edappadi

பா.ஜ.க.வை பற்றி அதிகம் பேசாதவர் எடப்பாடி. பா.ஜ.க.வின் கொள்கைகளை அதிகம் விமர்சிக்காமல் இருந்த எடப்பாடி தேர்தல் முடிந்ததும், 2026-ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என அறிவித்தார். இந்தப் பேச்சு பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இன்று எடப்பாடிக்கு ஆதரவாக பேசக்கூடிய தலைவர்கள் இரண்டே பேர் என்கிற அளவிற்கு எடப்பாடியை அ.தி.மு.க.வுக்குள்ளேயே தனிமைப்படுத்தும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது.

Advertisment

பா.ஜ.க. எதிர்ப்பில் எடப்பாடி தீவிரமாக இருந்தார். பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்புவரை எடப்பாடியை யாராலும் அசைக்க முடியவில்லை. பா.ஜ.க. மாநிலத் தலைவருக்கும் எடப்பாடிக்கும் இடையே ஒரு பெரிய யுத்தம் நடந்தது. இதற்குக் காரணம் எடப்பாடி போட்ட ஒரு அரசியல் கணக்குதான். அந்த அரசியல் கணக்கு முழு வெற்றி பெறவில்லை. ஆனால், அ.தி.மு.க.வை இரண்டாவது பெரிய அரசியல் கட்சியாக கொண்டு வந்தது. இதற்கு முந்தைய பாராளுமன்றத் தேர்தலை விட அதிக வாக்குகளை பெற வைத்தது. ஆனால் வெற்றிக் கோட்டைத் தொட முடியவில்லை.

அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் ஒன்று சேர்ந்திருந்தால் முப்பது பாராளுமன்றத் தொகுதிகளில் வென்றிருக்க முடியும் என்கிற வாக்குகளின் கூட்டல் சதவீதத்தை தமிழிசை சௌந்தரராஜன் முதலில் எடுத்துரைத்தார். அதை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வேலுமணி குறிப்பிட்டுப் பேசினார். ‘அப்படியெல்லாம் இல்லை’ என எடப்பாடி பதில் சொன்னார். எடப்பாடியின் இந்தப்பதில் அ.தி.மு.க.வை உடைக்கும் நடவடிக்கைகளை வேகப்படுத்தியது.

Advertisment

எடப்பாடியின் பாதுகாப்பு அதிகாரி ராஜாவின் இல்லத் திருமணத்தில் எடப்பாடியை அவமானப்படுத்துவது போல வேலுமணி, எடப்பாடி மேடையேறிய பிறகு தனியாக தனது ஆதரவாளர்களுடன் மேடையில் ஏறினார். இதைப் பார்த்த அ.தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தார்கள். உடனே வேலுமணியை அழைத்த எடப்பாடி “""உன்னைத் தொலைத்துவிடுவேன், உன்னைக் கட்சியைவிட்டு நீக்கிவிடுவேன், நீ கட்சியை விட்டுப் போனால் ஈ., காக்கா கூட உன் பின்னால் வராமல் நான் பார்த்துக்கொள்வேன்''’என எகிறினார். உடனே எடப்பாடியிடம் மன்னிப்புக் கேட்ட வேலுமணி, அவருடன் இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார். செங்கோட்டையன் இல்ல திருமண வரவேற்பில் இரவு பத்துமணிக்கு மேல் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் கலந்துகொண்டார். அங்கும் எடப்பாடியும், வேலுமணியும் எதிரும் புதிருமாகத்தான் நடந்துகொண்டார்கள். வேலுமணி, தங்கமணி ஆகியோர் எடப்பாடியிடம் “""நாம் பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறித்துக்கொண்டது தவறு''’என நேருக்கு நேர் வாக்குவாதம் செய்தார்கள்.

எடப்பாடி கூட்டணியை முறித்துக்கொண்டாலும் தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், காமராஜ் ஆகிய நாலுபேரும் கோடிக்கணக்கான ரூபாய் பா.ஜ.க.விற்கு தேர்தல் நிதியாக ஒன்றிய அமைச்சர் பியூஸ்கோயலிடம் கொடுத்திருக்கிறார்கள். புதிதாக அமையும் பா.ஜ.க. ஆட்சி மிருக பலத்துடன் வந்தாலும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்பதற்காகத்தான் கூட்டணி இல்லை என எடப்பாடி சொன்னாலும் அதையும் மீறி இந்த அமைச்சர்கள் நிதி கொடுத்திருக்கிறார்கள். தேர்தல் முடிவுகள் வந்ததும் அ.தி.மு.க. கூட்டணி அமைந்திருந்தால் நாம் மத்தியில் மூன்று அமைச்சர்களைப் பெற்று இன்று சந்திரபாபு நாயுடு இருக்கும் இடத்தில் எடப்பாடி இருந்திருப்பார் என அங்கலாய்ப்பு செய்து கொண்டிருந்தார்கள்.

தேர்தலில் தோல்வி வந்ததும் சசிகலா களத்தில் குதித்துள்ளார். எடப்பாடியின் முக்கியத் தளபதியான தமிழ்மகன் உசேனை சசிகலா வளைத்தார். அவருக்கு சென்னையில் வீடில்லை. அவைத் தலைவர் ஆவதற்கு முன்பு ஆட்டோவில் வந்துகொண்டிருந்த அவருக்கு கார் வாங்கிக் கொடுத்திருந்தார் எடப்பாடி. “""எனக்கு கார் வாங்கிக் கொடுத்தீர்கள்.. வீடு வங்கிக் கொடுங்கள்...''’’ என உசேன் வெளிப்படையாகவே நிர்வாகிகள் கூட்டத்தில் கேட்டார். இந்த வீக்னெசை பயன்படுத்தி உசேனுக்கு வீடும் ஐம்பது லட்சம் ரூபாய் பணமும் கொடுத்து சசிகலா மடக்கி விட்டார்.

உசேன் எடப்பாடியை தலைவராக நிற்கவைத்த அ.தி.மு.க. பொதுக்குழுவின் தலைவர். உசேன் இல்லாமல் அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்ட முடியாது. உசேன் விலைபோனதைக் கேள்விப்பட்ட எடப்பாடி சேலத்திலிருந்து சென்னைக்கு வந்துவிட்டார். செங்கோட்டையன் திருமணத்தில் பா.ஜ.க.மா.த. ரகசியமாக கலந்துகொண்டது எடப்பாடிக்கு இன்னொரு அதிர்ச்சி. வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், தமிழ்மகன் உசேன் என அனைவரும் சசிகலாவின் மகுடிக்கு மயங்கிவிட்டனர். சசிகலா சார்பில் இவர்களிடம் சசி தம்பி திவாகர் பேசுகிறார். இந்தப் பேச்சுக்களை எல்லாம் ஜக்கி வாசுதேவ் பியூஸ் கோயலுக்கு எடுத்துச் சொல்கிறார். கோயல் இதுபற்றிய அமித்ஷாவின் கருத்தைக் கேட்டு இந்த டீமுக்கு ‘பாஸ்’ செய்கிறார். இப்படி எடப்பாடியை சுற்றி அமைக்கப்பட்ட சக்கர வியூகத்தின் ஒரு பகுதியாக அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டுமென சசிகலா ஒரு பிரச்சாரப் பயணத்தை தென் மாவட்டங்களில் துவக்கியிருக்கிறார்.

அதே நேரத்தில், அமித்ஷா நேரடியாக எடப்படியிடம் பேசியிருக்கிறார். அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க விக்கிரவாண்டி இடைத்தேர்தலை பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான பா.ம.க.வுக்கு விட்டுக்கொடுத்து அ.தி.மு.க. போட்டியிலிருந்து விலகிக் கொண்டுள்ளது. “விரைவில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி என்கிற செய்தி வரும். அப்பொழுது தமிழக பா.ஜ.க. தலைவர் காணாமல் போயிருப்பார்’’ என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.