(127) சொர்ணாக்காவாக மாறிய ஜெ!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிய அன்பா கவனிச்ச சங்கதிய சொல்றதுக்கு முன்னாடி, இன்னொண்ணையும் பார்ப்போம்.
ஜெயலலிதா கூடவே இருந்த ஆடிட்டர்... அதுவும் ஜெயலலிதா எம்.பி.யாக இருந்தப்பதுல இருந்தே அவருக்கு ஆடிட்டராக இருந்த நம்பிக்கைக்குரியவர்தான் ராஜசேகர். ரொம்ப சீனியர்மேன், தஞ்சாவூர்க்காரர்... எம்.நடராஜனுக்கு வேண்டியவர்.
1991-96ல ஜெ. ஆட்சிக்கு வந்ததும் பழைய கோவில்கள பராமரிக்கிறதுக்காக அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழுவுல ராஜசேகரும் ஒரு உறுப் பினரா நியமிக்கப்பட்டாருன்னா பாத்துக்குங் களேன்... ராஜசேகர் எவ்வளவு முக்கியஸ்தர்னு. தன்னோட ஆட்சிக் காலத்துல போயஸ் தோட்டத் தில் குவிஞ்ச ஊழல் பணத்துக்கு கணக்கு வைக்கும் பொறுப்பு ராஜசேகரிடம் ஒப்படைக்கப்பட்டுச்சு. பின்னாடி நாட்கள்ல சிக்கல் எதுவும் வரக் கூடாதுங்கிறதுதான் ராஜசேகருக்கு, கார்டன் சொன்ன சீரியஸ் அட்வைஸ். 89-ல தி.மு.க. ஆட்சிக் காலத்துல அரசுவசமான ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜ, மீண்டும் ராமசாமி உடையாரிடமே திருப்பித் தந்தது ஜெ. அரசு.
இதற்குப் பரிசாக திருவாரூர் மாவட்டம், வண்டாம்பாளையத்தில் உள்ள ராமராஜ் அக்ரோ இண்டஸ்ட்ரீஸை ஜெ.வுக்கு வழங்கினார் உடையார். ராமராஜ் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ், ஜெ. வசமானதும் அதில் சசிகலா, நடராஜன், விநோதகனின் மகன் மகாதேவன், அவரது தம்பி தங்கமணி, மாஜி வளர்ப்பு மகன் சுதாகரன், ஆடிட்டர் ராஜசேகரன் மற்றொரு ஆடிட்டர் பாலாஜி, சுதாகரனின் தந்தை விவேகானந்தன், அவரது ஆடிட்டர் ஜி.நடராஜன் இத்தனபேரும் அதுல பங்குதாரர் ஆக்கப்பட்டாய்ங்க. யப்பா... இப்பவே கண்ணக் கட்டுதா? இன்னும் இருக்கு!
ஜெ. ஆட்சி போனதும் 96-ல தி.மு.க. அரசால், அக்ரோ இண்டஸ்ட்ரீசுக்கு சீல் வைக்கப்பட்டுச்சு.
இந்த அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் தொடர்பான டாகுமெண்டுகள் ஆடிட்டர் ராஜசேகரிடம்தான் இருந்துச்சு. 5 ஆண்டுகாலம் சம்பாதிச்ச ஊழல் பணத்தோட சின்ன பகுதிய இந்த இண்டஸ்ட்ரீஸ்ல தான் முதலீடு செய்ததா கணக்கு எழுதியிருந்தது ஜெ-சசி வகையறா. இதுக்கு உடந்தையா இருந்தவர்தான் ஆடிட்டர் ராஜசேகர். அவர்ட்டதான் ஜெ-சசியின் ஊழல் பணமும் கொடுத்து வைக்கப்பட்டிருந்துச்சாம். ஜெ.வின் ஊழல் ரகசியங்களை தெரிஞ்சிருக்கும் ராஜசேகர், ஸ்பெஷல் கோர்ட்டில் போடப்பட்டிருக்கும் கொஞ்ச வழக்குகள்ல ஆடிட்டர்ங்கிற முறையில சாட்சியமாக்கப்பட்டிருந்தாரு.
குறிப்பா, ஜெ.வுக்கு பெரிய அச்சுறுத்தலா இருந்த டான்சி வழக்குலயும் இவரு சாட்சியாக் கப்பட்டிருந்தாரு. இதனால அப்ப கொஞ்சகாலமா கார்டன் பக்கம் ராஜ சேகர் எட்டிப் பார்க்கவேயில்லை. அவரிடம் சிக்கி யிருந்த டாகுமெண்டு களையும், கொடுத்து வச்சிருக்கும் பணத் தையும் எப்படியா வது மீட்டுரணும்னு துடிச்ச ஜெ., பல முறை ஆள் அனுப்பினார். ஆனால் ராஜசேகர் கார்ட னுக்கு வரவேயில்லை.
ஏன் கார்டன் பக்கம் தலவச்சுப் படுக்கலன்னு அவர்ட்ட கேட்டாத் தான் தெரியும். அடேங்கப்பா... எத்தனபேர இது மாதிரி துரத்தி... துரத்தி... நொங்க பிதுக்கியிருப்பாய்ங்க இந்த அல்- ராணிய்ங்க. இதெல் லாம் ஆடிட்டர் சாருக்கு வந்து போகாதா? அதான்... பெரிய டாட்டா காமிச்சிட்டாரு.
1999, மார்ச் 13-ந் தேதி காலையில 10 மணி அளவுல தியாகராய நகர், வெங்கட்நாராயணா ரோட்டுல இருந்த ராஜசேகர் வீட்டுக் குப் போன மகா தேவன், ராஜசேகரின் மனைவி கீதாகிட்ட, "மாமா இருக்காரா?''ன்னு உரிமையோடு கேட்டிருக்காரு.
ஆங்... இந்த மகாதேவன் யாருன்னு சொல்ல ணுமே! அவரு வேற யாருமில்ல. சசிகலாவின் சொந்த அண்ணன்ல ஒருத்தர் வினோதகன். அவருடைய அன்பு மகன் மகாதேவன். இவருடைய வேலை என்னன்னா... யாரையாவது "ஜெ.' அம்மாவும், அத்தையும் அடிக்கணும்னு ஆசைப்பட் டாலே போதும், நேரா வீட்டுக்கு போய் அடிச்சு... அடிபட்டவனோட ரத்தக்கறை படிஞ்ச சட்டையை யோ, இல்ல வேட்டியையோ இல்ல, மேப்படி... மேப்படி... ஏதாவது உடம்புல இருக்கிற ஐட்டத் தையோ கொண்டாந்து காமிக்கணும். அந்த வேலைய ஜரூரா செய்தவருதான் மகாதேவன். "அவர் ஊருக்குப் போயிருக்கிறார்''ன்னு ஆடிட்டர் மனைவி சொன்னதும், ஒருவித சந்தேகத்தோட வெளிய வந்த மகாதேவன், கார்டனுக்கு தொடர்புகொண்டு பேசியிருக்காரு. பிறகு, அவர் வெளியே நின்னுக்கிட்டிருந்த தனது நண்பர் அட்வகேட் கந்தசாமிய 10 நிமிஷம் கழிச்சு ராஜசேகர் வீட்டுக்கு அனுப்பி வச்சாரு.
அட்வகேட் கந்தசாமி போய் விசாரிச்சப்ப... மகாதேவன்தான் இந்தாள அனுப்புனாருங்கிறத தெரியாம... "உட்காருங்க வரச்சொல்றேன்''னு சொல்லியிருக்கார், ராஜசேகரின் மனைவி கீதா. 5 நிமிஷத்துல ராஜசேகர் ஹாலுக்கு வர, அதே நேரத்துல உள்ள நுழைஞ்சுருக்காரு மகாதேவன்.
"அம்மா உங்கள்ட்ட பேசணுமாம், கார்டனுக்கு வாங்க...''ன்னு மகாதேவன் சொன்னதும், பதட்டமான ராஜசேகர்... "நான் வர முடியாது'ன்னு மறுத்துருக்காரு.
மகாதேவன், சட்டுன்னு தன்னோட கைத்துப்பாக்கிய எடுத்து மிரட்டுனதும்... நடுங்கிப்போன ஆடிட்டர், "நான் வர்றேன், நீங்க கீழே இருங்க... என்னோட மாருதியிலதான் வரு வேன்''னு சொல்லி மகாதேவனையும், அட்வகேட் கந்தசாமியையும் கீழே இருக்கச் சொல்லிட்டு.... பிறகு, மாஜி வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு போன் செய்து நிலைமையை விளக்கியிருக்காரு ஆடிட்டர் ராஜசேகர். சுதாகரனின் ஆலோசனைப்படி தனது அண்ணன் கணேசனை கூப்பிட்டுக்கிட்டு மாருதி காருல கார்டனுக்குப் போனாரு. மகாதேவன் காரும் கூடவே போச்சு.
கணேசனை வாசல்லயே இருக்கச் சொன்ன போயஸ் கார்டன் காவலாளிங்க, ராஜசேகரை மட்டும் உள்ளே அனுமதிச்சாய்ங்க. கார்ட னில் உள்ளே கட்டுன புதிய கட்டிடத்தோட மேல் மாடிக்கு ஆடிட்டர் ராஜசேகர கூட்டிட்டுப் போனாங்க. அங்கே ஜெயலலிதாவும் சசிகலாவும் கோபம் கொப்பளிக்க நின்னுக்கிட்டிருந்தாய்ங்க.
ஜெயலலிதா, எடுத்த எடுப்பி லேயே "உன்னாலதான்டா எனக்கு இவ்வளவு பிரச்சினை''யும்னு ஆடிட் டரைப் பார்த்து சீறுனதோட... "என்னடா கணக்கு எழுதியிருக்கே...? நீ சொன்னதாலதானே வெளிநாட்டு டாலரை என் கணக்கில் டெபாசிட் செய்தேன். இப்ப அது எந்தளவுக்கு பிரச்சினையாகியிருக்கு பார்த்தியா? உன் பேச்சைக் கேட்டுத்தானே கண்டவன்களுக்கும் செக் இஷ்யூ பண்ணினேன்.... எல்லா வரவு, செலவையும் பாங்க் மூலம் டீலிங் பண்ணுனேன். இப்ப என்ன ஆகியிருக்கு பாரு... என் இமேஜ் கெட்டுப்போயிடுச் சிடா...''ன்னு ஏகவசனத்துல திட்டியிருக்காரு.
சசிகலா, மகாதேவன் இன்னும் சிலபேர் முன்னிலையில தன்னை ஜெ. அவமானப்படுத்திக் கிட்டே போறத... ஒருகட்டத்திற்கு மேல பொறுத்துக்கொள்ள முடியாத ஆடிட்டர் ராஜசேகர், "நானா தப்பு செய்தேன்... நீங்க திமிர் பிடிச்சு ஊழல் பண்ணுனீங்க, அதனாலதான் மாட் டிக்கிட்டு நிற்கிறீங்க''ன்னு ஆவேசமா சொன்னாரு.
அடுத்த வினாடியே, ஆடிட்டரின் முகத்துல காறித் துப்பினாரு ஜெயலலிதா. பக்கத்துல நின்னுருந்த சசிகலா தன்னோட செருப்பைக் கழட்டி ராஜசேகரை வெளுத்து வாங்குனாரு. "விருந்தாளிக்குப் பொறந்தவனே'ன்னு திட்டுன தோட, ஆடிட்டர் ராஜசேகரின் மர்மஸ்தானத்துல யும் எட்டி மிதிச்சாரு ஜெயலலிதா.
வலி தாங்க முடியாம, "அம்மா என்னை விட்டுடுங்க....''ன்னு ஆடிட்டர் கதற... "எனக்குத் துரோகம் செய்தவனை நான் விட்டதில்ல''ன்னு சொன்ன ஜெயலலிதா...
நோட் திஸ் பாயின்ட் யுவர் ஹானர்...
"50 லட்ச ரூபாய் நீ எங்களுக்குத் தரணும்னு பத்திரப் பேப்பரில் கையெழுத்துப் போட்டுக் கொடு''ன்னாரு.
ஆடிட்டர் முரண்டு பிடிக்க... மகாதேவனும் அவர் அழைச்சிட்டு வந்திருந்த தஞ்சாவூர் ஆளுங் களும் தேக்குமரக் கட்டையால (மத்தவய்ங்கள அடிக்கிறதுக்கே தேக்குமரத்துலதான் கட்டைய செஞ்சு வச்சிருக்காய்ங்க பாருங்க...) ஆடிட்டர் ராஜசேகர சரமாரியாக அடிச்சாய்ங்க. அவரோட கண் பகுதியில ஓங்கி தாக்குனதுனால ரத்தம் வழிஞ்சுக்கிட்டே இருந்துச்சு.
உயிர்பயம் ஏற்பட்டு ராஜசேகர் பத்திரப் பேப்பர்ல கையெழுத்துப் போடத் தயாரானாரு.
12-6-96ன்னு தேதி போட்டு கையெழுத்து வாங்குனாங்க. அந்த பத்திரப் பேப்பர்ல ரப்பர் ஸ்டாம்ப் சீல் வைக்கிறதுக்காக ராயப்பேட்டையில உள்ள ராஜசேகரோட ஆபீசுக்கு அவர தூக்கிட்டு வந்து, சீல் போட்டுக்கிட்டு... ரத்தவெள்ளத்துல இருந்த ராஜசேகர... அங்கேயே விட்டுட்டு ஓட்டம் புடிச்சது மகாதேவன் கோஷ்டி. ஆடிட்டர்கிட்ட வாக்குமூலத்துல கையெழுத்து வாங்கிட்டா, ஊழல் வழக்குகள்ல இருந்து தப்பிச்சிரலாம்னு ஜெ.வுக்கு எவனோ ஒருத்தன் குடுத்த ஐடியாவோட விளைவுதான்... இவ்வளவும் நடந்திருக்கு.
அலுவலகத்துல ராஜசேகர கொண்டுவந்து போட்டுட்டுப் போன கொஞ்சநேரத்துர அங்க வந்த அவரோட அண்ணன் வக்கீல் கணேசன் நிலைமையப் பாத்து பதறிப்போய்... இஸபெல்லா மருத்துவமனையில சிகிச்சைக்கான ஏற்பாடுகள செய்யத் தொடங்குனாரு.
"இஸபெல்லாவுல அட்மிட் செய்தா வழக்கு நிக்காது... அதனால அரசு மருத்துவமனையில அட்மிட் செய்யுங்க'ன்னு இன்னொரு வக்கீல் மூலம் கணேசனுக்கு தகவல் வந்துச்சு. அப்புறம்தான் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில ராஜ சேகர் அட்மிட் செய்யப்பட்டாரு. இந்த விஷயம் ஜெ. காதுக்குப் போனதும்... மேலும் வெறியாகி, தனது ஆட்கள அனுப்பி ராஜசேகர் தரப்பு மூவ்மெண்ட்ஸ்கள கவனிக்கச் சொன்னாரு.
இந்த தாக்குதல் தொடர்பா ஜெயலலிதா, சசிகலா, மகாதேவன்... மேல கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுச்சு. இருந்தும்... காவல்துறை உறுதியான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளல.
ஆனா... "ஆடிட்டரை தாக்கியதா ஒரு சம்பவமே நடக்கல... இது கருணாநிதி செய்யும் சதி'' எனச் சொன்னார் ஜெ!
ஒரு பெரிய மனுஷன... அதுவும் பிரபலமா இருந்த ஆடிட்டர... தன் குடும்பத்துக்கு ஆடிட்டரா இருந்தவரையே... தன்னோட அடிப்பொடிகளோட தானும், தன்னோட உடன்பிறவா சகோதரியும் சேர்ந்து அடி பின்னி எடுத்திருக்காய்ங்க.
நடந்ததோ தி.மு.க. ஆட்சி... அப்படியிருந்தும் இவங்க மேல கை வைக்க முடியல. ஏன்னா... இத விசாரிக்கப்போன சி.பி.சி.ஐ.டி. ஆபீஸûரையும் விலைக்கு வாங்கிட்டாய்ங்க.
"இப்ப தெரியுதா... ஜெயலலிதாங்கிற பெண்மணி சாதாரணமான பொம்பள இல்ல... அடிக்கிறதுலயும் ஒரு சொர்ணக்காதான்'னு.
இதவிட இன்னொரு கொடும என்னன்னா...?
பிள்ளையையும் கிள்ளி விட்டுட்டு, தொட்டிலயும் ஆட்டுனது மாதிரி... அடிபட்ட ஆடிட்டருக்கு தன்னோட கட்சித் தலைமைக்கழக ஊழியர் மூலமா பூங்கொத்தும் குடுத்து விட்டுருக்கு ஜெயலலிதா.... இதெப்புடி....?
(புழுதி பறக்கும்)