யூ -ட்யூபரான பப்ஜி மதனின் ஆபாச விளையாட்டுகளுக்கு ஒருவழியாய் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது காவல்துறை. அடுக்கடுக்காக எழுந்த போக்ஸோ புகார்களால், அந்த இணையதள வில்லனை 18-ந் தேதி காவல்துறை அதிரடியாகக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறது.

சென்னை வடபழனியைச் சேர்ந்த அபிசேக் ரபி என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவாலிடம், "பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஆபாசமாகப் பேசி, பல வகையிலும் பாலியல் டார்ச்சர் கொடுத்துவரும் மதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அவனது யூடியூப் சேனலையும் முடக்கவேண்டும்'’என்று கவலையோடு புகார் கொடுத்தார். அதேபோல் புளியந்தோப்பு காவல் நிலையத்திலும் பிரவீன் என்பவர் புகார் கொடுக்க... நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த கமிஷனர், உடனடியாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரை முடுக்கிவிட்டார். இதைத் தொடர்ந்து குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி, துணை கமிஷனர் நாகஜோதி ஆகியோர் மேற்பார்வையில் சைபர் கிரைம் உதவி கமிஷனர் வேல்முருகன் தலைமை யிலான தனிப்படை ஜரூராகக் களத்தில் இறங்கியது. விசாரணைக்கு வரும்படி மதனுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவன் விசா ரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டான்.

pubgmadan

இந்தநிலையில், மதனுக்கு முன்ஜாமீன் கொடுக்கவேண்டும் என்று அவரது வழக்கறிஞர் தரப்பு, சென்னை உயர்நீதிமன்றத்திடம் ஓட... நீதிபதி தண்டாயுதபாணி அமர்வின் முன் அது விசாரணைக்கு வந்தது. அப்போது, "மதன் பேசிய பேச்சுக்களை எங்களால் காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. நீங்கள் அதை முழுதாகக் கேட்டுவிட்டு, நாளை வந்து மனுத்தாக்கல் செய்யுங்கள்''’என்று, அவர்களைத் திருப்பியனுப் பியது நீதிமன்றம்.

Advertisment

இதில் எரிச்சலான மதன், தலைமறைவு நிலையிலேயே தெனாவெட்டாக ஒரு ஆடியோவை வெளியிட்டான். அதில்... தன் தோழி ஒருவரிடம் போலீஸ் தேடுவது குறித்து கிண்டலாகப் பேசிய அவன், "என் படம்னு எந்த எந்த படத்தையோ வச்சிக்கிட்டு போலீஸ்காரங்க என்னைத் தேடறாங்க. என்னை இவங்களால் பிடிக்க முடியாது. இதையெல்லாம் அவங்க குஜாலாக எடுத்துக்கிட்டு போகணும். நித்தியானந்தாவே பிடிபடாமல் வெளியில் இருக்கும்போது என்னைப் பிடிச் சிடுவாங்களா? அப்படியே பிடித்து கைதுசெய்து சிறையில் அடைத்தால், வெளியில் வரும் போது, என் ஆட்டம் இன்னும் அக்ரசிவ்வா (வெறித் தனமா) இருக்கும்'' என்றும் சவால்விட்டான்.

"யார் இந்த மதன்? அவன் அப்படி என்னதான் செய்தான்?' என்று விசாரிக்கத் தொடங்கினோம்.

pubgmadan

Advertisment

சேலத்தைச் சேர்ந்த டிப்ளமோ பட்டதாரியான மதன், இளசுகளை ஈர்க்கும் பப்ஜி ஆன்லைன் விளையாட்டில் அத்துப்படியாகி, அதை வைத்தே யூடியூப் சேனல் தொடங்கி கல்லா கட்டினான். புலனாய்வு அமைப்புகள் எளிதில் கண்டுபிடித்துவிடக் கூடாது என்று, "வி.பி.என்.' எனப்படும், தனி நபர்களுக்கான ரகசிய இணைய இணைப்பையே எச்சரிக்கையாகப் பயன்படுத்தி யிருக்கிறான். விளையாட்டின்போது, தனது ரன்னிங் கமெண்ட்ரியில் கொஞ்சுகிற பாணியில் கெட்ட வார்த்தைகளையும் சேர்த்துக்கொண்டு இவன் பேசத்தொடங்கியதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சிறுமிகள் தொடங்கி இளம்பெண்கள் வரை இவனுக்கு பலரும் ஏகபோக ரசிகர்களாய் ஆகியிருக்கிறார்கள். 100 பேர்வரை சேர்ந்தும் விளையாடக்கூடிய இந்த விளையாட்டில் தானும் ஒரு நபராகக் கலந்துகொள்ளும் மதன், தன் முகத்தையும் குரலையும் மாற்றிக்கொண்டு பணம் பண்ணத் தொடங்கியிருக்கிறான்.

வியூவர்ஸின் கமெண்ட்டுகளுக்கு மதன் பதில் சொல்லவேண்டும் என்றால், அதற்கு 10 ஆயிரம் ரூபாய் கூட அவன் வசூலித்திருக்கிறான். அந்த அளவுக்கு இளைஞர்கள் அவனை ஹீரோ ரேஞ்சுக்குப் பார்த்திருக்கிறார்கள். அதனால் பல யூடியூப் சேனல்களைத் தொடங்கினான். அதில் "டாக்ஸின் மதன் 18+' என்ற ஆபாசதளமும் உண்டு. தன் ஹீரோயிசத்தைப் புகழ்ந்து விமர்சனம் செய்கிறவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் முதல் 5 லட்ச ரூபாய்வரை பரிசு கொடுத்தும் பலரை வீழ்த்தியிருக்கிறான்.

தன்னுடன் இணையத்தொடர்பு மூலம், சேலத்தைச் சேர்ந்த கிருத்திகா என்ற இளம் பெண்ணை மயக்கி தனியே குடும்பம் நடத்தி, அதன் பின்னரே திருமணம் செய்துகொண்டானாம். நாளடைவில் கிருத்திகாவும் மதனுடன் சேர்ந்து யூடியூப்பில் பாலியல் ரீதியில் வலைவிரித்து எல்லைமீறி விளையாடத் தொடங்கி விட்டாள்.

pubgmadan

இது குறித்து பப்ஜி வட்டாரத்தில் நாம் விசாரித்த போது, ’"சிறுமிகளை வீழ்த்தும் வகையில் பலான கதைகளை அவிழ்த்துவிட்டிருக்கிறான். இன்ஸ்ட்ராகிராமில் தன்னைத் தொடர்புகொள்ளும் பெண்களை சாட் ரூமுக்கு வரச்சொல்லி, அவர்களின் அங்கங்களை எல்லாம் ஆபாசமாக வர்ணித்திருக்கிறான். பெண்களைக் கொண்டு சிறுவர்களிட மும் மோசமாகப் பேசவைத்திருக்கிறான் இந்த காமுகன்'' என அதிரவைக்கிறார்கள்.

14-ந் தேதி மதனைத் தேடி போலீஸ் டீம் ஒன்று சேலம் நோக்கி விரைய... இன்னொரு டீம் சோழிங்க நல்லூர் பகுதியில் இருக்கும் மதன் வீட்டுக் கதவைத் தட்டியது. அங்கிருந்த மதனின் அப்பா, அண்ணன் ஆகியோருடன் அவருக்கு தொடர்பு அறுந்துவிட்டது என்பதை வாக்குமூலமாக எழுதி வாங்கிக்கொண்ட போலீஸ் டீம், அவர்கள் மீதான கண்காணிப்பை பலப்படுத்தியது.

சேலம் சென்ற டீமோ, அங்கு தாதகாப்பட்டி பகுதியில் இருக்கும் மதனின் வீட்டுக் கதவைத் தட்டியது. அங்கு கதவைத் திறந்த மதனின் மனைவி கிருத்திகா, போலீஸ் டீமைக் கண்டதும் பதறத் தொடங்கினாள். கிருத்திகாவின் செல்போனை ஆராய்ந்ததில் பல படங்கள் சிக்கியதுடன், தர்மபுரி பகுதியில் மதன் மறைந்திருப்பதையும் கிருத்திகாவின் செல்போனே காட்டிக்கொடுத்தது. மதனின் யுடியூப் நிர்வாகி என்ற முறையில் கிருத்திகாவை கைது செய்து, 9 மாத குழந்தையுடன் சென் னைக்கு அழைத்து வந்து சிறையில் வைத்தது போலீஸ்.

செல்போன் டவர் சிக்னல்களை வைத்து ஆராய்ந்த போலீஸ் டீம், தர்மபுரி, கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ் சாலையில் இருக்கும் குண்டலப் பட்டியில், கனிஷ் என்ற தனியார் விடுதியில் மதன் பதுங்கியிருந்ததைக் கண்டுபிடித்து 18-ந் தேதி மடக்கியது.

dd

"என்னையும் என் பெண்டாட்டி, பிள்ளைகளையும் விட்ருங்க சார். நான் சம்பாரிச்ச பணத்தை எல்லாம் கொடுத்துடறேன்’என்று போலீஸாரின் காலில் விழுந்து மதன் கெஞ்சத் தொடங்கினான்'' என்கிறார்கள். அங்கிருந்து சென்னைக்கு மதனை அன்று இரவே கொண்டுவந்தனர். கமிஷனர் அலுவலகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்ட மதனை, அங்கே காத்திருந்த ஊடகத்தினர் மடக்கி, மடக்கி படம் பிடிக்க, "நான் என்ன பிரைம் மினிஸ்டரா? என்னை இப்படி படம் பிடிக்கிறீங்களே?''’என்று எரிச்சலைக் காட்டி யிருக்கிறான் அவன்.

இரவு முழுக்க அவனிடம் தீவிர விசாரணையை நடத்திய போலீஸார், மதனை 19-ந் தேதி சைதாபேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதற்குமுன்பு நடத்தப்பட்ட விசாரணையின் போது, தன் மீதான குற்றங்களை ஒப்புக்கொண்ட மதன், வருமான வரியைச் செலுத்தாமல் தான் அரசை மோசடி செய்து வந்ததாகவும் தெரிவித்திருக்கிறான். சிறையில் அடைக்கப்பட்ட மதனையும், அவன் மனைவியையும் தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கும் முயற்சியில் இருக்கிறது போலீஸ்.

பப்ஜி பற்றி நன்கறிந்தவரான சென்னை பல்கலைக் கழக மாணவி பவானி, "இது டேஞ்சரசான விளையாட்டு. மனநிலையைக் கொஞ்சம் கொஞ்சமாய் இது கெடுத்துவிடும். இந்த விளையாட்டில் அதிகம் ஈடுபடுகிறவர்களுக்கு, அந்த விளையாட்டுக் காட்சிகள் தங்களைச் சுற்றி நடப்பது போலவே இருக்கும். அது அவங்க நடத்தையையே மாற்றிவிடும். அதனால் மதனுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து முதலில் கவுன்சிலிங் கொடுக்கணும்''’என்கிறார் அக்கறையாய்..

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியரான பிரகாஷோ, "தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிரான விளையாட்டு இது. சின்ன பசங்களெல்லாம் "அவனைக் கொல்லு, இவனைக் கொல்லு'ன்னு ஒருமையில் பேசி விளையாடறது இதில் சகஜம். பப்ஜி வெறியில், அப்பா அம்மாகிட்டயே திருடியவர்களையும் எனக்குத் தெரியும்''’என்றவர்...’"இந்த விளையாட்டில், கெட்டவார்த்தைகளைச் சரளமாகப் பேசுறதுதான் கெத்துன்னு சிறுவர்களையும் நினைக்க வச்சிருக்கான் மதன். இவனை சும்மா விடக்கூடாது. இவன் பின்னணி பற்றியும் விசாரிக்கணும்''’என்கிறார் கோபமாக.

f

சமூக ஆர்வலரும் கவிஞருமான வதிலை பிரபா, "பப்ஜி மதனால் சிறுவர், சிறுமிகள் தொடங்கி இளைஞர்கள்வரை பாதிக்கப் பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. இதுபோல் இன்னும் திரைமறைவில் நடக்கும் குற்றங்களைக் கண்டறிந்து ஒடுக்கணும். எனக்குத் தெரிந்து இன்று 40 சத இளை ஞர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள்'' என்கிறார் கவலையாய்.

ஆபாசமாகப் பேசி பணம் பறித்த மதன், ஏறத்தாழ 8 லட்சம் வாடிக்கை யாளர்களை வைத்திருக்கிறானாம். இதன் மூலம் மாதத்திற்கு 10 லட்சம்வரை அவன் லாபம் பார்த்திருக்கிறானாம். இது போதா தென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி செய்கிறோம் என்று சொல்லியும், நிறைய நன்கொடைகளை வசூலித்திருக்கிறானாம். போலீஸ் டீம், கிருத்திகா பெயரில் மதன் டெபாசிட் செய்திருந்த 4 கோடி ரூபாயை முடக்கியிருக்கிறது. இதுதவிர, ஆபாச வருமானத்தின் மூலம் 2 ஆடி கார்களையும் 2 பங்களாவையும் வாங்கி வைத்திருக்கும் மதன், பங்குச் சந்தையிலும், பிட்காயின் பிசினஸிலும் முதலீடு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது..

கஸ்டடி விசாரணையின்போது மதன் ஜோடி தரவிருக்கும் வாக்குமூலத்திலும் பல பகீர் தகவல்கள் கிடைக்கலாம் என்று காவல்துறைத் தரப்பு எதிர்பார்க்கிறது.

-நாடன்

_________________

மூளையை சிதைக்கும் பப்ஜி கேம்!

pubgmadan

ஒரு தனித் தீவில் சிக்கிக்கொள்பவர்கள் அங்கு இருக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொண்டு, மற்றவர்களைக் கொன்று தங்களைக் காப்பாற்றிக் கொள்வதுதான் பப்ஜி (PUBG -Player Unknown's Battlegrounds) ) விளையாட்டின் மையக் கரு. இதில் விளையாடுகிற ஒவ்வொருவரும் ஒரு கேரக்டரை தேர்ந்தெடுத்துக் கொண்டு, அந்தக் கேரக்டராகத் தங்களைப் பாவித்துக்கொண்டு விளையாடுவார்களாம். இப்படி விளையாடும்போது எதிரில் வருபவர்களை மூர்க்கமாகத் தாக்கிக் கொல்லும் விளையாட்டர், அப்போது தங்களை மறந்து ஆரவாரக் கூச்சலையும் வெளிப்படுத்துவார்களாம். காரணம், உண்மையிலேயே இது விளையாடுகிறவர்களுக்கு க்ரைம் அனுபவத்தைக் கொடுக்கிறதாம். இந்த விளையாட்டாளர் வடிவமைத்து மார்க்கெட் செய்த சீனாவைச் சேர்ந்த பப்ஜி நிறுவனம், தென்கொரியாவில் இருந்து இயங்கும், புளுஹோலின் என்ற சைபர் விளையாட்டு நிறுவனத்தின் கிளை நிறுவனம், பப்ஜி விளையாட்டுக்கான காட்சி அமைப்புகள் 2000-ல் வெளியான ’பேட்டில் ராயல்’ என்ற ஜப்பானிய திரைப்படக் காட்சிகளைப் போல் சித்தரிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியா உள்பட உலக நாடுகள் பலவும் இந்த பப்ஜி விளையாட்டுக்குத் தடை விதித்திருக்கின்றன.