கொடநாட்டில் ஜெ.வின் அறையிலிருந்து மொத்தம் 76 சொத்து ஆவணங்கள் மற்றும் மன்னிப்புக்கோரி ஜெ.வுக்கு அமைச்சர்கள் எழுதிய கடிதங்களும் கொள்ளையடிக்கப்பட்டன. அதில் 36 டாகுமெண்டுகள் ஓ.பி.எஸ்.ஸுடையது. அதில் ஒன்று அவர் கரூர் அன்புநாதன் மூலம் துபாயில் கட்டிய ஐந்து நட்சத்திர ஓட்டல் தொடர்பானது. மீதமுள்ள 40 டாகுமெண்டுகளும் அ.தி.மு.க.வின் பல அமைச்சர்களுடையது. அவை அனைத்தையும் அமைச்சர்களிடம் அப்படியே ஒப்படைத்தார் எடப்பாடி. இதன்மூலம்தான் ஓ.பி.எஸ்.ஸை சரிக்கட்டினார். அ.தி.மு.க.வை தனது ஆளுமையின் கீழ் கொண்டுவந்தார். இதற்காக எடப்பாடி உபயோகித்தது சஜீவனை. முதலில் அலியார் என்கிற ஹவாலா ஆபரேட்டரை வைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த சஜீவன், அது முடியாமல் போகவே சேலம் இளங்கோவன் மூலம் கனகராஜை களமிறக்கினார்.
இந்த கொள்ளை முயற்சிக்கு உதவினார் கொடநாடு எஸ்டேட் மேனேஜரான நடராஜன். ஜெ.வின் அறையில் பூட்டப்பட்ட லாக்கப்பில் எந்த லாக்கரில் இந்த சொத்து ஆவணங்கள் இருக்கின்றன என நடராஜன் சஜீவனிடம் சொன்னார். கொடநாட்டில் உள்ள அனைத்து மர வேலைகளையும் செய்த சஜீவனிடம் மர லாக்கர்களை திறக்கும் டூப்ளிகேட் சாவிகள் இருந்தன. சஜீவன், ஜெ. மற்றும் சசி அறையின் கதவுகளைத் திறக்கும் சாவிகளையும், மர லாக்கர்களின் சாவிகளையும் கனகராஜிடம் கொடுத்தார். அந்த அறைகள் பெரிதாக உடைக்கப் படாமல் திறக்கப்பட்டதுடன் லாக்கர்களில் இருந்த ஆவணங்கள் கனகராஜால் கொள்ளையடிக்கப்பட்டு சேலம் இளங்கோவனிடம் ஒப்படைக்கப்பட்டன.
கொடநாட்டில் கொள்ளையடிக்கும்போது அங்கே வழக்கமாக காவல் காக்கும் போலீசார் இல்லை. அவர்கள் கொள்ளை தினத்தன்று காணாமல் போகும் வேலையை உளவுத்துறை தலைவராக இருந்த சத்தியமூர்த்தி பார்த்துக் கொண்டார். அவரது உத்தரவின் பேரில் ஐ.ஜி.யாக இருந்த பாரி, எஸ்.பி.யாக இருந்த முரளிரம்பா மற்றும் கொடநாடு தோட்டப்பகுதியில் உளவுத்துறை அதிகாரியாக இருந்த சுகாசினி ஆகியோர் கொடநாட்டில் இருந்த போலீசாரை கொள்ளை நடந்த அன்று வராமல் பார்த்துக் கொண்டனர். நீலகிரியிலிருந்து எஸ்.பி. முரளிரம்பாவை தூத்துக்குடிக்கு மாற்றியபோது, அந்த சுகாசினியை அவருக்கு உதவியாளராக ஐ.ஜி. சத்தியமூர்த்தி அனுப்பிவைத்தார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் கதாநாயகனாகவும் முரளிரம்பா மாறினார். அந்த சம்பவத்திற்குப் பிறகு சி.பி.ஐ.யில் அவருக்கு பதவி வாங்கிக் கொடுத்தார் எடப் பாடி.
முரளிரம்பா சி.பி.ஐ.க்குப் போனதும் சுகாசினி நீலகிரி மாவட்டத்தின் உளவுப் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டார். சிறிய மலை மாவட்டமான நீலகிரியில் உளவுப்பிரிவு தலைவராக நீலகிரி எஸ்.பி.யையே தினமும் ஆட்டி வைக்கும் வேலையைச் செய்பவர் சுகாசினிதான். இந்த சுகாசினிதான் கொடநாடு கொள்ளை நடக்கும்போது அங்கு காவலர்களை பாதுகாப்புக்கு நிற்கக்கூடாது என எடப்பாடியிடம் இருந்து வந்த உத்தரவை செயல்படுத்தியவர். இவர் இன்றளவும் முரளிரம்பா மூலமாக சத்தியமூர்த்திக்கு, சுதாகர் தலைமையிலான டீம் என்ன அசைவுகளை மேற்கொள்கிறது என தகவல் அனுப்புகிறார். அதனால்தான் சேலம் போலீசாரும், கோவை போலீசாரும் புலனாய்வில் மேற்கொள்ளும் முன்னேற்றத்தைக் கொடநாடு சம்பவம் நடந்த நீலகிரி போலீசார் அடைய முடியாமல் தவிப்பதற்கான முக்கிய காரணம் என சுகாசினியைப் பற்றி வெளிப்படையாகவே குற்றம்சாட்டுகிறார்கள், கொடநாடு சம்பவத்தைப் பற்றி முழுமையாக அறிந்த நீலகிரி போலீசார்.
கொடநாடு கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான சஜீவனை இதுவரை போலீசார் சீரியசான விசாரணைக்கு உட்படுத்த தடையாக இருப்பது சுகாசினி, மாநில உளவுத்துறை தலைமைக்கு அனுப்பிய ரிப்போர்ட்கள்தான் என்கிறார்கள் நீலகிரி போலீசார்.
இதற்கிடையே கொடநாட்டில் சயானுடன், கனகராஜ் தலைமையில் கொள்ளை யடித்த தீபு, சதீசன் ஆகியோரிடம் இளங் கோவன், எடப்பாடிக்கு ஆதரவாக பேரம் பேசியுள்ளார். எடப்பாடிக்கு எதிராக சயான் சொன்னது பொய் என பேட்டியளியுங்கள் என சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பேசியதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதை யொட்டி கொடநாடு வழக்கை மறுபரிசீலனை செய்யும் போலீசார் அவர்களுக்கு சம்மன் அனுப்பி கொள்ளையடித்த குற்றவாளிகளை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
இது எடப்பாடி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றவாளிகள், இளங்கோவன் எங்களிடம் பேரம் பேசினார் எனச் சொன்னால், அதன் விவரங்களை போலீசார் கேட்பார்கள். அந்த விசாரணையில் கிடைக்கும் விவரங்களை வைத்து இளங்கோவனை மடக்குவார்கள். எடப்பாடி உத்தரவு இல்லாமல் இளங்கோவன் குற்றவாளிகளிடம் பேரம் பேசியிருக்கமாட்டார். சம்பவம் நடந்தது சட்டமன்றத் தேர்தலின் போது என்பதால் இளங்கோவனின் கால் ரெக்கார்டுகள் எளிதாக கிடைக்கும். அந்த தரவுகள் இளங்கோவனையும் எடப்பாடியையும் சிக்கவைக்கும். இது வழக்கமான விசாரணை தான் என்கிறார் வழக்கை விசாரிக்கும் காவல் துறை அதிகாரி.
வழக்கமானதைத் தாண்டி பல புதிய விவரங்கள் கொடநாடு விவகாரத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகிறது. அனைத்து விவரங்களும் எடப்பாடியையே குறிவைக்கிறது என்கிறார்கள் போலீசார்.