னிதனை மனிதனே சுமக்கும் பல்லக்கு தூக்கும் பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி மே 19-ஆம் தேதி நடத்தி முடித்திருக்கிறார் தருமபுரம் ஆதீனம். இதற்கு எதிராகப் போராட்டம் நடத்தியதோடு, இனிவரும் காலங்களில் நடக்க அனுமதிக்கக்கூடாது என்று சமூக ஆர்வலர்களும், அனைத்துக்கட்சி பிரமுகர்களும் முதல்வருக்கு மனுக்களை அனுப்பியுள்ளனர்.

தருமபுரம் ஆதீனத்தின் 27வது பண்டார சன்னிதியாக இருப்பவர் மாசிலாமணி தேசிக பரமாச்சாரியார் சாமிகள். இவர் பதவியேற்ற நாளிலிருந்து ஏதாவது சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பாக்குவது வாடிக்கையாகிவிட்டது. பட்டினப்பிரவேசம், ஆளுநரை அழைத்து விழா எடுத்தது, ஆபாச ஆடியோ, வீடியோ விவகாரம் என எப்பவும் பரபரப்பாய் இருப்பவர். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கைவிடப்பட்ட பல்லக்கு தூக்கும் பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை தற்போதைய ஆதீனம் பதவியேற்றதும் ஆரம்பிக்கத் துவங்கியதுமே, மனிதனை மனிதன் தூக்கிச் செல்லும் பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் எனப் பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தனர். அப்போதைய மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி தடைவிதித்தார். இதனால் அதிர்ச்சி யடைந்த ஆதீனத்தின் ஆதரவாளர்களும், பா.ஜ.க.வினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபையில் கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பல்வேறு ஆதீனங்கள் முதல்வரை சந்தித்து பட்டினப்பிரவேசத் தடையை நீக்க கோரிக்கை வைத்த நிலையில், தடை விலக்கிக்கொள்ளப்படுவதாக அப்போதைய மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி ஆணை பிறப்பித்தார்.

sas

அதுவரை பெரும்பாலான மக்கள் அறிந்திடாத பட்டினப்பிரவேச நிகழ்வு தமிழகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. பத்து நாள் நிகழ்வில் ஆதீனத்தை தங்க ஆபரணங்களால் அலங்கரித்து, தங்க செருப்பை அணிவித்து, வெள்ளி நாற்காலியுடன்கூடிய பல்லக்கில் அமரச்செய்து குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தூக்கிச் சுமந்து வருகின்றனர். இந்த ஆண்டு மே 19ஆம் தேதி நடைபெற்ற பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர்கள் மத்தியில் கண்டனக் குரல்கள் எழுந்தன. இதற்கு கண்டனங்களை பதிவு செய்ததோடு, அனைத்துக் கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்தி, அடுத்த ஆண்டு பட்டினப்பிரவேசம் என்கிற பெயரில் மனிதனை மனிதன் சுமக்கும் நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும், அப்படி தவறினால் நாங்களே மக்களைத் திரட்டி நிறுத்துவோம், அரசு எங்களை கட்டுப்படுத்தக்கூடாது எனப் போராட்டத்தின் மூலம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழ்மண் தன்னுரிமை இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், "எப்படியாவது இந்தியாவில் இந்து ராஷ்டிரத்தை கொண்டுவந்துவிடவேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பா.ஜ.க.வின் நீண்டகாலத் திட்டம். அந்தந்த சாதிக்காரன், பழையபடி அவனவன் சாதித் தொழிலைத்தான் செய்யவேண்டுமென்ற சோதனை ஓட்டத்தை துவங்கிவிட்ட னர். பழைய கட்டமைப்பை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என்று நம்பக்கூடியவர்களுள் ஒருவராக தருமபுரம் ஆதீனம் தன்னைக் காட்டிக்கொண்டு பட்டினப் பிரவேசத்தை மீண்டும் நடத்துகிறார். இந்த தமிழ்ச் சமூகம் எத்தனையோ இழிவுகளைக் கடந்த காலங்களில் சுமந்து வந்திருந்தது. அந்த இழிவுகள் ஒவ்வொன்றாக அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்களின் உதவியோடும், 1947-க்கு முன்பு நீதி கட்சியின் ஆட்சிக் காலத்திலும், இந்திய விடுதலைக்குப் பிறகு பல்வேறு சட்டங்கள் மூலமாகவும் அந்த இழிவுகள் ஒவ்வொன்றாகத் தூக்கி எறியப்பட்டுள்ளன. இதே நாட்டில் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை வெள்ளைக்காரர்கள் வந்துதான் தடை செய்தார்கள். அப்போது ஆதீனம் போன்றவர்கள், இது எங்கள் பாரம்பரியம், புருஷன் இறந்த பிறகு பொண்டாட்டிக்கு என்ன வேலை, நாங்கள் எரிப்போம் என்றார்கள். இதே மயிலாடுதுறையில் கூட தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் இருக்கிறது. அப்பாவிப் பெண்களை கணவனின் சிதையோடு சேர்த்து எரிக்கப் பட்டவர்களுக்காகக் கட்டப்பட்ட கோயில் தான் அது.

Advertisment

1865-ல் வெள்ளைக்காரர்கள், எல்லா சாதிப் பெண்களும் இடுப்புக்கு மேலே துணிகட்டி தங்களின் உடலை மறைக்கலாம் எனச் சட்டம் கொண்டுவந்தார்கள். தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. இப்படி எத்தனையோ கொடுமைகளைத் தீர்த்துகட்டியிருக்கிறார்கள். 1925-ல் சுயமரியாதை இயக்கம் துவங்கியது. பல கொடுமைகளை அடித்து நொறுக்கியது. தீண்டாமை, பெண் அடிமைத் தனம் என அனைத்தையும் தவிடுபொடியாக்கியது. 1926 முதல் 1973-க்குள் பெரியார் ஏராளமான கோயில் நுழைவுகளை நடத்தினார். அப்படிப்பட்ட இந்த மண்ணில் 40 ஆண்டுகளாக கைவிடப்பட்டிருந்த பட்டினப்பிரவேசம் என்கிற ஒன்றை இன்று துணிச்சலாக தருமபுரம் பண்டார சன்னதி நடத்துகிறார் என்றால் அது பா.ஜ.க.வின் அஜன்டா என்பது புரிகிறது.

ஒரு பையனும் ஒரு பொண்ணும் காதலிப்பாங்க, இரண்டு பேரும் வருடக்கணக்கா சினிமா, பீச்சுன்னு ஊரெல்லாம் சுத்தி திரிவாங்க. அவங்களுக்குள் ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லா தெரியும். ஆனால் திருமணம்னு வரும்போது வீட்டில் இருக்கிறவங்க மாப்பிள்ளையை கூட்டிக்கிட்டு பொண்ணு பார்க்க போவாங்க. அப்படித்தான் இந்த பண்டார சன்னதியின் தற்போதைய செயல்பாடும் இருக்கு. ஒரு காலத்தில் பண்டார சன்னதியாக இருந்தவர்கள் ஆதீனத்தை விட்டு வெளியே வர மாட்டார்கள். ஆதீனத்துக்கு உள்ளே சமய வேலைகளைப் பார்ப்பார்கள். வருடத்திற்கு ஒரு நாள் வெளியே வந்து காட்சி கொடுப்பார்கள். அதுதான் பட்டினப்பிரவேசம்னு பேரு. இப்ப இருக்கிற பண்டார சன்னிதி கார்ல ஏறிக்கிட்டு நாலாபக்கமும் பறக்கிறார், தீட்சை பெற்றவர்கள் கடல் கடந்து போகக்கூடாதுன்னு அவங்களுக் குள்ளயே சொல்லுறாங்க. ஆனால் ஏரோபிளேன்ல மோடியை மிஞ்சிடும் அளவுக்கு நாடு நாடா போறார். போகும்போதே செல்பி எடுத்து முகநூலில் போடுகிறார். தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கிறார். அரசியல்வாதிகளைப்போல பிளக்ஸ் போர்டு வைக்கச் சொல்லி தம்பட்டம் அடித்துகொண்டிருக்கும் இவருக்கு பட்டினப்பிரவேசம் என்ன ஒரு கேடு? இதெல்லாம் வேடிக்கையாக இல்லையா?

பட்டினப்பிரவேசம் நடத்த அவர்களுக்கு ஒரு காரணம் இருக்கு. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட மக்கள் இருக்காங்களே, அவங்களுக்கு மறைமுகமா ஒரு செய்தியை சொல்லுறாங்க. பல்லக்கில் வரும்போது ஆதீனத்தோட மைண்ட் வாய்ஸும், அவரது சமூகத்தினரின் மைண்ட் வாய்ஸும் இப்படித்தான் இருக்கும். நீ ஆண்ட பரம்பரையா இருந்தாலும் என்னை நீ தூக்கித்தான் ஆகணும் என்பதாகவே இருக்கும். நிலவுடமை சமூகத்தில் சாதிய மேலாதிக்க காலத்தில் இருந்த அடிமை முறை அடுக்குளை இன்று புதுப்பிக்கிறார்கள் என்றால் அதுதான் அபாயகரமானது. தன்மான உணர்வு இருந்தால் அந்த பல்லக்கைத் தூக்கக்கூடாது.

Advertisment

2022, மே இரண்டாம் தேதி, முடங்கிப்போன பட்டினப்பிரவேசத்தை துவக்கப்போகிறார்கள் என்பதை தெரிந்து அனுமதிக்கக்கூடாது எனக் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். உடனே அப்போது கோட்டாட்சியராக இருந்த பாலாஜி என்பவர் மனிதனை மனிதன் தூக்கிப்போறது சட்டத்திற்கு புறம்பானது எனத் தடை விதித்தார். ஆனால் பண்டார சன்னிதிகள் எல்லாரும் முதல்வர் ஸ்டாலினை பார்த்தார்கள். இது எங்க பாரம்பரியம் எனச் சொல்லியதை ஏற்றுக்கொண்டு வாயளவில் அனுமதி கொடுத்தாராம் முதல்வர். எதன் அடிப் படையில் பட்டினப்பிரவேசத்தை அனுமதித்தீர்கள்? பட்டினப்பிரவேசம் என்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது, ஆகவே தமிழ்நாடு அரசு இனிவரும் காலங்களில் நடக்காமல் நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும். அதுதான் நியாயம். அதை விட்டுவிட்டு இதை கண்டித்துப் பேசுபவர்களை அடக்கிமுடக்குவது என்ன நியாயம்?

தமிழ்நாட்டுக்கு ஒரு பெருமை உண்டு ஜமீன்தார்களிடமும், நிலக்கிழார்களிடமும் ஏராளமான நிலங்கள் குவிந்திருந்தது ஒழித்துக் கட் டப்பட்டது. ஜமீன்தாரிய ஒழிப்பு 1951ல் சட்டமாக வந்தாலும் தமிழ்நாடு 1948-லேயே ஒழித்தது. அப்படி இந்தியாவிற்கே முன்னுதாரணமாக இருக்கக்கூடியவர்கள் தமிழர்கள். நில உச்சவரம்பு சட்டத்தின்மூலம் ஜமீன்தார் களை ஒழித்தனர். ஆனால் ஆன்மிகத்தின் பெயரால் ஜமீன்தார்களாக இருப்பவர்களை ஒழிக்காமல் விட்டுவிட்டார்கள். அவர்களுக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டது. அப்படி ஆதீனங்களை விட்டு வைத்ததன் விளைவு தான் தங்களை அரசர்களாக நினைத்துக்கொண்டு மீண்டும் சாதிய அடக்குமுறை களையும், சனாதன முறைகளையும் தூக்கி நிறுத்தத் துவங்கியிருக்கிறார்கள்'' எனக் கொந்தளித்தார். இதையே இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க., தி.க. உள்ளிட்ட அனைத்துக்கட்சி பொறுப்பாளர்களும் பேசி எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இதுகுறித்து ஆதீனத்தின் ஆதரவாளர்கள் கூறுகையில், "பல்லக்கில் தூக்கச் சொல்லியோ, போஸ்டர் ஒட்டச் சொல்லியோ எங்களை யாரும் கட்டாயப்படுத்தல. எங்களது குரு முதல்வரை ஆண்டுக்கு ஒருமுறை தூக்கிச்சுமப்பது எங்களுக்கு கிடைத்த பாக்கியம் பெருமை. இதை யார் தடுக்க நினைத்தாலும் எங்களது கடமையை விடப் போவதில்லை''’என்கிறார்கள்.

வாகனப் போக்குவரத்து பெருகியுள்ள இன்றைய காலகட்டத்திலும் பல்லக்கு தூக்கச் சொல்வது ஏற்புடையதாக இல்லை. இது குறித்த விழிப்புணர்வு அவசியம்!