ffகோமளவல்- என்கிற அம்முவின் தசரா ரகசியம்!

ண்ணன் பீட்டர் அல்போன்ஸ் சட்டசபையில் நடந்த கலவரம் பற்றி தொடர்கிறார்...

"அது குறித்து அவையை ஒத்திவைக்கக் கோருவோம். எங்கள் வழியில் நாங்கள் செயல்படுவோம்' என்று கூறிவிட்டேன். தொடர்ந்து சட்டசபையில் குமரிஅனந்தன், ஜெயலலிதா பேசிய பிறகு ரகளை ஆரம்பமானது. கருணாநிதி ஜெயலலிதாவைப் பற்றி சொன்ன ஒரு வார்த்தைதான் பிரச்சினைக்கு காரணமாக இருந்தது.

முதல்வர் பொறுப்பில் இருக்கும் கருணாநிதி இப்படி தரம் தாழ்ந்து போனது மிகவும் கேவலமானது. "இன்றைய சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்ற புரோகிராம் கவர்னர் அறிவித்தது. அதை மீற முடியாது' என்று கருணாநிதி கூறுவது மிகவும் தவறு.

Advertisment

25-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று நாள் குறிக்கப் பட்டிருக்கிறதே தவிர, நேரம் குறிப்பிடப் படவில்லை. அப்படியிருக்கும்பட்சத்தில் அவையை சிலமணி நேரங்கள் ஒத்திவைத்து பிரச்சினையை விவாதிப்பதில் தவறொன்றும் இல்லை.

தன்னிடம் நியாயம் இருப்பதாகக் கூறும் கருணாநிதி, உரிமை மீறல் ஊர்ஜிதமானால் பதவி விலக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கருணாநிதி -குழப்பமான சூழ்நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்வதைத் தவிர்த்திருக் கலாம்.

அப்படியில்லாமல் ஜெயலலிதாவை துகிலுரிய முற்பட்டதும், அவர் மீது தாக்குதல் நடத்தியதும் ஜனநாயகப் படுகொலையாகும். இது குறித்து காங்கிரஸ் கட்சி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது. சூழ்நிலைக்கேற்ப, நியாயமான முடிவுகள் மேற்கொள்ளப்படும்.''

Advertisment

"அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப் பா'ன்னு நம்ம கவுண்டமணி அண்ணன் சொன்னாலும் சொன்னாரு... என்ன கேவலம் லாம் நடந்துருக்குன்னு பாருங்க.

ஜெயலலிதாவோட சட்டசபை ரௌடித்தனத்த, அதான்... ஒரு மூத்த அரசியல் தலைவர "நீ ஒரு கிரிமினல்', "அவனை குத்துடா'ன்னு ஒருமையில பேசுனது... இதையெல்லாம் கண்டிச்சுப் பேசாம, முதல்வர் கலைஞரை கண்டிச்சு நம்ம பீட்டர் அல்போன்ஸ் (இ.காங்கிரஸ்) அண்ணாச்சி வரிஞ்சு கட்டினாரு. அவரோட சேர்ந்து அதே கட்சியைச் சேர்ந்த ஆண்டி அம்பலம் எம்.எல்.ஏ.வும் "சே... சே... ரொம்ப அருவருப்பு... சொல்லவே நா கூசுது'ன்னு அவங்க ஆதரவு ஜெயலலிதாவ விட்டுட்டு கலைஞரையும், தி.மு.க.வையும் சாடினாரா...

poorkalam

பொது வாழ்க்கையில தன்னை எதிர்க்கிறவங்க யாரா இருந்தாலும் அவிய்ங்கள உண்டு, இல்லைன்னு காலி பண்றது ஜெயலலிதாவோட பிறவிக் குணம். தன்னை வளர்த்து ஆளாக்கியவர்களா இருந்தாலும்... அவங்களையும் அழிக்க நினைப்பார் ஜெயலலிதா. அதுக்கு, தன்னை சினிமாவிலயும் அரசியல்லயும் ஆளாக்கிய எம்.ஜி.ஆருக்கு துரோகம் செய்தததையும், அவரை அப்புறப்படுத்த ராஜீவ்காந்திகிட்ட உதவி கேட்டதையும் உதாரணமாவே சொல்லலாம்.

தமிழக காங்கிரஸ்ல ஜெய லலிதாவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் நம்ம அண்ணன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். 2001-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, 2001, ஜூன் 30-ந் தேதி கலைஞரை அதிரடியாக கைது செய்து தரதரவென இழுத்துச் செல்லவும்... அந்த ஆள் கதறித் துடிப்பதையும் நான் என் காதால கேட்க வேண்டும்னு காவல் துறைக்கு உத்தரவிட்டார். ஜெய லலிதாவின் ஏவலை செயல்படுத்தினர் காவல்துறையினர். அந்த சம்பவம் இந்தியா முழுவதையும் உலுக்கி எடுத்துச்சு.

தமிழ்நாட்டுல கலைஞரின் கைதை கண்டிக்க அரசியல்வாதிகள் யாருக்கும் துணிச்சல் வரல. அப்போ, ஜெய லலிதாவின் அராஜகத்தை உடனடியாக முதன்முதலில் துணிச்சலாக கண்டிச்சது அன்றைக்கு தமிழக காங்கிரசின் தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான். அதன்பிறகு தோழர் நல்லக்கண்ணு ஐயா, அண்ணன் இல.கணேசன் இவங்கள்லாம் கண்டிச்சாங்க.

தமிழ் மாநில காங்கிரசின் தலைவராக மூப்பனார் இருந்தபோது, 2001 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-த.மா.கா. கூட்டணியில் காங்கிரசும் இருந்தது. தேர்தலுக்கு பிறகு, ஜெயலலிதாவிட மிருந்து தொடர்பை துண்டித்துக் கொண்டிருந்தார் மூப்பனார். மூப்பனார் மறைவுக்குப் பிறகு காங்கிரசுடன் தமிழ் மாநில காங்கிரசை இணைக்கும் முயற்சி எடுக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் இணைப்புக்கு ஒப்புக்கொண்டார் த.மா.கா.வின் தலைவராக இருந்த ஜி.கே.வாசன். அதன்படி, ஜூலை 14, 2002-ல் காங்கிரசுடன் த.மா.கா.வை இணைத்தார் வாசன். இதற்கான இணைப்பு விழா மதுரையில் நடந்தது. விழாவில் சோனியா காந்தி கலந்துகொள்ள இணைப்பு விழா மிக பிரமாண்டமாக நடந்துச்சு. (அதற்குப் பரிசாக, தமிழக காங்கிரசின் தலைவராக நியமிக்கப்பட்டார் ஜி.கே.வாசன்)

இணைப்பு விழாவில் பேசிய சோனியா காந்தி, ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு மக்கள் விரோத அரசு என்றும், இனி எந்த காலத்திலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

சோனியாவின் பேச்சு ஜெயலலிதாவுக்கு ஆத்திரத்தை மூட்டியிருந்தது. அவர்மீது கடும் கோபமடைந்தார் ஜெயலலிதா.

அன்றைக்கு வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க.-தி.மு.க. கூட்டணி அரசு மத்தியில் இருந் தது. உள்துறை அமைச்சராக எல்.கே.அத்வானி இருந்தார். அந்த சமயத்தில் டெல்லிக்குப் போன ஜெயலலிதா, அத்வானியை சந்திச்சு சில பல விசயங்களை, சோனியாவுக்கு எதிராக ஓதினார். அத்வானியைப் பாத்துட்டு வெளியே வந்த ஜெயலலிதா, பத்திரிகையாளர்களுக்கு கொடுத்த பேட்டியில, "நாடாளுமன்றத் தேர்தலில் (2004) பிரதமராகத் துடிக்கிறார் இத்தாலியை சேர்ந்த ஆண்டோனியா அல்ஃபினோ மெயினோ... அது நடக்காது' என்று சோனியா காந்தியின் இயற் பெயரை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சிச்சார். அதாவது சோனியா என்ற பெயரைச் சொல்லாம லேயே கிண்டலா விமர்சிச்சார். ஜெயலலிதாவின் அந்த பேச்சு நாடெங்கும் எதிரொலிச்சது. காங்கிரஸ் தலைவர்கள் கொந்தளிச்சாங்க.

அன்னிக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்த இளங்கோவன், சென்னை சத்தியமூர்த்திபவனில் அவசர அவசரமாக பத்திரிகையாளர் கூட்டத்தை கூட்டினாரு. அப்போ, சோனியா காந்தியை பற்றி டெல்லியில் பேட்டி தந்த ஜெயலலிதாவின் விமர்சனத்துக்கு பதிலடி தந்தார் இளங்கோவன். குறிப்பாக, ஜெயலலிதாவின் இயற்பெயரான "கோமளவல்லி என்கிற அம்மு' என்கிற ஜெயலலிதா என குறிப்பிட்டார்.

"ஜெயலலிதா தனது நாக்கை அடக்கிக் கொள்ள வேண்டும்; அடக்கிக் கொள்ளாமல் அன்னை சோனியா காந்தியை தேவையில்லாமல் சீண்டினால், இனி ஜெயலலிதாவை கோமளவல்லி என்கிற அம்மு என்றுதான் நாங்கள் சொல்வோம்' என்று கடுமையாகக் கோபப்பட்டார் இளங் கோவன். அந்த பத்திரிகையாளர் சந்திப்பில்தான் ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவல்லி என்பது தெரிந்து, அந்த பெயர் தேசிய அளவில் எதிரொலித்தது. கோமளவல்லி என்ற பெயரை பிரபலப்படுத்தியது இளங்கோவன்தான்.

இளங்கோவனின் அந்த பேட்டி ஜெயலலிதாவ மேலும்... மேலும் கோபப்பட வச்சது. பதிலுக்கு "ஜெ.' அ.தி.மு.க.வினரை தூண்டிவிட, அவிய்ங்களுக்குச் சொல்லவா வேணும்...? இளங்கோவனை அசிங்க அசிங்கமாக விமர்சிச்சாய்ங்க ரத்தத்தின் ரத்தங்கள்.

ஜெயலலிதாவின் கொடூர முகம் தொடர்ந்த நிலையில், "கோமளவல்லி என்ற ஜெயலலிதாவுக்கு இதுதான் கடைசி எச்சரிக்கை. இனியும் சீண்டினால், மைசூர் தசரா பண்டிகையின்போது போடப்பட்ட எஃப்.ஐ.ஆர். ரகசிய விவகாரத்தை அம்பலப்படுத்த வேண்டியிருக்கும்'' என்று அதிரடியாக ஒரு குண்டையும் தூக்கி வீசினார் இளங்கோவன். அதைக் கேட்டு போயஸ் கார்டனின் சப்தநாடியும் ஒடுங்கிப்போனது.

அதென்ன தசரா ரகசியம்? கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக 1980, ஜனவரி 2 முதல் 1983, ஜனவரி 6வரை இருந்தவர் குண்டுராவ். 1980-களில் பணத்திற்காக பண்டிகை நாட்களில் நடனம் ஆடுவது ஜெயலலிதாவின் வழக்கம். அந்த வகையில், 1980ஆம் வருடம் மைசூரில் நடந்த தசரா பண்டிகையின்போது நடனம் ஆட ஒப்புக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. அதற்கான முழுத்தொகையையும் விழாக்குழுவினர் ஜெய லலிதாவுக்கு தந்துட்டாய்ங்க. ஆனால், பணத்த வாங்கிக்கிட்டு நடனம் ஆட போகாம டிமிக்கி குடுத்துட்டாரு ஜெயலலிதா. இதனால, அவர்மீது விழாக்குழுக்காரங்க மைசூர் போலீஸ்ல புகார் கொடுத்துட்டாங்க.

ஜெயலலிதா நாடறிஞ்ச நடிகை; முதலமைச்சர் குண்டுராவின் நண்பரான எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவர் என்பதால் புகார் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என மைசூர் போலீஸ் தயங்கியிருக்கு. இந்த விசயத்தை முதலமைச்சர் குண்டுராவின் கவனத்துக்கு அதிகாரிகள் எடுத்துச் செல்ல, "புகார் மீது உண்மை இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்' என்று அனுமதி தந்திருக்கிறார் குண்டுராவ்.

அதுக்கடுத்து, ஜெயலலிதா மீது எஃப்.ஐ.ஆர். போடப்பட்டுச்சு. ஜெயலலிதாவை கைது செய்ய மைசூர் காவல்துறை தேடுதல் வேட்டை நடத்தினாய்ங்க. எங்கு தேடியும் கிடைக்கல. 48 மணி நேர தேடுதலுக்குப் பிறகு, ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த ஜெயலலிதாவை கைது செஞ்சது போலீஸ். எவ்வளவோ முரண்டு பண்ணியும் ஜெயலலிதாவை விடல; ஸ்டேசனுக்கு அழைச்சுட்டுப் போனாய்ங்க. இந்த நேரம்... விசயம் அறிந்த எம்.ஜி.ஆர்., குண்டுராவிடம் பேச... ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். உதவியால் சிறைக்குச் செல்லாம தப்பிச்சுது ஜெயலலிதா.

(எம்.ஜி.ஆரிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாட்டால் அவரை விட்டு விலகியிருந்தார் ஜெயலலிதா. அந்த கைது சம்பவத்தில் அவர் எம்.ஜி.ஆரால் காப்பாற்றப்பட்டதை அடுத்து எம்.ஜி.ஆர்.-ஜெயா நட்பு மீண்டும் இறுகியது. இதனையடுத்து ஜெயலலிதாவை அரசியலுக்கு இழுத்து வந்த எம்.ஜி.ஆர்., 1982-ல் ஜெயலலிதா வை அ.தி.மு.க.வில் இணைத்து கட்சியின் கொ.ப.செ.வாக அமர்த்தினார் என்பது தனி கதை)

ஜெயலலிதாவை கோமளவல்லி என இளங்கோவன் விமர்சித்ததால் மீண்டும்... மீண்டும் அவரை ஜெயலலிதா சீண்டியபோதுதான், "அந்த எஃப்.ஐ.ஆர். ரகசியத்தை அம்பலப்படுத்து வேன்...'னு சொன்ன இளங்கோவனின் அதிரடிக்கு பிறகு கப்-சிப் ஆனார் ஜெயலலிதா. அதன்பிறகு, சோனியாவை அண்டனியோ அல்ஃபினோ மெயினோ என ஜெயலலிதா சொல்லவே இல்லை.

முதலில் கலைஞருக்கு ஆதரவு தெரிவித் தாலே கடுகடுப்பாவார் ஜெயலலிதா. இதுல வேற ஜெயலலிதாவை கண்டிச்சா… சும்மா இருப்பாரா?

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன லாரி ஏத்தி கொல்ல வந்த கதை உங்களுக்குத் தெரியுமா, தெரியாதா...?

(புழுதி பறக்கும்)