வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த துடிப்பான பழங்குடி இளைஞர் செல்வகணபதி சிறுவயதில் தந்தை, தாயை இழந்து பாட்டி அரவணைப்பில் எட்டாம் வகுப்புவரை படித்துவிட்டு கும்மிடிப்பூண்டியிலுள்ள லாரி பாடி பில்டிங் ஒர்க்ஷாப்பில் வேலை செய்துவந்தார். இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல், திருமணத்தில் முடிந்தது. சாதிவெறியும் கொலைவெறியும் தலைக்கேறிய கல்பனாவின் பெற்றோரால் தாக்குதலுக்கு உள்ளாகி உயிருக்கு போராடிவருகிறார் செல்வகணபதி.

பழங்குடி இருளர் மக்களின் முதல் தலைவரும், அப்போதைய முதல்வர் காமராஜருக்கு நெருக்கமாகவும், இந்திராகாந்தியின் நன்மதிப்பைப் பெற்று ‘டெல்லிக்கு வந்துவிடுங்கள்” என அழைக்கப் பட்டவருமான, இருளர்களின் தலைவர் வி.ஆர்.ஜெகன்நாதனின் பேரன்தான் இந்த செல்வகணபதி.

ss

அபிகல்பனாவும் செல்வகணபதியும் இரண்டரை ஆண்டுகாலம் ஆழமாகக் காதலித்துள்ளனர். இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த இந்தக் காதலுக்காக, தென்காசி சென்று கல்பனாவை அவரது வீட்டிலும், நர்சிங் படிக்கும் இடத்திலும் சந்தித்துப் பேசியுள்ளார். 2024-ல் கல்பனா, செல்வகணபதி காதல் கல்பனா குடும் பத்திற்கு தெரியவந்தது. இதையடுத்து கல்பனாவின் தந்தை பூமாரி, மகளிடம் "நம்ம சாதி என்ன? அவன் சாதி என்ன? அவனோடவெல்லாம் பழகலாமா? மீறிப் பார்த்தால் உன்னை மகள்னுகூட பார்க்காம கொன்னுடுவேன்''’என்று மிரட்டியுள்ளார். இதனால் நடுங்கிப்போன கல்பனா, செல்வகணபதியிடம், ’"ஊருக்குச் சென்றால் என்னைக் கொன்றுவிடுவார்கள்... என்னை நீதான் காப்பாற்றவேண்டும்''’ என்று கதறியழுதுள்ளார்.

நண்பர்கள் வீடுகளில் சில நாட்கள் அடைக்கலமாகியுள்ளனர். அந்தச் சமயம் பஞ்சட்டி என்ற ஊரில் 2024 மே 5-ஆம் தேதியன்று உறவினர், நண்பர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அவர்களைத் தேடிவந்த போலீசார் இருவரையும் தென்காசி காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். கல்பனா வை அவரது வீட்டிற்கு அனுப்பினால், அவரது உயிருக்கு உத்தரவாதமில்லை என உணர்ந்த போலீசார் தென்காசியிலுள்ள காப்பகத்தில் அவளைத் தங்கவைத்தனர். செல்வகணபதியை மறுநாள் மதுரையிலுள்ள உயர்நீதிமன்றக் கிளையில் ஆஜராகும்படி கூறியுள்ளனர்.

Advertisment

உயர்நீதிமன்றத்தில் கல்பனா, ’"எனக்கு வயது 19 ஆகிறது நான் இவரை மிகவும் நேசிக்கிறேன். நானே விருப்பப்பட்டுதான் அவருடன் சென்றேன்'’ என்று தெரிவித்துள்ளார். அத னடிப்படையில் நீதிபதிகள் கல்பனாவை அவரது கணவரான செல்வகணபதியுடன் அனுப்பி வைத்துள்ளனர்.

போலீசார் இருவரையும் சென்னைக்கு பஸ் ஏற்றி அனுப்பி யுள்ளனர். இருவரும் வியாசர் பாடியிலும், பிறகு பஞ்சட்டி பகுதியிலும் வாடகைக்கு வீடெடுத்துத் தங்கி குடும்பம் நடத்தியுள்ளனர். கும்மிடிப் பூண்டியில் ஏற்கனவே வேலை செய்த லாரி பாடி பில்டிங் ஒர்க்ஷாப்பில் செல்வகணபதி வேலை செய்துவந்தார். ஏறக் குறைய ஒரு மாதம் கழித்து, கல்பனாவின் பெற்றோர், பாட்டி ஆகியோர், ஊருக்கு வருமாறும், இங்கேயே வேலை பார்க்கலாம் என்று அழைத்துள்ளனர். இடைப் பட்ட காலத்தில் பெற்றோர் மனமாற்றமடைந்துள்ளனர் என நினைத்து இருவரும் மகிழ்ந்துள்ளனர்.

அவர்களின் பேச்சை நம்பி தென்காசி சென்றுள்ளனர். சொந்த ஊரான ஆயக்குடிக்கு செல்வகணபதியை அழைத்துச் செல்லாமல், தென்காசி ரயில்வே ஸ்டேஷன் அருகில் வாடகைக்கு ஒரு வீடு பார்த்து, குடித்தனம் வைத்துள்ளார் பெண்ணின் அப்பா பூமாரி. செல்வகணபதி 15 கி.மீ. தொலைவிலுள்ள புளியரையிலுள்ள லாரி பாடி பில்டிங் ஒர்க்ஷாப் பில் தினமும் வேலைக்குச் சென்றுவந்துள்ளார். செல்வகணபதி வீட்டிலில்லாத நேரத்தில், மகளின் வீட்டுக்கு வந்த அப்பா, கல்பனாவிடம், “"ஒரே ஒரு கையெழுத்து போடும்மா… மகளிர் காவல் நிலையத் தில் புகாரளித்து, அவனை உதைத்து சென்னைக்கு அனுப்பிவிடலாம்''’என்று கேட்டுள்ளார்.

Advertisment

அப்பாவின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சி யடைந்த கல்பனா, அதற்கு மறுப்பு தெரிவித்த துடன் நடந்ததை கணவர் செல்வகணபதியிடம் கூறியுள்ளார். இதனால் சுதாரித்துக்கொண்ட கல்பனாவின் தந்தை மீண்டும் ஒன்றுமே நடக்காததுபோல அன்புகாட்டி மகளிடமும், செல்வகணபதியிடமும் சாதாரணமாகப் பழகிவந்துள்ளார்.

ss

11-08-2024 அன்று கல்பனாவின் பெற்றோர், பாட்டி ஆகிய மூவரும், இருவரையும், கடைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு செல்வகணபதிக்கு ஒரு செல்போன், 2 பேண்ட், 2 சட்டை, கல்பனாவிற்கு சேலை வாங்கிக் கொடுத்துள்ளனர். பின் அனைவரும் கல்பனா வீட்டிற்கு திரும்பியுள்ள னர். அன்று அவரது மனைவி, மனைவியின் பாட்டி ஆகியோரை அழைத்துக்கொண்டு கல்பனா செல்வகணபதி குடியிருந்த வீட்டிற்கு வந்தார் பூமாரி.

வழக்கம்போல் இரவு சுமார் 9.00 மணியளவில் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று தனது நண்பர் ஹரிஹரனுடன் மகிழ்ச்சியாக செல்போனில் பேசிக்கொண்டிருந்துள் ளார் செல்வகணபதி. அப்போது மொட்டை மாடியில் சந்தேகப்படும் வகையில் மறைந்திருந்த இருவர், செல்வகணபதியை ஆவேசமாக நெருங்கி யுள்ளனர். அதிர்ச்சியடைந்த செல்வகணபதி சத்தம் போட்டுக் கத்தியுள்ளார். தெளிவான திட்டமிட லோடு அங்குவந்த அந்த இருவரும் செல்வ கணபதியை அடித்திழுத்து வீட்டு மாடிக்கு அருகே செல்லும் மின்சாரக் கம்பி மீது தூக்கிவீசி யுள்ளனர். உயரழுத்த மின்சாரம் பாய்ந்ததில் சுயநினைவு இழந்துள்ளார் செல்வகணபதி.

கண்விழித்துப் பார்க்கும்போது, திருநெல் வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதை அறிந்துள்ளார். மின்சாரம் பாய்ந்ததில் கை, கால், வயிற்றுப் பகுதி சதை கருகி, கொடுங்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் செல்வகணபதி பெரும் மரண அவஸ்தைக்கு ஆளாகியுள்ளார். உடலின் சில பாகங்கள் கருகிவிட்டன. மின்சாரத்தால் கருகிப்போன இடதுகையில் இருந்த தீக்காயங்கள், சதைத் துணுக்குகளை அறுவை சிகிச்சைமூலம் எடுத்துள்ளனர் மருத்துவர்கள். வயிறு, குடல் பகுதி முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டு சுருங்கியுள்ளது. தொடைப் பகுதியும் கருகியுள்ளது.

மகள் கல்பனா அழுது பிடிவாதம் செய்ததன் காரணமாக அவரது தந்தை பூமாரி மருத்துவமனை யிலிருந்த செல்வகணபதியைப் பார்க்க, மூன்று முறை அழைத்துச்சென்று காட்டியுள்ளார். பிறகொருமுறை, கல்பனா தனது பெற்றோருக்குத் தெரியாமல் மருத்துவமனைக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது கல்பனா தனது கணவர் செல்வகணபதியிடம், “"என்னை வீட்டில் டார்ச்சர் செய்கிறார்கள்.… என்னமோ செய்யப்போகிறார்கள்… பயமாக இருக்கிறது''’என்று கூறியுள்ளார். தற்போது கல்பனாவின் நிலை என்னவென்றே தெரியவில்லை. அவருக்கும் ஏதாவது ஆபத்து நேருவதற்கு முன்பு அவர் காப்பாற்றப்பட வேண்டும்.

தற்போது, பாதிக்கப்பட்ட செல்வகணபதிக் கான சட்ட மற்றும் மருத்துவரீதியான சிகிச்சைகளை செய்துவரும் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா கல்விமணி, "இவ்வளவு சம்பவங்கள் நடந்தபிறகும் போலீசார் விசாரிக்கவும் இல்லை. வழக்கும் பதிவு செய்யவில்லை. நான் கடந்த 18-09-2024 அன்று சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கும் காவல் உயரதிகாரிகளுக்கும் வாட்ஸ்அப் மூலம் புகாரனுப்பினேன். மறுநாள், 19-09-2024 அன்றுதான் அதாவது சம்பவம் நடந்து 40 நாட்கள் கழித்து தென்காசி காவல்நிலைய போலீசார் திருநெல்வேலி அரசு மருத்துவ மனைக்குச் சென்று செல்வகணபதியிடம் விசாரித்துள்ளனர். அப்போது சரியாகப் பேசமுடி யாமல் கடுமையான உடல்வலியில் பெரும் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார் செல்வ கணபதி. போலீசாரோ தானாக காயம் ஏற்பட்டதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். முதல் தகவல் அறிக்கையின் நகலைக்கூட அவருக்கு அளிக்கவில்லை.

சில மாத சிகிச்சைக்குப் பிறகு திருநெல்வேலி அரசு பொது மருத்துவமனையிலிருந்து 21-12-2024 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட் டுள்ளார். ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்ட செல்வ கணபதி தற்போது இருளர் குடியிருப்பிலுள்ள உறவினர் வீட்டில் படுத்த படுக்கையாக இருந்துவருகிறார். அவரது பெரியம்மா மகன் மணிதான் உடனிருந்து பார்த்துக்கொண்டி ருக்கின்றார். இதில் ஏற்கனவே பதிவு செய்யப் பட்டுள்ள வழக்கினை எஸ்.சி/எஸ்.டி வன்கொடு மைத் தடுப்புச் சட்டப் பிரிவிலும், கொலைமுயற்சி பிரிவிலும் மாற்றவேண்டும். மேலும், ஆணவக்கொலை செய்ய முயற்சித்த அவருடைய மாமனார் பூமாரி, மாமியார் வள்ளி, மின்சாரக் கம்பிகளின் மீது தள்ளிய இரண்டு பேரையும் கைது செய்யவேண்டும்.

இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. புலன் விசா ரணைக்கு மாற்றவேண்டும். மேற்படி சம்பவம் தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், முதல்வர், உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்ட அனைவருக்கும் 26.12.2024 அன்று விரிவான புகார் அனுப்பப் பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட செல்வகணபதிக்கான வழக்கு, அன்றாட மருத்துவ, உணவுச் செலவு களுக்காக அரசு உதவி எதுவும் கிடைத்திடாத நிலையில், பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் சார்பில் நண்பர்களிடம் நன்கொடையாக நிதி உதவி பெற்று உதவிசெய்து வருகின்றோம். இதுவரை ரூ.1,22,143 ரூபாய் செலவாகியுள்ளது.

ரூ 1,33,500/- நன்கொடையாகக் கிடைத் துள்ளது. மேலும், குறைந்தபட்சம் 6 மாதம் வெளியில் தங்கியிருக்க வேண்டியுள்ளது. மாதம் ஒன்றுக்கு சராசரியாக ரூ 50,000/- வரை தேவைப்படும். உதவிசெய்ய விரும்புவர்கள் டஹக்ஷ்ட்ஹய்ஞ்ன்க்ண் ஒழ்ன்ப்ஹழ் டஹக்ன்ந்ஹல்ல்ன் நஹய்ஞ்ஹம், ஒய்க்ண்ஹய் இஹய்ந், பண்ய்க்ண்ஸ்ஹய்ஹம் இழ்ஹய்ஸ்ரீட், ஆ/ஸ்ரீ ய்ர்: 707275882, ஒஎநஈ ஸ்ரீர்க்ங்: ஒஉஒஇ000ப023 இந்த வங்கிக் கணக்கிற்கு உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்''’என்று கூறுகிறார்.

செல்வகணபதிக்கு இப்போது நீதி, நிதி இரண்டுமே தேவை.

-எஸ்.பி.எஸ்.