(184) என் பள்ளிப் பருவத்தில்...!
பாழாப்போன எஃப்.ஐ.ஆர். இந்தச் சனியன் புடிச்ச எஃப்.ஐ.ஆர துரத்தி, துரத்தி புடிச்சுக் கொண்டுவந்து சேர்க்கிற கதையிலதான் இந்த துணைக்கதை எல்லாம் கொப்பளிச்சு வந்துகிட்டிருக்கு.
அந்தம்மா சும்மா இல்லாம நம்மள வேற உசுப்பேத்துற மாதிரி வாழ்க்கையில பயங்கரமா "நெறிமுறை எல்லாம் கடைப்பிடிச்சு வந்தோம்'னு சொன்னதும், எனக்கு சூடாயிருச்சு.
நெறிமுறை கடைப்புடிச்சு வந்ததா ஒரு ஆளையும் காமிக்க முடியாது. அது அவங்களுக்கும் தெரியும், இருந்தாலும்... நம்ம வாய கிளறணும்னு முடிவெடுத்துதான் கேட்டாங்க.
என்னோட சின்ன வயசுல நடந்த ஒரு நிகழ்ச்சி. அவங்கள்ட்டயும் சொன்னேன். அத நிகழ்ச்சியில கட் பண்ணிட்டாங்க. இப்ப உங்களுக்காகச் சொல்றேன்.
"நான் ஸ்கூல் படிக்கிற காலம். "போச்சுடா... பழைய கதய ஆரம்பிச்சுட்டானா'ன்னு யோசிச்சுறாதீங்க. இது கொஞ்சம் நாம அடி வாங்குன கதை.
ஒருநாள், ஸ்கூல்ல இருந்து ஹாக்கியெல்லாம் விளையாடிட்டு ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வர்றேன். எங்கப்பா வாசல்ல குத்தவச்சு பீடிய புடிச்சுட்டு உக்காந்திருக்காரு. வந்து மூஞ்சியெல்லாம் கூட கழுவல. "கோமதி டாக்கீஸ்ல... (அருப்புக்கோட்டையில எங்க வீடு. அங்க இருந்து ஒரு பர்லாங்குல சினிமா தியேட்டர்... அதுக்குப் பேருதான் கோமதி டாக்கீஸ்) ஒரு படம் போட்டுருக்கான். செகண்ட் ஷோ (இரவுக் காட்சி) சினிமா பாத்துட்டு வா'ன்னு சொல்லி என் கையில 35 காசு குடுத்தாரு எங்க அப்பா. எங்க அம்மாகூட சத்தம் போட்டுச்சு.. "ஏங்க சாப்பிட்டுட்டுப் போகட்டுமே... ஏன் வந்ததும், வராததுமா அவன விரட்டுறீங்க. புள்ள பசியோட வந்திருக்கும்''னாங்க. "இல்லல்ல, அவன் போயிட்டு வரட்டும்... அப்புறம் கொட்டிக்கட்டும்'னு என்னைய பத்தாத குறையா அனுப்பிட்டாரு. "35 பைசால 33 பைசா டிக்கெட், மீதம் 2 பைசாவுக்கு முறுக்கு வாங்கிக்கோ''ன்னாரு.
நமக்கு இது கரும்பு தின்ன கூலி குடுத்தது மாதிரிதான். சினிமா பாக்கிறதுக்கு முதல்முறையா அப்பா எனக்கு காசு தர்றாரு. எனக்கு இப்ப 64 வயசு முடிஞ்சிருச்சு. இவ்வளவு காலத்துல நான் சினிமா பார்க்கிறதுக்குன்னு எங்க அப்பா காசு குடுத்தது அன்னிக்கு ஒருநாள் மட்டும்தான்! ஸ்கூல் பையெல்லாம் தூக்கி வீசிட்டு... ரொம்ப குஷியா கிளம்பி, படம் பாக்கப் போனேன். துணைக்கு ரெண்டு மூணு ப்ரெண்டுகளையும் சேர்த்துக்கிட்டு படத்துக்குப் போயிட்டு நைட்டு 2 மணிக்கு... திரும்பி வர்றேன். வாசல்ல அப்பா அதே வாசப்படியிலயே உக்காந்திருக்காங்க. எங்க வீடு ஓட்டு வீடுதான். வாசல்ல வாய்க்கா போகும். (சாக்கடை) அதுமேலதான் ரெண்டு கல்லு வச்சு அது படியா இருக்கும். அதுவழியா ஏறி வீட்டுக்குள்ள போகணும். ஒரே சாக்கடை நாத்தம். இதுல வேற இவரு பீடி குடிச்ச நாத்தமும் சேந்துக்கிச்சு. அந்த நாத்தத்துக்குள்ளதான் நான் வர்ற வரைக்கும் உக்காந்திருக்கார். வீட்டுக்குள்ள போறதுக்கு காலடி எடுத்து வைக்கிறேன்... சைடுல பூரா பீடி குடிச்சுட்டுப் போட்டது குவிஞ்சு கெடக்கு. எல்லாமே எங்கப்பா குடிச்சிட்டுப் போட்டது. நான் பாத்தத, அவரும் பாத்துட்டு... "என்னடா பாக்குற போ... உள்ள போய் கதவ சாத்துடா நாயே''ன்னாரு.
"என்னடா இது... சினிமாவுக்கு அனுப்பும் போது மிச்ச காசு 2 பைசாவுக்கு முறுக்கு வாங்கி சாப்புட்டுக்கோன்னாரு. இப்ப நாய்ங்கிறாரே...''ன்னு கொஞ்சம் உள்ளுக்குள்ள கிதுக்குன்னு இருந்துச்சு.
வீடு, சின்ன வீடு... ஒரே ஹால் அவ்வளவு தான். அதுலதான் நாங்க மொத்தபேரும் படுத்து உறங்கணும். ஒரே ஒரு குண்டு பல்புதான். உள்ள போய் நான் லைட் போட்டவுடன எங்கம்மா எந்திரிச்சுட்டாங்க. "வா...ப்பா... இவ்வளவு நேரமாச்சா? என்னன்னு தெரியல, உங்கப்பா வாசல்லயே உக்காந்து கிடக்காரு... நீ வா... சோறு தின்னுட்டுப் படு'ன்னாங்க. உள்ள வந்த எங்க அப்பா, அம்மாவ ஒரு முறை முறைச்சாரு. "இருடி... சோறு திம்பான்'னு கொஞ்சம் சவுண்ட் வுட்டாரு.
அட்னக்கால் போட்டு உக்காந்து, எங்கிட்ட "இப்பப் பாத்தேல்ல சினிமா... அந்தக் கதையச் சொல்றா?''ன்னாரு.
"ஏங்க மணி ரெண்டாச்சு. அவன் இன்னும் சாப்பிடலங்க...''ன்னாங்க.
எங்க அம்மாவ மறுபடியும் ஒரு முறை முறைச்சிட்டு... "சரி... சரி... கதையைச் சொல்லு''ன்னாரு.
கதைய சொல்லுன்னா நாம என்ன செய்வோம்... குஷியா கதை சொல்லுவோம்ல. அப்போல்லாம் சினிமா பாத்துட்டு வந்து அத கதையா சொல்றது ஒரு பெரிய கலை. நாம கதை சொல்லும் போது பக்கத்துல இருக்கிறவங்களும் நம்ம முகத்தையே உத்துப் பாத்துக்கிட்டே கேப்பாய்ங்க. படத்தோட கதைய ஏத்த இறக்கத்தோட அவன் வந்தான், இவ வந்தா, காதல் பண்ணுனாய்ங்க... இடையில சண்ட போட்டாய்ங்கன்னு நாம ஒரு ஸ்டைலா ஆக்ஷனோட சொல்லுவோம்ல...!
ஆங்... சொல்ல மறந்துட்டேன். நான் பாத்துட்டு வந்த படம் "மூன்று தெய்வங்கள்!'.
"சிவாஜி சார், முத்துராமன், நாகேஷ் நடிச்ச படம். படத்துல மூணு பேரும் ஜெயில்ல இருந்து தப்பிச்சு வந்து பலசரக்கு கடை வச்சிருக்கிற ஒருத்தரோட வீட்டுக்குள்ள புகுந்துருவாய்ங்க. அந்த வீட்டுல ஒரு வயசுப்புள்ள சந்திரகலான்னு இருக்கும். அந்தப் புள்ள, பணக்கார வீட்டுப் பையனா இருக்கிற நம்ம சிவகுமார காதலிக்கும். அந்தக் காதல சேர்த்து கல்யாணம் பண்ணிவச்சிட்டு மூணுபேரும் திரும்பவும் ஜெயிலுக்குப் போயிரு வாய்ங்க. -இதுதாம்ப்பா கதை''ன்னு சொல்லிட்டு...
"அம்மா பசிக்குது சோறு போடுங்க''ன்னேன்.
"டேய் மயிராண்டி... சோறும் கிடையாது, ஒரு மசுரும் கிடையாது. அந்த மூணுபேரும் எப்படி ஜெயிலுக்குப் போனாய்ங்க? அதச் சொல்லு''ன்னாரு.
"மூணுபேரு ஜெயிலுக்கு... அது வந்துப்பான்னு இழுத்தேன்...''
"சொல்றா வௌக்கெண்ண...'' அப்படின்னாரு கொஞ்சம் அரட்டி.
"சிவாஜி சார் பீரோ, இரும்புப் பெட்டிய எல்லாம் நேக்கா தொறந்து திருடு வாரு. அப்படி ஒரு நாள் திருடும்போது ஒருநாள் போலீஸ்ட்ட பிடிபட்டுருவாரு. முத்துராமன் ஒரு கொலை செஞ்சதுக்காகப் புடிபட்டு ஜெயிலுக்குப் போயி ருவாரு. மூணாவது... நாகேஷ்...''னு இழுத் தேன்.
"சொல்றா''ன்னாரு திரும்பவும்.
"நாகேஷ் வீட்டுப் பத்திரத்துல கள்ளக் கையெழுத்து போட்டதுக்காக உள்ள போயிரு வாரு...''ன்னு சொல்லி முடிக்கல, வெலம் எடுத்து...
"எப்படிடா போவான் ஜெயிலுக்கு?''ன்னு கத்துனாரு.
"இல்லப்பா... திருட்டுக் கையெ ழுத்து போட்டதுக்காக ஜெயிலுக்குப் போவாரு...''
எந்திரிச்சு "சதக்'னு ஒரு மிதி மிதிச்சாரு... "நாகேசு எதுக்காக உள்ள போனான் சொல்லு?''ன்னு மறுபடியும் மிதி... மிதி...ன்னு மிதிச்சுக்கிட்டே கேட்டாரு.
"நான் அழுதுக்கிட்டே... திருட்டுக் கையெழுத்து போட்டதுக்கு...''ன்னேன்.
"ஆங்... திருட்டு கையெழுத்துப் போட்டா என்ன ஆவே... ஜெயிலுக்குப் போவ தெரியுதா பொறுக்கி நாயே..''ன்னு கண்ணு சிவக்க ஒரே கத்து...! எனக்கு அடிமேல அடியா விழுகுது. முதுகு, கை, கால்...னு எல்லா எடத்துலயும் சரமாரியா அடியும் மிதியும் விழுந்துக்கிட்டே இருக்கு.
"எதுக்காக இந்த நேரத்துல ஏன் திருட்டுக் கையெழுத்து, ஜெயிலு...ன்னு சொல்லி அடிக்கிறாரு''ன்னு அழுதுக்கிட்டே, "எவன்டா நம்மளப் போட்டுக் குடுத்தான்'னு யோசிக்கிறேன்.
"தாயோளி நான்பாட்டுக்கு சிவனேன்னு ரோட்டுல போய்க்கிட்டிருந்தேன். ஒல்லியா ஒருத்தன் உக்காந்திருந்தான் சக்தி பிரஸ்ல. அந்த ஓனர் சும்மா இல்லாம என்னக் கூப்புட்டு, "இவரு ராமநாதன். ஹைவேஸ்ல வேல பாக்குறாரு. இவரு பையனும் உங்க ஸ்கூல்லதான் படிக்கிறான்'' அப்படின்னு என்னப் பத்தி அந்த ஆள்கிட்ட சொல்றான். அந்த ஆளும் உன்னைப் பத்தில்லாம் கேட்டான். நானும் அவன் கேட்டதுக்கெல்லாம் பதிலச் சொன்னேன்.
"என்னய்யா பிள்ள வளர்க்கிறன்னு என்னப் பாத்து கேக்கு றான்? ரேங்க் கார்டுன்னு ஒண்ணு ஒம்புள்ளைட்ட குடுத்துவிடு றேனே, அத நீ பாக்குறியா...? அவன் என்ன படிக்கிறான், அது பத்தியெல்லாம் கேக்கறது இல்லியா. படம் வரையவும், ஹாக்கி விளையாண்டா மட்டும் போதுமா?'ன்னு சத்தம் போட்டான்.
அவன் சொன்னது எதுவுமே எனக்குப் புரியல. "அது என்னடா ரேங்க் கார்டு''ன்னு என்கிட்ட கேட்டாரு எங்கப்பா.
"ஆஹா... கோவாலு, இப்பதாண்டா புரியுது ஏன்... எங்கப்பருக்கு திடீர்னு பாசம் குண்டக்க மண்டக்க பொங்கி சினிமா, கினிமால்லாம் பாக்க பைசாவக் குடுத்து, முறுக்கு வாங்க காசும் குடுத்து அனுப்புனாருன்னு. வசமா மாட்டிக்கிட் டோம்டா கோவாலு...'ன்னு கை, காலு எல்லாம் மறுபடியும் உதற ஆரம்பிச்சுருச்சு.
ரேங்க் கார்டுங்கிறத எங்கப்பாகிட்ட ஆறாப்புல இருந்தே இதுவரைக்கும் நான் காமிச்சதே இல்ல. இந்த சம்பவம் நடக்கும்போது நான் 11-ஆம் வகுப்பு படிக்கிறேன். அந்த ரேங்க் கார்டுல அப்பா போடவேண்டிய கையெழுத்த நான்தான் போடு வேன். ஏன்னா... நான்தான் ரேங்க் வாங்குறதே இல்லியே!
ஓ... அதுக்குத்தான் இந்த நாயடி... பேயடியா...? எனக்கு அடி விழுந்த சத்தத்தக் கேட்டு வீட்டுல படுத்திருந்த எங்க அக்கா, தங்கச்சி எல்லாருமே படக்குன்னு எந்திச்சுட்டாங்க. என் தம்பி நல்லா தூங்குறான். இப்ப எங்க அக்காகிட்ட, அப்பா கேக்குறாரு, "ரேங்க் கார்டுன்னு ஒண்ணு இருக்காம்ல, இவன் இதுவரைக்கும் என்கிட்ட காமிச்சதே இல்ல... மடத்தாயோளி இவன் என்னைய ஏமாத்திட்டுத் திரியுறான். உங்களுக்கு அதப்பத்தி எதாவது தெரியுமா?''ன்னாரு.
அப்பா கேட்டதும், ரெண்டும் நரகல மிதிச்ச மாதிரி முழிக்குதுங்க...
(புழுதி பறக்கும்)