(110) சோவுக்கு ஒரு நாக்கா? இரண்டு நாக்கா?
சோ, "டைம்ஸ் ஆஃப் இந்தியா' பேட்டியின் ஆரம்பத்துல நக்கீரன கிண்டல் அடிச்சுட்டு, எதுக்கும் நக்கீரன் கோபாலுக்காக இரண்டு வார்த்தைய போட்டு வைப்போம்னு இரக்கப்படுற மாதிரி, ஜெயலலிதாவுக்கு எதிராவும் இரண்டு வரியில...
அது...
1) நடிகர் ராஜ்குமாரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.
2) கர்நாடகத் தமிழர்களுக்கும் கஷ்டநஷ்டங்களை ஏற்படுத்துவதாக இருக்கும் -என்கிறார்.
இதே கருத்தைத்தானே அடிப்படையாக வைத்து தமிழக -கர்நாடக முதல்வர்களும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இதே கருத்தின் அடிப்படையில்தானே -நக்கீரன் ஆசிரியரை தூதராக நியமித்து, வீரப்பனோடு நேரடியாகப் பேசி -ராஜ்குமாருக்கும் ஆபத்து இல்லாமல், கர்நாடகத் தமிழர்கள் நலனுக்கும் பாதகம் ஏற்படா வண்ணம் பிரச்சினைக்கு நல்ல தீர்வு காண இரு முதல்வர்களும் செயல்பட்டு வருகிறார்கள்.
இவையெல்லாம் தெரிந்திருந்தும் கோபால்தான் இரு மாநில முதல்வர் என்றும், இரு மாநில முதல்வர்களும் கோபாலின் செயலர்கள்தான் என்றும் வட இந்திய ஏடுகளில் சோ -விஷமப்பிரச்சாரம் செய்ய முன்வந்திருக்கிறாரே; ஏன்?
"இந்தச் சந்தர்ப்பத்தில் ராஜ்குமாரை விடுதலை செய்வதற்கு மட்டுமே -இரு அரசுகளும் முன்னுரிமை -முதலிடம் தந்து செயல்படவேண்டியிருப்பதை ஒப்புக்கொள்கிறேன்''
-என்றும் தனது "நடுநிலைமை'க்கு வெளிச்சம் போட்டுக்கொள்கிறார். சோவுக்கு ஒரு நாக்கா? இரண்டு நாக்கா?
மறுபடியும், மறுபடியும் கோபாலையே தூதராக அனுப்புவதில் உள்ள புத்திசாலித்தனத்தை இந்த அறிவாளி அம்பியால் புரிந்துகொள்ளவே முடியவில்லையாம்.
It seems there is nobody undertake this mission -என்கிறார் சோ.
சன் டி.வி.க்கு அளித்த பேட்டியில் ஆசிரியர் கோபால்-
"பெரியவர் "சோ'வே போகலாமே!'' என்று நேரடியாகவே பதில் சொன்னார்.
அதனை ஏற்று காட்டுக்குப் போக தைரியமோ -திராணியோ இல்லாத "சோ' இப்படி அரட்டைக் கச்சேரி நடத்துவதும், கட்டிய வீட்டுக்கு பழுது -நொட்டாரம் சொல்வதும்தான் நடுநிலையான கருத்து என்றால் -இப்படிப் பட்ட நாசகார -நச்சுப்புத்தி -விஷத்தன்மை வாய்ந்த அந்த நடுநிலைமை ஒழிக என்றே எல்லோரும் தயங்காமல் -உரத்த குரலில் முழங்குவார்கள்.
ஐயா சின்ன குத்தூசி, சோ சாருக்கான பதிலை இப்படித்தான் முடிச்சாங்க.
நம்மளப் பொறுத்தவரையில் சோ சார் மூளையால் முன்னேறினவரு. இவருக்கு இதயம் இடம் பெயர்ந்துபோய் ரொம்ப வருசமாயிருக்கும்.
சோ சார் "டைம்ஸ் ஆஃப் இந்தியா'வுல நம்மளப் பத்தி எழுதுனதுக்கு, நல்ல ஒரு சரியான பதில "முரசொலி'யிலயும், "நக்கீரன்'லயும் எழுதியிருந்தாங்க குத்தூசி ஐயா. "முன்னாடி பாத்தா நாயக்கர் குதிர, பின்னாடி பாத்தா ராவுத்தர் குதிர'ம் பாங்கள்ல... அது மாதிரி சோ, நம்ம மேல இருக்கிற கடுப்புல (மெட்ராஸ் பாஷைல சொன்னா "காண்டு'ம்பாங்கள்ல) "டைம்ஸ் ஆஃப் இந்தியா'வுக்கு பேட்டி குடுத்துர்றாரு. அதுலயே ஜெயலலிதாவுக்கும் ரெண்டு குட்டு வுடுவாரு. இது எல்லாத்தையுமே ஐயா, கட்டுரையில சொல்லிருப்பாங்க.
இது முடிஞ்சுச்சா... அடுத்து...
ராஜ்குமார -வீரப்பன் கடத்திட்டுப் போன இதே காலகட்டம். அந்த 108 நாள், அது முடியுது. அதுக்கப்புறம் ராஜ்குமார் ஒருவழியா திரும்பி வந்திர்றாரு. வந்தவுடனே, கர்நாடக பத்திரிகைக்காரங்ககிட்ட ரொம்ப நன்றியோட, "கோபால் வந்தாரு, கர்நாடகா போனாரு' அப்படின்னு பேட்டி குடுத்தாரு.
அதக் கேட்ட சோ சார், ரஜினி சாருக்கு போன்பண்ணி... ரொம்ப கோவப்பட்டிருக்காரு.
அதாவது... "என்ன, ஒங்க ஆளு இப்படிப் பண்ணிட்டாரு? கோபால் எவ்வளவு பெரிய தியாகம் பண்ணிருக்காரு தெரியுமா? அவரோட உயிரப் பணயம் வச்சு அவ்வளவு தூரம் போய்... ராஜ்குமாரோட உயிர காப்பாத்தியிருக்காரு. ஆனா அந்த நன்றிகூட இல்லாம, "அவரு வந் தாரு... போனாரு...'ன்னு ஈஸியா சொல்லிட்டாரு. ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டாரு. ராஜ்குமார் சார் அப்படி சொல்லியிருக்கவே கூடாது. இதுல எனக்கு ரொம்பவே வருத்தம்'' அப்படின்னு ரஜினி சார்கிட்ட சொல்லி, சோ வருத்தப்பட்டிருக்காரு.
ரஜினிக்கு, சோ சார் போன் பண்ணுன அடுத்த நிமிஷமே, ரஜினி சார், எனக்கு போன்ல வந்தாங்க.
"எங்க இருக்கீங்க கோபால்?''னாரு.
"சொல்லுங்கண்ணே... என்ன விஷயம்?''னு கேட்டேன்.
"உடனே நீங்க வீட்டுக்கு வரணும்''னாரு.
"சரிண்ணே... 20 நிமிஷத்துல வந்துர்றேன்ணே''ன்னு சொன்னேன்.
"கோபால்... அவசரம்... உடனே வாங்க''ன் னாரு. நானும் உடனே என்னவோ, ஏதோன் னுட்டு அவசரமா புறப்பட்டுப் போனேன்.
"உக்காருங்க கோபால்''னு சொல்லிட்டு...
"நீங்க எப்பவுமே சோ சார பத்திச் சொல்லும்போது, "அவரு நமக்கு எதிராவே இருக்காரு'ன்னு சொல்லுவீங்க. பாருங்க... உங்கள எவ்வளவு பாராட்டியிருக்காரு? உங்களுக்காக ரொம்ப வருத்தப்பட்டு பேசுனாரு...'' அப்படின்னாரு.
"என்ன விஷயம்ணே''ன்னு கேட்டேன்.
"ராஜ்குமார் சார், "கோபால் வந்தாரு... போனாரு'ன்னு சொன்னதுக்கு, சோ சார் ரொம்பவே வருத்தப்பட்டாங்க. "அவரோட தியாகம் தெரியுமா? உயிரப் பணயம் வச்சு அவரு உள்ள போயிட்டு ந்திருக்காரு. காட்டுல அவரோட உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்திருந்தா அத யாரு திருப்பிக் குடுப்பாங்க? எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்திருக்காரு. இந்த மாதிரி யாராவது ரிஸ்க் எடுக்க முடியுமா? எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சா கூட நானெல்லாம் இந்த மாதிரி பண்ணியிருக்க மாட்டேன்... அந்த அளவுக்கு கஷ்டப்பட்டு காட்டுக்குப் போயிட்டு வந்த நக்கீரன் கோபால, ராஜ்குமார், "வந்தாரு... போனாரு...'ன்னு சர்வசாதாரணமா சொல்லிட்டாரு... ஆனா அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது'ன்னு சோ சார், உங்களுக்காக ரொம்ப வருத்தப்பட்டாரு சோ சார், உங்க மேல எவ்வளவு மரியாதை வச்சிருக்காரு பாருங்க கோபால்'' அப்படின்னு ரஜினி சார் எங்கிட்ட சொன்னாரு.
"சரிண்ணே...'' அப்படின்னேன்.
அப்ப ரஜினி சார்... "கோபால், நான் சீரியஸாவே சொல்றேன்... சோ சார் எவ்வளவு பெரிய பாராட்ட சொல்லியிருக்காரு... நீங்க கேஷுவலா சரிண்ணே..''ங்கிறீங்கன்னாரு.
"ரொம்ப நல்ல விஷயம்ணே. என்னோட நன்றிய அவருக்கு சொல்லிருங்க. ஆனா ஒரு விஷயம். அவரு "துக்ளக்'னு ஒரு பத்திரிகை நடத்துறாரு. அந்தப் பத்திரிகையில இத பதிவு பண்ணியிருக்கலாமே? அப்படிப் பதிவு பண்ணி யிருந்தா, அது எல்லாருக்கும் தெரிஞ்சிருக் கும்தான? அத ஏன் பதிவு பண்ணாம, உங்கள்ட்ட பேசுனாரு?'' அப்படின்னேன்.
"யா... யா...யா... அது ஏன்னு தெரியல்லியே''ன்னாரு ரஜினி சார்.
நான் சொன்னேன்... "வேறொண்ணும் இல்ல. நீங்க, என்னக் கூப்புட்டு இதைச் சொல்லிர் றீங்க. இப்ப, என்ன பாராட்டுனது, எனக்காக வருத்தப்பட்டது எல்லாமே, நீங்க என்கிட்ட சொன்னவுடனே, அத நான் "சோ சார் நமக்காக வருத்தப்பட்டிருக்காரு'ன்னு நெனைச்சுக்குவேன். அதுக்கு ஏன் இவரப் பத்தி பத்திரிகைல எழுதி பெரிய ஆளா ஆக்கணும்னு அவரு நெனைச்சிருப்பாரு''ன்னு சொன்ன வுடனே...
அதக் கேட்டுட்டு... ஹ...ஹ...ஹா...ன்னு சத்தமா ரஜினி சார் சிரிச்சிக்கிட்டே... "அய்யய் யோ... அப்பப்பா... விட்டுருங்க... இவ்வளவு பாலிடிக்ஸ் அதுல இருக்கா? விட்ருங்க சாமி...''ன்னு கையெடுத்துக் கும்புட்டாரு.
"சரிண்ணே... எனக்கு ஒரு டீ சொல்லுங்க, நான் சாப்புட்டுட்டுப் போறேன்''னேன்.
டீ வந்தது. டீ அடிச்சிட்டு கிளம்பிட்டேன்.
எதுக்குச் சொல்ல வர்றேன்னா...
ஒரே எபிசோடுதான்... அதுல ஓப்பனிங்ல "டைம்ஸ் ஆஃப் இந்தியா'ல "ரெண்டு மாநில முதல்வர்கள் மாதிரி நக்கீரன் கோபால் செயல்படுகிறார்'' அப்படின்னு நம்மளப் பத்தி கிண்டல். பின்னாடி... "அவரு உயிரப் பணயம் வச்சு ரிஸ்க் எடுத்து காட்டுக்கு போயிருக்காரு'' அப்படின்னு நமக்கு ஒரு வக்காலத்து... பட்ண்ள் ண்ள் ஈட்ர்.
நம்மளச் சுத்தி யார், யாரெல்லாம் முகமூடியோட அலையுறாங்க, அவங்க பைக்குள்ளயும் எத்தனை முகமூடிய வச்சுக்கிட்டு நம்மகிட்ட நட்பா இருந்தாங்கன்னு... அனுபவிச்சவய்ங்களுக்குத்தான் தெரியும்.
"நாமே அனுமதிக்காதவரை.... நம்மை யாரும் அவமானப்படுத்த முடியாது'ன்னு சொல்வாங்க.
விபத்துகள்ல இருந்து மீள்றதுக்கும், உடம்பை உறுதியாக்கிக்கிறதுக்கும் நிறைய வலிகளப் பொறுத்துக்கிறது அவசியம். அந்த வலி ஒரு வகையில நம்ம பலத்தோட மறுபக்கம்ங் கிறத உணர்ந்துட்டாலே போதும்... எதையும் எதிர்கொண்டுறலாம். பரபரப்பிற்கு கை, கால் முளைச்சா எப்படிங்கிறதுக்கு சில பத்திரிகை கள்... வீரப்பன் -ராஜ்குமார் எபிசோடுல, விடிஞ்சா... முதல் பக்கமோ, இல்ல அட்டைப் படச் செய்தியோ என்னப் பத்தியேதான்...!
அவமானங்கள சகிச்சிக்கிறதும் ஒரு அரிய கலைதான்... இது ஆயகலைகள்ல அடங்காது.
அந்த வகையில... அப்ப வந்த "இந்தியா டுடே' தமிழ் பதிப்புல அதன் ஆசிரியர் வாசந்தியக்கா...
(புழுதி பறக்கும்)