(143) சிவாஜியை பழிவாங்கிய ஜெயலலிதா!
அதென்ன சிவாஜி சார பழிவாங்க... மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் ஏன் முடிச்சுப் போடுறீங்கன்னுதான கேக்கத் தோணுது. அதுதான் இல்ல...! ஜெயலலிதா எம்புட்டு கைதேர்ந்தவருங்கிறத புட்டு... புட்டு வைக்கணும்னா, சொல்றதுக்கு நிறைய சங்கதி இருக்கு. அதுல ஒண்ணு...
அன்புத் தோழி சசிகலா.
பணம் பொட்டி பொட்டியா சம்பாரிச்சு... அள்ள, அள்ளக் குறையாத அளவுக்கு தங்கம், வைடூரியம்னு கொள்ளையடிச்சாச்சு. தமிழ்நாடு பூரா... ஏன் உலகம் பூரா இடங்கள வாங்கிக் குமிச்சாச்சு. அடுத்த ஆசை, நமக்கு இவ்வளவு இருந்தும் கௌரவம் மிஸ்ஸாகுதே... என்ன பண்ணலாம்னு சின்ன மேடம் சசிகலா யோசிக்கிறாய்ங்க.
நான் சொல்றது அப்ப... 1990-கள்ல. தஞ்சாவூர் சைடுல பெருந்தனக்காரர் + கௌரவமான குடும்பம் 3 பேர். ஒண்ணு ஐயா ஜி.கே.மூப்பனார் பேமிலி. ரெண்டாவதா ஐயா துளசி ஐயா வாண்டையார் பேமிலி. அடுத்து அண்ணன் சிவாஜி சார் பேமிலி. முதல் ரெண்டு பேமிலியிலயும் போய் சம்பந்தம் கேக்க முடியாதுன்னு முடிவெடுத்து, சிவாஜி சார் பேமிலியில பொண்ணு கேப்போம். அக்காவுக்கு இதுதான் சரின்னு படும். ஏன்னா, அக்காவுக்கும் சிவாஜி சாருக்கும் ஒரு வரவு -செலவு இருக்கு. எல்லாத்தையும் இதுல தீர்த்துரணும்னு நினைச்சு மெகா திட்டம் போடுறாய்ங்க சின்ன மேடம்.
சிவாஜி சார் வீட்டுல பொண்ணு எடுக்க பிரியப்பட்டு தூது அனுப்புறாங்க. அதுக்கு சிவாஜி சார் ஒத்துக்காம மறுத்துட்டாராம். இந்த செய்தி ஜெயலலிதா காதுக்குப் போக... தோழிக்காக வரிஞ்சு கட்டி, சிவாஜி சாருக்கு போன்....
"நான்தான் சி.எம். பேசுறேன். என்னுடைய வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு உங்க பேத்தி சத்தியவதிய பெண் கேக்குறேன்... குடுப்பீங்கள்ல...''ன்னு படார்னு கேட்க... அந்தப் பக்கம் சிவாஜி சார், என்ன சொல்றதுன்னு யோசிக்க...
இந்தப் பக்கம் ஜெயலலிதா, "ஓ.கே.தான...? ஏற்பாடு பண்ணச் சொல்றேன். நாங்க உங்க வீட்டுக்கு வர்றோம்.... வச்சுறவா...?''ன்னு கேட்டு வச்சுட்டாரு.
ஒரு சூப்பர் முகூர்த் தத்துல ஜெயலலிதாவ விட மொரட்டுப் புள்ளைய தத்து எடுத்து... அடுத்தகட்டமா இந்தப் பக்கம், அந்தப் பக்கம் எல்லாம் பேசி முடிச்சு கல்யாணம் ஜாம்.. ஜாம்னு அந்த வருஷத்துல இந்தியால நடந்த பிரம்மாண்ட கல்யாணங்கள்ல இதுவும் ஒண்ணுன்னு இந்தியா பூரா பேசப்பட்டுச்சு.
பேசப்பட்டுச்சா... பேசப்பட்டுச்சு...!
ஷாட்ட கட்பண்ணி கொஞ்சம் பின்னாடி போவோம். ஜேம்ஸ்பாண்ட் சினிமாவுல சொயிங்... சொயிங்னு ரவுண்டு ரவுண்டா சுழண்டு போகும் பாருங்க. அது மாதிரி அப்புடியே...
1996 தி.மு.க. ஆட்சி -ஜெயலலிதா பதவி இழப்பு...!
ஒருவார காலமா போயஸ் கார்டன்ல புகைச்சல்தான்.
1996-ல ஜெ. பதவிய இழந்து தி.மு.க. ஆட்சிக்கு வந்த, மூணாவது நாள் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கார்டனை சோதனை போடப் போறங்கன்னு தகவல் எட்ட, சுமார் 700 கோடி ரூபாய் (400 கோடிக்கு சொத்து ஆவணங்கள் + 300 கோடி பணம்) 300 கிலோ தங்கத்த 5 கார், 3 மினி லாரிகள்ல ஏத்தி வளர்ப்பு மகன் (கின்னஸ் திருமணப் புகழ்) சுதாகரன்ட்ட ஒப்படைச்சு, ஐதராபாத்துல சேர்க்கச் சொன்னாய்ங்களாம். திருப்பதி சாலை வரைக்கும் போன அந்த கரன்ஸி லோடு திருச்சிக்கு திரும்பிருச்சு.
மீண்டும் 2001-ல ஆட்சிக்கு வந்த மூணாம் நாள், அதை மீட்க... சுதாகரனை கூட்டி நியாயம் பேசி னாய்ங்க. ஆனா சுதா கரன் பிடி கொடுக்கல.
இதனால ஏற் பட்ட பொறிதான் ஒரு வாரமா கார்டன்ல தீப்பிடிச்சது. அதோட க்ளைமாக்ஸா... "ஒழுங்கா கேட்டா அவன் குடுக்கமாட்டான். அவன் மேல கஞ்சா வழக்கு போட்டாத்தான் சரியா வரும்'னு ஜெ. உறும... துடிச்சுப் போனாரு சின்ன மேடம். அதனால அக்கா மகன் சுதாகரனுக்கு ஆதரவாக குரல் எழுப்ப... ஜெயலலிதாவுக்கு கூடுதல் டென்ஷன்.
2001, ஜூன் 10-ஆம் தேதி கார்டன் வீட்டில் நடுஹால்ல உட்காந்திருந்தாரு ஜெ. அவருக்கு எதிர்ல சசிகலா, ஜெ.ஜெ. டி.வி. பாஸ்கரன், தினகரனின் மாமியார் சந்தானலட்சுமி, லட்சுமியின் மகள் வெங்கடேசன் எல்லாரும் நின்னுக்கிட்டிருந்தாய்ங்க.
"அவன ஜெயில்ல கஞ்சா கேஸ்ல போட்டு உதைச்சா... தானா நம்ம வழிக்கு வருவான்'னு ஜெயலலிதா சொல்ல...
"அவன இப்படி கேவலப் படுத்துனா நமக்குத்தான் அசிங்கம்'னு சசிகலாவும், சந்தானலட்சுமியும் சொல்ல...
"ஆமாம்மா... அவன இங்க தூக்கிட்டு வந்து, நீங்களே அடிச்சா வழிக்கு வருவான்'னு வெங்கடேசன் சொல்ல...
"நீங்க எல்லாருமே அவனுக்கு சப்போர்ட்டா இருக்கீங்க. எனக்கு விசுவாசமா இங்க யாருமே கிடையாதா?'ன்னு ஜெ. கத்தவும்...
"நீங்க என்ன செய்யணும்னு சொல்லுங்க, இல்ல உங்க விருப்பப்படி எது வேணாலும் பண்ணுங்க'ன்னு பாஸ்கரன் சொல்ல...
குறுக்கிட்ட சசி, "அவனை கேவலப்படுத்தினா ஆட்சிக்குத்தான் கெட்ட பேர் வரும்'னு சொல்ல...
"என்னை ஏமாத்துனவனுக்கு வக்காலத்து வாங்குற யாரும் இங்க இருக்க வேணாம் போயிருங்க...'ன்னு கூச்சல் போட்டாராம் ஜெ. அதனால எல்லாரும் கலைஞ்சு போனாங்க.
ஜூன் 12-ந் தேதி சாயந்தரம் ஐந்து மணி. "கிண்டி ஏ.சி. பழனிவேல், தி.நகர் ஏ.சி. ராஜேந்திரன், சைதாப்பேட்டை ஏ.சி., கிண்டி டெபுடி கமிஷனர் சண்முகராஜேஸ்வரன்...னு போலீஸ் அதிகாரிங்க கூடுதல் போலீஸ் படையோட பாண்டி பஜார், மாம்பலம் காவல்நிலையங்கள்ல அணிவகுத்து நிற்கணும்'னு போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து ஒரு உத்தரவு வர...
"எதுக்காக?'ன்னு தெரியாம அதிகாரிகள் எல்லாரும் தயார் நிலைல இருந்தாய்ங்க.
அன்னைக்கி ராத்திரி ஏழு மணி. கோட்டையில இருந்து தோட்டத்துக்கு வந்த ஜெ., போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன அழைச்சுப் பேசுறாரு.
நடுராத்திரி 12:30க்கு மேல... தயார் நிலையில இருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு கமிஷனர் கிட்ட இருந்து ஒரு உத்தரவு வருது....
"சுதாகரனை கைதுசெய்ய வேண்டும்!'
"ஏன் கைது? எதற்காக கைது?' எதுவும் புரியாம... அதேநேரம் உஷாராவே இருக்குது போலீஸ் படை.
நள்ளிரவு தாண்டுன பிறகும் ஜெ. அறையில விளக்கு எரியுது. ஏதோ ஒரு தகவல எதிர்பார்த்து தூங்காம உலாத்துறாரு.
விடியக்காலைல 3:30 மணிவாக்குல சுதாகரன் வீட்டுக்குள்ள போலீஸ் படை நுழையுது. சுதாகரனை கைது செய்றாங்க. மாம்பலம் ஸ்டேஷனுக்கு கொண்டுவர்றாங்க.
காலையில நாலுமணி வாக்குல கைது தகவல் கிடைச்ச பிறகுதான், தன் அறையில உள்ள விளக்கு எல்லாத்தையும் அணைச்சுட் டுத் தூங்குனாரு சுதாகரனோட வளர்ப்புத் தாய்.
எதுக்காக? எந்தப் புகார் அடிப்படையில நம்மள கைது செய்திருக்காங்கன்னு சுதாகர னுக்கே பிடிபடாத நிலையில... மாம்பலம் ஸ்டேஷன்ல இருந்து சைதாப்பேட்டை ஸ்டேஷனுக்கு கொண்டு போனாங்க.
காலைல 10 மணி வாக்குல ஸ்டேஷ னுக்கு வந்த பாண்டி பஜார் போலீஸ் இன்ஸ் பெக்டரு ஒரு பேப்பர நீட்டி கையெழுத்து கேட்டாரு. 16 கிராம் ஹெராயின் போதைப் பொருள சுதாகரன் வீட்டுல கைப்பத்துனதா அதுல தகவல் இருந்தது. ஆனா சுதாகரன் கையெழுத்துப் போட மறுத்துட்டாரு.
இந்த ஹெராயின் விவகாரத்த அரையும் குறையுமா மோப்பம் பிடிச்ச ஒரு சுதாகரன் அனுதாபி, "16 கிலோ ஹெராயின் வச்சிருந்ததா தலைவரு மேல கேஸ் போட்டுருக்காங்க'ன்னு கத்த... கூடியிருந்த சுதாகரன் ஆதரவாளர்கள் கோஷம் போடத் தொடங்கிட்டாங்க.
சுதாகரன் கைது செய்யப்பட்ட தகவல் கிடைச்சு, தஞ்சையில இருந்து சென்னைக்கு வந்த சிவாஜி, முதல்ல தன் பேத்தி... சுதாகரன் மனைவி சத்யலட்சுமிய போக்ரோடு வீட்டுக்கு கூட்டிட்டு வரவச்சாரு. இந்தப் பிரச்சினை யால... வெளியுலகத் தொடர்பு எதுவுமே இல்லாம சிவாஜி வீட்டுக் கதவு மூடியே இருந்துச்சு.
சிவாஜி தரப்புல இருந்து கார்டன்ல இதுபத்தி கேட்டப்ப... "நிலைம கைமீறிப் போயிருச்சு'ன்னு சொல்லப்பட்டுருக்கு.
ஆன்மீகவாதியான சுதாகரன், ஹெரா யின் பயன்படுத்துனதா சொல்றது ரொம்ப அபத்தம்னு தீர்க்கமா முடிவெடுத்த சிவாஜி தரப்பு, சுதாகரனை பெயிலில் எடுக்கிறதுக்காக ஏற்பாடுகளச் செய்ய முடிவு பண்ணுனாங்க.
இது ஒரு கஞ்சா, ஹெராயின் கேஸ் ஆச்சா...!
அடுத்து, ஒரு சக்களத்திக்கு...
(புழுதி பறக்கும்)