poo

(130) ஒழுக்கமில்லாத அராஜகம்!

ல துன்பங்கள பாத்தவன் நான். நெறைய தடவ மயிரிழையில உயிர் பொழச்சிருக்கேன். நமக்கும் அது பழகிப்போச்சு. ஆனா யாருக்கும் இப்படி ஒரு பொழப்பும், கொடுமையும் வரவே கூடாது சாமி. ஆனா பாருங்க... பலகாலம் கட்சியில இருந்து படாத பாடுபட்டு கையப்புடிச்சு, காலப் புடுச்சு எம்.எல்.ஏ. சீட்டு வாங்கி ஜெயிச்சு... அடிச்சுதுடா லக்கி ப்ரைஸ்னு சந்தோஷமா காலத்த ஓட்டிட்டுப் போயிரலாம்னு நெனைச்சுக்கிட்டிருந்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கே "நித்திய கண்டம் பூரண ஆயுசு'ங்கிற மாதிரி... தன்னோட கட்சித் தலைவி எப்ப நம்மள தூக்கும்? எப்ப கால வாரும்? எப்ப மண்டையப் பொளக்கும்னு தெரியாம, பயந்து... பயந்து வாழ்க்கைய ஓட்டறது இருக்கே, ஆத்தாடி... அது ரொம்ப ரொம்பக் கொடுமை.

Advertisment

இதத்தான் அராஜகத்துலயே அடங்காத, ஒழுக்கமில்லாத அராஜகம்னு சொல்லுவாய்ங்க.

அதென்னப்பா ஒழுக்கமில்லாத அராஜகம்?

ஒரு ஆள அடிக்கிறதோ, ஆள வச்சு வெட்டுறதோ ரொம்ப பெரிய தப்பு. அப்படி அடிச் சாய்ங்கன்னாலும், ஆள வச்சு வெட்டுனாய்ங்கன் னாலும்... ஏன், எதுக்குன்னு சொல்லிக்கிட்டேதான பூஜைய பண்ணுவாய்ங்க. அதான கேள்விப் பட்டுருக்கோம். இங்க எதுக்கு அடிக்கிறாய்ங்கன்னு, எதுக்கு வெட்டுறாங்கன்னு அடி வாங்குன எம்.எல்.ஏ.க்களுக்கும் தெரியல... எதுக்குடா நாம இவிய்ங்கள அடிக்கிறோம்னு அடிக்கிறவய்ங் களுக்கும் தெரியாது. இதுக்குப் பேருதான் ஒழுக்கமில்லாத அராஜகம்னு சொன்னேன்.

Advertisment

நம்ம மதுராந்தகம் சொக்கலிங்கம் எம்.எல்.ஏ. ஏன் அடிபட்டாருன்னு தெரியல. மக்கள்ட்ட நல்ல பேரு எடுக்கிறதுக்காக அதிகாரிகள்ட்ட துடுக்கா பேசிருந்தாராம்... இது நமக்கு வந்த செய்தி.

இதே காரணத்த அவருட்ட சொல்லியிருந்தா அவராவது எதோ காரணம் இருந்திருக்குன்னு நெனைச்சி நிம்மதியாயிருப்பாரு. அத விட்டுட்டு, பொம்பள விஷயம்...னு அவரு பொண்டாட்டியே ஆளவச்சு தூக்கி அடிச்சாங்கன்னு செய்தி பரப்புறது இருக்குல்ல இது... இதுதான் "ஜெயலலிதா தி கிரேட்.'

"ஏதோ நடந்தது நடந்துபோச்சு. இந்த அளவுக்காவது உயிர் பிழைச்சோமே... இதையெல் லாம் போய் பெரிசு பண்ணிடாதீங்க'' ஈனஸ்வரத் துல ஒலிக்கிற இந்தக் குரல மூணாவது முறையா அ.தி.மு.க. கட்சி, அவங்க எம்.எல்.ஏ.ட்ட இருந்தே கேக்க நேர்ந்தது... அந்தோ பரிதாபம்தான்.

முதல்ல சொன்னவரு தூத்துக்குடி எம்.எல்.ஏ. ரமேஷ்.

அடுத்து, மதுராந்தகம் எம்.எல்.ஏ. சொக்கலிங்கம்.

இப்போ... உப்பிலியாபுரம் எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன்.

ஆளுங்கட்சியச் சேர்ந்த இந்த மூணு எம்.எல்.ஏ.க்களுமே அடையாளம் தெரியாத(!) குண்டர்களால படுபயங்கரமா தாக்கப்பட்டு, உயிருக்குப் போராடுற நிலையில மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டவங்க.

oo

தூத்துக்குடியில அமைச்சர் கண்ணப்பன் பினாமியான ஆறுமுக நயினாரின் ஊழல்கள கட்சிக்காரங்கள்ட்ட அம்பலப்படுத்துன பிறகுதான், ரமேஷ் மேல கொலைவெறித் தாக்குதல் நடந்துச்சு. ஆறுமுக நயினார்ங்கிறவன்... இவன்தான் 1993-ல நம்ம போட்டோகிராபர்+ ரிப்போர்ட்டர் கதிரை துரைய கைய, கால உடைச்சி... சாகடிக்கிற அளவு அடிச்சு... தூத்துக்குடியில நடுரோட்டுல போட்டுட்டுப் போனவன். அதே ஆறுமுக நயினார்ங்கிறவன கைவச்சா, ஜெயலலிதா வரை அண்டக்கட்டுது.

பொதுமக்கள்ட்ட நல்லபேர் எடுக்கணும்ங் கிறதுக்காக அதிகாரிகள்கிட்ட துடுக்கா நடந்துக்கிட்டதுனாலதான் சொக்கலிங்கத்தோட எலும்புகள்லாம் எண்ணப்பட்டுச்சு.

தொடர்கதையாகி வரும் இந்த பயங்கரத் தோட கண்டினியூட்டிதான்... அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் உப்பிலியாபுரம் ரவிச்சந்திரன்.

10-11-94 அன்னிக்கு ராத்திரி. சென்னை அண்ணாசாலையில போய்க்கிட்டிருந்த எம்.எல்.ஏ. வோட காரை மறிச்சு கண்மூடித்தனமா தாக்கி யிருக்காய்ங்க. இந்தமுறை அட்டாக் பண்றதுல ஒரு சின்ன சேஞ்ச். அருவா, பட்டாக்கத்திகள வச்சுத்தான் பதம் பாத்துருக்காய்ங்க படவா பசங்க. அபாய கட்டத்தைக் கடந்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில சிகிச்சை எடுத்துக்கிட்டிருந் தாரு எம்.எல்.ஏ. மருத்துவமனை வளாகத்தையே சுத்திச் சுத்தி அவரோட ஆதவாளர்களோட நாமளும் தொடர்ந்து சுத்தி வந்தப்பதான்... தாக்குதலுக்கான பின்னணிய புரிஞ்சுக்க முடிஞ்சது.

"தீபாவளிக்கு முன்னாடியிருந்தே எம்.எல்.ஏ. உயிருக்கு டேஞ்சர், ஹாஸ்டல்லயே இருக்க வேணாம்னு டெலிபோன்ல ஒரு மர்மக் குரல் பயமுறுத்திக்கிட்டே இருந்துருக்கு. அப்படி பயமுறுத்துனாதான் எம்.எல்.ஏ. வெளியே வருவாரு... ஈஸியா அட்டாக் பண்ணலாம்னு ப்ளான் போட்டிருப்பாங்கபோல.

திருச்சி தமிழ்நாடு ஹோட்டல்ல தங்கியிருந்த 20 ஆளுங்க, எம்.எல்.ஏ.வ வெட்டுறது எப்படின்னு ஒத்திகை பாத்திருக்காங்க. இதெல்லாம் அம்மாவுக்குத் தெரியாமலா இருக்கும்?''

இப்படி எம்.எல்.ஏ.வோட ஆதரவாளர்கள், தங்களுக்குள்ள பேசிக்கிட்டத வச்சு, என்ன நடந்திருக்கும்ங்கிறத நம்மளால யூகிக்க முடிஞ்சுச்சு.

சம்பவம் நடந்து எம்.எல்.ஏ., ஆஸ்பத்திரியில குத்துயிரும் குலையுயிருமா கிடந்தப்ப, எம்.எல்.ஏ. கூடவே இருந்த வரதன், ரங்கராஜன், அன்பு... மூணுபேரையும் ஆஸ்பத்திரி வளாகத்துல பார்க்க முடிஞ்சது. நாம அவங்கள அடையாளம் கண்டு நெருங்கிப் போய் விசாரிச்சப்ப... "நீங்க நினைக்கிற ஆளுங்க நாங்க இல்ல'ன்னு சொல்லிட்டு, அவசரமா நழுவிட்டாங்க. அவங்க ஒதுங்கிப்போன அவசரத்துல இருந்தே இந்த விவகாரம் போற போக்கோட பயங்கரத்த உணர முடிஞ்சது.

poorkalam

தூத்துக்குடி ரமேஷ் எம்.எல்.ஏ. தாக்கப் பட்டப்ப... அவரோட ஆதரவாளர்கள் மூணுபேர மேலூர் பக்கத்துல வச்சு வழிமறிச்சு அவரு மேல கஞ்சா கேஸ போட்டாங்க போலீஸ்காரங்க. தங்களுக்கும் அதுபோல ஒரு சூழ்நிலை வருமோன்னு நெனைச்சுப் பயந்துபோய் வாயத் தொறக்கவே மறுத்துட்டாங்க ரவிச்சந்திரனோட ஆதரவாளர்களா இருந்தவய்ங்க.

பட்டாக்கத்தியால தாக்கப்பட்டதுனால உடம்புல இருந்த ரத்தத்துல பாதிக்குமேல வெளியாகி, கடைசி நேரத்துல காப்பாத்தப்பட்ட எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன சந்திக்க வார்டுக்குள்ள நுழைஞ்சோம். படுக்கையில ரொம்பவே சிரமப்பட்டுக்கிட்டிருந்த எம்.எல்.ஏ. நம்மகிட்ட...

"என்னை யார் வெட்டுனாங்கன்னு எனக்கு அடையாளம் தெரியல. எனக்கு எதிரிங்க யாரும் கிடையாது. திருச்சி மாவட்ட துறையூர் கூட்டுக் குடிநீர் திட்டம் பத்தி சட்டமன்றத்துல பேசலாம்னு இருந்தேன். இதப்பத்தி எங்க மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் யாருமே பேசல. அதனால எம்மேல கோபப்பட்டிருப்பாங்களோன்னு டவுட்டா இருக்கு''ன்னாரு எம்.எல்.ஏ.

துறையூர் கூட்டுக் குடிநீர் திட்டம் பத்தி சட்டமன்றத்துல பேசுனது நல்ல விஷயம்தான? இதுக்கெல்லாமா அடிப்பாய்ங்க...? ஆள காலி பண்ணுற அளவுக்கு வெட்டுவாய்ங்க... என்ன கொடும சரவணாங்கிற மாதிரிதான் இருக்கு. நமக்கு எங்கிட்டோ இடிக்குது.

"ஏன் சார், போலீசுல புகார் குடுக்க வேண்டியதுதானே'ன்னு கேட்டா... "அதெல்லாம் வேணாம் சார்... ஏதோ நடந்தது நடந்துபோச்சு. அம்மா புண்ணியத்துல ஏதோ உயிர் பிழைச் சோமே, அதுவே போதும் சார். வாழ்க்கையே வெறுத்துப் போச்சு சார். அரசியல் பக்கமே வராம ஊர்லயே விவசாயத்த பாத்துக்கிட்டு கவுரவமா இருந்திருக்கலாம்''னு முனங்குனாரு. நாம அங்க இருந்து வெளிய வந்துட்டோம்னு நினைச்சு நம்மள கவனிக்காம பக்கத்துல இருந்தவங்ககிட்ட... "எல்லாம் அந்த அம்மாதான்...''னு அழுதுக்கிட்டே சொன்னாரு எம்.எல்.ஏ.

சரி... ஒரு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வ, அதுவும் ராத்திரி நேரத்துல சென்னையோட முக்கிய வீதி அண்ணாசாலையில வச்சுப் பொளந்து கட்டியிருக்காய்ங்க. வெட்டுன இடம் ரத்தக்காடாக் கிடக்கு. போலீஸ் பதறும்லன்னு நினைச்சு ஸ்டேஷன்ல போய் நம்ம நிருபர் கதிரை அண்ணன் கேட்டதுக்கு...

"யாரு... பத்திரிகையா, என்ன வேணும்? சீக்கிரம் சொல்லுங்க... எங்களுக்கு நெறைய வேல கிடக்கு''ன்னு சலிச்சுக்கிட்டாங்களாம்.

"ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வ நடுரோட்டுல வச்சு வெட்டுனது சம்பந்தமா யாரையாவது அரெஸ்ட் பண்ணீருக்கீங்களா?''ன்னு கேட்டதுக்கு...

"அட... உங்களோட ஒரே தொல்லையாப் போச்சு. யாரையும் புடிக்கல, புடிச்சா நாங்களே உங்க ஆபீசுக்கு தகவல் சொல்லி அனுப்புறோம்... இல்ல, உங்களுக்கு போன் பண்றோம். நீங்க வந்த பிறகு ஆக்ஷன் எடுக்குறோம் போதுமா? நீங்க கிளம்புங்க...''ன்னு ரொம்ப "பணிவா' சொன்னாரு அங்க டூட்டில இருந்த போலீஸ்காரர்.

அ.தி.மு.க. கட்சியோட எம்.எல்.ஏ. ஒருத்தர் வெட்டுப்பட்டு சாகுற நிலைமையில கிடக்காரு. அவரை வெட்டுனது யாருன்னு கேட்டா.... அலுத்துக்கிறாரு பாருங்க மக்களே!

ரொம்ப கொடுமை என்னன்னா... பாதிக்கப்பட்ட, வெட்டுப்பட்ட எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன் தரப்புல இருந்து எந்தப் புகாரும் குடுக்கலையாம். அதவிட இன்னும் கொடுமை... இதுக்கு முன்னாடி தாக்கப்பட்ட ரெண்டு அ.தி.மு.க. சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுமே அவங்க, அவங்க குடுத்த புகார்கள வாபஸ் வாங்கிட்டாங்களாம். அதனால இவரு, தான் வெட்டப்பட்டது பத்தி புகாரே குடுக்காம வச்சிருக்காராம்.

எப்படி ஒரு ஆட்சி பாருங்க. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள ஏன், எதுக்குன்னு கேக்காம அடிச்சும், வெட்டியும் நடுரோட்டுல போடுறது எங்க நடக்கும்... ஹிட்லர் ஆட்சியிலதான்... அதேதான் இங்கயும்!

இந்த கேஸ்லயும் ஏன் வெட்டுப்பட்டாருங்கிற காரணமா... "ஒரு பொம்பள தொடர்பு'ன்னு சொல்லி கசிய விட்டிருக்காய்ங்க.

1991-1996 வரையிலான ஆட்சியிலேயே இந்த மாதிரின்னா... 2011-2016 வரையிலான அ.தி.மு.க. ஜெயலலிதா ஆட்சியில என்னெவெல்லாம் பயங்கரம்... படுபயங்கரம் நடந்திருக்கும்... உங்க யூகத்துக்கே விட்டுர்றேன்...

(புழுதி பறக்கும்)