dd

(138) என்னைக் குறிவைத்த பஜாரி படை!

ம்.ஜி.ஆர். கையில ரத்தக் காயத்தோட ஓடி வந்துக்கிட்டுருப்பாரு... குழம்பிறாதீங்க, ஒரு படத்துல தான். "அரச கட்டளை'ன்னு ஒரு படம், ஓஹோன்னு ஓடுச்சு.

Advertisment

அந்த சினிமால ஒரு காட்சி. எம்.ஜி.ஆர். ரத்தக் காயத்தோட ஓடி வர்றாரு. அவரோட முறைப்பொண்ணா ஜெய லலிதா... கதைப்படிதான். அதுக்கப்புறம் என்னென்னல்லாம் உறவாச்சுங்கிறதுக்குள்ள நான் போகல.

ஒரு காட்சியில ஜெயலலிதா, எம்.ஜி.ஆர பாத்து அலறியடிச்சுட்டு ஓடி வந்தவர்...

"அத்தான்... என்னாயிற்று உங்களுக்கு? உங்களைத் தாக்கியவர் யார்...? சொல்லுங்கள் அத்தான் சொல்லுங்கள்'' -இது ஜெயலலிதா.

Advertisment

"ஒன்றுமில்லை... எதிரிகளை ஏமாற்றிவிட்டு, தப்பித்து வந்து விட்டேன். வீணாக ஆத்திரப் படாதே!'' -எம்.ஜி.ஆர். சொல்றாரு.

ஜெயலலிதா விடுறதா இல்ல...

"ம்ஹும்... இந்நேரம் எனது கையில் மட்டும் ஆட்சிப் பொறுப்பு இருந்திருந்தால் அவர்களை அக்குவேறு, ஆணிவேறாக கிழித்திருப்பேன்''னு "அரசகட்டளை' படத்துல அந்தக் காட்சியில அனலா கொதிக்கும் அந்தம்மா.

நோட் திஸ் பாய்ண்ட்ங்கோ... "அக்கு வேறு ஆணி வேறா கிழித்திருப்பேன்''

உடனே எம்.ஜி. ஆர். நிதானமா சொல் றாரு. "நீ இப்படி ஆத்திரப்படுவதால் தான் மக்கள் உன் கையில் ஆட்சிப் பொறுப்பை ஒப்ப டைக்கவில்லை''

-இப்படி அந்தக் காட்சியில வசனம் வரும்.

அந்த சமயத்துல எங்க ஊரு லட்சுமி டூரிங் டாக்கீஸ்ல நான் இந்தப் படத்தப் பாக்கும்போது அந்த வசனத்தக் கேட்ட வுடனே கைத்தட்டல்ல தியேட்டரே அதிரும்...! அந்தளவுக்கு பயங்கரமான கைத்தட்டும், சிரிப்பும் கேக்கும். அந்தம்மாவப் பாத்து எம்.ஜி.ஆர். சரியாத் தான் சொல்லியிருக்காரு. ஆனா, அது எப்படி ஏடா கூடமா மாறிப்போய், எம்.ஜி.ஆர். கூற்று பொய் யாகிப் போய்... ஜெயலலிதா கையில அரசாட்சி வந்து என்னெல்லாமோ அவலத்த பார்த்தோம்.

ஏன் நம்ம கதை... "நம்மளத்தான் "அரச கட்டளை' படத்துல ஜெய லலிதா, தான் பேசுற வசனம் மாதிரியே அக்குவேறு, ஆணிவேறா கிழிச்சிருச்சே!''

"அண்ணே எக்மோர் கோர்ட்டுக்கு நீங்க வர்றீங்கங்கிற விஷயம் எல்லாருக்கும் தெரிஞ்சுருச்சு. நீங்க இங்க வரும்போது...''

அதுக்கு முன்னாடி இத முதல்ல சொல்லிர்றேன்...

ff

"ஒரு கேஸ்ல ஆன்டிசிபேட் பெயில் கிடைச்சதுன்னா, அப்போ சம்பந்தப்பட்டவங்க ஐகோர்ட் ஆர்டர எடுத்துக்கிட்டு எக்மோர் ஜுரிஸ்டிக்ஷனுக்குப் போகணும். ரெண்டுபேர நமக்கு 10 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய்க்கு சூரிட்டி குடுக்கச் சொல்லுவாங்க. அப்படி ரெண்டுபேரயும் அழைச்சிட்டு நாம எக்மோர் கோர்ட்டுக்குப் போகணும். எதுக்கு இந்த ரெண்டு பேரு, எதுக்கு இந்த 10 ஆயிரம் ரூபா சூரிட்டி, பாண்டு அதெல் லாம்னா, வர்ற வாய்தாவுக்கு இவரு தவறாம ஆஜராவாரு அப்படிங் கிறதுக்கு ரெண்டுபேரு எனக்கு ஜவாப்தாரி குடுப்பாங்க. வழக்குக்கு நான் வரல அப்படின்னா... நமக் காக சூரிட்டி குடுக்க வந்த ரெண்டு பேருக்கும் 10 ஆயிரம் ரூபாய ஃபைன் போட்டுருவாங்க. அதுவும் சும்மா ஒண்ணும் சூரிட்டி எடுத் துக்கமாட்டாரு நீதிபதி. "இவர உங்களுக்கு எப்படித் தெரியும்?னு அந்த மாஜிஸ்திரேட் கேப்பாரு. அதுக்கு சரியான காரணத்த அவங்க சொல்லணும். அவங்க அத கரெக்ட்டா குடுக்கணும். அதோட, சொத்துப் பத்திரம் குடுத்திருந்தா, அதப்பத்தியும் விசாரிப்பாரு. இல்லன்னா அரசாங்க வேலை பார்க்கிறவங்களா இருந்தா சேலரி வாங்குற ஸ்லிப்ப காமிக்கணும். அதோட ரேஷன் கார்டு... உண் மையிலேயே அவங்க அந்த அட்ரஸ்லதான் இருக்காங் களான்னு கன்ஃபார்ம் பண்றதுக்கு, அந்த ஆதாரத்தயெல்லாம் அவங்க காமிக்கணும். இது எல்லாத்தையும் காமிச்ச பிறகுதான் நமக்கு பெயிலே குடுப்பாங்க.

ஒருவேள பெயில் பாண்ட், சூரிட்டி குடுக்க வந்தவங்க ரிஜெக்ட் ஆச்சுன்னா, போட்ட திட்டமெல்லாம் போயி... "தலைமறைவா இருந்த குற்றவாளி பிடிபட்டார்'ங்கிற பேனர்ல செய்திய குடுத்துட்டு, நம்மள அலேக்கா தூக்கி ஜெயில்ல களி திங்க வச்சுருவாய்ங்க. இதெப்படி...?

ரெடிமேட் சூரிட்டி கொஞ்சபேரு இருக்காங்க. அவங்கள மாஜிஸ்திரேட்டுக்கு அடையாளம் தெரியும். அப்படியெல்லாம் வரக்கூடாதுங்கிறதுக்காகத்தான் இந்த க்ராஸ் வெரிஃபிகேஷனாம்.... நம்பிக்குவோம்.

நமக்காக சூரிட்டி குடுக்க சில நல்ல மனசுக்காரங்க தயாரா இருந்தாங்க. அப்ப, சூரிட்டி குடுக்க நக்கீரன உயிர்மூச்சா இன்னைக்கு வரைக்கும் பாவிச்சு, எந்த கஷ்டத்துலயும் உதவிக்கரம் நீட்டுற, எதற்கும் அஞ்சாதவரா இருக்கிற அண்ணன் தெய்வச்சிலையும், நம்ம தம்பி போட்டோகிராபர் எஸ்.பி.சுந்தரோட மச்சான், நக்கீரன் நலம்விரும்பின்னு சொல்றதவிட நக்கீரன் குடும்பத்தில் ஒருத்தரா இன்னிக்கும் எங்களோடு பயணிக்கிறவர் எல்.ஆர். என்கிற ராஜேந்திரன். ரெண்டுபேரும் எனக்காக சூரிட்டி குடுக்க முன்வந்தாங்க.

சூரிட்டில்லாம் வந்துட்டாங்கன்னு தம்பி சிவா எனக்குத் தெரியப்படுத்துறாரு.

"இப்ப கோர்ட்டுக்குப் போகணும்... போனா அங்கவச்சி அரெஸ்ட் பண்ணிட்டா'ன்னு நெனைச்சி நான் தயங்கித்... தயங்கி யோசிச்சுக் கிட்டே, இருந்த இடத்த விட்டு நகராம அப்படியே குத்தவச்சு உக்காந்துட்டேன்.

அந்த நேரம்தான் எனக்கு ஒரு போன் தகவல் வருது.

"அண்ணே நீங்க எக்மோர் கோர்ட்டுக்கு வந்தீங்கன்னா... சுப்பிரமணிய சாமிய எப்படி கோர்ட்ல வச்சு அபிஷேகம் பண்ணுனாங்களோ, அதவிடக் கொடுமையா உங்களுக்கு சாணியக் கரைச்சு மேல அடிக்கிறதுக்கும், நரகல கரைச்சு ஊத்துறதுக்கும், நல்லா கிழிஞ்ச செருப்பு... பிய்ஞ்சுபோன வௌக்குமாறுன்னு ஐட்டங்களோட வேற கேவலப்படுத்துற மாதிரி அசிங்கமான அருவருக்கிற அளவுக்கு செஞ்சு உங்கள அவமானப்படுத்துறதுக்கும் பெரிய அளவுல அ.தி.மு.க. மகளிரணிக்காரங்கள ப்ளான் பண்ணி, கையில வாளியோடவும், விளக்குமாறோடவும் வாயத் தொறந்தா கூவத்த விட மோசமா சாக்கட தாண்டவமாடும் அ.தி.மு.க. மகளிரணி அக்காமார்கள கூட்டிக்கிட்டு இங்க எக்மோர் கோர்ட் வாசல்ல குமிஞ்சுட்டாங்க. "லோக்கல்ல உள்ளவங்க, அக்கா வளர்மதி எல்லாருமா சேர்ந்துதான் இதப் பண்றாங்க'ன்னு எனக்குத் தகவல் வருது''ன்னாரு.

ff

நான் நெனைச்சது மாதிரியே ஆகிப்போச்சு. எஃப்.ஐ.ஆருக்காக நம்மள அரெஸ்ட் பண்ணப் போறாங்கங்கிறது ஒரு பக்கம், இன்னொண்ணு அந்த இடத்துல நம்மள அவமானப்படுத்தணும். ஏன்னா, அவன் அவன் பங்குக்கு கோபால எதாவது விதத்துல அசிங்கப்படுத்துனாத்தான அவங்க நோத்தாட்ட மார்க் விழும். அப்படிப் பண்ணுனாத்தான அந்தம்மாவும் சந்தோஷப்படும். அதுக்காகத்தான் பெரிய அளவுல கேவலப் படுத்தணும், அசிங்கப்படுத்த ணும்ங்கிறதுதான் அப்ப திட்டம் போட்டிருந்திருக்காய்ங்க.

எனக்கு இந்த தகவல் வந்தவுடன "ஒரு ரெண்டு நாள், மூணு நாள், ஏன்... ஒருவாரம் கூட ஆனாலும் பரவாயில்ல ஆகட்டும்... அப்புறம் பாத்துக்கு வோம்'னு முடிவு பண்ணுனேன். ஏன்னா, பெயில் கிடைச்சும் நமக்கு பிரயோஜனம் இல்லாமப் போயிடுச்சிங்கிறது ஒருபக்கம், ரெண்டாவது அப்படியே ஆன்டிசிபேட் வந்தாலும், அடுத்த வழக்குல தூக்கிட்டுப் போனாலும் என்னசெய்யப் போறோம்? அப்படிங்கிறதப் பத்தி கொஞ்சநாளா யோசிச்சுக்கிட்டே இருக்கேன்.

வந்த மகளிரணிக்காரங்க அங்க இருந்து போகவே இல்ல. டே அண்ட் நைட் அங்கேயே கிடக்குறாளுங்க.

முன்னமே சொல்லியிருப்பேன். அஞ்சுலட்சுமி அக்காவ பத்தி. வாயத் தொறந்தா சும்மா பிச்சுக்கிட்டு கிளம்பும் பாருங்க, அசிங்க வாடை... அப்படி நாறும். ஜெயலலிதாவுக்குப் பலமே இந்த மாதிரி பஜாரித்தனம் பண்ணும் அக்காக்கள்தான். அந்த சேம் பஜாரி படைதான்... என்ன அசிங்கப்படுத்த எக்மோர் கோர்ட் மெயின்கேட் வாசல்ல வெயிட்டிங்.

கிடைச்ச வாய்ப்பயும் நாம விடக் கூடாதுன்னு நெனச்சு என்ன பண்ணுனேன்...?

மாதவரம் செந்தில்னு ஒரு அட்வகேட். என்.ஆர்.இளங்கோவுக்கும் தெரிஞ்சவருதான். ரொம்ப போல்டான அண்ணன். தம்பி சிவாட்ட சொல்லி, அவருக்கு போன்பண்ணி எக்மோர் கோட்டுக்கு முன்னாடி இருக்கிற முனைகிட்ட அவர வரச்சொல்லிட்டு... நான் இங்க இருந்து போய் அவரோட காருல சீட்டுக்கு நடுவுல இருக்கிற கேப்ல படுத்துக்கிட்டேன். ஏன்னா... எனக்கு ஜாமீன் குடுக்குறதுக்காக வந்தவங்க 3 நாளும் அங்கேயே எனக்காக காத்துக் கெடந்தாங்க. அண்ணன் தெய்வச்சிலையையும், அவரோட கூட வந்த எஸ்.பி.சுந்தர் மச்சான் எல்.ஆரையும்... மறக்கவே முடியாது. எனக்காக 3 நாளா தொடர்ச்சியா அங்கேயே இருந்தாங்க.

எக்மோர் கோர்ட் வாசல்ல நம்மள அசிங்கப்படுத்த நினைச்ச கூட்டம் நிக்குது. அதேநேரம் நான், அட்வகேட் காருல கோர்ட்டுக்குள்ள போய்... கண்மூடி கண் திறக்குறதுக்குள்ள, பாண்ட் எக்ஸிக்யூட் பண்ணி, பெயில் வாங்கிட்டு, பெயில் குடுத்த மகராசன்களுக்கு சட்டுப்புட்டுன்னு ஒரு வணக்கத்தப் போட்டு, சடார்ண்டு மின்னல் வேகத்துல வெளிய ஓடிரணும்னு.... அட்வகேட் செந்தில் அண்ணன் காருல தாவி ஏறி... ஏன் கேக்குறீங்க, எந்த பயபுள்ளயாவது "இதோ மீசை'ன்னு வெளிய நின்னு தொலையுற பரதேவதைகள்ட்ட போட்டுக் குடுத்துட்டா நம்ம மானம்...? மானத்த கப்பல் ஏத்திருவாளுக. அதனால "அண்ணே சீக்கிரம்... சீக்கிரம்''னு அவரப் போட்டு விரட்டுனதுல இவரும் தப்பிச்சுப் போயிறணும்னு ஓட்டுனவரு... எக்மோர் கோர்ட் 2-ஆவது கோர்ட் வழியா கார வெளியகொண்டு வர... எதிர வந்த ஒரு டெம்போ டிராவலர்ல லைட்டா உரசி.... போச்சா...!

(புழுதி பறக்கும்)