(125) என் மீது போடப்பட்ட மிகப்பெரிய பழி!
மாட்டுக்கறி மேட்டருக்காக நாம போட்ட ரிட் மனு மேல பதில் சொன்ன ஏ.ஜி. நவநீத கிருஷ்ணன் சார் சொல்றாரு... "நாங்க யாரையும் பழிவாங்க மாட்டோம். எங்க அம்மா, மகாத்மா காந்திக்குப் பிறகு ஒரு ஈ, எறும்புக்குக்கூட தீங்கு செய்யாத அப்புராணி''ன்னு... அப்படியே கொஞ்சுற மொழியில கோர்ட்ல சொன்னாருல்ல... அதுக்குத் தான் இத்தன வியாக்கியானம். இன்னும் இருக்கு...!
அவன் விரோதியா இருந்தாலும் தூதுன்னு வந்துட்டா... தூதுவன மதிக்கிறதுதான்னு நம்மோட வரலாற்றுல படிச்சிருக்கோம், பாத்துருக்கோம். தம்பி அர்ச்சுனன் கொலை மிகப்பெரிய நம்பிக்கை மோசடியா, வீரப்பன ரொம்ப ரொம்ப பாதிச்சுருச்சு.
தூது மரபு என்ன சொல்லுதுன்னா... தூதுன்னு வந்தவங்கள கொல்றது கிடையாது. இது மனுஷனா இருக்கிற, அதுவும் உயர் பதவியில இருக்கிறவங்களுக்குத் தெரியும். அப்படி தூதுன்னு வந்தவரு அர்ஜுனன். சங்கர் ஐ.ஏ.எஸ்.ட்ட சரண்டர் ஆன வங்கதான் வீரப்பன் ஆட்கள் அய்யன்துரையும் ரெங்கசாமியும். நம்பி வந்தவங்களத்தான் துரோகம் செஞ்சு சயனைடு வச்சு கொண்டுபுட்டாய்ங்க. இதுக்குப் பின்னாடி அப்ப இருந்த நம்ம தமிழ்நாடு எஸ்.டி.எஃப். தலைவர் தேவாரமும் இருக்கார்.
இப்ப தெரியுதா... ராஜ்குமார் கடத்தலப்ப ஏன் நான் தூது போகப் பயந்தேன்ங்கிறது.
1994-ல 3 பேர வீரப்பன் கடத்திர்றாரு.
சிதம்பரநாதன் டி.எஸ்.பி., ராஜகோபால் ஏட்டு, சேகர் வாத்தியார் 3 பேர். சிறுமுகைப் பகுதி யிலதான் அது நடந்தது. அப்போ அவங்கள கடத்தி வச்சிட்டு, வீரப்பன் கோரிக்கை வைக்கிறாரு.
கோரிக்கைக்காக, இந்த மிஷனுக்கு வந்து மீடியேட் பண்ணுனவரு, ... தூது போகலியே யொழிய, ஆபீஸ்லாம் போட்டு இதுக்கான மீடியேஷன் நடந்துச்சு. அதாவது வீரப்பன் தூதுவர் வந்தா பேசுறது... கொள்றது எல்லாத்துக்கும் தமிழ்நாடு கவர்ன்மெண்ட் ஒருத்தர நியமிச்சாங்க. அவரு சி.வி.சங்கர்னு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி. அவருதான் பாத்துக்கிட்டாரு.
ஆனா, அப்ப... தேவாரம் மிடுக்கா திரிஞ்சுக் கிட்டிருந்தாரு. அந்தப் பக்கம் சங்கர் பிதாரின்னு கர்நாடக எஸ்.டி.எப். தலைவர் இருந்தாங்க. பயங்கர மிடுக்குல விரைப்பா திரிவாரு... நீங்க நல்லா பாத் தீங்கன்னா தெரியும்... விரைப்பா திரிவாருங்கிறதுக்கு ஒரு உதாரணம்னா,ஜெயலலிதாவுடைய வளர்ப்பு மகன் கல்யாணத்துல நகைக் கடை மாதிரி ஜெயலலிதா, சசி கலா குடும்பம் எல் லாரும் நடந்து வருவாங்க... எம்.ஆர்.சி. நகர் ரோட்டுல. சார்தான் எஸ்கார்டா வருவாரு... யாரு, தேவாரம். அப்படி ஒரு மிடுக்கா வருவாரு. அந்த மிடுக்கு தேவாரம் தான் சி.பி.சங்சர் சாரோட கூட இருந்துக்கிட்டாரு.
நாங்க வெளிய இருந்து வேடிக்கை பார்த்தோம், அவ்வளவுதான்.
1993-ல வீரப்பனுடைய படத்த வெளி யிட்டோம். அதுக்கப்புறமா, 94-ல வீரப்பன் ஒரு கடத்தல பண்ணுனாரு. 95-ல ஒரு கடத்தல் பண்ணுனாரு. இதையும் மத்த எல்லா பத்திரிகைக்காரங்களையும் மாதிரி நாங்களும் வேடிக்கைதான் பார்த்தோம்.
இப்ப வெளிய இருந்து நாங்க வேடிக்கை பார்க்கையில, பேபி வீரப்பன் முதல்ல தூதுவரா வந்தாரு கடத்தல்ல. அந்தக் கடத்தலப்ப வீரப்பன் ஒரு கேஸட் பேசி தர்றாரு. பேபி வீரப்பன் அத சி.வி.சங்கர்ட்ட குடுக்குறாரு. அவரு என்னென்னல் லாம் சொல்லியிருக்காரோ... அதுபிரகாரம் பேபி வீரப்பன், வீரப்பன் துணைவியார் முத்துலட்சுமிய பாத்தாரு.. அப்ப முத்துலட்சுமிய எஸ்.டி.எஃப் கேம்ப்ல சட்டவிரோதமா அடைச்சு வச்சு கொடுமைப்படுத்திட்டே இருந்தாங்க. வீரப்பன் இந்த கடத்தல் தூதுவரா தனது தளபதியில ஒருத்த ரான பேபி வீரப்பன அனுப்புறது தெரிஞ்சதும் முத்துலட்சுமிய அவசரம் அவசரமா கொண்டு போய் ரிமாண்ட் பண்ணி ஜெயில்ல வச்சுட்டாங்க. அங்க வச்சுதான் பேபி வீரப்பன் பார்த்தாப்ல. அதே போல ஜெயில்ல இருக்கிற வீரப்பன் அண்ணன் மாதையன பாக்குறாரு. அப்புறம் அவரு யாரையெல்லாம் பாக்கச் சொன்னாரோ, அவங்களையெல்லாம் பாத்துட்டு... வீரப்பன் குடுத்த கண்டிசனை பத்தி கலெக்டர் சி.வி.சங்கர் சார்ட்ட பேசி பதில் வாங்கிட்டு மறுபடியும் பேபி வீரப்பன் காட்டுக்குள்ளயே போயிடுறாரு.
அடுத்து கொஞ்சநாளாச்சு. இதையெல்லாம் நாங்க பத்திரிகையாளர்கள் எல்லாருமே வெளிய இருந்து வேடிக்கை பாக்குறோம்... அத செய்தியாக்குறோம், அவ்வளவுதான்... சிம்பிள்.
நான் சொல்ற எல்லாமே 94-ல 3 பேர வீரப் பன் கடத்துனப்ப நடந்தது. நல்லா புரிஞ்சுக்கங்க.
இப்ப முட்டாள் ஒருத்தன் பேசுனான் பாருங்க. உண்மை என்னன்னே தெரியாம... பொய்ய மட்டுமே பேசுறான் ஒருத்தன். ஒரு தொப்பி போட்ட படவா. அவனுக்கு வீரப்பன், அர்ஜுனன், தேவாரம், காடு, எதுபத்தியும்... ஒரு எழவும் தெரியாது. தெரியாம... வாய்க்கு வந்தத உளர்றான்.
அதுக்கடுத்து... காட்டுக்குள்ள இருந்து வீரப்பன் சார்பா அர்ஜுனன் வர்றாரு பேச்சுவார்த்தைக்கு.
அர்ஜுனன் யாரு? வீரப்பனுடைய கூடப்பிறந்த தம்பி. அவரும் வீரப்பன் சொன்னதா சில கண்டிஷன்ஸ்கள கொண்டுவர்றாரு. அவரு உடல்நிலை சரியில்லாத நிலைமையில வர்றாரு. அதாவது தொடையில அவருக்கு ஒரு பெரிய கட்டி... தொடவாளன்னு சொல்லுவாங்க, அத குணப்படுத்தணும் + நான் இவங்க இவங்கள யெல்லாம் பாக்கணும்னும் சொல்றாரு.
முதல்ல தொடைவாளய சரிபண்ணலாம்னு சொல்லி, இங்க ஒரு சூழ்ச்சி நடக்குது.
மருத்துவமனை யில அர்ஜுனனுக்கு மயக்க மருந்து குடுக்குறாய்ங்க. முதல்ல ஊசி போட்டுக்க மறுக்குறாரு. அப் புறம் போட வச்சுட் டாய்ங்க. அவரு கையில இருந்த வெப்பன்ஸ யெல்லாம் எடுத்துட்டு தனிமைப்படுத்துறாங்க. அதெல்லாம் தேவாரத் தோட வேலை. தேவா ரம்தான் அதையெல் லாம் பண்ணுறவராச்சே! டக்னு ஐசோலேட் பண்ணி... அர்ஜுனன சிறையில கொண்டுபோய் வச்சுர்றாங்க... -இப்படித்தான் அர்ஜுனன் சிறையில மாட்டுனது. அதுக்கப்புறம் நெறைய நடந்தது... அந்த சமயம் இந்த மிஷன் முடியும்போது நாங்க வீரப்பன்ட்ட ஒரு பேட்டி எடுத்து வெளியிட்டோம். அவ்வளவுதான். இதுக்கு மேல விபரத்துக்குள்ள நான் போகல. ஏன்னா, சும்மாவே இப்ப "போர்க்களம்' தொடர்ல இருந்து ரொம்ப வெளிய வந்து நாலஞ்சு எபிசோடு ஆயிடிச்சு. அதனால லென்த்தியா வெளிய போகவும் விரும்பல... மறுபடியும் நான் உள்ள வரணும்ல.
அதுக்கடுத்து இன்னொரு முக்கிய விஷயம்... என்மேல போடப்பட்ட இன்னொரு பழி.
ஏ.ஜி. நவநீதகிருஷ்ணன் சார் வந்து "நாங்க எந்தக் காலத்துலயும், யார் மேலயும் பழியப் போடல்ல... பழியப் போடல்ல... பழியப் போடல்ல''ன்னு கோர்ட்ல 3 முறை சொன்னா ருல்ல... அதுக்காகத்தான் இந்த விஷயத்தயெல்லாம் சொல்லவேண்டியதாப் போச்சு.
எப்படி... எப்படி பழிய போடுறாய்ங்கன்னு நீங்களே பாருங்க. அவங்க போட்ட இன்னொரு மொரட்டுப் பழி எம்மேல...
அது ஒரு மர்டர் கேஸ்...!
ராஜாமணிங்கிற ஒருத்தன, நான் வீரப்பனுக்கு காட்டிக் கொடுத்ததாவும்... "போலீஸ் அனுப்புன உளவாளி அவன்'னு நான் சொன்னதுனால... வீரப்பன் அவன கொன்னுட்டாருன்னு என்மேல குத்தம் சொன்னாய்ங்க...
அந்த ராஜாமணிங்கிறவன் யாரு?
ராஜாமணி...
கோபாலகண்ணன் (ராஜாமணியின் அம்மாவுக்கு மாமன் முறை) போலீஸ்ல ஒரு வாக்குமூலம் கொடுக்குறான். அதுல...
"கொஞ்சநாளைக்கு முன்னாடி ராஜாமணி யிடம் இருந்து எனக்கு ஒரு லெட்டர் வந்தது. அதில், தான் கோயமுத்தூர் சென்ட்ரல் ஜெயிலில் இருப்பதாகவும், தன்னை வந்து பார்க்கும்படியும் எழுதியிருந்தான். அந்த லெட்டர் எனக்கு சுமார் நாலைந்து வருஷத்துக்கு முன்னாடி வந்தது. நான் வியாபார விஷயமா கோயமுத்தூர் போனவன், அப்படியே ராஜாமணியையும் சென்ட்ரல் ஜெயி லில் சென்று பார்த்தேன். அவன்கூட சத்தியமங்கலத் தைச் சேர்ந்த சந்தனக் கட்டை கேசில் சிக்கிய ஒரு பையனும் இருந்தான். ராஜாமணி என்னிடம் ஒரு திருட்டுக் கேசில், தான் மேட்டுப்பாளையத்தில் சிக்கி தற்போது ஜெயிலில் இருப்பதாகச் சொன்னான்.
அப்போது அவனிடம், அவனுடைய அம்மா இறந்துபோன விஷயத்தைச் சொன்னேன். அவன், சிறையில் இருந்துட்டு இனி எப்படி ஊருக்கு வந்து எல்லோர் மூஞ்சியிலும் விழிப்பது. அதனால் ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆனதும் இப்படியே சத்தியமங்கலம் பக்கம் அந்தப் பையனுடன் சென்று பிழைத்துக்கொள்வதாகச் சொன்னான்.
அதற்கு நான், "அடே மணி அப்படியெல் லாம் பண்ணாதே. ரிலீஸ் ஆனதும் ஊருக்கே வந்துடு, எப்படியோ பொழைச்சுக்கலாம்' என்று புத்திமதி சொல்லி வந்தேன்.
அதற்குப் பின்னாடி ஒருதடவை திரும்பவும் கோயமுத்தூர் போனப்ப ராஜாமணியைப் போய் பார்த்து வரலாம் என்று சென்ட்ரல் ஜெயில் போனேன். அப்போது ராஜாமணியும் இல்லை. அவனுடன் கூட இருந்த சத்தியமங்கலத்துப் பையனும் இல்லை. ஒருவேளை ராஜாமணி அந்தப் பையனுடன் சேர்ந்துகொண்டு சத்தியமங்கலத்துப் பக்கம்தான் போயிருக்கக்கூடும் என்று நினைத்து இந்த விபரத்தை அவன் அக்காள் பஞ்சவர்ணத் திடம் சொன்னேன்.
மேற்படி ராஜாமணியின் விபரம் ஒன்றும் தெரியாததாலும், செத்துப் போயிட்டானா அல்லது உயிருடன் இருக்கிறானா என்ற விபரம் தெரிந்துகொள்ள எதற்கும் போலீசில் ஒரு ரிப்போர்ட் கொடுத்துடு என்று சொன்னேன்...''
மேப்படி விபரத்த கோபாலகண்ணன் போலீஸ்ட்ட சொல்றான். அந்த விபரத்தத்தான் உங்ககிட்ட சொன்னேன். இதுல எங்க நக்கீரன்கோபால் வர்றான்? எனக்கும் அந்த ராஜாமணிக்கும் ஒரு வெங்காய சம்பந்தமும் இல்ல..!
(புழுதி பறக்கும்)