பிராமணர்கள் சாப்பிட்ட இலையில் படுத்து உருண்டால் நினைத்தது நடக்கும் என்கிற நம்பிக்கையில் கரூரில் எச்சில் இலையில் படுத்து உருண்டிருப்பது முற்போக்காளர்கள் பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
கும்பகோணத்தில் சோமநாதன் அவதானியார் -பார்வதி அம்மாளுக்கு மகனாகப் பிறந்த சிவராமகிருஷ்ணன் என்கிற சதாசிவ பிரம்மேந்திரர் வாழ்வைத் துறந்து நிர்வாண சாமியாரானவர். 1756-ஆம் ஆண்டு கரூர் மாவட்டம் காவிரி ஆற்றங்கரையின் அருகிலுள்ள நெரூர் கிராமத்தில் ஜீவசமாதி அடைந்தார். அந்த சமாதியை கோவிலாக்கி அச்சமூகத்தினர் வணங்கி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் சதாசிவர் நினைவு நாளான மே 18#ஆம் தேதி அன்னதானம் வழங்கப்படும். அதை குறிப்பிட்ட சாதியினர் மட்டும் சாப்பிடுவார்கள், அந்த எச்சில் இலைமீது பிற சாதியைச் சேர்ந்த பக்தர்கள் உருளும் நிகழ்வு நடைபெறும். அப்படி உருளுவதன்மூலமாக நினைத்த காரியம் நடைபெறுமாம். இப்படி உருளுவது மனிதர்களின் சுயமரியாதைக்கு விரோதமானது என 2014#ல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடுத்தார் த-த்பாண்டியன். அந்த நிகழ்வுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக இப்படியொரு நிகழ்ச்சி நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் நவீன்குமார் என்பவர் இந்நிகழ்வுக்கு அனுமதி கேட்டு தொடுத்த வழக்கில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இதற்கு அனுமதியளித்ததுடன், பக்தர்களின் அடிப்படை உரிமை இதுவெனவும் தீர்ப்பளித்துள்ளார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அர்ச்சகர் பயிற்சிபெற்ற மாணவர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அரங்கநாதன், “""இறை, மத, ஆன்மீக நம்பிக்கைகள் வேறு. சடங்கு என்ற பெயரில் தமிழர்கள் மீது இழிவைச் சுமத்தி பார்ப்பன சாதி மேலாண்மையை நிறுவுவது என்பது வேறு. எந்த பக்தனும் சடங்கின் பெயரால் தன்னை இழிவுபடுத்திக்கொள்வதை எந்தக் கடவுளும் ஏற்காது, அரசியல் சட்டமும் ஆதரிக்காது. அரசியல் சட்ட காவலனாய் இருக்கும் உயர்நீதிமன்றம், ஒரு மனிதன் தன்னைத்தானே இழிவு செய்துகொள்கிறேன், எச்சில் இலையில் புரள்கிறேன் என்பதை மத உரிமையாக அங்கீகரித்து தீர்ப்பளித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை உண்டாக்குகிறது. மூடநம்பிக்கைகளை வைத்துத்தான் பார்ப்பனர்கள் பன்னெடுங்காலமாக தங்கள் ஆன்மீக, சமூக மேலாண்மையை நிலைநாட்டி வருகின்றனர். பார்ப்பனர்கள் மேன்மையானவர்கள், புனிதர்கள், அவர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் உருண்டால் ஆன்மபலம் கிடைக்கும் என்று நம்பவைக்கும் தந்திரமே நெரூர் சடங்கு. சமத்துவத்தை வ-யுறுத்தும் தமிழ் ஆன்மீக மரபுக்கு எதிராக, தொடர்ந்து செயல்படும் பார்ப்பன வைதீக ஆரிய ஆன்மீக மரபு, கோடிக்கணக்கான தமிழ் மக்களைக் தொடர்ந்து அடிமைத்தனத்தில் நிறுத்திவைக்க முயலும் நரித்தனமே. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கடவுளையே கேள்வி எழுப்பிய சுயமரியாதை மரபு கொண்ட தமிழக பக்தர்கள் நெரூர் எச்சிலை சடங்கை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.
பக்தி இலக்கிய காலத்தில் அடிமைத்தனமாக வாழ்வதே லட்சியம் என்பதான கருத்து திட்டமிட்டு பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டு அதற்கு சூத்திர பஞ்சமர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். அந்த வரலாறு தான் மீண்டும் நிகழ்கிறது. உடன்கட்டை ஏறுதல், தேவதாசி முறை, பால்ய திருமணம், அனைத்து இந்துக்களும் அர்ச்சகராக மறுப்பு போன்ற வைதீகத்தின் பெயரிலான சமூகக் கொடுமைகளை தமிழ் ஆன்மீக உலகம் ஒருபோதும் ஏற்றதில்லை. சட்டவிரோத, ஆன்மீக விரோத, மனித குலத்துக்கு எதிரான மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை தமிழ் ஆன்மீக உலகின் சார்பில் நிராகரிக்கிறோம். நமது முதலமைச்சர் உடனடியாகத் தலையிட்டு சமூகப் பாகுபாட்டை விதைக்கும் இத்தீர்ப்பை ரத்துசெய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்''’’ என்றார்.
இதுகுறித்து திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ""கருநாடகாவில் குக்கே சுப்ரமண்யா கோவில் உள்பட பல கோவில்களில் மட்டை ஸ்நானம் என்ற எச்சில் இலைமீது நடத்தப்பட்டு வந்த அங்கப்பிரதட்சணம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன், பானுமதி ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், இது பழங்கால வழக்கம்; எனவே, தடை விதிக்கக்கூடாது என்று கோவில் நிர்வாகம் வாதிட்டது. 500 ஆண்டுகால வழக்கம் என்பதால், அதைப் பின்பற்ற அனுமதிக்கமுடியாது. தீண்டாமைகூட பழங்கால வழக்கம்தான் என்பதால், அதையும் அனுமதிக்க முடியுமா? எனவே, ‘மட்டை ஸ்நானம்‘ என்ற எச்சில் இலையில் உருளும் அங்கப்பிரதட்சணத்தை அனுமதிக்கமுடியாது என்று 2014#ல் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி #எச்சில் இலைமீது உருளுவது மத அடிப்படை உரிமை அதைத் தடுக்கமுடியாது என்று உத்தரவு பிறப்பிப்பது சட்டப்படி குற்றச் செயல் அல்லவா! உச்சநீதிமன்றத்தைவிட தனக்கு அதிக அதிகாரம் உண்டு என்று நினைக்கிறாரா இந்த நீதிபதி? (ஜி.ஆர்.சுவமிநாதன்)’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆன்மீகத்தின் பெயரில் மனிதனின் சுயமரியாதையை அழிக்கும் இந்த நிகழ்வுக்கு தடை விதிக்கவேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் கருத்து.
.