ஜெ. மறைந்தபோது அ.தி.மு.க.வின் வி.வி.ஐ.பி.யான நயினார் நாகேந்திரன் இந்தப் பக்கமா?… அந்தப் பக்கமா?…என்கிற மனஉளைச்ச லில் இருந்திருக்கிறார். அதுசமயம் பொன்னார், தற்போதைய நிலையில் நயினார் நாகேந்திரனை தாமரைக்குள் கொண்டுவந்தால், தென்மாவட் டத்தில் முக்குலத்தோர் வாக்குகள் பா.ஜ.க.வுக்கு கிடைக்கும். கட்சியும் பெயர் சொல்லும்படியான வளர்ச்சிப் பாதையிலிருக்கும் என்கிற யோசனையை பா.ஜ.க.வின் டெல்லித் தலைமை வரை கொண்டுபோயிருக்கிறார்.

அதற்கு பதிலுபகாரமாக பண்ணையா ருக்கு (நெல்லை வட்டாரத்தில் நயினார் நாகேந்திரன் இப்படித்தான் அழைக்கப் படுகிறார்) பா.ஜ.க.வின் மாநில தலைவர், எம்.பி. அல்லது பிற்பாடு அமைச்சராக்குவது என வெயிட்டான வாக்குறுதிகளைத் தந்திருக்கிறார் பொன்னார்.

ccc

நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி.க்கு வாய்ப்பான ராமநாதபுரம் தொகுதியில் நயினார் நாகேந்திரன் நிறுத்தப்படுவார், அதன்மூலம் மத்திய அமைச்சராவார் என்றெல்லாம் வெயிட்டான பேச்சுக்கள் அலையடித்தன. ஆனால் பா.ஜ.க.வின் தலைமை பீடமான ஆர்.எஸ்.எஸ். தன் அமைப்பு சார்ந்த புள்ளியை அங்கு நிறுத்த கட்டளைகள் போக, மறுபேச்சில்லை. இந்த முதல் சறுக்கலே பண்ணையாருக்கு அதிர்ச்சியைத் தர, அடுத்து தமிழக பா.ஜ.க.வின் தலைவரான தமிழிசை சவுந்திரராஜனின் பதவிமுடிந்து மாநிலத்தின் அடுத்த தலைவர் யார் என பேச்செழுந்தநிலையில், அதனைக் குறிவைத்து நயினார் நாகேந்திரன் தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் மூலம் டெல்லிவரை சென்று ஜே.பி.நட்டாவிடமும் பிரஷர் கொடுக்க வைத்தார்.

ஆனால் பா.ஜ.க.வின் தேசியத் தலைமை, யாரும் எதிர்பார்க்காத எல்.முருகனை தலைவ ராக்கியபோது பண்ணையாருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.

இதனால் பண்ணையார் கடும் அதிருப்தியில் மௌனம் காத்தார். மனக்கசப்பில் கட்சி மாறப்போகிறார் என ஆணித்தரமான பேச்சுக்கள் கிளம்ப, அதேசமயம் பொன்னாரும் தலையிட ராமநாதபுரத்தின் ஆர்.எஸ்.எஸ். புள்ளி மூலம் ஆந்திர மாநிலத்தின் கடப்பா நகரிலுள்ள கடப்பா கிரானைட் மைன்ஸுக்கு பண்ணையாருக்கு லைசென்ஸ் தரப்பட்டது.

உலகத்தரம் கொண்ட கடப்பா கிரானைட் பளிங்குக் கற்கள் வருமானத்தில் கொழிப்பவை. தொடர்ந்து நெல்லை தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஆனவர், பா.ஜ.க.வில் தன் இருப்பைப் பலமாக்கிக்கொண்டார். பா.ஜ.க. எம்.எல்.ஏ. என்றாலும் தி.மு.க. ஆட்சியுடன் மோதல் போக்கைவிடுத்து அனுசரணைப் போக்கிலேயே இருந்திருக்கிறார் நயினார் நாகேந்திரன்.

இந்தச் சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லை அடைமிதிச்சான்குளம் கிராம கல்குவாரியில் அளவுக்கு அதிகமாகத் தோண்டிய தாலும் விதிகளை மீறிச்செயல்பட்டதாலும் டைனமைட் வெடிவைத்து தகர்க்கப்பட்டதில் பல தொழிலாளிகள் சிக்கியதில் 4 பேர் இறந்துபோனதுடன் அவர்களின் உடல்களை மீட்பதே பெரும் சவாலானது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை போனதால் பல மாநிலங்கள் குவாரிகள் விசயத்தில் கவனம் செலுத்தத் தொடங்கின.

அதுசமயம் ஆந்திராவின் கடப்பா நகரச் சுரங்கங்கள் அதிகாரிகளால் ஆய்வு செய்யப் பட்டதில் சட்டவிதிகளை மீறி அதிகளவு ஆழம் தோண்டி கிரானைட் கற்கள் வெட்டியெடுக் கப்பட்டது கண்டறியப்பட்டிருக்கிறது. அதற் காக பண்ணையாருக்கு சுரங்கத்துறை 16“சி“ அபராதம் விதித்திருக்கிறதாம். இதனால் அதிர்ந்துபோன பண்ணையார், மத்திய சுரங்கத்துறைவரை போய் அபராதத்தை ரத்து செய்யக் கேட்டிருக்கிறார். இந்நிலையில் பண்ணையாரின் ஒவ்வொரு அசைவும் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு போயிருக் கிறதாம்.

“நயினார் நாகேந்திரன் தி.மு.க.வின் தொடர்பிலிருக்கிறார், வரும் தேர்தலில் அவர் நம் பக்கமிருக்கமாட்டார்’என்றும், மைன்ஸ் பற்றியும் திரி கொளுத்தியிருக்கிறார். அதன்பிறகே மைன்ஸின் அபராதத் தொகையினைச் செலுத்த பண்ணையாருக்கு அழுத்தம் தரப்பட்டிருக்கிறது. இதனால் நெருக்கடியிலிருக்கும் நயினாருக்கு இதன் பின்னணியில் அண்ணாமலையின் பங்கிருப்பது தெரிய வந்ததாம். அது முதல் தென் மாவட்டத்தில் அண்ணாமலையின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்து வந்திருக்கிறார். அண்ணாமலையும் அவரை மாநிலத்தில் டம்மியாக்கியிருக்கிறார்.

இந்த நிலையில்தான் தமிழக சட்ட சபையில் சேதுசமுத்திரத் திட்ட தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது அதனை ஆதரித்துப் பேசிய எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், சேது சமுத்திரத் திட்டம் அமையும்பட்சத்தில் தென்மாவட்டம் வளம்பெறும் என்று பேசியது அண்ணாமலைக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி யிருக்கிறது. இருவரும் நேருக்கு நேர் யுத்தம் மேற்கொள்ளாவிட்டாலும், உள்ளுக்குள் மௌனயுத்தம் மூண்டிருக்கிறது.

இதற்கிடையே ஜன-13 அன்று நாகர்கோவிலில் நடக்கவிருக்கிற கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்ற அண்ணாமலை, மதியம் நெல்லை கட்சி அலுவலகத்தில் நடந்த பொங்கல் விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அன்றைய தினம் காலை நிகழ்வில் கலந்துகொண்ட நயினார் நாகேந்திரன், தலைவர் அண்ணாமலையின் நிகழ்ச்சியிலும், பத்திரிகையாளர் சந்திப்பிலும் தலைகாட்டவில்லையாம். இவையனைத்தையும் கவனித்த அண்ணாமலை, நயினாரை மனதில் கொண்டே, "கடந்த 2008-ல் கொண்டுவந்த தீர்மானத்தின் படி சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம். 58 கி.மீ. தொலைவுள்ள ராமர் பாலம் சேதமடையும். சேதுசமுத்திரத் திட்டத்தால் பயன்பெறப் போவது மீனவர்கள் கிடையாது'’’என்று பத்திரிகையாளர் களிடம் தெரிவித்திருக்கிறார்.

ஒரே கட்சியின் மாநிலத் தலைவருக்கும் மக்கள் பிரதிநிதிக்குமுள்ள முரண்பாடு வெளிப்பட்டு அரசியல் சூட்டைக் கிளப்பி யிருக்கிறது.

-பி.சிவன்

படங்கள்: ப.இராம்குமார்