ரு புன்னகைக் கவிதையைக் காலத்தின் கைகள், கண்ணீர்த்துளியாக மொழி பெயர்த் திருக்கிறது. கடந்த 15-ந் தேதி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில், கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட நடிகர் விவேக்... ’""எல்லோரும் கொரோனா மரணத்தில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். அதற்குத் தயங்காமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்''’என்று, ஊடகங்களின் முன்பாக விழிப்புணர்வு வேண்டுகோள் விடுத்தார். அதுதான், அந்தக் கலைஞனின் கடைசி பொதுக்குரல்.

Advertisment

vivek

16-ந் தேதி காலையில் எழுந்தபோதே விவேக் மிகுந்த சோர்வாக இருந்திருக்கிறார். வழக்கமான உடற்பயிற்சியை மேற்கொள்ளவில்லை. காலை 10 மணி வாக்கில் லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து மயக்கம் ஏற்பட்டது. காலை 11 மணியளவில் வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் விவேக்.

Advertisment

அவருக்கு திடீர் மாரடைப்பும், இதயத்தில் 100 சதவீத அடைப்பும் ஏற்பட்டிருப்பதாகச் சொன்ன மருத்துவர்கள், "கொரோனா தடுப்பூசிக் கும் இந்த மாரடைப்புக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை' என்றும் அறிவித்தனர். விவேக்கிற்கு மாரடைப்பு என்ற தகவல் பரவியபோது எல்லோரிடமும் பதட்டம் தொற்றிக்கொண்டது. அவர் நலம் பெறவேண்டும் என்ற பிரார்த்தனை -விருப்பம் எல்லாவற்றையும் மீறி 17-ந் தேதி அதிகாலை 4.35-க்கு நினைவு திரும்பாமலேயே அவரது உயிர் பிரிந்தது.

தமிழினம் கலங்கியது. ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கண்ணீர் அஞ்சலிகள். முதல்வர் எடப்பாடி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தொடங்கி... பிரதமர் மோடி, அமித்ஷா வரை தலைவர்கள் பலரும் இரங்கல் செய்திகளை வெளியிட, கொரோனாவைப் பற்றிக்கூட கவலைப்படாமல், பொதுமக்களும் விவேக் ரசிகர்களும் திரைப் பிரபலங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் பெருந்திரளாகத் திரண்டுவந்து, அந்த உன்னதக் கலைஞனுக்குத் தங்கள் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தினர்.

Advertisment

ஜனங்களின் கலைஞர் விவேக், 1961 ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி, சங்கரன்கோயில் அருகேயுள்ள பெருங்கோட்டூரில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர். மதுரையில் பட்டப் படிப்பை முடித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இளநிலை உதவியாளராக 6 ஆண்டுகள் வேலை பார்த்த நிலையில், இயக்குநர் பாலச்சந்தரின் ’மனதில் உறுதி வேண்டும்’ படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அடியெடுத்து வைத்தார். புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இன்னைக்கு செத்தா நாளைக்குப் பால் என்ற டயலாக் மூலம் பரவலாக அறியப்பட்டவர், அதன்பிறகு கொளுத்திய நகைச்சுவைப் பட்டாசுகள் பலவும் அதிர்வேட்டுகள்தான்.

ரஜினி, விஜய், அஜித், சூர்யா என உச்சத்தில் இருக்கும் அனைவருடனும் சேர்ந்து நடிக்கத் தொடங்கினார். சீர்திருத்தக் கருத்துக்களையும் பகுத்தறிவுச் சிந்தனைகளையும் தன் பாணியில் பஞ்ச் டயலாக்காகப் பேசி, திரையரங்குகளைக் கைத்தட்டல்களால் அதிரவைக்கத் தொடங்கினார் விவேக். "மின்னலே' படத்தில், லாரியின் முன்புறம் தொங்கவிடப்பட்ட எலுமிச்சம் பழத்தைப் பார்த்து, "உள்ளே எழுநூறு ஸ்பேர் பார்ட்ஸ் இருக்குது. அதுல ஓடாத லாரியாடா.. இந்த எலுமிச்சங்காய்ல ஓடப் போகுது?'’-என்பார் விவேக். இதுபோன்ற அவரது வசனங்களே, அவருக்கு ’"சின்னக் கலைவாணர்' என்ற பட்டத்தைக் கொண்டுவந்து சேர்த்தன. 2009-ஆம் ஆண்டு, "பத்மஸ்ரீ' விருது ஒரு பூங்கொத்தைப் போல் விழுந்தது. ஏறத்தாழ 500 படங்களுக்கு மேல் நடித்த அவருக்கு, கடந்த ஆண்டு வெளியான "தாராள பிரபுதான்' கடைசிப் படமாக அமைந்துவிட்டது.

ஆர்மோனியம், வயலின், தபேலா வாசிப்பதிலும் வல்லவரான விவேக், பல குரலில் பேசுவதிலும் திறன் படைத்தவர். திரைப்பட விழாக்களில் நகைச்சுவைக் கவிதைகளையும் அரங்கேற்றி, ஆரவாரத்தை எழுப்பிய பிறவிக் கலைஞர் அவர். தனது ஒரே மகனான பிரசன்னகுமார், 2015-ல் டெங்குக் காய்ச்சலில் திடீரென இறக்க, அந்த வலியை விவேக் கடைசிவரை சுமந்துகொண்டே இருந்தார். அதேபோல் அவரது அப்பா இறந்த சில வருடங்களிலேயே அவரது அம்மாவும் மரணமடைய, அடுத்தடுத்த சோகங்களால் விவேக் நிலைகுலைந்தார். மொத்தத் துயரத்தையும் மறைத்துக்கொண்டுதான் அவர் மற்றவர்களைச் சிரிக்கவைத்தார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைத் தனது வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட விவேக், அவர் நினைவாக மரம் நடுவதைத் தனது திருப்பணியாக மேற்கொண்டார். ஒருகோடி மரக்கன்றுகள் நடுவதை தனது வாழ்நாள் திட்டமாக அறிவித்தார். இதுவரை 33.5 லட்சம் மரக்கன்றுகளை நட்டுப் பெரும்சாதனை புரிந்த அவர், தன் இலக்கை அடையும் முன்பாகவே இயற்கையோடு கலந்துவிட்டார். ஆனாலும், அவரது இறுதி ஊர்வலத்தில், இளைஞர்கள் பலரும் மரக்கன்றுகளை ஏந்திச் சென்றனர்.

72 குண்டுகள் முழங்க, காவல்துறை மரியாதையுடன், மேட்டுக்குப்பம் மயானத்தில் விவேக்கின் இறுதிச்சடங்கு நடந்தது. அந்தப் பகுத்தறிவுக் கலைஞனுக்கு, அவரது மகள் தேஜஸ்வினி இறுதிச் சடங்கு செய்ததில், வீட்டிற்குள்ளும் அவர் விதைத்த பகுத்தறிவு, பெருமிதமாய்ச் சுடர்விட்டது.

-தமிழ்நாடன்