சென்னையில் மழை வெள்ளத்தின் பாதிப்பு ஓயும் முன்பே, மணலி பெட்ரோலிய நிறுவனப் பகுதிகளிலிருந்து அடித்து வரப்பட்ட கழிவு எண்ணெய்களால் பெரிதும் பாதிக்கப்பட்டனர் எண்ணூர் பகுதி மக்கள். அதற்கான நிவாரண உதவியெல்லாம் அறிவிக்கப்பட்ட நிலையில், பட்ட காலிலேயே படும் என்பதுபோல் தற்போது, அமோனிய வாயுக்கசிவால் அப்பகுதி மக்கள் உயிர்ப் பயத்தில் உறைந்துள்ளனர்.

"கோரமண்டல் இண்டர்நேசனல் லிமிடெட்' என்ற நிறுவனம், வடசென்னையில் திருவொற்றியூர் தாலுகா எர்ணாவூர் பகுதியில் உரத் தொழிற்சாலை ஒன்றையும், கத்திவாக்கம் கிராமத்தில் அமோனியா சேமிப்புக் கிடங்கு ஒன்றையும் இயக்கி வருகிறது. இந்த ஆலைக்கு, துறைமுகத்திலிருக்கும் கப்பல்களிலிருந்து திரவ அமோனியாவை கடலுக்கடியில் சுமார் 2 முதல் 3 கி.மீ. நீளத்துக்கு பதிக்கப்பட்ட குழாய்கள் மூலமாக கொண்டுவருகிறார்கள்.

gas

இந்த சூழ்நிலையில் திடீரென செவ்வாய் இரவு (26-12-2023) பதினொன்றரை மணியளவில் ஏதோ வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த மக்கள், தூக்கத்திலிருந்து எழுந்து வெளியில் வந்து பார்க்கையில், கடற்கரையில் பதிக்கப்பட்ட அமோனிய குழாயில் ஏற்பட்ட கசிவால் புகையுடன் கூடிய சத்தம் எழுந்துள்ளது. இந்த கசிவின் காரணமாக வெளியேறிய அமோனிய வாயு காற்றில் கலந்து, சின்ன குப்பம், பெரிய குப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் எனச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் நெடியுடன் கூடிய சுவாசப் பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளது. இந்த அசம்பாவிதம் குறித்து கேள்விப்பட்ட திருவொற்றியூர் தொகுதி எம்.எல்.ஏ. சங்கர் மற்றும் போலீ சார், மருத்துவர்களையும், ஆம்புலன்ஸ் வாகனத்தையும் உடனடியாக வரவழைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலுதவி அளித்ததோடு, அப்பகுதி மக்கள் அனைவரை யும் அப்புறப்படுத்தி, பல கிலோமீட்டர்கள் தொலைவி லுள்ள சமுதாய நலக்கூடத்திலும், தேவாலயங்களிலும் பாதுகாப்பாக தங்கவைத்தனர். மூச்சுத் திணறலால் பெரிதும் பாதிக்கப்பட்ட 55-க்கும் மேற்பட்டவர்களை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இவர்களில் இருவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து எவ்வாறு நிகழ்ந்ததென்று விசாரணையில் இறங்கினோம்.

"அமோனியாவை துறைமுகத்திலிருந்து அனுப்பக் கூடிய குழாய்கள் 30 ஆண்டுகள் பழமையானவை என்றும், அவற்றை முறையாகப் பராமரிக்காததே விபத்துக்கான காரணமென்றும்' தெரியவந்துள்ளது. அமோனியாவை கப்பலிலிருந்து நிறுவனத்துக்கு குழாய்கள் மூலமாக அனுப்புவதற்கு முன்பாக அந்த குழாய்களை 36 மணிநேரம் குளிர்பதனப்படுத்தப்பட வேண்டுமாம். அதன்பிறகே கப்பலிலிருந்து அமோனியாவை அந்த குழாய்களின் வழியாக செலுத்துவார்களாம். ஆனால் முறைப்படி குளிர்பதனப் படுத்தாததாலும், குழாய்கள் பழையதாக இருப்பதாலும், பராமரிப்பில்லாததாலும் இந்த கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில், அமோனியா கசிவு ஏற்பட்டது தெரிந்ததுமே, உடனடியாக நிறுவனத்திலுள்ள அமோனியா குழாய் மூடப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அந்த கசிவானது நிறுவனத்தையும் பாதித்து பெரும் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டிருக்கிறது. அப்படி பாதித்திருந்தால், சுற்றியுள்ள 8 கிலோமீட்டர் தொலைவுக்கும் வெடித்துச் சிதறியிருக்கும். வாயுக்கசிவால் மொத்த சென்னையும் பாதிப்பை எதிர்கொண்டிருக்கும். எனவே தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றது என நினைத்தாலும், இதுபோன்று எப்போது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளதால், இந்த மக்கள் புதன்கிழமை காலையிலிருந்தே இந்த நிறுவனத்தை இழுத்து மூட வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

ff

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார், ""நிச்சயம் இதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும். உங்களின் போராட்டமும் கோரிக்கையும் நியாயமானதுதான்"" எனக் கூறி சமாதானப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு செவி சாய்க்காத மக்கள், ""உடனடியாக இந்த நிறுவனத்தை இழுத்து மூடுவதோடு, இதேபோன்று சென்ற வாரம் தான் கடலில் எண்ணெய்க்கசிவு, அடுத்து இந்த விவகாரம். இப்படி எங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. ஒன்று அந்த நிறுவனங்கள் இருக்கவேண்டும், இல்லை நாங்கள் இருக்க வேண்டும்'' எனப் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்தனர்.

இந்த சூழ்நிலையில் வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையிலிருப்பவர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேசுகை யில்... ""நேற்று இரவு தொழிற்சாலையிலிருந்து கேஸ் கசிவு ஏற்பட்டு அக்கம் பக்கத்து குடியிருப்புகளில் உள்ள பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் போன்ற உபாதைகள் ஏற்பட்டது. உடனடியாக பொதுமக்கள் சுகாதாரத் துறையை தொடர்புகொண்டதும், 16 ஆம்புலன்ஸ் வாகனங்களில் பாதிக்கப் பட்டவர்கள் மீட்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் 6 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை நேரடியாக சந்தித்து சிகிச்சை பற்றி கேட்டறிந்தேன். எல்லோரும் நலமுடன் இருக்கிறார்கள். அதேபோல் ஆகாஷ் மருத்துவமனையில் நேற்று இரவு முதல் பல்வேறு உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்களை அனு மதித்துள்ளனர். அவர்களுக்கு தேவையான சிகிச்சை பற்றி கேட்டறிந்தேன்.

Advertisment

மேலும், நானும், எம்.எல். ஏ.க்கள் சுதர்சனம், சங்கர் ஆகியோர் நேரடியாகப் போய்ப் பார்த்து நலம் விசாரித்தோம். அவர்களுடைய கண் எரிச்சலைப் போக்குவதற்கு தேவையான சிகிச்சை பற்றி கேட்டறிந்தேன். அதோடு மட்டுமல்லாமல் சென்னை மாநகராட்சியும், மக்கள் நலத்துறையும் ஒருங்கிணைந்து மருத்துவ முகாமை பெரிய குப்பம் பகுதியிலுள்ள மாநகராட்சி பள்ளியில் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். 36 பேர் ஆகாஷ் மருத்துவமனையிலும், ஸ்டான்லி மருத்துவமனையில் 6 பேரும் என மொத்தம் 42 பேரும் நலமுடன் இருக்கிறார்கள். இன்னும் சில மணி நேரத்தில் வீடுகளுக்கு திரும்புவார்கள். இது சம்பந்தப்பட்ட மாசு கட்டுப்பாடு வாரியத்தின்மூலம், உடனடியாக தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுவதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். இரவு நேரத்திலும் காவல்துறையினர் மீட்புப்பணிகளை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார்கள். யாருக்கும் எந்தவித பெரிய பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாத்துள்ளனர். ஐ.சி.யு.வில் யாரும் இல்லை. தீவிர பாதிப்பு இல்லை. ஸ்டான்லியில் உள்ள 3 குழந்தைகள் காலையில் காலை உணவு சாப்பிட்டிருக்கிறார்கள் எல்லோரும் நலமுடன் இருக்கிறார்கள்.

hh

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் மருத்துவச் செலவு முழுவதையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும். "ஒரு ரூபாய் கூட பொதுமக்களிடமிருந்து வாங்கக்கூடாது' என்று மருத்துவ நிர்வாகத்திடம் கூறியுள் ளோம். தொழிற்சாலை சம்பந்தமாக அந்த துறை அமைச்சர் பேசி ஆய்வு மேற்கொண்டு, இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பார்'' என்று தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சரஸ்வதி, மூர்த்தி வெண்ணிலா, தேவி ஆகியோரிடம் கேட்டபோது, ""வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த போது பயங்கர சத்தம் கேட்டு வெளியில் வந்தால் அனைவரும் ஓடிக்கொண்டிருந்தனர். அதனைக் கண்டு பயந்து நாங்களும் ஓடினோம். அப்போது தலைசுற்றி வாந்தியெடுத்து மயங்கி விழுந் தோம். அதன்பிறகு கண் விழித்துப் பார்த்தால் மருத்துவமனையில் இருந்தோம். அரசு உடனடியாக எங்களுக்கு இதுபோன்று எது வும் நடக்காமலிருக்க அந்த நிறுவனத்தை இழுத்து மூட வேண்டும். அதோடு, மற்ற நிறுவனங்களிலும் இதுபோன்று நடக்காமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்''" என்றார்கள்.

ஏற்கெனவே முன்பு ஒருமுறை மணலி தொழிற்சாலையில் வாயுக் கசிவு காரணமாக, சென்னையின் மையப்பகுதியாக தியாகராயநகர் வரை அதன் தாக்கம் இருந்தது. தற்போது ஏற்பட்டுள்ள அமோனியா வாயுக்கசிவு ஓர் எச்சரிக்கை அலாரம்தான். இனியாவது, வடசென்னைப் பகுதியில் நீண்ட காலமாக இயங்கிவரும் தொழிற் சாலைகளில் பராமரிப்புப் பணி களும், பாதுகாப்பு நடவடிக்கை களும் முறையாக எடுக்கப்படு கின்றனவா என்பதை சோதிக்க வேண்டும்.

பராமரிப்பை சரியாகச் செய்யாத நிறுவனங்களை தற்காலிகமாக மூடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் முறையாக செயல்படுவார்கள்.

மக்களின் உயிரோடு விளை யாடும் இத்தகைய நிறுவனங்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!