திருப்பூர் அருகே கெட்டுப்போன உணவைச் சாப்பிட்டதன் காரணமாக உணவு ஒவ்வாமை ஏற்பட்டு, காப்பகத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் அடுத்தடுத்து மரணிக்க, தனியார் காப்பகங்களின் வண்டவாளங்கள் மெல்ல மெல்ல வெளிச்சத்திற்கு வந்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 4-ஆம் தேதி திருப்பூர் திருமுருகன்பூண்டியில் விவேகானந்தா சேவாலயம் எனும் ஆதரவு ஏற்போர் குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த 14 சிறுவர்கள் உணவு ஒவ்வாமையினால் மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். நான்கு ஆம்புலன்ஸ்களில் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட நிலையில், மாதேஷ், அத்திஷ் ஆகிய இரண்டு சிறுவர்களும் வரும்போதே இறந்துபோயிருந்தனர். மேற்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பாபு என்கிற சிறுவனும் மரணிக்க, தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர் மீதமுள்ள சிறுவர்கள்.
தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் வினீத் மருத்துவமனைக்கு விரைந்து, மருத்துவர்களிடம் சிறுவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்த பின், "முந்தைய நாள் இரவில் ரசம் சாதம் சிறுவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைச் சாப்பிட்ட 14 சிறுவர்களுக்கு வயிற்றுப் போக்கு, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. உடனடி யாக அன்றைய இரவே சில குழந்தைகளை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில் வியாழனன்று காலை 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதல்கட்டமாக, சிறுவர்கள் உண்ட உணவினை பரிசோதனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சிகிச்சை பெற்றுவரும் சிறுவர்களின் சிறுநீர், மலம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவில்தான் சிறுவர்கள் எவ்வாறு இறந்தார்கள் என்பது குறித்து தெளிவான அறிக்கை கிடைக்கும். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவுசெய்து உரிய விசாரணை நடத்திவருகின்றனர். காப்பக நிர்வாகியிடம் உரிய விசாரணை நடத்தப்படும். தற்பொழுது சிகிச்சை பெற்றுவரும் சிறுவர் களுக்கு நீர்ச்சத்து தொடர்பான மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றது'' என்றார் அவர்.
"திசோ' அமைப்பின் வசமிருந்த இந்தக் கட்டிடத்தை தாங்கள் இயக்கிக்கொள்கின் றோம் எனக்கூறி மாதம் ரூ.25 ஆயிரம் வாடகையில் விவேகானந்தா காப்பகம் எனும் பெயரில் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தக் காப்பகம் இயங்கி வருகிறது. இந்த காப்பகம் பெற்றோர்களால் கைவிடப்பட்ட, பெற்றோர்கள் இல்லாத, சிங்கிள் பேரண்ட் குழந்தைகளை தங்க வைத்து உணவு கொடுத்து தங்கவைத்து பராமரித்து வருவதை வாடிக்கையாகக் கொண்டது.
இந்த சம்பவத்துக்குப் பின் அமைச்சர்கள் கீதாஜீவன், சாமிநாதன் ஆகியோர் காப்பகத்தில் ஆய்வினை மேற் கொண்டு, "இரவு நேரத்தில் காப்பாளர் யாரும் இல்லை. குழந்தைகள் காப்பகம் மிகவும் மோசமான நிலையில் செயல்பட்டு வந்தது. காப்பக நிர்வாகி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். காப்பக நிர்வாகத்தின் அஜாக் கிரதையாலும், மெத்தனச் செயல்பட்டாலும் மூன்று சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ள னர். தனியார் காப்பகத்தை மூடி சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விவேகானந்தா சேவாலய காப்பக சிறுவர்கள், ஈரோட்டில் உள்ள காப்பகத்தில் சேர்க்கப்பட்டு, அரசின் கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்படுவர்'' என்றனர்.
இது இப்படியிருக்க, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியினர், "ஆர்.எஸ். எஸ். பின்புலத்தில் இயங்கும் விவேகானந்தா சேவாலயத்தில் இறந்த 3 மாணவர்களின் மரணத்திற்கு நீதி கேட்டும், சேவாலய நிர்வாகி களை உடனடியாக கைதுசெய்யக் கோரியும் விவேகானந்தா சேவாலயா காப்பகத்தை முற்றுகையிடும் போராட்டத்தினை அறிவித் திருந்தனர். எனினும், அறிவிக்கப்பட்ட நேரத் திற்கு 1 மணி நேரம் முன்பாகவே போராட் டக்காரர்களை கைதுசெய்தது காவல்துறை.
இதுகுறித்து பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சண்.முத்துக்குமார், "இந்த சேவாலயம் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகின்றது. கட்டடத்தின் ஒரு பகுதியில் இந்து மதம் குறித்த நூல்கள், சி.டி.க்கள் விற்பனையும் அங்குண்டு. விவேகானந்தா சேவாலயத்தைப் பொறுத்தவரை முழுக்க முழுக்க நன்கொடை அடிப்படையில்தான் இயங்குகின்றது. குழந்தைகளை வைத்தே கோடிக்கணக்கில் வசூலிப்பது திருப்பூரில் சர்வ சாதாரணம். ஆரம்பத்தில் எளிமையாக இருந்த இந்த அமைப்பின் டிரஸ்டி செந்தில்நாதன் இன்று பல கோடிகளுக்கு அதிபதி. இதன் துணை அமைப்பான அன்பு இல்லத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் நிகழ்வுகள் நடந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆரம்பம் முதல் இந்த சேவாலயத்தில் விரும்பத்தகாத பல சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன. அன்றே அதனைத் தடுத்திருந்தால் இந்த 3 உயிர்கள் பலியாகியிருக்காது'' என்றார் அவர்.
படங்கள்: விவேக்