சுகுணாபுரம் பழனிச்சாமி வேலுமணி, "அமைதிப்படை' படத்தில் இயக்குநர் மணிவண்ணன் படைத்த "நாகராஜசோழன்' என்கிற அரசியல்வாதி கேரக்டரின் அசல் வடிவம். மிகமிக சாதாரணமான குடும்பத்தில் பிறந்த வேலுமணி, இன்று சசிகலாவைவிட அதிகம் சொத்து மட்டுமல்ல... அதிகாரமும் படைத்த நபர். இவரை எதிர்த்துப் பேச எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும் கூட பயந்து நடுங்குவார்கள்.
அரசியலில் ஆரம்ப கட்டத்தில் தன்னை வளர்த்துவிட்ட கே.டி.ராஜு என்கிற எம்.எல்.ஏ., கிணத்துக்கடவு தாமோதரன் என்கிற அமைச்சர் ஆகியோரை சரி செய்து கீழே தள்ளிவிட்டு எம்.எல்.ஏ.வான வேலுமணி, சசிகலாவின் உறவினர் ராவணன் தயவில் அமைச்சரானார்.
ஹுண்டாய் கம்பெனியில் ஜெ.வுக்குத் தெரியாமல் 20 கோடி ரூபாய் வாங்கினார் என ஜெ.வின் செயலாளரான ஷீலாபிரியா கண்டுபிடித்தார். அதனால் அவரை பதவியிலிருந்து நீக்கிய ஜெ.விடம், "அந்த 20 கோடியை சசியின் உறவினர் டாக்டர் வெங்கடேஷிடம் கொடுத்தேன்' என அப்படியே போட்டுக் கொடுத்தார் வேலுமணி. பின்னர் சசிகலாவின் காலில் விழுந்து சமாளித்து மறுபடியும் அமைச்சரான வேலுமணியையும் அவரது மேனரிசத்தையும் அடிக்கடி கிண்டலடித்து ஜெ. சிரிப்பாராம்.
கடைசியாக சசியின் குடும்பத்தைச் சேர்ந்த டி.டி.வி. தினகரனிடம் மோதினார் வேலுமணி. ஒட்டுமொத்த அ.தி.மு.க.வினரை எடப்பாடி தலைமையில் சசிகலாவுக்கு எதிராக பா.ஜ.க.வுக்கு ஆதரவாக கொண்டுபோய் நிறுத்தி, தனது தொகுதியில் ஆசிரமம் வைத்துள்ள சாமியார் ஜக்கி வாசுதேவ் ஆதரவுடன் பவர்ஃபுல்லாக வலம்வந்த வேலுமணிக்கு ரெய்டு செக் வைத்தது தி.மு.க. அரசு.
ஆரம்பத்தில் குனியமுத்தூர் நகராட்சித் தலைவராக அரசியல் வாழ்வைத் துவக்கிய வேலுமணி, குடிநீர் கனெக்ஷனுக்கு கட்டிங் கேட்டுதான் தனது ஊழல் கணக்கைத் துவக்கினார். இன்று சென்னையில் மிக விலையுயர்ந்த அபார்ட்மெண்ட்டான பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி. நகரி ஈஊஊ இதஞந ஞசஊ 74 என்கிற குடியிருப்பில் ஆறு பிளாட்டுகளை வைத்துள் ளார். "ஒரு பிளாட்டின் விலை 35 கோடி ரூபாய் என 210 கோடி ரூபாய்க்கு ஒரே இடத்தில் சொத்து வாங்கியுள்ளார்' என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.
"ஜெ.'வையே பதம் பார்த்தது சொத்துக் குவிப்பு வழக்கு என்பதால் வேலுமணி இதற்குத்தான் அதிகம் பயந்தார். வேலுமணிக்கு எதிராக தி.மு.க.வின் ஆர்.எஸ்.பாரதியும், அறப்போர் இயக்கமும் போராடினார்கள். தி.மு.க., கவர்னரிடமும் வேலுமணியின் ஊழல் பட்டியலை அளித்தது. அறப்போர் இயக்கத்துடன் சேர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும்போட்டது.
வேலுமணியோ அறப்போர் இயக்கத்தின் மீதும், ஊழல்களை வெளியிட்ட பத்திரிகைகளின் மீதும் வழக்குப் போட்டே சரிக்கட்டலாம் என நினைத் தார். அறப்போர் இயக்கத்தின் மேல் 32 வழக்குகளைப் போட்ட வேலுமணி, பத்திரிகையாளர்கள்மேல் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளைத் தொடர்ந்தார். தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையைத் தனது கைப்பாவையாகவே மாற்றினார். டி.ஐ.ஜி.யான ராதிகா, எஸ்.பி.யாக இருக்கும் சண்முகம், பொன்னி ஆகியோரை வைத்தே விளையாடினார். தினமும் வேலுமணியிடம் தொலைபேசியில் பேசும் ராதிகா, வேலுமணி மீது விசாரணை நடந்துங்கள் என உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவுக்குப் பதிலாக அவர்மீது எந்தத் தவறும் இல்லை என சான்றிதழ் கொடுத்தார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தலைவராக, அமித்ஷாவையே கைது செய்த தமிழக அதிகாரியான கந்தசாமி பொறுப்பேற்றார். அவர் "ராதிகாவை மாற்றுங்கள்' என டி.ஜி.பி.யாக இருந்த திரிபாதியிடம் கேட்டார். அவர் "முடியாது' என மறுத்தார். இது காவல்துறைக்குள் சர்ச்சையானது.
ராதிகா தற்போது திருச்சி பகுதி சட்டம்-ஒழுங்கு அதிகாரியாக உள்ளார். எஸ்.பி. சண்முகத்தை இதுவரை மாற்றவில்லை. "ராதிகா, திருச்சியில் இருந்தவாறே சண்முகத்தின் துணையுடன் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்' என நடப்பவற்றைச் சொல்கிறார்கள் வேலுமணிக்கு நெருக்கமானவர்கள்.
மத்திய பா.ஜ.க. அரசில் அமைச்சராக உள்ள பியூஸ் கோயல் உதவியுடன் வேலுமணியின் மகன் படித்து ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, வடக்கு ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் தமிழகத்தில் சேர்த்த பணத்தை முதலீடாக செய்தார் என்பதை, அவரது ஆடம்பர வாழ்வுடன் அட்டைப்படமாக வெளியிட்டது நக்கீரன். அந்த முதலீடுகள் தொடர்பான ஆவணங்களை ஒரு இடத்தில் வைக்காமல் கண்டெய்னர் லாரிகளில் வைத்து நிரந்தரமாக தமிழகத்தையே சுற்றிவர வைத்திருக்கிறார் வேலுமணி.
இந்நிலையில் கந்தசாமி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை, "தி.மு.க.வும் அறப்போர் இயக்கமும் வேலுமணிக்கு எதிராக கொடுத்த புகாரில் உண்மை இருக்கிறது. மத்திய ஆடிட்டர் ஜெனரல் கொடுத்த அறிக்கைப்படி முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிவித்தது. வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன், சந்திரபிரகாஷ், சந்திரசேகர் உட்பட ஹோட்டல், நகைக்கடை, கட்டுமான நிறுவனங்கள், என்ஜினியரிங் கம்பெனிகள் என 17 நிறுவனங்கள் உள்ளாட்சித் துறையில் வேலுமணி ஆதரவுடன் ஊழல் செய்து வேலுமணி உட்பட ஏழுபேர் சுமார் 810 கோடி ரூபாய் முறைகேடு செய்திருக்கிறார்கள்'' என முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது.
லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த நடவடிக்கைகளில் சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் நடந்த ஒப்பற்ற முறைகேடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த முறைகேடுகளை செய்த காலகட்டத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருந்த கார்த்திகேயன், பிரகாஷ், பாஸ்கரன் போன்ற அதிகாரிகள் சேர்க்கப்படவில்லை. அவர்கள் சாட்சிகளாக வருவார்கள். "வேலுமணி சொன்னார்... செய்தோம்' என சொல்லுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்... தி.மு.க. அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டது. அதில் உள்ளாட்சித்துறை முறைகேடுகளும் இடம்பெற்றது. அடுத்து ரெய்டுதான் என ராதிகா மூலம் முன்கூட்டியே அறிந்த வேலுமணி, தனது ஈஊஊஇதஞந அபார்ட்மெண்ட்டிலிருந்து எம்.எல்.ஏ. விடுதிக்கு வந்து தங்கினார். காலை எம்.எல்.ஏ. விடுதிக்கு வந்த லஞ்ச ஒழிப்புத் துறையின ரிடம் "என்ன இவ்வளவு லேட்டா வர்றீங்க?' என ஜோக்கடித்து சிரித்திருக் கிறார் வேலுமணி.
ஜெ. வீட்டிற்கு சோதனை செய்ய போலீசார் போனபோதுகூட கூடாத கட்சிக்காரர்களை வேலுமணியை போலீசார் ரெய்டு செய்தபோது வேலுமணி திரட்டியிருக் கிறார். எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் அமைச்சர்கள், வழக்கறிஞர்கள், கட்சித் தொண்டர்கள் என ஏதோ ஒரு மாநாட்டிற்கு கூட்டிய கூட்டம் சேர்த்தார். 65 இடங்களில் நடந்த ரெய்டில் வெறும் 13 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் சொத்துக்கள் குறித்த ஆவணங்களுடன் திரும்பியது லஞ்ச ஒழிப்புத்துறை. "வேலுமணி மீது போட்ட வழக்கு மிகவும் நேர்த்தியானது. அதற்கு பெரிய புதிய ஆதாரம் எதுவும் தேவையில்லை. ஏற்கனவே கொடுத்த புகார் தொடர்பான கூடுதல் ஆதாரங்களை, இன்றைய தி.மு.க. அரசு அளித்த ஆதாரங்களை எளிதாக அரசு திரட்டிவிடும்'' என்கிறார் அறப்போர் இயக்கம் ஜெயராமன். ஆனால் "பல ஆயிரம் கோடிகளை வைத்துள்ள வேலுமணியின் வீடுகளில் வெறும் 13 லட்சமா கிடைத்தது?' என தி.மு.க.வினர் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கேள்வி எழுப்புகிறார்கள்.
வேலுமணி, "தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை தோல்வி, நான் மிஸ்டர் க்ளீன்' என டி.வி.க்களில் பேசு கிறார். அ.தி.மு.கவின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு இயல்பாக இருப்பதுபோல வெளிப்படுத்துகிறார்.
லஞ்ச ஒழிப்புத்துறை கந்தசாமியிடம் ஸ்டாலினும் காட்டமாகப் பேசியிருக்கிறார். வேலுமணியுடனான ஆடு-புலி ஆட்டத்தில் தி.மு.க. ஒரு முக்கியமான காயை, ரெய்டுகள் மூலம் எழுப்பியிருக்கிறது. "இது ஆரம்பம்தான். லஞ்ச ஒழிப்புத்துறையில் உள்ள வேலுமணிக்கு விசுவாசமான கறுப்பு ஆடுகளை களைந்துவிட்டு முழு முதல் தாக்குதலை லஞ்ச ஒழிப்புத்துறை கந்தசாமி தலைமையில் மேற்கொள்ளும்'' என நம்பிக்கை தெரிவிக்கின்றன காவல்துறை வட்டாரங்கள்.
படங்கள்: குமரேஷ்
__________________________________
எங்கே போனார்?
திருச்செந்தூர் கோவிலுக்கு வேலுமணி வந்ததாக பத்திரிகையாளர்களை, உளவுத்துறையில் இன்னமும் செல்வாக்காக இருக்கும் அவரது நண்பர்கள் திசை திருப்பிய நிலையில், நெல்லை தாழையூத்து பகுதிக்குச் சென்ற அந்த பி.எம்.டபிள்யூ கார் மாடசாமி எனும் ஒப்பந்தக்காரரை ஏற்றிக்கொண்டு அம்பாசமுத்திரம் பகுதிக்கு விரைந்தது. அம்பாசமுத்திரம் பகுதியிலுள்ள அதிக அளவில் சினிமா படப்பிடிப்பு நடைபெறும் மருத மரங்கள் நிறைந்த பகுதியில் காலை 11 மணியளவிலேயே நிறுத்தப்பட்டது. உதவியாளர் ராதா கொண்டுவந்த குறிப்பின்படி, ஒப்பந்தக்காரர் மாட சாமிக்கு சொத்து ஆவணங்களை மாற்ற இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்து விட்டு, அவரையும் அழைத்துக் கொண்டே அங்கிருந்து தூத்துக்குடிக் குப் புறப்பட்டார் முன்னாள் அமைச்சர் வேலுமணி. வழியில் ரிலையன்ஸ் பங்க் அருகில் மாடசாமி குறிப்புகளு டன் இறங்கிக்கொள்ள, சமாதான புரத்தை தாண்டிய வைரம் மாளிகை யில் உணவுடன் காத்திருந்த அ.தி.மு.க.வின் சின்னத்துரையை ஏற்றிக்கொண்டு காரிலேயே சாப்பிட்டுவிட்டு மீண்டும் தூத்துக்குடி வாகைக்குளத்திலுள்ள விமான நிலையத்திற்கு வந்து காத்திருந்த பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்துவிட்டுச் சென்றார் வேலுமணி.
-நாகேந்திரன்