poorkalam

(161) பொங்கலுக்காக நான் எடுத்த ரிஸ்க்!

கீழ்க்கண்ட முன்னுதாரணங்களைக் குறிப்பிடுவது பொருத்தமுடையதாக உள்ளது அப்படின்னு சொல்லி செ.கு.தமிழரசன் ஒரு பக்கத்துக்கு சட்டமன்ற உரிமைப் பிரச்சினைக்கு யார், யாரெல்லாம் என்ன மாதிரி நடவடிக்கை எடுத்திருக்காங்க அப்படிங்கிறத... May's Parliamentary Practice அப்படிங்கிற நூல்ல இருந்து ஒவ்வொரு பக்கமா புரட்டி, 5, 6 உதாரணங்கள எடுத்துச் சொல்லியும், அதேநேரம்... Practice and Procedure of Parliament by -Goul அதுல இருந்தும் உதாரணங்கள குறிப்பிட்டு, இதன்கீழ் ரெண்டு பேர் மேலயும், அதாவது... என்மேலயும், அண்ணன் ஸ்டாலின் மேலயும் நடவடிக்கை எடுக்கணும்னு சொல்லி சட்டமன்ற அண்டர் செகரட்டரிக்கு அனுப்பி, அவரு அத அட்டஸ்ட்டேட் பண்ணி சட்ட பேரவைத் தலைவருக்கு அனுப்பியிருக்காங்க.

Advertisment

இத எதுத்துதான் நம்ம சைடுல இருந்து கோர்ட்டுக்குப் போனோம். (இத முன்னாடியே சொல்லியிருக்கேன்.) நம்ம சீனியர் பெருமாள் சார், சீனியர் ரூபர்ட் பர்ணபாஸ் சார் ரெண்டு பேரும் விடாம ஃபைட் பண்ணி, நக்கீரனுக்கு ஆதரவா ஒரு ஆணைய வாங்கிட்டாங்க. அதாவது... சட்டமன்ற உரிமைக் குழுவுக்கு முன், ஒரு வழக்கறிஞர கூடவே வச்சுக்கலாம் அப்படின்னு.

அதன் அடிப்படையில நம்ம கேஸும் பெண்டிங் ஆகிப்போச்சு. அதே க்ரவுண்ட்ல ஸ்டாலின் அண்ணன் மேலயும் அதுக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கல. அத அப்படியே கிடப்புல போட்டுட்டாய்ங்க.

இத எதுக்குச் சொல்ல வர்றேன்னா... ஒரு செய்தி போட்டதுக்காக, அந்தம்மாவ திருப்தி படுத்துறதுக்குன்னு என்ன என்ன சித்து வேலை யெல்லாம் பண்ணியிருக்காங்கன்னு பாருங்க மக்களே...!

Advertisment

நானும் "போர்க்களம்' 3 வால்யூம் முடிச்சு, 4-ஆவது வால்யூம் இப்ப எழுதிக்கிட்டிருக்கேன். நடப்பு 161-ஆவது அத்தியாயம்! யோசிச்சுப் பாருங்க... இப்படி ஒரு அநியாயத்த எங்கயாவது கண்டமா? அப்படின்னுதான் சொல்லுவாங்க. அடேங்கப்பா.... ஒருநாள் கூத்துக்கு இத்தன அத்தி யாயமா? அப்படின்னு எல்லாரும் ஆச்சரியப் பட்டுக் கேப்பாங்க.

இந்த எழவெல்லாம் நடந்தது ஜெயலலிதாவுடைய நல்லாட்சியில. ரொம்ப... ரொம்ம்ம்ப, ரொம்ப நல்ல ஆட்சி!? இதுவும் நடக்கும்... இன்னமும் நடக்கும்.

ஒருவழியா உரிமை மீறல்! கூண்டுல ஏத்தி உள்ள தள்ளுறது... அதுக்கு ஒரு முற்றுப்புள்ளி இல்ல... ஒரு கமா போட்டுட்டோம். "அப்பாடா...'ன்னு இருக்க முடியாதுல்ல.

அடுத்து நான் "ஷாட்'ட கட் பண்ணி தலைமறைவு வாழ்க்கை, அந்த எப்.ஐ.ஆர்., அதுக்கப்புறம் என்ன, ஏதுன்னு எல்லாத்தையும் பாத்துட்டு இந்த "போர்க்கள'த்துக்கும் ஒரு எண்ட் குடுக்கணும்ல. எல்லாத்தையும் நாம சொல்லிட்டு வர்றதுனால எபிசோடு ஜாஸ்தியாகுது. சன் டி.வி. யில 5 வருஷமா ஒரு தொடர் வரும்ல... அந்த அளவுக்கெல்லாம் போயிறாம, இத ஒரு ஒண்ண ரை வருஷத் தொடரா முடிக்கணும்னு பாக்குறேன். அதனாலதான் இப்ப "ஷாட்'ட கட்பண்ணி நான் மறைஞ்சு இருக்குற இடத்துக்குப் போறேன்.

ஒளிஞ்சு இருக்குற இடத்துல இருந்து, நம்ம ஆபீஸ்ல வேலை பார்த்த எலக்ட்ரீஷியன் ரவிக்கு அப்ப போன் பண்ணுனேன். நம்ம வீட்டுல கீழ கிரவுண்ட் ப்ளோர்ல செக்யூரிட்டி இருக்கிற இடம், பக்கத்துல லிஃப்ட். லிஃப்ட் பக்கத்துல ஒரு பெல் ஸ்விட்ச். நாலாவது மாடியில ஒரு சின்ன அறை இருக்கும். அது என்னோடது. அதுல ஓரமா ஒரு பெல் வரணும்... எனக்கு சத்தம் கேக்குறது மாதிரி, அத உடனே ஏற்பாடு பண்ணுன்னு சொன்னேன். கேஷியர் தம்பி ஆனந்த்கிட்டயும் "பெல் ஒண்ணு வைக்கச் சொல்லியிருக் கேன், அத என்னன்னு பாருங்க தம்பி'ன்னு சொல் லிட்டேன். அப்படி அந்த பெல் வச்ச வுடனே வீட்டுல இருக்கிற செக்யூரிட்டி மீசை கண்ணன்கிட்ட, (என்னைய மாதிரி மீசை வச்சிருந்ததுனால மீசையை மூடிட்டு அலைஞ்சார் பாருங்க அவருதான்) அவர்ட்ட, "ஏம்ப்பா நீ கீழயே இருக்கணும் சொல்லிட்டேன். அவருக்கு என்ன இன்ஸ்ட்ரக்ஷன் குடுக்கணும்னு தம்பி ஆனந்த்ட்ட சொல்லி சொல்லச் சொன்னேன். ரொம்ப கவனம்... ஏதாவது தப்பு நடந்தா போச்சு...!

ஆனந்த், மத்த தம்பிங்க எல்லா ருக்குமே "என்ன திடீர்னு அண்ணன் பெல் போடச் சொல்றாரு'ன்னு ஒரு குழப்பம் இருந்துச்சு.

டிரைவர், தம்பி மோகனை வேன்ல கொஞ்சம் ரீல் எடுத்துட்டு, நான் தங்கியிருக்கிற இடத்துக்கு கொஞ்ச தூரம் தள்ளி கிட்டத்தட்ட 5 கிலோமீட்டருக்கு அந்தப் பக்கமா வந்து நிக்கச் சொன் னேன். நான் என்னோட மீசையையெல் லாம் கொஞ்சம் மறைச்சிட்டு, யாருக்கும் தெரியாம இருக்க, தலையில ஒரு முண்டாச கட்டிக்கிட்டு... நான் இருந்த அந்த காட்டுப்பகுதியில இருந்து, தம்பி ஐயப்பனோட டூவீலர்ல ஏறி தம்பி மோகன் நிறுத்தியிருந்த அந்த வேன்ல சடார்னு பின்னாடிகூடி ஏறி, அடுக்கி வச்சிருந்த பேப்பர் ரீலுக்குப் பின்னாடி போய் ஒடுங்கி உக்காந்துக்கிட்டேன். வண்டி இப்ப சல்...லுன்னு சென்னைய நோக்கி வருது. இடையில 2, 3 டோல் வேற.

சென்னையில ராயப்பேட்டை... நம்முடைய அலுவலகம். வாசல்ல ஃபுல்லா போலீஸ். அதுல ஒண்ணு என்னப் புடிக்கிறதுக்கா? இல்ல, நான் எங்க இருக்கேன்னு தெரியப்படுத்துறதுக்கா?, இல்ல ஆபீஸ் நடக்குது, நடக்கல்ல... அப்படின்னு தகவல் சொல்றதுக்கா?... ஜெயலலிதா ஆட்சியப் பொறுத்த அளவுல... சொல்ற வேலைய செய்றதுக்கு மாத்திரமே போலீஸ அவங்க பயன்படுத்திக்கிட்டாய்ங்க. அந்த அளவுக்கு எல்லாமே அவங்களுக்கான போலீஸ். ஜெயலலிதாவோட கண் ஜாடைக்கு ஏத்தமாதிரி போலீஸ் அந்த ஆட்டம் ஆடுதுங்கறது எல்லாருக்கும் தெரியும்.

இப்ப வண்டிய அப்படியே ரிவர்ஸ் எடுத்தாச்சு. நான் எப்படி ப்ளான் வச்சுக்குவேன்னா... சாயங்கால நேரமா புறப்பட்டு ராத்திரி நேரத்துலதான் வந்து சேருவேன். நான் கிளம்புறதுக்கு முன்னாடியே தகவல சொல்லிருவேன். அதனால ஜென்செட் எல்லாத்தையும் ஆஃப் பண்ணிருவாங்க. அந்த நேரம் இருட்டு அடைஞ்சு கிடக்கும். ரிவர்ஸ்ல அப்படியே வண்டிய உள்ள கொண்டுவருவாரு மோகன்.

poorkalam

ஆபீசுக்கு உள்ள வந்து கரெக்ட்டா படிக்கிட்ட நின்னவுடனே... கண் இமைக்கிற நேரத்துல வேன்ல இருந்து குதிச்சு, சட... சட...சடன்னு மேல தோட்டத்து வழியா போய் பக்கத்துல இருக்கிற அறை வழியா உள்ள போயிருவேன். அதாவது... ஆபீஸ்படி வழியா மேல ஏறுறோம். அந்த இருட்டு நேரத்துல யாரும் இருக்கமாட்டாங்க. மேல மொட்ட மாடி. அங்கயிருந்து ஒரு எஸ்.பி, டி.எஸ்.பி.ல்லாம் சுவரத் தாண்டி உள்ள வந்தாங்கள்ல அது மாதிரி.... ஏறிக் குதிச்சு மேல இருக்கிற நம்ம வீட்டு மொட்ட மாடி கதவத் திறந்து வைக்கச் சொல்லியிருப்பேன். அது வழியா சட... சட...ன்னு இறங்கி, தோட் டத்து வழியா போய் (ஏற்கனவே நான் தோட் டத்துக்குள்ள ஒளிஞ்சி இருக்கேன்னு கொத்திக் கொதறி சின்னபின்னாமாக்கிப் போட்டாங்கள்ல அந்த தோட்டம்) நம்ம அறைக்கு சடார்னு போயிட்டேன். இது எல்லாமே ரொம்ப சீக்கிரமா ஒரு 5 நிமிஷத்துக்குள்ள நடந்துரும். அதுக்கப் புறமா லைட்ட போடச் சொல்லி ரீல் எல்லாத்தையும் இறக்குவாங்க.

இப்ப அந்த பெல் வைக்கச் சொன்னது எதுக்குன்னா? சப்போஸ் போலீஸ்காரய்ங்க, அதிகாரிங்க ரெய்டுன்னு வந்துட்டா... கீழ பெல் அடிச்சிட்டா, நான் ஒதுங்குறதுக்கு ரெண்டாவது மாடியில ஒரு அறைய மாத்திரம் தனியா ரெடிபண்ணி வைக்கச் சொல்லியிருந்தேன். அது என்னோட மகளுக்கான அறை. அவங்க படிக்கப் போயிருந்ததுனால அந்த அறைய ரெடிபண்ணி வைக்கச் சொன்னேன். அங்க கட்டிலுக்குக் கீழ ஒரு மறைவு இருக்கும். நிச்சயமா கட்டிலுக்குக் கீழ பாக்க முடியாது... அந்த மாதிரி செட்லிஅப்.

தெரிஞ்சோ... தெரியாமலோ ஜெயலலிதா ஆட்சி வந்த பிறகு, புண்ணியவதி "எவ்ளோ பெரிய திருடனா நம்மள ஆக்கிருச்சு. மறைவிடம், ஒளியறது, திருட்டுத்தனமா ஓடுறது, திருட்டுத் தனமா வர்றது.... கொள்ளைக் கூட்டத்துக்காரங்க தான் அந்த மாதிரியெல்லாம் பண்ணுவாங்க... அந்தமாதிரி நம்மள ஆக்கி வச்சிடுச்சேய்யா''ன்னு.

"தேவர் மகன்'ல கமல் சார் சொல்லு வாருல்ல கடைசியில. அருவாள எடுத்து நாசர் தலைய வெட்டிப்புடுவாரு. "கடைசியில என்னையும் கொலைகாரனா ஆக்கிட்டீங்களே...' அப்படின்னு சொல்லுவாருல்ல, அதுமாதிரிதான் நம்மளையும்... ஒரு மோசமான திருடன் எப்படி ஒளிஞ்சு... ஒளிஞ்சு போவானோ அதுமாதிரி நம்மளையும் ஆளாக்கிருச்சேன்னு ஒரு வருத்தம். எதுக்குன்னா... ஒரு கட்டத்துல எப்பவுமே பதுங்கி பதுங்கிப் போறதுங்கறதே வாழ்க்கையாகி யாச்சு. எல்லாரும் பதுங்குவோம். வெளிய தெரியாம பதுங்கி... பதுங்கி... வீட்டுல இருக்கிறவங்களையும் திருட்டுத்தனத்துக்குப் பழக்கி, யாரு வந்தாலும் தெரியாம இருக்கிறதுக்கு பழக்கி... அதுவே வீட்ல இருக்கிறவங்களுக்கும் வாடிக்கையாயிருச்சு.

poorkalam

நான் வந்த சமயம்... அடுத்த நாள் 2012, ஜனவரி 14-ந் தேதி பொங்கல். 13-ந் தேதி இரவுல நான் வந்துட்டேன். நல்லநாளும் பொழுதுமா ரொம்ப நாளு நான் வெளியயே இருந்திருக்கேன். எந்த நல்ல நாளையும் ஜெயலலிதா பீரியடுல நாம கொண்டாடுனதே கிடையாது. கொண்டாடவும் விடாது. ஒண்ணு... கேஸுக்காக தலைமறைவா இருக்குறது, இல்லன்னா வெளியூர் கோர்ட்ல இருக்குறதுன்னு எதாவது ஒரு விஷயத்துல மாட்டிக்குவோம். அதனால நாம ஊருக்கும் தாராளமா போகமுடியாது. பாதுகாப்பு இல்லேங்கிறதுனால நான் மறைஞ்சிருந்த அந்தக் காடோ அல்லது வீடோ, விழா கொண்டாட எங்கயும் போறதில்ல.

இந்தமுறை, என் பெரிய மக வீட்டுக்கு வந்திருக்காங்க. ரெண்டாவது மக வீட்டுல இருக்காங்க. தம்பி பையன்க, அதோட வெளியூர்ல இருந்து என் ரெண்டு சகோதரிகளும் எல்லாரும் வீட்டுல இருந்ததுனால அத கணக்குப்பண்ணிதான் நான் அப்ப வீட்டுக்கு வந்தேன். அதுவும் ஒரு த்ரில்தான! தலைமறைவா இருக்கிறவன் வீட்டோட பொங்கல் கொண்டாடுறது. வாழ்க்கையில எவ்வளவோ த்ரில்ல பாத்துட்டோம். அதனால வீட்டுல உள்ளவங்களுக்கே தெரியாம சர்ப்ரைஸா முதநாள் நைட்டே வந்துட்டேன்... அதுவும் போகி அன்னிக்கு ஒரு சின்ன சந்தோஷம். தலைமறைவா இருக்கிற நேரத்துலயும் பொங்கல கொண்டாடுறதுக்கு ஆத்துக்காரர் வந்துட் டாருன்னு என் துணைவியாருக்கு ரொம்ப சந்தோஷம். எம் புள்ளைங்களுக்கு சந்தோஷம்.

ஆனா ரிஸ்க் நெறைய...!

(புழுதி பறக்கும்)