ஸ்கெட்ச் போட்டுக்கிட்டிருந்தேன். எனக்கு சாப்பிடுறதுக்கு போர்க் கறி தந்தாங்க. ("போர்க்'னா பன்றிக் கறி) எனக்கு அத சாப்பிடப் புடிக்கல.
அதனால நாலஞ்சு முட்டைய எடுத்து அதுல மிளகாப் பொடிய போட்டு நல்லா பொடிமாஸ் மாதிரி கிளறி பொன்னுச் சாமி கொண்டுவந்தான். (அவன் வேலை செய்ற கப்பல்ல செல்வாக்கு ஜாஸ்தி) எனக்கு அது ரொம்பவே புடிச்சிருந்தது. நல்ல பசி வேற... அதனால நல்லா வளைச்சு அடிச்சேனா...?
(புழுதி பறக்கும்)