(123) வீரப்பன் கேட்ட மன்னிப்பு!
ஆசிரியருக்கு வீரப்பன் பேசி அனுப்பிய ஆடியோ கேசட்டின் கடைசிப் பகுதியில...
நக்கீரன் ஆசிரியர் கோபால் அய்யாவுக்கு வணக்கம். நான்தான் சந்தனக் கடத்தல் வீரப்பன் எழுதுறேன். மொதல்ல உங்ககிட்டேயும், நம்ம முதல்வர் ஐயா கலைஞர்கிட்டேயும் ஒரு மன்னிப்பு கேட்டுக்குறேன். எதுக்கு மன்னிப்பு கேட்கிறேன்னா, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நம்ம காட்ல சந்திச்சப்ப இனிமே யாரையும் சுடமாட்டேன்னு உங்ககிட்டே சத்தியம் பண்ணிக் கொடுத்தேன். அதேமாதிரி வெகுநாளா நான் யாரையும் சுடாம இருந்தேன். ஆனா ஐ.ஜி. காளிமுத்து என்னை புடிக்கிற படைக்கு தலைவர் ஆனதும் ஆள்காட்டிங்க எக்கச்சக்கமா காட்டுக்குள்ளே வந்துட்டாங்க. நான் இருக்கிற இடம் பற்றித் தகவல் கொடுக்கிறாங்க. இருந்தாலும் ஏதோ நமக்கு முதல்வர் கலைஞர் ஐயா மன்னிப்பு கொடுத்து நம்மளையும் நாட்ல வந்து மக்களோடு மக்களா வாழ்றதுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பார்னு ரொம்ப நம்பியிருந்தேன்.
...ஆள்காட்டிங்க வேற நான் சுடமாட்டேன்ற தைரியத் துல சும்மா சகஜமா வந்துட்டுப் போறானுங்க. அதனால நான் பழைய வீரப்பனா மாறிட்டேன். அதாவது ஐ.ஜி. காளிமுத்து வின் ஆள்காட்டிங்க மூணு பேரை சுட்டுக் கொன்னுட்டேன்.
...இனிமேலும் நான் பேசாம இருந்தா நான் சாவறத தவிர வேற வழியே இல்லை. நான் உன்கிட்டே சத்தியம் பண்ணப்பகூட என் உயிருக்கு ஆபத்து வராத வரைக்கும் நான் துப்பாக்கியை நீட்ட மாட்டேன்னு... அப்படி ஒருக்கால் சுட்டே ஆகவேண்டி வந்தால் எம்மேல வருத்தப் படாதீங்கன்னு சொன்னேன்.
... இத்தனை நாளா மனுஷனா இருந்த வீரப்பன் இப்ப பழையபடி காட்டுல புலியா திரியறேன்.
...கடைசியா நா உன்னுட்டே கேக்றதெல்லாம் நா பண்ண சத்தியத்த திருப்பிக் கொடுத்துடு. இனிமே வீரப்பன் எதுக்கும் கட்டுப்படமாட்டான். வீரப்பனுடைய சுயரூபம் என்னாங்கிறத நான் காட்டுறேன். அவ்வளவுதான் விஷயம். நன்றி! வணக்கம்!
அந்த ஆடியோ கேசட்ல வீரப்பன், பேசுனதக் கேட்டவுடனே ஆடிப்போயிட் டேன்... ஆடி. அதுல வீரப்பன் கொஞ்சம் கோபமா பேசியிருப்பாப்டி. அப்போ ஐ.ஜி. காளிமுத்துன்னு ஒருத்தர்தான் தமிழ்நாடு எஸ்.டி.எஃப். தலைவரா இருந்தாரு.
ஏன் கேக்குறீங்க? நம்ம ஐ.ஜி. காளிமுத்து இருக்காரே... எடக்குமடக்கா நமக்கு எதிரா நெறைய பண்ணிப்புட்டாரு. நக்கீரன் இல்லாம வீரப்பன் விஷயத்துல சாதிச்சி, கலைஞர்ட்ட நல்லபேர் எடுத்துரணும்னு நினைச்சு, சேரக்கூடாதவன் கூடல்லாம் கூட்டு வச்சு... அது வேற யாருமில்ல, மோகன் நிவாஸுங்கிற எஸ்.டி.எஃப். எஸ்.ஐ. இந்த ஆளு, வீரர் தேவாரத்தோட எடுபுடி. இந்த ரெண்டுபேரு, அதோட எஸ்.பி. கோபாலகிருஷ்ணன் (ஆடு திருடி). மேக்கொண்டு ஒரு நாலஞ்சு பேரு. இவிய்ங்க இல்லைன்னா வீரப்பனே கிடையாது. அவரு பாட்டுக்கு தானுண்டு, தன் வேல உண்டுன்னு இருந்துருப்பாப்ல.
வீரப்பன தேடுறேன்... தேடுறேன்னு இவனுக போய் காட்டுல புகுந்து தேடுற வேலையத் தவிர மத்த எல்லாத்தையும் மேய்ஞ்சு... கிட்டத்தட்ட 1000, 2000 ஆடுகளுக்கு மேல காணாமப் போயிருக்குமாம். பாவம்... இதனால அந்த ஆடு மேய்க்கிறவய்ங்க என்ன பாடுபட்டிருப்பாய்ங்க. எஸ்.டி.எஃப்.ல போய் கேக்க முடியாமயும், ஆட்டுக்காரன்ட்ட பதில் சொல்ல முடியாமயும் ரத்தக்கண்ணீர் வடிச்சு, பட்டிய மூடாம அலங்காட்டுலேயே கிடந்து செத்தவங்க நெறைய பேரு. இதுல ஒண்ணு, ரெண்டு பேரு போய் நம்ம வீரப்பன்ட்ட சேதி சொல்லவும், வீரப்பன்தான் அதுக்கு முற்றுப் புள்ளி வைக்க... இவனுகள பகைக்க வேண்டியதாப் போச்சு.
அது இல்லாம, பொம்பளப் புள்ளைங்கள பெத்த தாயி, கூடப்பொறந்த பொறப்பு மாதிரின்னு பாக்காம... கடிச்சுக் குதறி நிறையபேரு சோலியவே முடிச்சுப்புட்டாய்ங்க படுபாவிங்க.
அதோட எதிர்வினைதான் வீரப்பனின் வெறியாட்டம்.
நானும் பல தடவை சொல்லிச்.... சொல்லி... சொல்லிட்டாலும்கூட இது ரொம்ப முக்கியமான கட்டம்ங்கிறதுனால இந்த இடத்துல அதுவும் வயிறெரிஞ்சு சொல்றேன்.
எத்தன எழவு...? எத்தன கற்பழிப்பு...? எத்தன கோடி செலவு...? யப்பப்பா...!
அந்த காளிமுத்து ஐ.ஜி. பண்ணுன வேலை இருக்கே...? உருப்படாத 4 பேர உள்ள அனுப்பி, அவங்க கையில நேவிகேட்டரை குடுத்துவிட... (நேவிகேட்டருங்கிறது திசையையும், இடத்தை யும் காட்டுற கருவி) அத, இந்த பத்திரிகை போட்டோகிராபர்ட்ட குடுத்து விட... வீரப்பன் அதை கண்டுபிடிச்சு நார் நாரா பிச்சு எடுத்துட்டாரு. இது தெரிஞ்சதும் திருடனுக்கு தேள் கொட்டுன கதையாயிருச்சு நம்ம அண்ணன் காளிமுத்து ஐ.ஜி. சாருக்கு?
எனக்கு இந்த விஷயம் எதுவும் தெரியாது.
அவிய்ங்களுக்கு வீரப்பன் மேல இருந்த கோபத்துல... உடனே என்ன பண்ணிட்டாய்ங்க? நான்தான், வீரப்பன்ட்ட சொல்லி காட்டிக் குடுத் தேன்னு எம்மேல பழிய போட்டு 2 கடத்தல் வழக்க போட்டுட்டாய்ங்க படுபாவிப் பசங்க.
நம்ம அட்வகேட் ஜெனரல் அண்ணன் நவநீதகிருஷ்ணன் சொன்னாருல்ல... "நாங்க எந்தப் பழியையும் யார் மேலயும் போட்டதே இல்லை. எங்க புரட்டுத் தலைவியும் ரொம்ப... ரொம்ப நல்லவிய்ங்க''ன்னாருல்ல... அதுல இது தனி. இது அவங்க அக்கவுண்ட்ல வராது.
இது கலைஞர் ஆட்சியில நம்ம மேல போட்ட கடத்தல் வழக்கு. இதுக்குப் பின்னாடி நம்ம அண்ணன் ஐ.ஜி. காளிமுத்து இருந்தாரு.
எல்லா எடுவட்ட நாசமாப்போற பொறுக்கி களும் சொல்லுதுல்ல...! இப்ப கூட ஒருத்தன், ஒரு நாறவாயன்... குல்லாக்காரன் ஒருத்தன். எங்க இருந்து வந்தான்னே தெரியல. அவன் சொல்றான்... "தி.மு.க. இவரை ஒண்ணும் செய்யாது'ன்னு.
"அடேய் மூதேவி... பொறம்போக்கு... இந்த இரண்டு கடத்தல் வழக்கும் தி.மு.க. பீரியடுல, அதாவது 1998-ஆம் வருஷத்துல என்மேல போட்டது. வேணும்னா கோபி கோர்ட்ல போய் பாத்துக்க. நீதான் பெரிய புலியாச்சே... பாரு, இல்லைன்னா உனக்கு ஒரு நன்றி மறந்த பிச்சைக்காரன் ஒருத்தன தெரியும்ல... அந்த சொரிநாய்ட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கோ. வரலாறு தெரியாத நாயே... நாயே...! வாய் இருக்குன்னு இத்தன பொய்யா பேசுவே. உன் வாயில புத்து வைக்க.''
இப்படித்தான் காளிமுத்துவும் குண்டக்க... மண்டக்க... ஏதேதோ பண்ணி -ஒழுங்கா போயிட் டிருந்த சரண்டர் விஷயத்த உழப்பு... உழப்பு...ன்னு உழப்பிவிட்டுட்டாரு சண்டாள ஐ.ஜி.
சரண்டர் பேச்சுவார்த்தையில அப்படி என்ன நடந்துச்சுன்னு கேப்பீங்க?
1996-ல இரண்டு மாநிலத்துக்கும் சரண்டர் விஷயமா வீரப்பன் கோரிக்கை வச்சாரு. அப்ப கர்நாடகா சி.எம். தேவகௌடா. இங்க நம்ம அண்ணன் கலைஞர் இருந்தாரு.
வீரப்பன் சார்பா நானும் -இரண்டு மாநிலம் சார்பா தமிழ்நாட்டுக்கு நம்ம முன் னாள் டி.ஜி.பி. குமாரசாமி + டி.ஜி.பி. அலெக் ஸாண்டரும், கர்நாடகா சார்பில் டி.ஜி.பி. கணபதிங்கிறவரும் மூணு முறை பேச்சு வார்த்தை நடத்துனாங்க. எல்லாமே ஸ்டார் ஓட்டல்லதான். கடைசியா பேச்சுவார்த்த நடந்தது நுங்கம்பாக்கம் தாஜ் ஹோட்டல்ல.
நல்லாத்தான் போச்சு. ஒவ்வொரு முறையும் சரண்டர் பேச்சுவார்த்தை நடந்ததும், நடந்த விஷயங்கள வீரப்பன்கிட்ட தம்பி சுப்பு மூலமா தெரிவிச்சுருவோம். எந்தப் படுபாவி கண்ணு வச்சானோ... இல்ல, இது நடந்தா அந்த நாய்களுக்கு சோலி நடக்காதுன்னு தெரிஞ்சு குழப்பி விட்டுட்டாய்ங்க.
அதுக்கேத்த மாதிரி, நம்ம தமிழ்நாடு எஸ்.டி.எஃப்.ல இருக்கிற, முன்ன சொன்னேன் பாருங்க... அந்த மோகன்நிவாஸ் ஒரு சாதாரண எஸ்.ஐ. பேருக்குத்தான் எஸ்.ஐ., இந்த ஆளுதான் வால்டர் இருந்தப்ப... எல்லா எடுபுடி வேலையும். அதேபோல இப்ப காளிமுத்துவுக்கும் மேப்படி மோகன்நிவாஸ்தான். இவனப் பத்தி முன்னமே நெறையச் சொல்லியிருக்கேன்... இப்பவும் சொல்றேன். அந்த மோகன்நிவாஸ் ரொம்ப விவரமானவன்.
எதுலங்கிறீங்க?
வீரப்பன எங்க அடிச்சா கோவப்படு வாப்டின்னு நல்லாத் தெரியும். அவன் செஞ்ச வேலைதான்... இந்த ராஜாமணிங்கிற ஒரு எரும மாட்டுப்பயல, கோவை ஜெயில்ல யார் மூல மாவோ சந்திச்சு, அவனுக்கு ஆசையக் காட்டி காட்டுக்குள்ள போலீஸ் உளவாளியா அனுப்புறான்.
இவனுக்குப் பின்னாடி தேவாரமும் இருக்கார். இந்த ராஜாமணிய உள்ள அனுப்புனது தெரிஞ்சு கோவமாயிட்டாரு வீரப்பன். அதனாலதான் அந்த ஆடியோ கேஸட்டுல பொளந்து கட்டிட்டாரு வீரப்பன்.
நமக்கு முன்னாடி ஒரு சத்தியம் பண்ணிக் குடுத்துருந்தாருன்னு சொன்னேன்ல... அப்போ நாம என்ன சொன்னோம். சரண்டர் பத்தி ரெண்டு மாநிலத்துலயும் நான் பேசுறேன். சரண்டர் பேசிக்கிட்டிருக்கும்போது நீங்கபாட்டுக்கு எடக்கு மடக்கா யாரையாவது கடத்திட்டீங்க அல்லது கொலை, கிலை... பண்ணிட்டீங்கன்னா... அதனால வேற சிக்கல் வந்துரும்ணே. அதனால நீங்க ஒரு உதவி செய்யணும்னு கேட்டேன்.
"என்ன உதவி?'ன்னு கேட்டாரு வீரப்பன்.
நான் மெல்ல வார்த்தைய விழுங்கி...
"இல்லண்ணே... ஆள கடத்துறது, கொலை பண்றது... இது மாதிரி விஷயங்கள நீங்க நிப்பாட்டி வச்சிருந்தாதான், நாங்க பேசும்போது சரியா இருக்கும்'' அப்படின்னு சொல்லிட்டு, பின்னாடி நகர்ந்து உக்கார்ந்தேன்.
ஏன்னா... கோவப்பட்டு ஏதாவது எடக்கு ஆயிருச்சுன்னா... நம்ம கத கந்தல்...!
(புழுதி பறக்கும்)