(107) ஜெ.வின் பொய்முகம்!
"பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சியவர்'
குழப்பமில்லாத, மாசில்லாத அறிவுடையோர்... மறந்தும்கூட பயனற்ற கருத்துக்களைச் சொல்ல மாட்டார்கள் என்கிறார் வள்ளுவர்.
கீழே உள்ள ஷரத்துகளைப் படித்தாலே தெரியும்.
ஜெயலலிதா போன்றவர்கள் அறிவாளிகள் இல்லை என்று அடித்துச் சொல்கிறது திருக்குறள்.
சில உண்மைகளை அம்பலப்படுத்த வேண்டும் என்றால், ஜெயலலிதாவைப் பற்றி எழுதித்தான் ஆக வேண்டியிருக்கிறது. தமிழ் நாட்டையே தலைகீழாக மாற்றிவிட்ட ஜெயலலிதா வாட பொய் முகம் எப்படி என்று நீங் களும் பாக்கணும்ல...
நக்கீரனுக்கு எதிரா 2012, ஜனவரி 7-ம் தேதி எடுத்த கொடூர நடவடிக் கைகள் ஏராளம்... அதுல ஒண்ணு, டெல்லியில் நமது நக்கீரன் பத்திரிகையோட குரல் வளைய நெறிச்சு கண்டந்துண்டமா கொதறிரணும்னு ப்ளான் பண்ணு னாங்கன்னு போனவாட்டியே சொன்னேன். இது ஒண்ணும் அந்தம்மாவுக்கு புதுசுல்ல...
ஜெயலலிதா தன் கைப்பட எழுதிய கடிதத்தில்... சும்மா சொல்லக்கூடாது, கையெழுத்து ஒண்ணும் குறைச்சலில்லை... முத்து முத்தாத்தான் எழுதுது. நம்ம தலையெழுத்துதான் அந்தம்மா கையில குண்டக்க மண்டக்க மாட்டி... பீ... பிதுங்கிருச்சு.
எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா எழுதுன கடிதங்கள் ஏராளம்.
எசக்குமாத்தா நம்மகிட்ட மாட்டுன கடிதத்துல எம்.ஜி.ஆர கைக்குள்ள வச்சுக்கறதுக்கு எத்தன களவாணித்தனம் பண்ணி, அவருக்கு ரொம்ப நல்ல புள்ளையா நடிச்சு அவரோட நம்பிக்கைய வாங்குறதுக்கு அந்தம்மா ரொம்ப பாடுபட்டிருக்குங்கறது தெரியுது.
அப்படி எழுதுன ஒரு கடிதத்துலதான் கீழே இருக்கிற சரக்கு இருந்துச்சு.
அப்ப ஜே... ஜே...ன்னு ஓடிக் கிட்டிருந்த தராசு பத்திரிகையில தலைப்பு, கொஞ்சம் கடுமையா வச்சு வெளிவந்தது. அந்த தராசு மேல நடவடிக்கை எடுக்கவும்... கட்சியில இருக்குற மத்தவங்க எல்லாம் இந்தச் செய்திய கண்டும் காணாம இருக்காங்க. நான்தான் உங்களின் நலனில் அக்கறை உள்ளவள்னு ஒரு டன் ஐஸ் வச்சும்... வார்த்தையில தேன் தடவியும் எழுதியிருக்கும் ஜெயலலிதா.
இதோ, உங்கள் பார்வைக்கு...
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, ஒரு சாதாரணப் பெண் எழுதிக்கொள்வது. தனிப்பட்ட முறையில் எப்படிப்பட்ட உணர்வுகள் இருந்தாலும், மொத்தத் தில் உங்கள் நலனில் அக்கறை உள்ளவள் என்ப தால், கடமை உணர்வோடு எழுதப்பட்டதே இக் கடிதம்.
இந்த வாரம் வெளிவந்துள்ள "தராசு'' வார இதழின் முன்பக்க தலைப்புச் செய்தியைப் பார்க்க வேண்டுகிறேன். மிகவும் தரக்குறைவான ஆட்சேபத் திற்குரிய -Highly objectionable words unparliamentary words என்று சொல்லக்கூடிய அநாகரிகமான வார்த்தைகளைப் பயன் படுத்தியிருக்கிறார்கள். (இது என்னைப் பற்றிய விஷயமே அல்ல. நான் இதில் சம்பந்தப்படவேயில்லை. உங்களுடைய அரசை, ஆட்சியைத் தாக்கி எழுதியிருக்கிறார்கள்).
இத்தகைய அருவருக்கத்தக்க வார்த்தைகள் மட்டுமல்ல -உண்மைக் குப் புறம்பாக, அரசாங்கத்திற்கு எதிராக வெளியிடப்படும் எழுத்துக்களை கட்டுப்படுத்தவும், நடவடிக்கை எடுக்கவும் போதிய அதிகாரம் நடைமுறையில் உள்ளது. ""REGISTRATION OF BOOKS ACT" -1942 என்ற விதியின் கீழ், தக்க நடவடிக்கை எடுக்கவும், அத்தகைய தவறு செய்பவர்களை....
(நடுவுல சில பக்கத்தக் காணோங்கிற மாதிரி நடுவுல கொஞ்சம் வரிகள காணோம்)
...ஆகியோரின் படங்கள் அதற்குக் கீழ் கொட்டை எழுத்துகளில்...
"தவிச்ச வாய்க்கே தண்ணியக் காணோம்! இவங்க ஊட்டியில கூடி என்னத்தப் புடுங்குறாங்க?''
"தலை விரித்தாடும் தமிழக வறட்சி -
-ஒரு நேரடி ரிப்போர்ட்''
-இதுதான் தராசு பத்திரிகையின் அட்டைத் தலைப்பு!
எனக்கு ஞாபகம் இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் "துக்ளக்'' இதழ்கள் பல முறை பறிமுதல் செய்யப்பட்டன.
SCURRILOUS WRITINGS-ஐத் தடுக்க நம்மிடம் போதிய அதிகாரம் இருந்தும், நமது அதிகாரிகள் அவற்றின் மீது சமீப வருடங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்காததாலேயே, இதுபோன்ற அரசாங்க விரோதப் பத்திரிகை கள், மக்களை அரசுக்கு விரோதமாகத் திருப்பக்கூடிய செய்திகளை (பொய்களை, அவதூறுகளை) தொடர்ந்து வெற்றிகரமாக வெளியிட்டு வருகின்றன.
மிகவும் முக்கியம்:
(இந்த இடத்தில் அனைத்தையும் கோடிட்டுக் காண்பித்திருக்கிறார் ஜெயலலிதா)
தமிழகத்தில் எங்கு -அச்சிடப்பட்டாலும் PRINT செய்தாலும் -அந்தப் பத்திரிகை, சஞ்சிகை, புத்தகங்கள் ""REGISTRAR OF BOOKS" " (செய்தித்துறைக்கு) அனுப்பிட வேண்டும். அப்படி வருகின்ற எல்லாவற்றையும், உடனுக்குடன், வரிக்கு வரி படித்து, மேல் நடவடிக்கை எடுத்திட வேண்டும். காவல்துறைக்கும், இத்தகைய நடவடிக்கை எடுக்க, அச்சேறும் முன்பே தடுக்க அதிகாரம் உள்ளது.
செய்தித்துறையில், இதற்கென்றே -துணை இயக்குநர் ஒருவரும், SCRUTINY OFFICER IÚYÚm, ASSISTANTS,, உதவியாளர்களும் உள்ளனர். அப்படியிருந்தும், நடவடிக்கை ஒன்றும் இல்லை. "நமக்கு என்ன?'' என்ற ரீதியில் ஏனோ தூங்குகிறது செய்தித்துறை!
ஆனால் உங்களைப் பழிக்கும், உங்கள் ஆட்சியைப் பழிக்கும் இத்தகைய அவதூறான செய்திகள் வெளிவரும்போது, "எனக்கு என்ன?'' என்று ஏனோ என்னால், உங்கள் அம்முவால் சும்மாயிருக்க முடியவில்லை.
அதனால்தான் காலையிலிருந்து நீங்கள் என்னுடன் ஃபோனில் பேசாவிட் டாலும் இக்கடிதம் எழுதி அனுப்புகிறேன்.
இப்போதாவது உங்கள் அம்முவைப் புரிந்துகொள்ளுங்கள். நமக்குள் ஆயிரம் இருக்கலாம். ஆனால் பிறர் உங்களைப் பழிப்ப தோ, அவமானப்படுத்துவதையோ என்னால் தாங்கிக்கொள்ள முடியாது.
இதுல நம்ம கமல் சாரையும் விட்டு வைக்கல. போட்டுக் குடுக்குறதுல அ.தி.மு.க.வோட நொம்மா ஜெயலலிதாவுக்கு ஈடு ஜெயலலிதாதான்கிறதுக்கு இன்னொரு உதாரணம் இதோ...
கமல் சாருக்கும் இந்த அம்மாவுக்கும் என்ன வாய்க்கா வரப்பு தகராறோ... தெரியாது. அது இரண்டு பேருக்கும்தான் வெளிச்சம். அதுக்குள்ள நாம போகல. ஆனா கமல் சார உண்டு, இல்லைன்னு பண்ணணும்னு எம்.ஜி.ஆர்.கிட்ட போட்டுக் கொடுக்குது. ஒரு இடத்துல அவன், இவன்னு ஒருமையில எழுதுது... நீங்களே பாருங்க.
கமலஹாசனின் "விக்ரம்'' படத்தின் நிதி சேர்க்கும் சிறப்புக் காட்சியில் நீங்கள் (எம்.ஜி.ஆர்.) கலந்துகொள்ள சம்மதித்தும், உங்களை அவமானப்படுத்தும் விதத்தில் விளம்பரமே செய்யாமல் விட்டானே -அதை வேறு யாராவது உங்கள் கவனத்திற்குக் கொண்டுவந்தார்களா?
"நமக்கென்ன'' என்று மற்ற எல்லோரும் இருந்துவிட்டார்கள். ஆனால் என்னால் அப்படியிருக்க முடியவில்லை.
அடுத்த நாளே -கமலஹாசன் படம் ரிலீஸ் ஆன நாளன்று -ஒவ்வொரு நாளேட்டிலும் முழு பக்க விளம்பரங்கள் கொடுத்தானே?
நீங்கள் பார்த்தீர்களோ இல்லையோ -நான் கவனித்தேன்.
தனக்காக விளம்பரம், முழு பக்க விளம்பரம் கொடுக்க மட்டும் கமலஹாசனுக்குத் தெரிகிறது -ஆனால் உங்களை, இவ்வளவு மக்கள் செல்வாக்குடைய முதலமைச்சரை அழைத்துவிட்டு விளம்பரமே செய்யவில்லை என்றால் -அவன் உங்களைக் கிள்ளுக்கீரை என்றா நினைத்தான்?
உங்களை அழைத்துவிட்டு அப்படியா கேவலப்படுத்துவது? ஆனால் மறுநாளே, படம் ரிலீஸ் ஆகும்போது, தன் போட்டோவோடு முழு பக்க விளம்பரங்கள் வெளியிட்டான்.
எனக்குத் தெரியும். கோமண்டூர் சீனிவாசனுடன் ஃபோனில் பேசிவிட்டேன் -எனவே கோபத்தைக் காட்டுகிறீர்கள். பரவாயில்லை. இருக்கட்டும்.
எப்படியிருந்தாலும், எந்தச் சூழ்நிலை யிலும், உங்கள்பால் உண்மையான அன்பும், பிரியமும், விசுவாசமும் கொண்ட ஒரே ஆத்மா, ஒரே ஜீவன், உங்களைச் சுற்றி வட்டமிடும் அத்தனைப் பேர்களில் வேறு யாருமில்லை -இந்த அம்முதான் என்பதை என்றாவது புரிந்துகொள்வீர்கள்.
-உங்கள் அம்மு
மேப்படி கடிதத்துல இரண்டு விஷயம்...
1. பத்திரிகைகளை நசுக்குவது, அதுக்குப் புதுசு இல்ல. ஆனா தராசு பத்திரிகை மேல், எனக்குத் தெரிய பெரிய ஆக்ஷன்லாம் எடுக்கல. எம்.ஜி.ஆரும், இந்தம்மா கடிதத்த படிச்சு ஒண்ணும் சீரியஸா ஸ்டெப் எடுத்ததா ஞாபகம் இல்ல.
2. தனக்கு விரோதியா இருக்குறவங் கள எந்த லெவல்லயும் அசிங்கப்படுத்தும், மரியாதைக் குறைவா பேசும் என்பதற்கு கமல் சார் மேல அந்தம்மாவுக்கு இருந்த கோபம் இதுல வெளிப்படுது.
40 வருஷத்துக்கு முன்னாடியே இப்படின்னா... இப்ப சொல்லவா வேணும். அதுக்காகத்தான் இந்த கடித ஆதாரம்.
சரி... இப்ப சோ விஷயத்துக்கு வர்றேன்...!
(புழுதி பறக்கும்)