சேலம் மாவட்ட அ.தி.மு.க.வில் சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு, புது முகங்களுக்கு முக்கிய பதவிகளை வழங்கியதால் எடப்பாடி பழனிசாமி மீது ர.ர.க்கள் உச்சகட்ட கொதிப்பில் உள்ளனர்.

தேர்தல் நெருங்க, நெருங்க எப்படி தி.மு.க.வுக்கு எதிரான பிரச்சனைகளைப் பயன்படுத்திக்கொண்டு அ.தி.மு.க.வை வலுப்படுத்துவது, கூட்டணிக்காக நெருக்கும் பா.ஜ.க.விடமிருந்து சேதார மில்லாமல் எப்படி தப்பிப்பது என்பதே எடப்பாடியின் சிந்தனையாக இருக்கிறது. இதற்காக கட்சிரீதியாக எடுக்கும் சில முடிவுகளும் அவருக்கே நெருக்கடியாக மாறி சிக்கலை உண்டு பண்ணுகிறது.

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருப்பவர் ஜி.வெங்கடாசலம். சேலம் மேற்கில் தொடர்ந்து இருமுறை எம்.எல்.ஏ. ஆக வெற்றிபெற்ற இவர், 2021 சட்டமன்றத் தேர்தலில் சேலம் வடக்கில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

eps

தேர்தல் செலவுக்காக கட்சி மேலிடம் கொடுத்த பணத்தில் கைவைத்து விட்டதாகவும், கோஷ்டி அரசியல் செய்வதாகவும், பல நூறு கோடி ரூபாய் சொத்துகளைக் குவித்துவிட்டார் என்றும் அவர் மீது புகார்கள் குவிந்தன. இது தொடர்பாக விசாரித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வெங்கடாசலத்தை வெளுத்துவாங்கி யிருக்கிறார்.

இந்த நிலையில்தான், மொரப்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சிங்காரத்தை சேலம் மாநகர் மாவட்ட பொறுப்பாளராக களத்தில் இறக்கினார் எடப்பாடி. கோஷ்டி அரசியலை சரிக்கட்டுவார் என எதிர்பார்த்த ர.ர.க்கள், சிங்காரமும் தன் பங்கிற்கு கோஷ்டிகளை உருவாக்கியதை ரசிக்கவில்லை. சீனியர்களை டம்மி பதவிகளுக்கு தூக்கியடித்துவிட்டு, பவர்புல் பதவிகளில் புதுமுகங்களை கொண்டு வந்தார். சிங்காரத்தின் அதிரடியால் நொந்துபோன சீனியர் நிர்வாகிகள், எடப்பாடி மீது உச்சகட்ட கொந் தளிப்பில் உள்ளனர்.

Advertisment

இதுதொடர்பாக அ.தி.மு.க. வின் மூத்த நிர்வாகிகள் நம்மிடம் பேசினர்.

ee"எடப்பாடியின் நெருக்கமான வட்டத்தில் இருப்பவர்தான் மாஜி எம்.எல்.ஏ. சிங்காரம். சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வை பலப்படுத்து வதற்காக சிங்காரத்தை பொறுப்பாளராக நியமித் தார். ஆனால், வாலு போயி கத்தி வந்த கதையாக, மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வை கன்னாபின்னாவென்று உடைத்துப் போட்டு விட்டார்.

சேலம் மாநகராட்சி 41-வது வார்டு செய லாளராக இருந்தவர் அன்பழகன். தி.மு.க.வின் கோட்டையாக இருந்த வார்டை அ.தி.மு.க. பக்கம் திருப்பியவர். அவரும், அவருடைய மனைவியும் இரண்டுமுறை கவுன் சிலராக இருந்துள்ள னர். முதலியார் சமூகத்தைச் சேர்ந்த வர். அந்த வார்டை ஏ, பி என இரண்டாக உடைத்து, 41-பி வார்டுக்கு, அவரிடம் எடுபிடியாக இருந்து வந்த ஜானகிராமன் என்பவரை செய லாளராக நியமித் துள்ளார் சிங்காரம். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அன்பழ கனுக்கு எதிராக தி.மு.க.வுடன் சேர்ந்துகொண்டு வேலை செய்தவர்தான் இந்த ஜானகிராமன்.

Advertisment

41 பி வார்டில் பெரும்பான்மையாக உள்ள சவுராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த சத்யநாராயணனை செயலாளராக நியமிக்கும்படி அன்பழகன் பரிந்துரை செய்தும் ஏற்கவில்லை. இதுகுறித்து எடப்பாடியாரிடம் முறையிட்டார். அவரோ சிங்காரத்திடம் பேசும்படி கூற, அவரைத் தொடர்பு கொண்டுள்ளார் அன்பழகன். அதற்கு அவரோ, 'அதுதான் பொதுச்செயலாளரிடமே பேசிட்டீங்களே... இதற்குமேல் நான் பேச எதுவும் இல்லை,' என எகத்தாளமாக சொல்லியிருக்கிறார். அதிருப்தி அடைந்த அன்பழகன், தன் மூலம் கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் நியமிக்கப்பட்ட 30 பேருடன் கூண்டோடு ஜன. 2-ஆம் தேதி ராஜினாமா செய்துவிட்டார்.

அதேபோல, 40-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் பெருமாள்சாமியை திடீரென்று வார்டு செயலாளர் பதவியில் இருந்து கழற்றிவிட்டு, அந்த இடத்திற்கு ராஜமகேஸ்வரனை கொண்டுவந்துள்ளார். எம்.எல்.ஏ., எம்.பி., தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்த அஸ்தம்பட்டி பகுதி செயலாளர் கே.ஆர்.சரவணனை கட்டம் கட்டிவிட்டு, அந்தப் பதவிக்கு கட்சியில் சேர்ந்து சில மாதங்களே ஆன நாயுடு சமூகத்தைச் சேர்ந்த, காவல்துறை முன்னாள் டி.எஸ்.பி. உமாசங்கரை அமர வைத்திருக்கிறார்.

சேலம் தெற்கு தொகுதியில் சவுராஷ்டிரா சமூக வாக்குகள் 20 ஆயிரத்திற்கும் மேல் உள்ளன. அந்த சமூகத்தைச் சேர்ந்த மாஜி மண்டலக்குழுத் தலைவர் எல்.வி.பிரகாஷ் அம்மாபேட்டை பகுதி செயலாளராக வும், 34-வது வார்டு செயலாளராகவும் இருந்தார். கட்சி ஆலோசனைக் கூட்டத்தின்போது பொறுப்பாளர் சிங்காரம், "டேய் சொட்டையா... உனக்குதான் வயசாயிடுச்சே... எதுக்கு ரெண்டு பதவி?,' என்று அவரை மரியாதைக்குறைவாக பேசினாராம். எல்.வி.பிரகாஷைத் தூக்கிவிட்டு, அந்த இடத்திற்கு ஜெகதீஷ்குமாரை கொண்டு வந்தார்.

சிங்காரம் பொறுப்பாளராக வந்ததிலிருந்து அவரை ஜெகதீஷ்குமார் வளைத்துப் போட்டுக் கொண்டார். ஏர் கம்ப்ரஷர் டீலர், பைனான்ஸ் என ஜெகதீஷ்குமாரின் கையில் பணம் புரள்கிறது. சிங்காரத்திற்கு வேண்டிய சகலவிதமான ஏற்பாடுகளையும் அவர்தான் செய்துவருகிறார். இதனால் ஏற்பட்ட நெருக்கத்தில் அம்மாபேட்டை பகுதியை நான்காகப் பிரித்து, அதில் தனது ஆதரவாளர்களான அபு, தாமரைச்செல்வன் ஆகியோரை பகுதிச் செய லாளராக ஆக்கிவிட்டார். மற்ற ஆதரவாளர்களான ஜானகிராமன், ஹேமநாதன், ராஜமகேஷ்வரன், மோகன்ராஜ், நிதின், கவுரிசங்கர் உள்ளிட்ட பலருக்கும் கட்சியில் பதவி வாங்கிக் கொடுத்துள்ளார்.

அகமுடையார் சமூ கத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் குமார், எம்.எல்.ஏ. சீட்டை குறி வைத்து காய்களை நகர்த்திவருகிறார். அதற்காக சீனியர்கள் மீது பொய் புகார்களைக் கூறி, டம்மி பதவிக்கு தூக்கியடிக்க வைப்பது எந்த விதத்தில் நியாயம்? எடப்பாடியாரின் கவனத்திற்குக் கொண்டு சென்றும் எந்த நடவடிக் கையும் இல்லை. இந்த அதிருப்தி எல்லாம் 2026 சட்டமன்றத் தேர்தலில் கட்டாயம் எதிரொலிக்கும்'' என ஏக் தம்மில் சொல்லி முடித்தனர் மூத்த ர.ர.க்கள்.

ee

ஜெகதீஷ்குமார் தரப்பில் பேசிய அவருடைய ஆதரவாளர் ஒருவர், "கட்சிக்கு விசுவாசமாக உழைத்து வரும் நபர்களின் பட்டியலை இங்குள்ள கட்சிக்காரர்கள் மூலமாகத்தான் சிங்காரம் கேட்டுப் பெற்று, பதவியில் நியமித்து வருகிறார். அதனால் ஜெகதீஷ்குமாரின் பரிந்துரை களைத்தான் சிங்காரம் செயல் படுத்துகிறார் என்று சொல்வதை ஏற்க முடியாது'' என்றார்.

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜி.வெங்கடா சலத்தை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றோம். அவர் அழைப்பை ஏற்கவில்லை.

இதையடுத்து மாவட்ட பொறுப்பாளரான சிங்காரத்திடம் பேசினோம்.

"எனக்கு கட்சித் தலைமை என்ன வேலை கொடுத்ததோ அதைத்தான் செய்கிறேன். சீனியர்கள் யாரையும் வீட்டுக்கு அனுப்பவில்லை. அவர்களுக்கு மாற்றுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சவேண் டிய நேரம் இது. தமிழ்நாடு முழுவதும் கட்சி அமைப்புரீதியாக வார்டு, பகுதிகள் பிரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

ஒரு பகுதியை நான்காகப் பிரித்து இரண்டு பேரை பெரும்பான்மை சமூகத்தில் இருந்தும், இரண்டு நிர்வாகிகளை மைனாரிட்டி சமூகத்தில் இருந்தும் நியமித்து வருகிறோம். ஜெகதீஷ்குமார் சொல்வதைக் கேட்டு நடக்கும் அளவுக்கு நான் யாருக்கும் கைப்பிள்ளை இல்லை. நான் எம்ஜிஆர் காலத்து ஆள்'' என்றார் சிங்காரம்.

இவர் இப்படிச் சொன்னாலும், பதவி இழந்த மற்றும் டம்மி பதவிகளுக்கு தூக்கியடிக்கப்பட்ட மூத்த நிர்வாகிகளோ, "தப்பு பண்ணிட்டியே சிங்காரம்... நீ எங்கள தொட்டிருக்கக்கூடாது. தேர்தல் நேரத்தில் இதற்கான விளைவை பார்க்கப் போற'' என "பேட்ட' ரஜினிகாந்த் பாணியில் உறுமுகின்றனர்.