த்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மதுரை விசிட், வெறுமனே பா.ஜ.க.வினருடன் ஆலோசனை நடத்துவதற்காக மட்டுமல்ல, எதிர்காலத்தில் பிரதமராக வேண்டும் என்கிற அவரது பெர்சனல் விவகாரத்திற்காகவும்தான் என்ற டாக் பா.ஜ.க.வில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது.

வடஇந்திய அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்கும்போதும், எதிர்கால அரசியல் விருப்பங்களை நிறைவேற்ற முயற்சிக்கிறபோதும் ஆன்மீக சாமியார்கள் மற்றும் ஜோதிடர்களிடம் ஆலோசனை பெறுவது இயல்பாக இருக்கிறது. அந்த ஆலோசனையில் சொல்லப்படும் தகவல்களைப்பொறுத்து அவர்களின் அரசியல் நடவடிக்கைகள் அமைகின்றன. அந்த வகையில், அமித்ஷாவின் மதுரை விசிட்டும்கூட அந்த ரகத்தைச் சேர்ந்ததுதான் என்கின்றன டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.

modi-amitsha

இதுகுறித்து விசாரித்தபோது, ’"ஆன்மீகத் திலும், ஜோதிடத்திலும் நம்பிக்கைகொண்ட அமித்ஷாவை சில மாதங்களுக்கு முன்பு சந்தித்துள்ளனர் ஜோதிடர்கள் சிலர். அப்போது, பிரதமர் மோடிக்குப் பிறகு அந்த பதவியை கைப்பற்ற பலரும் முயற்சித்தாலும், அந்த பதவியை அலங்கரிக்கும் யோகம் உங்களுக்குத்தான் அதிகமிருக்கிறது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் கூட உங்கள் தலைமையில்தான் நடக்கும் எனச் சொல்லியிருக்கிறார்கள்.

வாய்ப்புக் கிடைக்கும்போது, தென் தமிழகத்தில் மதுரையிலுள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் ஒரு சிறப்பு பூஜை நடத்திவிட்டு வாருங்கள். எல்லாம் தானாக நடக்கும் எனச் சொல்லிய அந்த ஜோதிடர்கள், மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சிவன் கோவிலின் தல புராணத்தை விவரித்திருக்கிறார்கள்.

Advertisment

குறிப்பாக, புதன் அதிபதியாக ஆட்சி பெற்ற புண்ணியஸ்தலம் இது. தவிர, மிகவும் சக்தி வாய்ந்த வல்லப சித்தர் ஆட்சி புரிந்து மறைந்த இடமும் இங்கு தான். புதனின் ஆட்சியும் வல்லப சித்தரின் அனுகிரகங்களும் ஒருங்கே பெற்ற கோவில் என்பதால், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிவன் கோவிலுக்கு சக்தி அதிகம். உங்களின் ஜாதகத்தின் அமைப்பை அலசியபோது, இந்த கோவிலில் வழிபாடு நடத்தினால் ஆளுமைமிக்க அரசியல் மற்றும் உயர் பதவிகள் உங்களைத் தேடி வரும். மதுரைக்கு நீங்கள் சென்று வருவது உத்தமம் என அமித்ஷாவுக்கு ஜோதிடர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

75 வயதை முடித்தவர்கள் பா.ஜ.க.வின் உயர் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்.ஸின் எழுதப்படாத சட்டம். அந்த வகையில், வருகிற செப்டம்பர் (2025) மாதத்தோடு பிரதமர் மோடிக்கு 75 வயது முழுமை பெறுகிறது. அந்த வகையில், பிரதமர் பதவியி லிருந்து விலக நேரிட்டால், புதிய பிரதமரை தேர்வு செய்யும் ஆலோசனை ஆர்.எஸ்.எஸ்.ஸில் நடக்கும். மோடிக்குப் பிறகு யார் பிரதமர்? என்கிற கேள்விக்கு ஏற்கனவே சிலரது பெயர்களை முன்னிறுத்தி ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மத்தியில் முக்கிய விவாதம் நடந்திருக்கிறது. அதேசமயம், அந்த பதவியைக் கைப்பற்ற பா.ஜ.க.வின் ஜாம்பவான்கள் சிலர் பகீரத முயற்சியில் இருந்து வருகிறார்கள். ஆனால், வயது பிரச்சனையைக் காட்டி பிரதமர் பதவியிலிருந்து மோடி விலக நேரிட்டால், அந்த பதவியில் மோடி சுட்டிக்காட்டுபவர்தான் இருக்க வேண்டும் என்கிற அரசியலும் இதில் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குறித்த தல வரலாற்றை அமித்ஷாவிடம் ஜோதிடர்கள் விவரித்தனர்.

amitsha

Advertisment

மோடிக்கு 75 வயது முழுமையாக (செப்டம் பர் 17, 2025) இன்னும் 3 மாதங்களே இருக்கின்றன. இந்த பின்னணியில்தான், அமித்ஷாவின் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் விசிட் தீர்மானிக்கப் பட்டது. கோவில் தரிசனத்திற்காக மட்டுமே வந்தால் அதனைச் சுற்றி பல ஹேஸ்யங்கள் உருவாகும் என்பதால்தான், பா.ஜ.க. நிர்வாகிகளு டன் ஆலோசனை நடத்த மதுரைக்கு அமித்ஷா வருகிறார் என்ற அரசியல் கட்டமைக்கப்பட்டது.

அதாவது, பா.ஜ.க. நிர்வாகிகளுடன் விவா திக்க அமித்ஷா மதுரைக்கு வருவதால், அப்படியே மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தரிசனம் செய்தார் என தோற்றம் உருவாகும். எதற்காக மீனாட்சி கோவிலுக்கு வந்தார் என்கிற ஆராய்ச்சி யெல்லாம் நடக்காது எனத் திட்டமிட்டே இந்த மதுரை விசிட் முடிவானது. பா.ஜ.க. நிர்வாகிகளு டன் அமித்ஷா ஆலோசனை நடத்துவதுதான் திட்டமிடப்பட்ட புரோக்ராம் எனில், ஆலோ சனைக் கூட்டத்தை மதுரையில்தான் நடத்த வேண்டும் என்பதில்லையே... சென்னையில் நடத்தலாமே! ஆக, அடுத்த பிரதமராக வேண்டும் என்கிற அரசியல் ரகசியம்தான் அமித்ஷாவின் மதுரை விசிட்டின் பின்னணி'' என்று விரிவாகச் சொல்கிறார்கள் பா.ஜ.க.வின் மேலிடத்துக்கு நெருக்கமான டெல்லி தொடர்பாளர்கள்.

இந்த பின்னணியில் மதுரைக்கு வந்த அமித்ஷா, மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றார். அவரது வருகையை ஒட்டி 5 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோவிலுக்கு வருகை தந்த அமித்ஷாவுக்கு கோவில் அறங்காவ லர் கமிட்டி சார்பில் பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது. மீனாட்சி அம்மன்-சுந்தரேஸ்வரர் சிவனை வணங்கினார். அவருக்காக சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டிருக்கிறது. சிவனை மனம் உருக வழிபட்டார் அமித்ஷா. வழிபாடும் தரிசனமும் முடிந்ததும் கோவிலிலிருந்து புறப்பட்ட அமித்ஷா, நட்சத்திர ஹோட்டலில் சற்று ஓய்வு எடுத்தார். அதன்பிறகு, தமிழக பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்திருந்த மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில், சட்டமன்றத் தேர்தலை எதிர் கொள்வது, வெற்றிக்கான வியூகம் அமைப் பது, கூட்டணிக் கட்சிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவதிலுள்ள சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதித்தார். அப்போது அமித்ஷா கேட்ட கேள்விகளுக்கு தலைவர்கள் சிலர் விளக்கமளித்தனர்.

கூட்டத்தில் பேசிய அமித்ஷா, தமிழ்நாடு சார்ந்த பல விசயங்களையும், சிந்தூர் ஆபரேசனின் வெற்றி பற்றியும் சிலாகித்துச் சுட்டிக்காட்டினார். அவரது பேச்சில் கூட்டணி அரசியலும் முக்கிய பங்கு வகித்தது. அது குறித்துப் பேசும்போது, ‘’இந்த நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் என்னுடைய சிந்தனை முழுக்க தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. தி.மு.க.வை அமித்ஷாவால் தோற்கடிக்க முடியாது என தமிழக முதல்வர் சொல்கிறார். என்னால் முடியாதுன்னு அவர் நினைத்துக்கொள்ளட்டும். ஆனால், தமிழக மக்கள் தி.மு.க.வை தோற்கடிப்பார்கள். தமிழகத்தின் நாடித்துடிப்பை நன்றாக அறிந்து வைத்துள்ளேன். நிச்சயம் தி.மு.க.வை தூக்கி எறிவார்கள்.

பல மாற்றங்களுக்கு வித்திட்டுள்ள இந்த மதுரை மண், தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பும். 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றிபெறும். தமிழகத்தில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமையும். 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் ஆட்சியை கைப்பற்றியது போல, 2026-ல் தமிழ்நாட்டிலும், மேற்குவங்கத்திலும் ஆட்சி அமைப்போம்''’என்று அழுத்தமாகப் பேசினார் அமித்ஷா. கூட்டமும் ஆர்ப்பரித்தது.

அமித்ஷாவின் இந்த பேச்சு அ.தி.மு.க. கூட்டணியில் அதிர்ச்சியையும் சலசலப்பையும் உருவாக்கியிருக்கும் சூழலில், எடப்பாடி உள்ளிட்ட அ.தி.மு.க. தலைவர்களுக்கு ஷாக்கையும் கொடுத்துள்ளது.

அமித்ஷாவின் பேச்சை முழுமையாகக் கேட்ட அ.தி.மு.க. சீனியர் தலைவர்கள் சிலர், எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புகொண்டு, "அமித்ஷாவின் பேச்சைக் கேட்டீர்களா?' என்று வினவியிருக்கிறார்கள். அப்போது, "எனக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. பா.ஜ.க.வுடன் கூட்டணி மட்டும்தானே தவிர, கூட்டணி ஆட்சியில்லை என நமது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்த பிறகும் அமித்ஷா ஏன் இப்படிப் பேசுகிறார்?' எனக் கேட்டுள்ளார் எடப்பாடி.

மேலும், "எப்படிப்பட்ட பின்னணியில் நாம் பா.ஜ.க.வுடன் கூட்டணியை உறுதிப்படுத்தினோம் என்பது அவருக்குத் தெரியும். அப்படியிருக்கையில், நம்முடன் கூட்டணி அமைத்துவிட்டு, கூட்டணியில் பேசப்படாத, முடிவு செய்யப்படாத விசயங்களை ஏன் அவர் பேசவேண்டும்? பா.ஜ.க. கூட்டணியை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று இப்போதும் நம் கட்சியில் சில எதிர்ப்புகள் இருக்கும் சூழலில், கூட்டணி ஆட்சிதான் என்று அழுத்தம் திருத்தமாக அமித்ஷா பேசுவது கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துவதுடன், தேர்தல்வரை ஆரோக்கியமாக கூட்டணியை நகர்த்திச் செல்வதில் முரண்பாடுகள் உருவாகும்' என்று சீனியர்கள் அதிருப்தியடைந்ததை ஆமோதித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி ஆட்சி இல்லை என்று அ.தி.மு.க. நிர்வாகிகளையும் தொண்டர் களையும் ஏற்கனவே எடப்பாடி சமாதானப்படுத்தி யிருக்கும் நிலையில்... அமித்ஷாவின் கூட்டணி ஆட்சி பேச்சால், மீண்டும் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களையும், சர்ச்சைகளையும் எடப்பாடி எப்படி சமாளிப்பார் என்பதுதான் அ.தி.மு.க.வில் தற்போது நடக்கும் உச்சபட்ச விவாதம் என்கின்றனர் சீனியர் ர.ர.க்கள்.

______________________

ஆடுமலைக்கு டோஸ்! அமித்ஷா மதுரை விசிட் பின்னணி!

ss

கடந்த ஜூன் 7-ம் தேதி இரவு மதுரை வந்திறங்கிய அமித்ஷா, பா.ஜ.க. தமிழகத் தலைவர் நயினார் நாகேந்திரன், பின் ஆடுமலை இருவரிடமும் 10 நிமிடங்கள் பேசிவிட்டு, அங்கிருந்து மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றார். இருவரும் வெளியேவந்ததும் மு.மா.த. வாழ்க! வருங்கால முதல்வர் நயினார் வாழ்க என்று தொண்டர்கள் கோஷம் போட, இரு தலைவர்களுமே தொண்டர்களை கோஷம் போடவேண்டாம் என்று சொல்லிவிட்டு கோபமாக காரில் புறப்பட்டுச்சென்றனர்.

உள்ளே என்ன நடந்த தாம்?

தனித்துநின்றால்தான் பா.ஜ.க.வை தனிப்பெரும் கட்சியாக வளர்க்கமுடியும் என்பது மு.மா.த.வின் எண்ணம். ஆனால் பா.ஜ.க. தலைமையோ தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையில் ஆட்சி ஏற்படவேண்டுமென்றால் அதற்கு அ.தி.மு.க. வேண்டும். அவர்களோடு கூட்டணியிலிருந்து கொண்டுதான் பா.ஜ.க.வை வளர்த்தெடுக்கமுடியுமென நம்புகிறது. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். கடந்த இரண்டு வருடமாக கிராமம் கிராமமாகச் சென்று ஆய்வுசெய்து கொடுத்ததன் பின்னணியில்தான் நயினார் நாகேந்திரன் கொண்டுவரப்பட்டார்.

கொங்கு மண்டலத்தில் கவுண்டர் சமுதாய வாக்கு வங்கியை ஓரளவுக்கு கைப்பற்றியதுபோன்று தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் சமுதாயத்தை கையிலெடுக்க நயினார்தான் சரியான தேர்வு என்பது அமித்ஷாவின் வியூகம்.

தற்போது பா.ஜ.க.வில் பெரும்பாலும் மு.மா.த. நியமித்த நிர்வாகிகளே இருக்கிறார்கள். கடந்த ஒரு மாதமாக சமூக வலைத்தளங்களில் மு.மா.த. ஆதரவாளர்கள், நயினார் ஆதரவாளர்கள் கடுமையாக மோதிக்கொள்கிறார்கள். இது தலைமைவரை செல்ல, மதுரை வந்த அமித்ஷா மு.மா.த.வை முதலில் அழைத்து, “"இது மாநில கட்சி அல்ல, தேசிய கட்சி. கட்சி நலன் சார்ந்துதான் முடிவெடுக்க முடியும். முதலில் உனக்கு தொலைநோக்குப் பார்வை வேண்டும். கொங்கு மண்டலத்தில் பா.ஜ.க. வளர்ந்துள்ளது. வடக்கில் பா.ம.க.வை வைத்து ஓட்டு வாங்கிவிடலாம். ஆனால் தென்மாவட்டங்களில் வளரவேண்டு மென்றால் நயினார் நாகேந்திரனும், அ.தி.மு.க.வும் கட்டாயம் வேண்டும். இதற்கு அனைவரின் ஒத்துழைப்பு வேண்டும். தனி ஆவர்த்தனம் செய்யாதே. மீறிச் செய்தால் என் அணுகுமுறை வேறு மாதிரி இருக்கும்''” என்றவர், நயினாரை அழைத்து "இருவரும் இணைந்து செயல்படுங்கள். அடுத்து நிச்சயம் நமது ஆட்சிதான்'' என்று நம்பிக்கையளித்திருக்கிறார்.

பின், பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகிகள் 22 பேர் மட்டுமே கலந்துகொண்ட பா.ஜ.க.வின் உயர்மட்ட ஆலோசனைக் குழு கூட்டத்திற்கு சென்றவர், அங்கு நான்கு வியூகங்களைப் பற்றிப் பேசியிருக்கிறார்.

அதில் முக்கியமாக அயோத்திக்கு இராமர், ஒரிசாவிற்கு பூரி ஜெகன்னாதர் மாதிரி தமிழகத்திற்கு முருகன். இந்த முருக பக்தர்கள் மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்தவேண்டும்.

கிராமம் கிராமமாக இந்து அமைப்புகள், மார்வாடி சங்கங்கள், ஆன்மிகம் சார்ந்த சங்கங்கள், அமைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதற்கு உங்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உயரதிகாரிகள் உறுதுணையாக இருப்பார்கள் என்று தெம்பூட்டிச் சென்றிருக்கிறார்.

-அண்ணல்