தொடர்ந்து 10 வருடங்கள் அ.தி.மு.க. நடத்திய ஆட்சியின் மீதான சலிப்பு -வெறுப்பு ஆகியவை தி.மு.க.வுக்கு சாதகமாகுமா என அரசியல் நோக்கர்கள் கவனித்து வந்த நிலையில், அவர்களின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்க்கின்றன புதிய அரசியல் சக்திகள். "தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடமாட்டோம், ஸ்டாலினை முதல்வராக விடமாட்டோம்' என பா.ஜ.க. வெளிப்படையாகவே பேசி வரும் நிலையில்... இந்த புதிய அரசியல் சக்திகள் மீது "பா.ஜ.கவின் பி டீம்' என்ற விமர்சனமும் உள்ளது.

bteam

உருது முஸ்லிம்களை குறி வைக்கும் ஓவைஸி!

பீகார் சட்டமன்றத் தேர்தலிலும் தெலங்கானா உள்ளாட்சித் தேர்தலிலும் வாக்குகளை பிரிப்பதில் கணிசமான பங்கு வகித்து, பா.ஜ.க. கணக்குக்கு தோதாக அமைந்தது ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். (அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன்) கட்சி. கடந்த 2016 தேர்தலில், தமிழகத்தில் வாணியம் பாடியில் போட்டியிட்ட ஏ.ஐ.எம்.ஐ.எம். வேட்பாளர் வக்கீல் அகமது-வால், 10117 வாக்குகளைப் பெற்று நான்காம் இடத்துக்கு வர முடிந்தது.

Advertisment

ஓவைசி, ஹைதராபாத் எம்.பி.தான். ஆனாலும், அவரது மஜ்லீஸ் கட்சி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு என, நாளொரு மேனியும் பொழு தொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில், கிருஷ்ணகிரி, வேலூர், வாணியம்பாடி, திருச்சி, மதுரை, புதுக்கோட்டை. திருநெல்வேலி, ராமநாதபுரம் என, 25-லிருந்து 30 தொகுதிகள் வரை போட்டி யிட்டு, தங்களின் பலத்தைக் காட்டுவதற்கு ஓவைசி ஆயத்த மாகி வருகிறார் எனச் சொல் கிறார்கள், மஜ்லீஸ் கட்சியினர். இங்கே இஸ்லாமிய கட்சிகள் மற்றும் இயக்கங்கள் பல இருந் தாலும், உருது முஸ்லிம் வாக் காளர்களே இந்த அமைப்பின் முக்கியமான இலக்காகும். அதன்மூலம் தமிழகத்திலும் தங்களுக்கான தனித்தன்மையை நிரூபிக்கத் துடிக்கிறாராம் ஓவைசி.

தமிழ்நாட்டுடன் தேர்தலை சந்திக்கும் மேற்கு வங்கத்திலும் ஓவைசி பரபரப்பு உள்ளது. அம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி “""இங்குள்ள சிறு பான்மையினர் வாக்குகளைப் பிரிப்பதற்கு ஹைதரா பாத்திலிருந்து ஒரு கட்சிக்கு பணம் கொடுத்து பா.ஜ.க. அழைத்து வந்திருக்கிறது. "பீகார் தேர்தலில் அந்தக் கட்சி வாக்குகளைப் பிரித்தது நிரூபணமாகி விட்டது'’என்று ஓவைசி குறித்துப் பேச... அவரோ, "என்னை விலை கொடுத்து வாங்கக்கூடியவர்கள் இங்கே யாரும் இல்லை...'’என்று மறுத்திருக்கிறார். ஆனாலும், ஓவைசி களமிறங்குவதை பாஜ.க. தனக்கு சாதகமாகவே பார்க்கிறது.

""தமிழ்நாட்டில் சிறுபான்மை மதத்தினர் வாக்குகளில் அதிகம் இருப்பது, முஸ்லிம் சமுதாயத்தின் வாக்குகள்தான். பொதுவாகவே இது தி.மு.க.வுக்கு அதிகளவில் சாதகமாக இருக்கும். அடுத்ததாக, காங்கிரஸ் ஆதரவு மனநிலை உண்டு. இரண்டும் ஒரே கூட்டணி என்ற நிலையில், முஸ்லிம் வாக்குகள் மொத்தமாக அந்தக் கூட்டணிக்கு செல்லும் வாய்ப்பு உண்டு. கடந்த பல ஆண்டுகளாக புதிய புதிய முஸ்லிம் அமைப்புகள் உருவாகி, அரசியல் களத்திற்கு வந்துள்ளன. முஸ்லிம் லீக், ம.ம.க. ஆகியவை தி.மு.க கூட்டணியில் இருந்தாலும் எஸ்.டி.பி.ஐ. போன்றவை மாற்று வழியில் பயணிக்கின்றன. அவை பிரிக்கும் வாக்குகளுடன், ஓவைசி பிரிக்கும் உருது முஸ்லிம் வாக்குகளும் பா.ஜ.க. கணக்கை நேர் செய்யலாம்'' என்கிறார்கள்.

Advertisment

கிறிஸ்தவ வாக்குகளை ம.நீ.ம. கவருமா?

b

கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்குக்கு 3.63 சதவீத வாக்குகள் கிடைத்தது. அதனால், சட்டமன்றத் தேர்தலில் மற்ற கட்சிகளுக்கு முன்பாக தீவிரப் பரப்புரையைத் தொடங்கிவிட்டார். 60 ஆண்டு களுக்கும் மேலான சினிமா அனுபவம் தந்துள்ள பிரபலத்தன்மை கமலின் பெரும் பலம். அத்துடன் பகுத்தறிவாளர்-அறிவுஜீவி போன்ற முற்போக்கு முகமும் உண்டு. அவரும்கூட தேர்தல் களத்தில் சிறுபான்மை மதக் காவலனாகத் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார்.

""நான், கிறிஸ்டியன் ஆர்ட்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் சென்டரில் சேர்ந்து, பணத்துக்காக கிறிஸ்தவத்தை பரப்பும் வேலை செய்தேன். எந்த அளவுக்கு என்னுடைய சொந்த மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தேனோ, அதே அளவுக்கு கிறிஸ்தவத்தின் மீதும் நம்பிக்கை வைத்திருந்தேன். ரூ.120 ஸ்டைஃபண்ட் பணத்துக்காகத்தான் அங்கு சென்றேன். உண்மையில் நான் பகுத்தறிவுவாதி'' எனச் சொன்ன கமல்ஹாசனின் வார்த்தைகளே, "வாக்குகளைப் பிரிப்பதுதான் அவருடைய நோக்கம்' என்று அவருக்கு எதிராகத் திருப்பி விடப் படுகிறது. கிறிஸ்தவத்தைத் தழுவியது, அதற்கு ஆதரவாகப் பேசுவது என கமல்ஹாசனின் குடும்பத்தினரையும், இந்த மத அரசியலில் வலிய இழுக்கின்றனர்.

கமல்ஹாசனிடம் ""உங்க கட்சிக்கு ஃபண்டிங் பண்ணுவது கிறிஸ்தவ மிஷனரிகள்தானே?''’என்று முகத்துக்கு நேராகவே கேள்வி கேட்டபோது, “""எனக்கு சிரிப்புத்தான் வருகிறது''’ என்று மறுத்ததும் நடந்திருக்கிறது.

சர்ச்சைக்கு ஆளாகும் சீமான்!

தமிழின மீட்சி கொள்கையில் தீவிரம் காட்டிவரும் இளைஞர்களைத் தன்னகத்தே கொண்ட, சீமானின் "நாம் தமிழர்' கட்சி, தேர்தலில் தனித்தே போட்டியிட்டு வருகிறது. ""நா.த.க.வும் ஜெயிப்பதில்லை. ஆள்வோருக்கு மாற்றாக இருப்பவர்களையும் ஜெயிக்க விடுவதில்லை. ஓட்டுப் பிரிப்பே நா.த.க.வின் வேலையாக உள்ளது'' என்ற விமர்சனத்தை சீமான் ஏற்பதில்லை. ’’""என்னுடைய தத்துவத்துக்கும், கருத்தியலுக்கும் யாருடனும் கூட்டு சேர முடியாது. ஊழலையும் லஞ்சத்தையும் ஒழித்துக்கட்டுவதே எனது முதன்மையான கொள்கை. ஓட்டரசியல் ஒரு பொருட்டே அல்ல. உரிமை அரசியலே முக்கியம்''’என்கிறார், கூலாக.

ரஜினி வருகை யாருக்காக?

"நாட்டில் சிஸ்டம் சரியில்லை. எனக்கு கிட்னி சரியில்லை' என்று உடல்நலனைக் காரணம் காட்டி அரசியல் வருகையை தள்ளிவைக்க நினைத்த ரஜினி, மீண்டும் திடீர் வேகம் காட்டியிருப்பதற்கு பா.ஜ.க நெருக்கடிதான் காரணம் என்பதை ரஜினி அறிமுகப்படுத்திய அர்ஜூன்மூர்த்தியை முன் வைத்தே விவாதம் எழுந்தது. “""பா.ஜ.க.வால் தமிழகத்தில் பெரிய அளவில் ஓட்டு வாங்க முடியாது. ஆனால், அதிகாரத்தில் இருப்பதால், தங்களுக்கு வேண்டாத கட்சிக்கு விழவேண்டிய ஓட்டுகளைத் தடுத்துவிட முடியும். எதிரிக்கு இரண்டு கண்ணும் போய்விடவேண்டும் என்பதில் அழுத்தமாக இருப்பார்கள்’’ என்கிறவர்கள், ரஜினியின் அரசியல் வருகை மூலம் ஆளுங்கட்சி மீதான அதிருப்தி வாக்கு, மொத்தமாக தி.மு.க பக்கம் போகாமல் சிதறும். அது தி.மு.க.வின் ஆட்சிக் கனவைத் தகர்க்கும்'' என்கிறார்கள்.

""தி.மு.க., அ.தி.மு.க. என அரை நூற்றாண்டு காலம் மாற்றி மாற்றிப் பார்த்துவிட்ட தமிழக மக்களில் கணிசமானவர்கள் திராவிடக் கட்சி களுக்கு மாற்றான அரசியலை எதிர்பார்க்கின்றனர். ஆனால், அதற்கான வலுவான கட்டமைப்பு உருவாகவில்லை. ரஜினிக்கு தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆண்-பெண் பேதமின்றி அவர் மீதான ஈர்ப்பு உண்டு. எளிமையானவர் என்ற பெயரும் உண்டு. அரசியலுக்கு வந்து சம்பாதிக்க வேண்டிய அவசியம் ரஜினிக்கு இல்லை என்கிற இமேஜூம் இருப்பதால், தி.மு.க.வை மட்டுமின்றி அ.தி.மு.க. வாக்குகளையும் ரஜினி சேதப்படுத்துவார். கழகங்களின் வாக்குபலம் சிதையும்போது அது இயல்பாகவே பா.ஜ.க.வின் நுழைவுக்கு சாதக மாகும்'' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

தமிழகம் வழக்கமாக சந்தித்துவரும் அ.தி.மு.க, தி.மு.க இடையிலான ஆட்சி மாற்றத்திற்குத் தடையாகவும், பா.ஜ.க.வின் கணக்குக்கு சாதகமாகவும் களத்தில் இறங்கும் கட்சிகள் "பா.ஜ.க.வின் பி டீம்' என்ற விமர் சனத்திற்கு ஆளாகின்றன. ஜனநாயகம் எல்லாத் தரப்புக்கும் இடமளிக்கிறது. வெற்றி என்பது மக்களுக்கு ஏற்படும் நம்பிக்கையின் அடிப்படையிலானது. ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு நம்பிக்கையைப் பெறுவதென்பது அத்தனை எளிதா என்ன?

-ராம்கி

______________

முடிவுகளை மாற்றிய சிறுபான்மை வாக்குகள்!

v

பண்பாளர் -நீதிக்கட்சி காலத்திலிருந்து அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் எனக் கட்சி கடந்து பெயர் பெற்ற தி.மு.கவின் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் 2001-ல் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டபோது, எதிர்த்து நின்றவர் அ.தி.மு.கவின் வளர்மதி ஜெபராஜ் பெரிய அறிமுகம் இல்லாதவர். பி.டி.ஆருக்கு சொந்தக் கட்சியிலேயே குழி பறிக்கப்பட்ட நிலையில், கிறிஸ்தவ சமுதாயத்தவரான வளர்மதி ஜெபராஜ் தேவாலயங்களுக்கு சென்று வாக்குகளை உறுதிப்படுத்த, சுமார் 700 வாக்குகளில் வெற்றி பெற்றார். பி.டி.ஆரைத் தோற்கடித்ததால் அமைச்சர் பதவியும் தந்தார் ஜெ.

2006 தேர்தலில் தி.மு.க ஆட்சிக்கு வந்தபோதும், திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட கலைஞரின் நண்பரான பேராசிரியர் நாகநாதனால் வெற்றி பெறமுடியவில்லை. அ.தி.மு.க சார்பில் ஜெ., தனது தோழி ஃபதர் சயீத்தை நிறுத்தினார். முஸ்லிம் சமுதாய வாக்குகள் ஃபதரை வெற்றி பெறவைத்தன.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கையில் எச்.ராஜா, கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் சிறுபான்மை எதிர்ப்பு நிலைப்பாடே காங்கிரஸை வெற்றிபெற வைத்தது.