(120) வீரப்பன் ஏகபத்தினி விரதர்!
"உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி விசாரிக்கவும்பட்டார். பணயக் கைதிகள், அவர் வீரப்பனுக்கு பணம் எடுத்து வந்ததாக சான்றளித்திருக்கின்றனர். இந்த வழக்கு விசாரணையில் இருக்கிறது''
பணயக் கைதிகள்ல ராஜ்குமார் சார் இருந்தார். அதுக்கப்புறமா மிச்சம் இருந்தது நாங்க மூணுபேர். அதுல ராஜ்குமார் குடும்பத்துல உள்ள அவரோட மருமகன் பணயக் கைதியா இருந்தாரு. அவரோட தம்பி மகன் நாகேஷ்னு ஒருத்தரு. அவங்க யாருமே பணயக் கைதிகளா இருக்கும் போது, நாங்க பணம் கொண்டுவந்ததா சொல்லல.
நாகப்பான்னு ஒருத்தன். அவனும் பணயக் கைதிகள்ல ஒரு ஆள்தான். அவன் உதவி இயக்குநரா இருந்தான். சில ஏவல் வேலைகள்லாம் செய்துக்கிட்டிருந்தான். அந்தப் படவாதான் இடையில தப்பிச்சு வந்தவன். வெளிய வந்தவுடனே கர்நாடகா ஐகோர்ட்ல ஒரு அபிடவிட் குடுக்குறான். எந்த டிரான்சாக்ஷனும் நடக்கலன்னு சொல்லித்தான் அந்த அபிடவிட்டையே அவன் குடுத்தான்.
தப்பிச்சு வந்த நாகப்பாவ, ராஜ்குமார் குடும்பத்துல இருக்கிற சம்பந்தவப்பட்டவங்க கொஞ்சம்பேரு, இவன் ஏதோ காட்டுல கிருத்துருவம் பண்ணிட்டுத்தான் தப்பிச்சு வந்திருப்பான். இவன் தப்பிச்சு வந்ததால வீரப்பன் குரூப் கோபமாகி நம்ம "தேவுடா' அதான் ராஜ்குமார் சாரை அவுங்க கொடுமையோ, சித்ரவதையோ பண்ணினாங்கன்னா.... அதுக்கு இவன்தான காரணம். ராஜ்குமார் சார் உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்துருமோன்னு ராஜ்குமார் வீட்டுக் காரங்க நாகப்பாவை நையப் புடைச்சிட்டாங்கன்னு சொன்னாங்க. அந்த நாகப்பா தப்பிச்சு வந்தபிறகு நான் அந்தாளையெல்லாம் பாக்கல. மேற்படி நாகப்பாவ அடிச்சது, நையப்புடைச்சது... இதெல்லாம் எனக்கு பிறகுதான் தெரியவந்துச்சு.
ஒரு உசுர காப்பாத்த அவ்வளவு கஷ்டப் பட்டோம். ஆனா நன்றியே இல்லாதவன்ங் கிறதுக்கு நாகப்பாங்கிறவனும் ஒரு உதாரணம்.
நாம நன்றிய எதிர்பார்த்து எதையும் செய்யல. ஆனாலும் சில இடங்கள்ல அத கோடிட்டுக் காட்டணும். ஏன்னா, நம்ம கூட இருந்த ஒரு பன்றி நன்றியில்லாம திரியும்போது... (அதான் நம்ம கூட இருந்த ஐந்தாம்படை) இவனச் சொல்லி என்ன ஆகப்போகுது.
அடுத்த பாயின்ட்...
"அந்தியூர் காவல்நிலையத்தில் விசாரிக்கப் படும், போலீசுக்குத் தகவல் தருபவரான கந்தவேல் கடத்தல் மற்றும் கொலை வழக்கில், கோபாலின் குழப்பமான பங்கும் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கிறது''
நிறுவப்பட்டிருக்காம்... எந்த விளக்குமாறும் நிறுவப்படல, கிறுவப்படல. என்னடா பங்கு... டவுசர் பங்கு? வீரப்பன்ங்கிறவரு ஒரு சாம்ராஜ்யம் உருவாக்கி வச்சிருந்தாரு. அவரப் பத்தி உங்களுக்கு என்னடா தெரியும் வென்றுகளா...? என்னங்கடா ஒங்களுக்கு குழப்பமான பங்கு?
வீரப்பன் காடுங்கிறது 16,000 சதுர கிலோ மீட்டர் அலங்காடு. அதிலுள்ள மரங்களும், செடி களும், விலங்குகளும் வீரப்பனுக்கு அண்ணன்-தம்பி உறவு. அந்தக் காடே வீரப்பனுக்கு அடிபணியும். வீரப்ப னும் சும்மா சொல்லக்கூடாது... தன் குடும்பமாய் நேசித்து வந்தார். காடு அவருக்கு கால்வந்த கலை! அதேபோல அவரோட தளபதிகளுக்கு ஆபத்துன்னா, பண்ணுனவன் கதி அதோகதிதான். தளபதிகளும் பொண்ணு... கின்னுன்னு தப்பாப் போனா, அவன் கதையும் முடிஞ்சது. பெண்கள் விஷயத்துல வீரப்பன் ஏகபத்தினி விரதர். தன்னோட உறவுகளுக்கு இடையூறா எவனேனும் குறுக்க வந்தா கொண்டேபுடுவார். அப்படி குறுக்க வந்தவனுகள குத்தவைக்கச் சொல்லி சுட்டுப் போட்டுருவார். நாமளும் அதுல குறுக்க போனோம்னா... நமக்கும் அதே ஈடுதான். நம்ம போய் அதுல மூக்க நுழைக்க முடியாது.
தன்னக் காட்டிக் குடுக்குறவங்கள வீரப்பன் கொன்னுருவாருங்கிறது... 80-கள்ல இருந்தே எல்லாருக்குமே தெரியும். முக்கியமா போலீஸுக்கும், காட்டிலாகா அதிகாரிகளுக்கும் தெரியும்.
அப்படி வீரப்பன் கூடவே அவ ரோட தளபதியில ஒருத்தரா இருந்த பேபி வீரப்பன்ங்கிற ஒருத்தர, மோகன்நிவாஸ் என்கிற போலீஸ் ஏற்பாட்டுல சுட்டுக் கொன்னதா செய்தி. அந்த செய்தி வீரப்பனுக்குத் தெரிஞ்சு, வீரப்பன் என்ன பண்ணியிருக்காரு? யாரு காட் டிக் குடுத்து, தன்னுடைய தோழன, தன்னுடைய தளபதிய எவன் கொன்னானோ... அவன தூக்கிட்டு வராங்க, தூக்கிட்டு வந்து பஞ்சாயத்துல கையக் கட்டி உக்கார வச்சு, விசாரிச்சு கொன்னுருக்காரு. அதுல நாம என்ன செய்ய? நாங்க எதுல உள்ள வந்தோம்?
ரொம்ப கொடூரமான தண்டனை தான். நக்கீரன் அத எந்த இடத்துலயும் நியாயப்படுத்தவே இல்ல. அவங்க கோர்ட்ல தண்டன குடுத்து, அத அவங்க கொண்டுபோன கேமராவுலயே படமா எடுத்து, அதையும் அப்படியே நக்கீரனுக்கு குடுத்து வுட்டுட்டாங்க. குடுத்துவுட்ட ஃபிலிம கழுவிப் பார்த்த பிறகுதான்... அது எவ்வளவு பயங்கரமான விஷயம்ங்கிறதே எங்களுக்குத் தெரியுது. உடனே சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள்ட்ட அத ஒப்படைச்சிட்டு, "இப்படியெல்லாம் நடந்திருக்கு... இப்படி வந்திருக்கு, உங்களுக்கு கடிதம் குடுத்து அனுப்பி யிருக்காங்க'ன்னு எல்லாத்தையும் சொல்லி ஒப்படைச்சிட்டு...
"இப்படியெல்லாம் நடந்திருக்கு பாருங்க... வீரப்பன் காட்டுல, வீரப்பன் ஒரு கோர்ட் நடத்துறாரு. அந்தக் கோர்ட்ல இப்படியெல்லாம் தண்டனை குடுத்துருக்காய்ங்க' அப்படிங்கிறத ஒரு செய்தியா நாம பதிவு பண்ணுனோம்.
ஆனா... இவங்க என்ன நோட் போட்டிருக் காங்க அந்த வழக்குல?
"கோபாலின் குழப்பமான பங்கும் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கிறது''
எங்க? எங்கய்யா நிறுவப்பட்டிருக்கு? அதென்ன பில்லரா (தூண்) நிறுவுறதுக்கு...?
இது நடந்தது எப்பன்னா... 1998...
2002. ஜெ. வீட்டுக்கு அனுப்புன ஃபேக்ஸ்ல அதப்பத்தி எழுதியிருக்காய்ங்க. அப்படின்னா... நிறுவப்பட்டது எங்க?
என்மேல வழக்கு. 2002-ல நான் தலைமறைவா இருக்கும்போது போட்டிருக்காய்ங்க. அது நான் தலைமறைவா இருக்கும்போது போட்டதா, இல்ல... பொடாவுல கைதாகி சிறையில இருந்தப்ப போட்டதான்னு சரியா ஞாபகம் இல்ல.
ஆனா... அந்த அம்மாவ நமக்கு எதிரா கூர் தீட்டுறதுக்காகவும், சந்தோஷப்படுத்துறதுக்காகவும் என்னென்ன கம்பி கட்ற கதையெல்லாம் விட்டுருக் காங்கங்கிறதுக்காக உங்கள்ட்ட சொல்றேன்.
அந்த பாயின்ட்லயே...
"ஆயுதச் சட்டம் கந்தவேலை சித்ரவதை செய்து, கொலை செய்ததன் பல்வேறு நிலைகளைக் காட்டும் போட்டோ நெகட்டிவ்கள், நக்கீரன் கோபாலிடமிருந்து மீட்கப்பட வேண்டும். இந்த வழக்கில் கோபால் இனிதான் கைது செய்யப்பட வேண்டும்''
இங்கேயே எழுதிட்டாங்க. "இனிமேல்தான் கைது செய்யணுமாம். அதுக்குள்ள வீடு, ஆபீஸ ரெய்டு பண்ணணும்... அந்த நெகடிவ் எல்லாத்தையும் எடுக்கணும்'னு.
நெகட்டிவ் எல்லாத்தையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்ட்ட நாங்க குடுத்துட்டு, காப்பி எடுத்துதான் வெளியிட்டோம். எல்லாமே ஓபனாத்தான் நடந்துச்சு. இதுல சீக்ரெட்டும் கிடையாது, ஒரு வெங்காயமும் கிடையாது.
"வீரப்பன், காட்டுல தன் கூட இருக்கிறவங்கள காட்டிக் குடுத்து, கொன்னா... நாங்க இப்படித்தான் கொல்லுவோம் அப்படிங்கிறத அவரு பண்ணியிருக்காரு'ங்கிறத நாம மக்கள்ட்ட கொண்டுபோய் சேர்த்தோம், அவ்வளவுதான்!
இத நீங்க செய்யக்கூடாதுன்னு யாரும் சொல்ல முடியாதுல்ல... யாரு சொல்றது?
வீரப்பன் காட்டுல என்ன நடந்ததுன்னு நக்கீரன் சொல்லித்தானே எல்லாமே உங்களுக்கும் சரி... மக்களுக்கும் சரி.. ஏன் இந்த உலகத்துக்குமே தெரியும்.
போலீஸ்ட்ட வீரப்பன் பத்துன எந்த செய்தியையாவது, யாராவது போய் கேட்டுப்பாருங்க. அவங்க சொல்ற எல்லா தக வலும், நக்கீரன் கண்டுபுடிச்சுக் குடுத்ததாத்தான் இருக்குமே தவிர... வீராப்புக்காக "நாங்க தேடிப்போனோம். அவன் ஓடிப்போயிட்டான். வீரப்பன் ஒரு மாயாவி... கொலைகாரன்...'' அப்படி, இப்படின்னு கதை அளந்துவிடுவாய்ங்க. அத யாரும் நம்பத் தயாரா இல்ல.
மேப்படி பாயிண்ட்ல முக்கியமான விஷயம்... "நக்கீரன் கோபாலிடமிருந்து மீட்கப்பட வேண்டும். இந்த வழக்கில் கோபால் இனிதான் கைது செய்யப்பட வேண்டும்''
ஆக... நக்கீரன் கோபாலிடமிருந்து மீட்கணும்னா, ஒண்ணு ரெய்டு... அதாவது, அவன் வீடு, அவன் தம்பிகள் வீடு, அவன் அலுவலகம், அப்புறம் எங்க எங்கெல்லாம் இவிய்ங்களுக்குப் புடிக்காதவங்க இருக்காங்களோ அங்கெல்லாம் ரெய்டுங்கிற பேர்ல புகுந்து விளையாடுறது... அத சாக்கா வச்சு என்னைத் தூக்கி காட்டுல வச்சு புடிச்சதா புருடா விட்டுட்டு ஆயுதப் புதையலையும் எடுத்து, வீரப்பனுக்கு இவன் கூட்டாளின்னு எஸ்டாபிளிஷ் பண்ணி நம்மள நாறடிக்கிறது. இந்த ரத்த சுத்தமான திட்டத்துக்கு பிள்ளையார் சுழிதான் இந்த பாயின்ட்.
கடைசியா Cr.No. 1500\98.
அதாவது... கோயம்புத்தூர்ல, பக்தவத்சலம்னு ஒருத்தரு கொடூரக் கொலை. ஆயுதச் சட்டம். அதுக்கு அவங்க சொல்றாங்க...
"ஆடியோ கேசட், கடிதம் நக்கீரன் கோபாலிடம் இருப்பதாக பதிவுசெய்யப் பட்டுள்ளது. அவையும் கைப்பற்றவும், மீட்கவும் படவேண்டும்...''னு போட்டுருந்தாய்ங்க.
(புழுதி பறக்கும்)