மதுரையில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வரின் தலைமையில் பொதுக்குழு நடைபெற்ற பரபரப்பான சூழலில், திடீரென மதுரை மேயரின் கணவரும் பி.டி.ஆரின் தீவிர ஆதரவாளருமான பொன் வசந்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியிருப்பது தி.மு.க.வினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர்மீது, 'மாநகராட்சி டெண்டரில் அதிக கமிஷன் கேட்கிறார், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை என அனைத்து டெண்டர்களிலும் அதிகாரிகளையும், காண்ட்ராக்டர்களையும் மிரட்டுகிறார்' எனத் தொடர்ச்சியாகப் புகார்கள் தலைமைக்கு வந்ததால் இந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறது. இன்னொருபக்கம், இதற்கெல் லாம் கட்சி நடவடிக்கை எடுத்தால் எல்லோரையும்தானே எடுக்கணும். இது வேறு விசயமாக இருக்குமென்றும் பேசப்படுகிறது. ஜூன் 1ஆம் தேதி முதல்வர் தலைமையில் நடக்கும் பொதுக்குழுக் கூட் டத்தை எவ்வாறு நடத்த வேண்டு மென்று ஆலோ சிப்பதற்காக மாவட்ட செய லாளர்கள் மூர்த்தி, மணிமாறன், தளபதி ஆகியோர் நடத்திய செயல் வீரர்கள் கூட்ட நாளில், போட்டியாக மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தை நடத்தி னார் மதுரை மேயர். தி.மு.க. கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட் டத்தை புறக்கணித்துவிட்டு கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்நிலையில், அ.தி.மு.க. துணையுடன் கூட்டம் நடத்தித் தீர்மானங்களை நிறைவேற்றினார். இது மாவட்ட செயலாளருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் மதுரை மேற்கு தொகுதி எனக்குத்தான் என்றும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன என்றும், தொகுதியின் வட்டச் செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், கவுன்சிலர்களுக்கு போன் போட்டு தன்னை முன்னிறுத்தி வேலைசெய்யச் சொல்லியிருக் கிறார் பொன்வசந்த். இந்த விஷயம் அமைச்சர் மூர்த்தியின் கவனத்திற்கு போக, "இப்பதான் தொகுதியை சீரமைத்து வேலைபார்க்கத் தொடங்கியிருக்கோம். எனக்கே தெரியாம காய் நகர்த்தலா?'' என்று பொன்வசந்தை கண்டித் துள்ளார். இதுகுறித்தும் கட்சித் தலைமைக்கு புகார்கள் அனுப்பப்பட்டன. அப்போதும் தலைமை மௌனம் சாதித்த நிலையில், மேயரின் கணவர் பொன்வசந்த் போனில் பேசிய அந்த ஆடியோ உதயநிதிக்கு அனுப்பப்பட, அடுத்த வினாடியே பொன்வசந்த் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே அதிரடியாக நீக்கப்பட்டார் என்ற செய்தி தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
இந்நிலையில், மதுரையில் பழங்காநத்தம் டி.வி.எஸ். நகர் ரயில்வே மேம்பாலத்தின் ஜெயந்திபுரம் பிரிவு பாலத்தை காணொளி மூலமாக முதல்வர் ஸ்டாலின் 29ம் தேதி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் சங்கீதா மனோஜ். கமிஷனர் சித்ரா ஆகியோர் பங்கேற்றனர். மேயர் இந்திராணி பொன்வசந்த் பங்கேற்கவில்லை. அன்று காலை அவரது கணவர் பொன்வசந்த் கட்சி உறுப்பினர் பொறுப்பிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட தகவல் வெளியான நிலையில்தான், வேண்டுமென்றே மேயர் கலந்துகொள்ளவில்லை. இது மேலும் மேயருக்கு சிக்கலை ஏற்படுத்தும்'' என்கின்றனர் தி.மு.க.வினர்.
இவ்விவகாரம் குறித்து தி.மு.க.வின் முக்கிய நபரிடம் கேட்டபோது, "தி.மு.க.வில் மேயர், அமைச்சர் எவராக இருந்தாலும் கட்சியின் மாவட்ட செயலாளருக்கு கட்டுப்பட்ட வர்கள்தான். தி.மு.க.வில் மாவட்ட செயலாளருக்குத்தான் முழு அதிகாரமும். பொதுக்குழுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் உள் ளாட்சி பிரதிநிதிகளும் பங்கேற்க வேண்டுமென்று மாவட்ட செயலாளர்கள் தெரிவித்தும் மேயர் பங்கேற்கவில்லை.
அதேநாளில் வேண்டுமென்றே மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தை நடத்தி, மாவட்ட செயலாளர்களுக்கே நெருக்கடி கொடுத்தார். இதன் பின்னணியில் பொன் வசந்த் இருந்துள்ளார். கவுன்சிலர்கள் சிலர் மாநகராட்சி கூட்டத்தை ஒத்திவைக்குமாறு அலைபேசியில் பொன்வசந்திடம் கேட்டுள்ளனர். அதற்கு பொன்வசந்த், "நாங்கதான் முன்கூட்டியே தேதி முடிவுசெய்தோம். வேண்டுமென்றால் செயல்வீரர்கள் கூட்டத்தை தள்ளிவைக்கச் சொல்லுங்கள்'' என்றவர், அமைச்சர் மூர்த்தியை ஒருமையில் விமர்சித்துப் பேசியுள்ளார். அதற்கு எதிர்த்தரப்பில் பேசியவர் கண்டித்தும்கூட மீண்டும் அதேபோல் ஒருமையில் பேசியுள்ளார்.
இந்த போன் ஆடியோ ஆதாரங்கள் கட்சித் தலைமைக்கு அனுப்பப்பட்டன. கட்சித் தலைமையோ, பி.டி.ஆர்.தியாகராஜனிடம் அந்த ஆடியோவை அனுப்பி விளக்கம் கேட்க, பதறிப்போனவர்... பொன்வசந்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்க... அவரோ, "அண்ணே, நான் நேரில் வருகிறேன்'' என்றவரை, "இங்கு வரவேண்டாம், விளக்கத்தை தலைமையிடம் கொடு'' என்றவர், கட்சித் தலைமையிடம், "எனக்கு கட்சிதான் முக்கியம், அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுத்துக்கொள் ளுங்கள்'' என்றதும், பொன்வசந்த் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு பின், அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தி.மு.க. கவுன்சிலர்கள் தயாராகி விட்டனர். ஏற்கெனவே நடந்த மேயர் தேர்தலில் பி.டி.ஆர். பக்கம் கொடி பறக்க, அவரது ஆதரவாளரான இந்திராணி பொன்வசந்த் மேயரானார். அப்போதிருந்தே அவர்மீது பல்வேறு புகார்கள் எழ, தி.மு.க. கவுன்சிலர்களே தி.மு.க. மேயரை எதிர்த்து போராட்டம் நடத்தும் சூழல் வந்தது. தற்போது நிலவரம் மாறியிருப்பதால், பொதுக்குழு கூட்டத்துக்கு பின்னர் மேயரை மாற்றுவதற்கான பேச்சு அடிபடுகிறது. அவர்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரத் தயாராகிவிட்டனர். எனவே, அடுத்த மேயராக, அமைச்சர் மூர்த்தியின் தீவிர ஆதரவாளரான சசிகுமாரின் மனைவியும், கிழக்கு மண்டல தலைவருமான வாசுகி சசிகுமார் வரக்கூடு மென்ற பேச்சு அடிபடத் தொடங்கியுள்ளது. பொதுக்குழுவுக்குப் பின் மதுரை மாநகராட்சியில் அதிரடிக் காட்சிகளைக் காணலாம்.