அமைச்சர் உதயகுமாரின் திருமங்கலம் தொகுதியில், ஏற்பட்ட உயிர்ப்பலி, மக்களிடையே சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது..
தேர்தல் அறிவிக்கும் முன்பே களத்திலிறங்கிய அமைச்சர், முதலில் ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டினார். வேட்புமனுத் தாக்கலுக்கு முந்தைய நாள், அ.தி.மு.க. தொண்டர் பழனிச்சாமி, அமைச்சர் தன்னை பூத் கமிட்டியில் சேர்க்கவில்லை என்று விரக்தியில் இந்தக் கோயிலில் அம்மா சிலை முன் தீக்குளித்து இறந்ததாகச் செய்தி பரவியது.
இந்த மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று அ.ம.மு.க. வேட்பாளர் ஆதிநாராயணன், திருமங்கலம் ஆர்.டி.ஓ சவுந்தர்யாவிடம் புகார் கொடுத்தார். ’""தீக்குளித்தவரின் வேட்டி சட்டை எரியாமல் உடம்பு மட்டும் எப்படி எரிந்தது? அன்றிரவு அமைச்சர் அங்கு வந்துவிட்டுச் சென்றிருக்கிறார். எதையோ மறைக்கிறார்கள். போலீஸாரும் தீர விசாரிக்க மறுக்கிறார்கள்'' என்றார்
28-ஆம் தேதி அன்று, அதே ஜெயலலிதா கோவிலில் கார் மோதி லெட்சுமணன் என்ற அ.தி.மு.க. தொண்டர் இறந்துபோக, மீண்டும் சலசலப்பு எழுந்தது. தேர்தல் நாளன்று அதே அம்மா கோயிலில், 20 பசுமாடுகள் ஒரே நேரத்தில் இரவு 12 மணிக்கு மொத்தமாக இறந்திருக்கின் றன. வெளியில் தெரியாமல் அங்கேயே 20 மாடுகளையும் புதைத்திருக் கிறார்கள் எனச் சொல்லப் படுகிறது. "ஜெயலலிதா கோவிலில் நடந்தது வெறும் உயிர்ப்பலி அல்ல, நரபலி' என்று அமைச்சரை எதிர்த்து தேர்தலில் நின்ற அ.ம.மு.க. வேட்பாளர் ஆதி நாராயணன் புகார் கொடுத் திருப்பது... மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புகார் கொடுத்த ஆதிநாராயணனைத் தொடர்புகொண்டோம். “""அமைச்சர் உதயகுமார் மீண்டும் அமைச்சராக வேண்டும் என்று, தான் எப்போதும் குறிகேட்கும் அந்த சாமியாரிடம் போய் கேட்க, 108 சேவல் பலிதரச் சொல்லியிருக்கிறார். வெற்றிக்கான சாத்தியம் குறித்த நம்பிக்கை ஏற்படாத நிலையில், கோவிலில் நடந்த மரணங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.
கடந்த 28-ஆம் தேதி லெட்சுமணன் என்பவர் மீது கார் ஏறி இரத்தம் சொட்டச் சொட்ட இரண்டுமணி நேரம் அம்மா சிலையின் காலடியிலேயே போட்டு துடிதுடித்து இறந்திருக்கிறார். இது குறித்து தீர விசாரிக்கவேண்டும் ஆர்.டி.ஓ. சவுந்தர்யா மேடத்திடம் புகார் கொடுத்தும் எதுவும் நடக்காத நிலையில் மீண்டும் புகார் கொடுத்திருக்கிறேன். அதிகாரிகளும் போலீஸாரும் நரபலியை விபத்தாக மாற்றுகிறார்கள். விஷயத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று மக்களுக்கு உண்மையைத் தெரியப்படுத்துவேன்''’என்றார் ஆவேசமாக.
இதுகுறித்து கருத்தறிய, அமைச்சர் உதயகுமாரை தொடர்புகொள்ள பலமுறை முயன்றும் முடியவில்லை.