ரு சாதாரண கிளர்க், ஊராட்சித் தலைவரை மிரட்டியதோடு... அலுவலகத்தை பூட்டிவிட்டு தலைவரை விரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ளது கல்லரைப்பாடி கிராமம். இந்தக் கிராமத்தில் உடையார்கள், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர், யாதவர் என்கிற வரிசையில் பலமாகவுள்ளனர். இரண்டாயிரம் வாக்குகள் கொண்ட இந்தக் கிராம ஊராட்சியின் தலைவர் பதவி கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது பட்டியலினத்துக்கு ஒதுக்கப்பட்டது. தேர்தலில் 6 பேர் போட்டியிட்டதில் தி.மு.க.வைச் சேர்ந்த ஏழுமலை வெற்றிபெற்றார். இவரைத்தான் ஊராட்சிமன்ற அலுவலகத்திலிருந்து விரட்டிவிட்டுப் பூட்டி விட்டதாக புகார் எழுந்துள்ளது.

mm

என்ன நடந்தது என அந்தக் கிராமத்துக்குச் சென்று ஊராட்சிமன்றத் தலைவர் ஏழுமலையை சந்தித்து கேட்டபோது, "நான் படிக்காதவன்ங்க. சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த பணியாளரா கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரிசெய்யும் வேலையை ஆவடி பகுதியில் செய்துக்கிட்டு வர்றேன். கடந்த உள்ளாட்சி தேர்தலில் முதன்முதலா போட்டியிட்டேன். மேட்டுக்குடி மக்கள், எங்க காலனி மக்கள் சேர்ந்து என்னை தேர்ந்தெடுத்தாங்க. நான் பஞ்சாயத்து ஆபிஸுக்கு தலைவரா பதவியேத்துக்கிட்டுப் போனான். எங்க பஞ்சாயத்து கிளர்க்கா வேல்முருகன் அண்ணன் இருக்கார். அவர் எங்கவூர்க்காரர், பல வருஷமா இங்க வேலை செய்யறார். அவுங்கம்மா என்னோட அம்மா மாதிரி. நான் சின்ன வயசுல அவுங்க வீட்லதான் மாடு மேய்ச்சிக்கிட்டு இருந்தேன். என்னை தன் பிள்ளைமாதிரி பார்த்துக்கிட்டு சோறு போட்டு வளர்த்தவங்க அவுங்க. அதுக்கப்பறம் சென்னை போய் வேலை செய்துக் கிட்டு இருக்கேன். அதனால் வேல்முருகன் மேல் எனக்கு ரொம்ப மரியாதை. அண்ணா, அண்ணான்னுதான் கூப்பிடுவேன். தலைவ ரானதுக்கப்பறம் கூட அவர் முன்னாடி உட்கார்ற துக்கு கூச்சமாயிருக்கும். ஆனா என்னை அவர் மனுஷனாகூட மதிக்கல. அவ்ளோ மோசமா நடத்தினார்.

Advertisment

100 நாள் வேலை திட்டத்தில் கண் பார்வையில் லாதவங்க, கால் நடக்க முடியாத மாற்று திறனாளிகளால வேலை செய்ய முடியாது. அவுங்களுக்கு என்ன வருமானம் இருக்கு...? பாவம் அவுங்க வேலைக்கு வந்ததா அட்டனன்ஸ் போடுங்க அப்படின்னு பணித்தள பொறுப்பாளர்கிட்ட சொன் னேன். போடமாட்டோம்னு சொன்னாங்க. "நான் தலைவர், அவுங்க வேலை செய்ற இடத்துக்கு வர்றாங்க, அப்பற மென்ன போடும்மா'ன்னு சொன்னேன், "கிளர்க் போட வேண்டாம்னு சொன் னாங்க'ன்னு சொல்லுச்சி அந்தப்பெண். நான் வேல் முருகன்கிட்டயே, "அண்ணே பாவம்ணே... போடச் சொல்லுண்ணே' அப்படின்னு சொல்லி போடவச்சேன். ரெண்டு மாசம் போட்டாங்க, அதுக்கப்பறம் போடல.

ஊர்ல காலனியில வீடு இல்லாத வங்க, "அர சாங்கம் தர்ற தொகுப்பு வீடு ஒதுக்கித் தாங்க'ன்னு வந்து கேட் டாங்க. அப்படி கேட்டவங்களை மனு தரச்சொன்னன், தந்தாங்க. என் முன்னாடிதான் அப்ளி கேஷன்ல பெயர் எழுதி, போட்டோ ஒட்டினார் கிளர்க் வேல்முருகன் அண்ணன். ஆனா ஒருத்தருக்கும் வரல. ஆனா, அவர் தனியா பட்டியல் ரெடிசெய்து ஊர்ல பலருக்கு வாங்கி தந்திருக்கார். இதோ இந்த தகரம் போட்ட வீட்லதான் நான் என்னோட நாலு பிள் ளைங்களோட இருக்கேன். "எனக் கொரு வீடு ஒதுக்கிதாண்ணா' அப்படின்னு கேட்டேன். "எனக்கு இல்லன்னா கூட பரவாயில்லை, என் தம்பி குடும்பமும் வீடு இல்லாம இருக்கு. அவனுக்கா வுது ஒதுக்கிதாங்க'ன்னு கேட் டேன் செய்து தரல.

எனக்கு படிக்கத் தெரியாது. அவர் சொல்ற இடத்துல கையெ ழுத்து போடுவன். அவ்ளோ நம்பிக்கை அவர்மேல வச்சிருந் தேன். காலனிப் பசங்க நாலுபேர் ஆபீஸ் வந்து உட்கார்ந்தாங்க. அதுக்கு சாதி பேரு சொல்லித் திட்டினாரு. "என் வீட்ல மாடு மேய்ச்ச நீ... தலைவரா? என்னையே எதிர்த்துப் பேசறியா'ன்னு உட்கார்ந்திருக்கிற நாற்காலியை தூக்கி அடிச்சாரு, கையால தடுத்துட்டேன். ஊர்ல மேட்டுக்குடிக்கிட்ட இல்லாத சாதிவெறி அவர்கிட்டயும், வேறு சில முக்கியஸ்தர்கள் கிட்டயும் இருக்குங்க. அவுங்கள யெல்லாம் சேர்ந்துக்கிட்டு என்னை செயல்பட விடமாட் டேன்கிறாங்க. காலனியில், மேட்டுக்குடி மக்கள் வசிக்கும் பகுதிகள்ல சரியா தெருவிளக்கு எரியலன்னு 100 லைட் ஆர்டர் செய்து வாங்குனேன். அதுக்கான பில்லுல கிளர்க் கையெழுத்து போடணும். அதைப்போடமாட்டேன்னு சொல்லிட்டார். என்னைக் கேட்காம எப்படி வாங்கலாம்னு கேட்டார். அவர் வாங்கினா அதிக விலையில வாங்கறார். நான் ரேட் கம்மிசெய்து வாங் கினேன். அந்த கோபத்தில் துணைத்தலைவர், உறுப் பினர்கள் 5 பேரை எனக்கு எதிரா பேச வச்சார். "கையெழுத்தே போடமாட் டேன் போடா'ன்னு அசிங்க மான வார்த்தையில திட்டினார். இதை அங்கிருந்த பலரும் கேட்டாங்க.

Advertisment

mm

கடந்த ஜூன் 6-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நான், என் மனைவி மகேஸ்வரி, என் மகள் மூவரும் போய் என்னை சாதிரீதியா ஒடுக்கறதை புகாராச் சொன்னேன். அவர் எல்லாத் தையும் கேட்டுட்டு "விசாரிக் கிறேன்'னு சொன்னார். இதைத் தெரிஞ்சிக்கிட்டு, போன ஜூன் 8-ஆம் தேதி என்னை அலுவல கத்துக்குள் விடாம வெளியே துரத்தினார்... அதான் பஞ்சா யத்து ஆபீஸ் வாசல்ல உட் கார்ந்துட்டேன்'' என்றார்.

இதுபற்றி நம்மிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் ஆவண காப்பக மாவட்ட அமைப்பாளர் சரவணன், "இந்த ஊராட்சி மட்டுமல்ல தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எங்கெல்லாம் ஊராட்சிமன்றத் தலைவர்களாக உள்ளார்களோ, அங்கெல்லாம் ஆதிக்க சாதியினர் பிரச்சினை செய்கிறார்கள். அதிலும் ஊராட்சி செயலாளர்கள் என்கிற கிளர்க் பதவியில் உள்ளவர்கள், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தலை வர்களை மதிக்காமல், வேலைக் காரர்கள்போல் நடத்துகிறார்கள்'' என்றார்.

ஊராட்சிமன்றத் தலைவர், தனக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து புதுப்பாளையம் பி.டி.ஓ. நிர்மலாவிடம் முதலில் கூறியுள் ளார். அவர் நடவடிக்கை எடுக்க வில்லை என்பதாலேயே, கலெக்டரை சந்தித்து மனு தந்துள்ளார். கிளர்க்கை காப்பாற்ற அந்த கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும் அ.தி.மு.க. பிரமுகருமான ராஜமூர்த்தி களமிறங்கி, அ.தி.மு.க. மா.செ. வும், எம்.எல்.ஏ.வுமான அக்ரி. கிருஷ்ணமூர்த்தியை சந்தித்து முறையிட்டுள்ளார். அதேபோல் கலசப்பாக்கம் தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணனை சந்தித்துள்ளார் வேல்முருகன். இருவரும் அதிகாரிகளுக்கு "மேல்நடவடிக்கை வேண்டாம்' என பேசியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து கிளர்க் வேல்முருகனிடம் கேட்ட போது, "நான் அவரோட அண்ணன் தம்பியா பழகிக்கிட்டிருக்கேன். தலைவரான அவரை கிளர்க்கான நான் அடிக்க முடியுமா?'' என கேட்டவர், "என்மீது வீணா எதுக்கு பழி சொல்றாருன்னு தெரியல. என்மீது புகார் தந்திருக்கார். அவர் சொன்னது எல்லாம் பொய்ப் புகார்கள். என்னை இப்போ இடமாற்றம் செய்துட்டாங்க'' என்றார்.

ஊராட்சிமன்றத் தலைவர்களின் கூட்டமைப்பின் நிர்வாகி ஒருவர் நம்மிடம், "2016 முதல் 2019 வரை தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் தனி அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் ஊராட்சிகள் இருந்தன. அப்போது ஊராட்சி கிளர்க்குகள், தனி அதிகாரிகளுடன் சேர்ந்து பஞ்சாயத்து நிதிகளில் கொள்ளையோ கொள்ளையடித்துள்ளார்கள். உள்ளாட்சித் தேர்தல் நடந்து, ஊராட்சிமன்றத் தலைவர்கள் வந்தபிறகும் கிளர்க்குகளால் கெத்தையும், சம்பாதித்த ருசியையும் விடமுடியவில்லை. 80 சதவிகித பஞ்சாயத்து கிளர்க்குகள், தலைவர் சொல்வதை கேட்பதில்லை. இதனை பி.டி.ஓ. அலுவலக அதிகாரிகளும் ஊக்குவிக்கிறார்கள்.

பஞ்சாயத்து கிளர்க்குகள் 98 சதவிகிதம் அதே கிராமத்தை சேர்ந்தவர்களே. தாங்கள் சம்பாதிக்க சாதி மோதலையும், கேள்வி கேட்பவருக்கு எதிராக ஆட்களை தூண்டிவிடும் வேலையையும் செய்கிறார்கள். "நான் நினைச்சா உங்களை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்' என ஊர் மக்களை மிரட்டுகிறார்கள். விஷயம் தெரியாத, ஒடுக்கப்பட்ட சாதியினைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்களை டம்மியாக நடத்துக்கிறார்கள். இது பல கிராம ஊராட்சிகளிலும் நடக்கிறது. இந்தப் பஞ்சாயத்து கிளர்க்குகளை சொந்த ஊரில் பணியாற்றாமல் வேறு ஊர்களுக்கு மாற்ற வேண்டும், அப்போதுதான் இந்தப் பிரச்சினை தீரும், இல்லையேல் "பஞ்சாயத்துராஜ்' என்கிற அமைப்பு உருவாக்கப் பட்டதே கேள்விக்குறியாகி விடும்'' என்கிறார்கள்.

வி.சி.க. உட்பட தலித் கட்சிகள், இடதுசாரி கட்சிகளின் தலைமைகள் இந்த விவகாரத்தை அறிந்து, பாதிக்கப்பட்ட தலைவரிடம் விசாரித்துவந்த நிலையில்... ஊராட்சி செயலாளரான கிளர்க் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.