"எங்கள் ஆட்சி அமைந் தால் எட்டுவழிச் சாலைத் திட்டம் ரத்து செய்யப்படும்' என்கிற தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இணைக்கப் பட்டிருக்கும் அம்சம், விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற் பைப் பெற்றுவருகிறது.

salem

""சேலம் டூ சென்னை நெடுஞ்சாலையில் 8 வழிச்சாலை திட்டத்தை என்றைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்தாரோ, அப்போது முதலே அவருக்கு ஏழரை ஆரம்பித்து விட்டது'' என்கிறார்கள், இத்திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள். "நாடாளுமன்றத் தேர்தலைப் போல, சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கு மரண அடி கொடுப்போம்' என சூளுரைத்து வருகிறார்கள்.

சேலம்-சென்னை நெடுஞ் சாலையில் 8 வழிச்சாலைத் திட்டத்தை 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கொண்டுவர முயன்றன மத்திய-மாநில அரசு கள். இதற்காக சேலம் தொடங்கி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திரு வண்ணாமலை வழியாக காஞ்சிபுரம் வரை 277.3 கி.மீ. தூரத்துக்கு பசுமைவழி விரைவுச் சாலை அமைக்க, 2343 ஹெக்டேர் நிலத்தை சிறு, குறு விவசாயி களிடம் இருந்து, அவர்களின் எதிர்ப்பையும் கண்ணீரையும் கதறலையும் பொருட்படுத்தாமல் தடாலடியாக ஆக்கிரமித்தது எடப்பாடி அரசு.

Advertisment

நிலம் கொடுக்க மறுத்த விவசாயிகள், கோரிக்கை மனு அளித்தவர்கள், திட்டத்துக்கு எதிராக பேசியவர்கள் என அனைவர் மீதும் கன்னாபின்னா வென ஏகப்பட்ட வழக்குகளைப் போட்டு அச்சுறுத்தினர். இந்த நிலையில் இந்த திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் வழக்கு தொடர, உச்சநீதிமன்றமோ, ""8 வழிச்சாலைத் திட்டத்திற்கு தடை இல்லை. அதேநேரம், புதிய அரசாணை வெளியிட வேண்டும். மேலும், சுற்றுச்சூழல் ஆணையத் திடம் அனுமதி பெறவேண்டும்'' என்று தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு, விவசாயிகள் தலையில் பேரிடியாக இறங்கியது.

இந்த நிலையில் தி.மு.க., "எங்கள் ஆட்சி அமைந்தால், 8 வழிச்சாலைத் திட்டம் ரத்து செய்யப்படும்'’என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்க... அது விவசாயிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட உத்தமசோழபுரம், பாரப்பட்டி, வீரபாண்டி, பூலாவரி, நிலவாரப்பட்டி, கூமாங்காடு உள்ளிட்ட பத்து பஞ்சாயத்துகளை சேர்ந்த விவசாயிகள் திரண்டு வந்து, ஒருவருக்கொருவர் இனிப்புகளை ஊட்டி, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை கொடுத்திருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டாடினர். அதே சமயம் அந்தத் திட்டத்தைக் கொண்டுவந்த எடப்பாடி அரசை, அவர்கள் அடிவயிறு எரிய, சபிக்கவும் தவறவில்லை.

இது தொடர்பாக 8 வழிச்சாலைத் திட்ட எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் மோகனசுந்தரம், சிவகாமி ஆகியோர் நம்மிடம் பேசினர். அப்போது அவர்கள், ""தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, "எட்டு வழிச் சாலை திட்டம் ரத்து செய்யப்படும்' என மு.க.ஸ்டா லின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்து உள்ளார். இந்த அழிவுத் திட்டம் வேண்டாம் என்று கடந்த 3 வருஷமாக கதறி, அழுது புரண்டு கோரிக்கை வைத்தோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி எங்களை ஒருமுறை கூட நேரில் சந்தித்துப் பேசவில்லை. அவரை சந்திக்கப்போன எங்களை மறித்து காவல்துறையினர் வழக்குப் போட்டனர். சர்வாதி கார ஆட்சியில்தான் இப்படி எல்லாம் நடக்கும். இதுவரை கடும் மனஉளைச்சலில் இருந் தோம். தி.மு.க. அளித்த வாக் குறுதிக்கு பிறகுதான், நிம்மதி யாக இரவு தூங்கப்போகிறோம். விவசாயிகளின் நெஞ்சில் பால் வார்த்துவிட்டார் ஸ்டாலின். விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் எடப்பாடி ஒருபோதும் விவசாயி ஆக முடியாது’’ என்றவர்கள், ’கடந்த பாராளுமன்ற தேர்தலைப் போல, வரும் சட்டமன்ற தேர்தலிலும் விவசாயிகள் தி.மு.க. கூட் டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வோம். அ.தி.மு.க.வை தோற்கடிப்போம்''’என்றனர் அழுத்தமாய்.

Advertisment

மற்றொரு போராட் டக்குழு ஒருங்கிணைப்பாளரான குள்ளம்பட்டி பன்னீர்செல்வமோ, ""முதலில் 13-ந் தேதி வெளியான தி.மு.க.வின் தேர் தல் அறிக்கை யிலும் எட்டுவழிச் சாலை பற்றிய அறிவிப்பு இல்லை. மறுநாள் திருத்தத் தோடு வெளியான தேர்தல் அறிக்கையில் 8 வழிச் சாலை திட்டம் ரத்து செய்யப்படும்ங்கிற குறிப்பு இருந்தது. அதைப்பார்த்த பிறகு தான் எங்களுக்கு நிம்மதியே வந்தது. ஆனாலும் இந்த ஒருநாள் தாமதமே, இந்த திட் டத்தை தி.மு.க. முழு மனதோடு எதிர்க்கிறதாங்கிற சந்தேகத்தை ஏற்படுத்திடிச்சி'' என்றார்.

எந்த நிலையிலும் 8 வழிச் சாலைத் திட்டத்தை விவசாயி கள் ஏற்பதாக இல்லை. மேலும் அந்தத் திட்டத்துக்கு ஆரத்தி எடுத்த எடப்பாடியை அவர்கள் மன்னிக்கவும் தயாராக இல்லை. இதையே அவர்கள் குரலில் இருந்து நம்மால் உணரமுடிந்தது.