(105) ஆவேசமான அம்மா!
நித்யானந்தா வீடியோவ நாம முதல்முதல்ல ரிலீஸ் பண்றோம். இந்த விஷயத்துக்குள்ள வேற எந்தப் பத்திரிகையுமே வரல. அதுக்கு காரணம் என்னங்கிறத அவங்ககிட்டதான் கேக்கணும். ஆனா நாமதான், ஒரு நாசக்காரன்... ஒரு அயோக்கியன்... சாமியாருங்கிற போர்வைல இருக்கிற ஒரு சல்லாபக்காரன்... பெண்கள போகப்பொருளா வச்சு, ஆசிரமம் நடத்துறதா சொல்லி ஏகபோகமா வாழ்ந்துக்கிட்டிருந்த ஈனப்பிறவியோட முகமூடிய கிழிச்சி உண்மைய வெளிய கொண்டுவர்றதுக்கு நக்கீரன் மூலமா பெரிய முயற்சி எடுத்தோம். அது எங்களுக்கு வெற்றியை யும் குடுத்துச்சு. அதனால நெறைய பிரச்சினை களையும் நாங்க சந்திச்சோம்.
ஆனா... இவுங்க, அவங்க ஆதங்கத்த எப்படி வெளிப்படுத்துறாங்க பாருங்க.
போலீஸ்காரங்க சிலபேரு இவுங்க காதுல குசுகுசுன்னு சொன்னாங்களாம்...
"படுக்கை அறையில் எடுத்ததாக கூறப்படும் படங்கள்...'
நாங்க இல்லன்னு சொல்லல. படுக்கை அறையில ஒரு சாமியார் தனியா படுத்தா நாம ஏன் அத படமா எடுக்கப்போறோம்? ரஞ்சிதாங்கிற ஒரு நடிகையோட அவன் படுத்திருந்து... அவளோட சல்லாபிச்சுக்கிட்டு... ஒருத்தன் சாமியார்னு வேற சொல்லிட்டுத் திரியுறான். அப்படிப்பட்ட நீசத்தனத்த ஒரு பத்திரிகையாளனா இருந்துட்டு கண்டுக்காம, தலைய குனிஞ்சுட் டெல்லாம் போகமாட்டோம்.
அப்போ, இந்த விஷயத்த வெளிய கொண்டுவந்தோம்ங்கிறதுனால அத எங்க கொண்டுவந்து சேர்க்குறாங்க பாருங்க!
அதவிட முக்கியம், "பல வழக்குகளை தூசு தட்டப்படுமாம்...'
தூசு தட்டுங்க... தட்டித்தான் பாருங்க. நாம எவ்வளவு வழக்குகள இதுவரைக்கும் சந்திச்சிட்டு வந்திருக்கோம். தூசு தட்டுறதுன்னா... என்ன அர்த்தம்? அந்த சமயத்துல நம்ம மேல போட்ட அத்தன எஃப்.ஐ.ஆருக்குப் பின்னாடியும், ஒரு பெரிய்...ய்...ய கும்பல் கிடையா கிடந்து வேலை பாத்திருக்குன்னுதான அர்த்தம். அதுதான்... அந்தக் கும்பல். அதுலதான் "சோ'வையும் கொண்டு வர்றேன்.
"சோ'வும் எவ்வளவு பெரிய வன்மத்தோட பேசுனாருன்னு பாருங்க. "அவாள எனக்குப் பிடிக்காது. இருந்தாலும்... அவா நக்கீரனுக்கு எதிரா செய்ற வேலய பேஷா பண்ணிட்டா'' அப்படின்னு ஒரு இடத்துல சொல்றாரு.
ஏன் இந்த ஆதங்கத்த சோ சொல்றாருன்னா, அதுதான் நான் முதல்லயே சொன்னேன் பாருங்க... நாம பெரிய பாரம்பரியத்தோடவோ, அடித்தளத்தோடவோ இந்தத் துறைக்கு வரல. எனக்கு நல்ல தம்பிங்க கெடைச்சாங்க. அது எனக்கு பெரிய பலம், நல்ல சப்ளையர்ஸ் கெடைச்சாங்க. தைரியமான முகவர்கள் கிடைச்சாங்க. அதனால நாங்க தைரியமா சில விஷயங்கல முன்னெடுத்து வைக்கிறோம், அவ்வளவுதான்... சிம்பிள்!
நாங்க பத்திரிகை ஆரம்பிச்சதுல இருந்து இன்னிக்கு வரைக்கும், இந்தச் சமூகத்துல எங்கெங்கல்லாம் சமூகத்துக்கு எதிரா பெரிய கேடு விளைவிக்கிற செயல் நடக்குதோ.... அத வெளிக்கொண்டு வந்ததுல பெரும்பங்கு நக்கீரனுடையதாத்தான் இருக்கும். அதுக்கு உதாரணமா... இப்ப நடந்த கள்ளக்குறிச்சி சம்பவம் வரைக்கும்னு நான் சொல்றேன். அதுக்காக நாங்க மார் தட்டிக்குவோம்.
ரெண்டாவது நாள் ராத்திரி முழுக்க ஆபீஸ் முழுசுக்கும் போலீஸ்காரய்ங்க என்னென்னமோ பண்ணிப்பாத்தாங்க... எத்தனையோ உருட்டு உருட்டுனாய்ங்க, ஒண்ணும் வேலைக்கு ஆவல.
ஒரு குரூப் வெளிய போனாய்ங்கன்னு போன இதழ்ல போட்டோல்லாம் போட்டோம். ஆனா பாருங்க... மறுபடியும் இன்னொரு குரூப் உள்ள வந்து போகமாட்டோம்னு சொல்லி அடம் புடிச்சி அங்கனக்குள்ளேயே உக்காந்துட்டாய்ங்க.
இதையெல்லாம் பாத்துக்கிட்டிருந்த எங்க சீனியர் அட்வகேட் பெருமாள் சார் கடுப்பாகி, "இவ்வளவு நேரமா அங்குலம் அங்குலமா தேடிப் பாத்தீட்டீங்கள்ல சார்... அதுக்கப்புறமும் ஏன் சார் தொல்லை குடுத்துக்கிட்டிருக்கீங்க? இது சுதந்திர நாடா இல்லியா?ன்னு கோவமா கேட்டிருக்காரு. நார்மலா எப்பவுமே பெருமாள் சார் கோவப்படமாட்டாரு. அவரே கோபப்படுற அளவுக்கு நடந்திருக்காங்கன்னா போலீஸ்காரய்ங்க எந்த அளவுக்கு கடுப்பேத்தியிருக்காங்கன்னு நாம புரிஞ்சுக்கலாம். இவிய்ங்களோ, எதையுமே சட்டபண்றது மாதிரி தெரியல.
உடனே பெருமாள் சார், நம்ம போட்டோ கிராபர்ஸ், வீடியோகிராபர் எல்லாரையும் கூப்பிட்டு, இவங்க எல்லாரையும் சுத்தி படமாவும் வீடியோவும் எடுங்கன்னு கத்தியிருக்காரு.
"ஒரு அரசாங்கம் எந்த அளவுக்கு பத்திரிகை குரல்வளைய நெரிக்குதுங்கிறதுக்கு இப்ப நீங்க பண்றதுதான் கண்கூடான சாட்சி. நாளைக்கு திங்கள்கிழமை சீஃப் ஜஸ்டிஸ் கிட்ட இந்த விஷயத்த நாங்க கண்டிப்பா கொண்டுபோவோம் சார்....''னு அவங்களப் பாத்து சத்தம் போட்டுருக்காரு. அப்படியும் அத அவங்க சீரியஸால்லாம் எடுக்கலையாம். ஒண்ணு, ரெண்டு பேரு மாத்திரம் " நீ இந்தப் பக்கம் போ... நான் அந்தப் பக்கம் போறேன்'னுட்டுப் போயிருக்காங்க. ஆனா எல்லாரும் வெளிய போகல.
நம்ம சைடுல இருந்து கொஞ்சமாவது புக் பிரிண்ட் பண்ணி பார்சல் அனுப்பவேண்டியது இருந்ததுனால... அதுக்கு இவிய்ங்க போனவுடன ஜெனரேட்டர ஆன்பண்ணி பிரிண்ட் பண்ணனும்... அப்புறமா பைண்டிங் பண்றதுக்கு அனுப்பணும்... ஆனா முடியல. அதனால என்ன பண்றதுன்னு எல்லாரும் கைபிசைஞ்சுக்கிட்டிருக்காங்க. ஒண்ணுமே பண்ண முடியாத ஒரு நிலமை.
அதுக்கப்புறமா சடார்ண்டு... எல்லா லைட்டுகளையும் ஆஃப் பண்ணி மொத்த ஆபீஸையும் இருட்டாக்கி... "எல்லாரும் வெளிய கௌம்புங்க''ன்னு அவங்கள வெளிய போகச் சொல்லியிருக்காங்க. இப்ப அவங்க என்ன பண்ணுவாங்க? இருட்டுக்குள்ள எவ்வளவு நேரம் உக்காந்திருப்பாங்க?
ஒரு வகையில அது ஒரு நல்ல புத்தி சாலித்தனமான யுக்தியாவும் இருந்துச்சு. அதுக்கப்புறம்தான் அங்க இருந்த கொஞ்சம்பேரு கழண்டு ஆபீஸ் வெளிய போய் உக்காந் துட்டானுவோ. உடனே, ஆபீஸ் ஷட்டர மூடிட்டு, மறுபடியும் லைன ஆன்பண்ணி நம்ம சைடு செய்ய வேண்டிய வேலைகள கட... கட...ன்னு பாத்திருக்காங்க.
இங்க இதுவரை தேடுனவரைக்கும் நக்கீரன் ஆபீஸ்ல... வீட்டுலன்னு மேல, கீழ எல்லா இடமும் தேடிக் களைச்ச பிறகு.... அப்புறம்தான் இங்க இருக்கிறதுக்கு வாய்ப்பில்ல.... வெளியூருக்கு எங்கயோ போயிருக்கலாம்கிறது மாதிரி ஸ்மெல் பண்ணியிருக்காய்ங்க. "ரமணா' படத்துல யூகிசேது சொல்ற மாதிரி, இப்பதான் இதையே கண்டுபிடிச்சிருக்காய்ங்க!
அடுத்த அட்டாக்கா என்ன பண்ணிட் டாய்ங்க...? வெளியூர்ல உள்ள போலீஸ் காரய்ங்கள்ட்ட, "நக்கீரன்கோபால் எங்கெங்கெல்லாம்... எந்தெந்த ஊருக்குப் போவாரு? போற இடத்துல எங்க தங்குவாரு? அப்படிங்கிற தகவல்களயெல்லாம் கலெக்ட் பண்ணுங்க'ன்னு போன் மூலமா சொல்லியிருக்காங்க. அதுதான் ஊருக்கே தெரியுமே? அதோட "எந்த ஊருக்குப் போறதா தகவல் கிடைக்குதோ... அந்த ஊருக்கு ஸ்குவாடோட போய் தூக்கிட்டு வர்றதுக்கான வேலையையும் ஆரம் பிச்சிருங்க, குயிக்...'' அப்படின்னுருக்காய்ங்க.
இன்னொரு சைடு, அடுத்தநாள் காலையில திங்கள்கிழமை அன்னிக்கு இணை ஆசிரியர் வீட்டுக்கு ஒரு குரூப் போயிருக்காங்க. ஆனா காமராஜும் அவரு துணைவியாரும் முதல் நாளே வீட்ட பூட்டிட்டு வெளிய போயிட்டாங்க.
அப்புறம் தம்பி பிரகாஷ். அவரு அவங்க அம்மா, அக்கா, அக்கா பையன் எல்லாரும் குடும்பத்தோட சென்னை, அயனாவரம் பக்கத்துல ரயில்வே ஸ்டேஷன் தாண்டி, பட்மேடுன்னு ஒரு ஏரியா அங்கதான் குடியிருந்தாங்க.
இப்ப பிரகாஷ தேடி அவங்க வீட்டுக்கு அதிகாலையிலயே ஒரு குரூப் போயிருக்கு. முதல்ல நாலு போலீஸ் போய் கதவத் தட்டியிருக்கு. பிரகாஷ் அம்மாதான் கதவத் தொறந்திருக்காங்க. தொறந்தவுடனே... டெம்போ டிராவலர்ல இருந்த இருபது போலீஸுக்கும் மேல திமு... திமுன்னு.... தம்பி பிரகாஷ் உள்ள இருந்தா தூக்கீறலாம்னு நெனைச்சி ஓடியிருக்காய்ங்க.
அப்ப பிரகாஷோட அம்மா சாந்தம்மா... "நில்லுங்க.... யாரும் உள்ள போகக்கூடாது. நீங்க எதுக்கு எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க? யாரு வேணும் ஒங்களுக்கு?''ன்னு அவங்களப் பாத்து போல்டா கேட்டுருக்காங்க.
"நாங்க ரிப்போர்ட்டர் பிரகாஷையும் நக்கீரன் கோபாலையும் தேடி வந்திருக்கோம்... பிரகாஷ் உங்களுக்கு என்ன வேணும்?'' அப்படின்னு கேட்டுருக்காய்ங்க.
"என் பையன்தான் பிரகாஷ்''னு சொல்லியிருக்காங்க.
மறுபடியும்... "உங்களுக்கு நக்கீரன் கோபால தெரியுமா?''ன்னு கேட்க...
"ஆமா தெரியுமே... நக்கீரன் கோபால் என்னோட மூத்த புள்ள, பிரகாஷ் என்னோட ரெண்டாவது புள்ள. அதத் தெரிஞ்சுக் கிட்டு இப்ப என்ன பண்ணப்போற... உனக்கு என்னதான் வேணும்?'' அப்படின்னு கேட்டிருக்கு அந்தம்மா.
அந்த நேரத்துல பிரகாஷோட அக்கா பையன் ஒருத்தரு இருந்திருக்காரு. அவரக் காட்டி, "இவரு யாரு? இவருதான் பிரகாஷா?'ன்னும் கேட்டிருக்காங்க. இல்ல... அந்த தம்பி பேரு ரதீப்னு சொல்லியிருக்காங்க.
அந்த நேரம் ஒரு போலீஸும், ஒரு லேடி போலீஸும் உள்ள வேற யாராவது இருக்காங்களான்னு கேட்டுக்கிட்டு உள்ள போகப் பாத்துருக்காங்க.
"ஒங்களுக்கு இவ்வளவு நேரம் மரியாதை குடுத்து பேசிக்கிட்டிருந்தேன். யாரும் உள்ள போக நான் அனுமதிக்கமாட்டேன். அதமீறிப் போக முயற்சி பண்ணுனீங்கன்னா மரியாத கெட்டுரும்...''னு ஆவேசமா பிரகாஷ் அம்மா சவுண்ட் விடவும்... முறைச்சிக்கிட்டே வெளிய போயிருக்காங்க.
அதேநாள்ல...
(புழுதி பறக்கும்)