(116) நமக்கு கிடைச்ச முதல் வெற்றி!
நக்கீரன் ஆபீஸ்ல நம்ம தம்பி லெனின்ட்டயும், ஐயா பெரியய்யாட்டயும், தமிழ்நாடு பூரா இருக்கிற நம்ம நக்கீரன் நிருபர் தம்பிகள்ட்ட எத்தன எஃப்.ஐ.ஆர்., எந்தெந்த ஸ்டேஷன்னு ஒண்ணுவிடாம செக்பண்ணி, அதோட காப்பி எடுத்து ஆபீஸுக்கு அனுப்பும்படி தகவல் கொடுக்கச் சொன்னேன். பரபரப்பாக அவங்க எல்லார்ட்டயும் பேசியிருக்காங்க. இன்னிக்கு காலையில மட்டும் 24 எஃப்.ஐ.ஆர் காப்பி வந்ததா சிவா எனக்கு தகவல் சொன்னார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் யூசுப்இக்பால் அவர்கள் விசாரிக்கிற ரிட் மனுவும் இன்னைக்கு வருது. என்ன நடக்கப்போகுதோ...? ஆட்சியாளருங்க என்ன குண்ட தூக்கிப் போடப்போறாய்ங்களோ...? ஒரே பதட்டம்!
இதுக்கிடையில ஜெயலலிதா கையெழுத் தோட என்மேல கோர்ட் அவமதிப்பு வழக்கு ஒண்ணு தாக்கல் ஆகியிருக்குன்னு "தினத் தந்தி'யில கொட்டை எழுத்துல செய்தி போட்டுருந்தாங்க.
போச்சுடா... எத்தன...?
வெறி கொஞ்சம்கூட ஜெயலலிதாவுக்கு அடங்கலன்னு நல்லாவே தெரியுது.
அப்ப... கோர்ட்ல என்ன நடக்கப் போகுதோன்னு நெனைச்சு ஹார்ட் பீட் எகிற ஆரம்பிச்சிருச்சு.
பெருமாள் சார்கிட்ட விஷயத்த போன்ல சொன்னேன்.
அவரு, "அண்ணாச்சி, கோர்ட்ல எங்க பாத்தாலும் நக்கீரனப் பத்தித்தான் பேச்சு. நக்கீரனுக்கு, ஜெயலலிதா ஒரு முடிவு கட்டிட்டுத் தான் மறுவேலை பாப்பாங்கன்னு என் காதுபடவே பேசுறாங்க. ஆனா சீஃப் ஜஸ்டீஸும், இன்னும் கொஞ்ச ஜட்ஜுங்களும் சரியா இருப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கையிருக்கு... பாப்போம்''ன்னாரு.
இன்னைக்கி 3, 4 விஷயம் கோர்ட்ல வருது.
1. நாம போட்ட ரிட் மனு, தலைமை நீதிபதிகிட்ட வருது
2. நாம கேட்ட முன்ஜாமீன் மனு நீதியரசர் சுந்தரேசன்ட்ட வருது
3. ஜெயலலிதா நம்ம பேருல போட்ட கோர்ட் அவமதிப்பு வழக்கு வருது...
இதுக்கிடையில தம்பி பிரகாஷ் மனைவி, சகோதரி கல்யாணி என் லைனுக்கு வந்தார். (எப்படியோ என் போன் நம்பர புடிச்சு...)
"அண்ணா வீடு பூரா போலீஸ் வந்துட்டாங்க. வீட்டுல பீரோவுல இருக்குற சாமான் எல்லாத்தையும் உருட்டுறாங்க. பெட்டி, படுக்கை எல்லாத்தையும் புரட்டிப்போட்டு ஏதோ தேடுறாங்கண்ணே. நீங்க இங்க வந்தீங்களான்னு கேட்டு அதட்டுறாங்க. உன் புருஷன் எங்க போனான்னு மரியாதை இல்லாம பேசு றாங்கண்ணா. கஞ்சா வச்சு வியாபாரம் பண்ணுறி யான்னு கேட்டு அதட்டுறாங்கண்ணே... எனக்குப் பயமா இருக்குது அண்ணே''ன்னு தேம்பித் தேம்பி அழுதுக்கிட்டே சொல்லிக்கிட்டிருக்கும்போதே, "அண்ணா... அண்ணா... வர்றாங்க... கட் பண்றேன்''னு லைன கட் பண்ணிட்டாங்க.
அடேய்... அடேய்... நாசமாப்போறவிய்ங் களா... இப்படியாடா அநியாயம் பண்ணுவீங்க. ஆம்பள இல்லாத வீட்டுல எத்தன அநியாயம் பண்ணியிருக்காய்ங்கன்னு உங்களுக்குத் தெரியாது. ஒரு பொம்பளப்புள்ள இருக்குற வீட்டுல போய் "கஞ்சா வச்சிருக்கியா?'ன்னு பொட்டத்தனமா கேட்டு மிரட்டுனா... அந்தப் புள்ள எங்க போகும்? என்ன நிலைமை... யோசிச்சுப் பாருங்க. கொஞ்ச நஞ்ச அநியாயமா பண்ணுனாய்ங்க.
"கஞ்சா விக்கிறியான்னு கேட்டாய்ங்க'ன்னதும், எனக்கு தூக்கிவாரிப் போட்டுருச்சு. ஏன்டா உங்க வீட்டுல இப்படி வந்து, உங்க பொண்டாட்டிமார் கிட்ட "கஞ்சா விக்கிறியா?'ன்னு எவனாவது கேட்டா... கேட்டவன உசுரோட விட்டுரு வீங்களாடா... எருமமாடுகளா?
இப்பவும் வயிறெரிஞ்சு சொல்றேன். அப்ப, அந்த வீட்டுக்கு எவனெல்லாம் போய் இந்த கஞ்சா, கிஞ்சான்னு கேட்டு மிரட்டுனாய்ங்களோ... அவனுக எல்லாருமே புத்து வந்து செத்துருவாய்ங்க. அவனுக குலம் எல்லாம் நாசமாப் போகும். என்னை, என் குடும்பத்த நோகடிச்சீங்க சரி... எங்ககூடவே இருக்கிறவங்க வீட்டுலயும் போய் இத்தன அக்கிரமம் செஞ்சா... மேல இருக்கிற அல்லி ராணிதான் இப்படிச் சொல்லுதுனா... உங்க ளுக்கு எங்க போச்சு புத்திங்கிறேன். நாளப்பின்ன உன்வீட்டுக்கும் இதே எழவு வராதுன்னு என்ன நிச்சயம்?னு நான்பாட்டுக்கு புலம்பிக்கிட்டேயிருந் தேன்... எனக்குப் படபடன்னு அடிக்க ஆரம்பிச்சிருச்சு.
"என்னடா சனியன்... இன்னும் ஓய்ஞ்சபாடக் காணோம். அங்க சுத்தி, இங்க சுத்தி... தம்பிக வீட்டுலயும் பதம் பார்க்குறாய்ங்களே'ன்னு தலையில கைய வச்சுக்கிட்டு... நான் நிக்குற இடத்துக்கு பக்கத்துல உள்ள மரத்துக்கு கீழயிருந்த திண்டுல அப்படியே குத்தவச்சு உக்காந்துட்டேன்.
ஆம்பள இல்லாத வீட்டுல போய் மிரட்டி கஞ்சா, பூதம்னு மிரட்டுனது... என்ன ரொம்ப, ரொம்பப் பாதிச்சுருச்சு.
நேரம் ஆக... ஆக... ஒரே பதட்டம்... இன்னைக்கு என்ன ஆகப்போகுதோன்னு.
காலைல மணி 11:40 இருக்கும்.. சிவா, போன்ல....
"என்ன தம்பி...? எந்த கோர்ட்ல...?''
"சீஃப் கோர்ட்லதான்ணே...''
"சொல்லுங்க..''
"பெருமாள் சார் எடுத்தவுடனே, "இந்த கோர்ட் இல்லைன்னா நக்கீரன்கோபால உயிரோடவே பார்த்திருக்க முடியாது'ன்னு ஆரம்பிச்சு... நடந்த எல்லாத்தையும் ஒண்ணுவிடாம சொன்னாரு.
ஏ.ஜி. உடனே "நக்கீரன் அலுவலகத்துக்கு சட்டவிரோதமா துண்டிக்கவில்லை. மின்சாரப் பிரச்சினை குறித்து அந்தப் பகுதியில வசிக்கிறவங்க கிட்ட இருந்து புகார்கள் வந்தது. அந்தப் புகார் சரி செய்யப்பட்ட பிறகு தாமதிக்காமல் மின்விநியோகம் செய்யப்பட்டுவிட்டது, குடிநீரும் அப்படியே. அதிலும் கழிவுநீர் கலந்துவிட்டதாக, அந்தப் பகுதி மக்கள்ட்ட இருந்து புகார்கள் வந்த தால், அதையும் உடனே சரிசெய்து கொடுத்து விட்டோம். "எங்கள் ஆட்சியில் குடிநீரும், மின் இணைப்பும் யாருக்கும், எதற்காகவும் பழிவாங்கும் நோக்கத்தில் துண்டிக்கமாட்டோம்'னு வாதாடு னாருண்ணே'ன்னு கோர்ட்ல நடந்ததச் சொன்னார் சிவா.
பாருங்க மக்களே... எத்தன ஆதாரம்? எத்தன வீடியோ...! அந்தப் பகுதி மக்கள் எல்லாரும் நாலு நாளா போராட்டம், சாலை மறியல்னு தொடர்ந்து ரோட்டுல வெயில்லயும், இருட்டுலயும் கிடந்து என்ன பாடுபட்டாங்க. ஒரு பூசணிக்காய் இல்ல... நாலஞ்சு பூசணிக்காய முழுசா சோத்துல போட்டு அழுத்துற மாதிரிதான் ஏ.ஜி. கோர்ட்ல பொய்யா சொல்லியிருக்காரு.
திரும்பத் திரும்ப கீறல் விழுந்த ரெக்கார்டு மாதிரி போன வாய்தாவுலயும் இதே விஷயத்தத் தான் சொன்னாரு... இப்பவும் இந்த கதையத்தான் சொல்லியிருக்காரு. தலைமை நீதியரசர், எல்லாத்தையும் கேட்டுக்கிட்டே... "நிறுத்துங்கள்...' என்கிற மாதிரி கை சைகை காட்டி....
Immediate-ஆ கரண்ட்டும், மெட்ரோ கனெக்ஷனும்... ஒரு நிமிஷம் கூட தாமதிக்காம கொடுக்கணும். கொடுத்துட்டு அதற்கான ஆதாரத்த இந்தக் கோர்ட்ல ஒப்படைக்கணும்னு Strict-ஆ Order போட்டாரோ ஒரு போடு...!
அப்பாடா... நமக்கு கிடைச்ச முதல் வெற்றி.
மேப்படி ஏ.ஜி. நவநீதிகிருஷ்ணன், போற போக்குல "எங்க ஆட்சி யாரையும் பழி வாங் காது'ன்னு ஒண்ற வண்டி பொய்யச் சொல்லி பெரிய பித்தலாட்ட மூட்டைய அவுத்து வுட்டுருக்காரு.
இவங்க அம்மா... அதான் அம்மணி ஜெயலலிதா 2001-ல "ஆட்சிக்கு வந்ததும், நக்கீரன் மேல நடவடிக்கை எடுப்பேன்'னு அப்ப வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலேயே அறிவிப்பா சொல்லியிருந்துச்சு.
அப்படிப் பாத்தா, ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில நாட்டு மக்களுக்கு அதச் செய்வேன், இதச் செய்வேன்னுல்லாம் சொல்லாம, "வந்தா இந்த மீசைக்காரன அட்ரஸ் இல்லாம பழிவாங்கு வேன்'னு சொல்லுச்சே... இது என்ன பழிவாங்குறது இல்லாம... கொஞ்சுற ஐட்டமா?
"பழிவாங்க மாட்டோம்... பழிவாங்க மாட்டோம்'னு சொன்னாருல்ல ஏ.ஜி. அவருக்கு 2001-ல நடந்த கூத்தெல்லாம் தெரியாதுன்னு நினைக்கிறேன். தெரிஞ்சாலும் முழுங்கிடுவாய்ங்க.
நாள் 7 -டிசம்பர் 2002.
போயஸ் கார்டன்... ஜெயலலிதா வீடு.
நக்கீரன் கோபால் பற்றிய டீடெய்ல் வேணும்னு போட்ட ஆர்டரின் பேரில் கார்டனுக்கு உளவுத்துறையிலிருந்து அனுப்பப்பட்ட குறிப்பும் அதோட ஈரோடு மாவட்ட ஸ்பெஷல் பிராஞ்ச் சி.ஐ.டி. இன்ஸ்பெக்டரின் வழக்கு சம்பந்தமான குறிப்பையும் சேர்த்து, ஒரு பஞ்ச் பேப்பர்களா நம்ம போயஸ்கார்டன் சோர்ஸ் மூலமா இணையாசி ரியருக்கு வந்திருக்கு. அதப் பாத்ததும் அவர் படபடப்பா, என் அறைக்கு வந்து குடுத்தாரு. எல் லாமே ஆங்கிலத்துல இருந்தது. நமக்குத் தெரிஞ்ச ஆங்கில அறிவுல படிச்சுப் பாத்தா... குப்புன்னு வேர்த்திருச்சு. மறுபடியும் ஏழரை... நம்மள குண்டக்க மண்டக்க தொரத்த ஆரம்பிச்சிருச்சு.
ஆத்தாடி... ஆத்தாடி... நம்ம கதையை முடிக்கிற குறிப்பால்ல இருக்குன்னு யோசிச்சுக் கிட்டே, "சே... மனுஷியா அந்த பொம்பள. ஏற்கனவே நம்மாளு ஒருத்தன் தலைமறைவா கேரளா போயாச்சு. நம்மகூட இருந்த துரோகி ஒருத்தன் கம்பி எண்ணிக்கிட்டு இருக்கான். மறுபடியும் நம்மள கூட்டிட்டுப் போய் திரும்பவும் சாத்து வாங்க வைக்கிற சோலிய பாத்துப்புட் டாய்ங்கடா கோவாலு'ன்னு புலம்பிக்கிட்டே... அடுத்த 5 நிமிஷத்துல வீடு. எப்பவும் ரெடியா வச்சிருக்கிற பேக். யார்ட்டயும் ஒத்த வார்த்த கூட பேசாம... இப்படி, இப்படி பிரச்சினைன்னு வீட்ல யார்ட்டயும் சொல்ல முடியாதுல்ல. அத வேற எப்படிச் சொல்றது? இந்த மாதிரி... இந்த மாதிரி... ஜெயலலிதா வீட்டுல இருந்து வந்த ஃபேக்ஸ பாத்தேன். அதுல நம்மள கொண்டுபோடுற அளவுக்கு வண்டி வண்டியா செய்தி இருந்துச்சு. அதனால நான் ஊரவிட்டே கிளம்புறேன்னு சொல்லிக்கிட்டா போகமுடியும்? சொன்னா... வீட்டுலதான் நிம்மதியா இருப்பாங்களா? இல்ல "சரி... சரி... நாங்க பாத்துக்கிறோம், நீங்க கௌம்புங்க'ன்னு விட்டுருவாங்களா?
உசிரே போற மாதிரி வலி இருந்தாலும் முகத்துல காமிக்காம நடந்துக்கிறதுதான் நம்ம பாலிஸி.
என் துணைவியார்கிட்ட மட்டும் நைசா, "ஒரு பிரச்சினை... நாலுநாள்ல வந்துருவேன்... ஜாக் கிரதை''ன்னு மட்டும் சொல்லிட்டு கடைய காலிபண்ணிட்டேன். கழிசடைக்குப் பொறந்த பயலுக விருட்டுன்னு தொரத்திக்கிட்டு வந்துட்டாய்ங்கன்னா...
(புழுதி பறக்கும்)