கேரள மாநிலம் எர்ணாகுளம், கங்கரப்பாடி பகுதியை சேர்ந்தவர் பால் வர்கீஸ். இவரது மகள் நடிகை அமலாபால். மலையாளம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். கடந்த மாதம் 29-ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் அமலாபாலின் உதவியாளர் சென்னை செங்குன்றம் பாடிய நல்லூரைச் சேர்ந்த விக்னேஷ்வரன் ஒரு புகாரளித்தார்.
அந்த புகாரில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த சுந்தர்ஜித்சிங் மகன் பவனிந்தர் சிங், அவரது உறவினர்கள் 12 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
அதில் "நடிகை அமலாபாலை 12 பேரும் சேர்ந்து ஏமாற்றிய துடன், ஆறு கோடி ரூபாய் கேட்டு அச்சுறுத்தல் விடுத்ததாகவும், அமலாபாலுடன், பால் பவனிந்தர்சிங் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிடுவோம் என்றும், பண மோசடி மற்றும் சொத்து மோசடி செய்து வருவதாகவும் அவர்கள் 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
நடிகை கொடுத்த புகாரைப் பெற்றுக்கொண்ட விழுப்புரம் மாவட்ட காவல்துறை பரபரப்பானது. இரவோடு இரவாக அந்த 12 பேர் மீதும் பதினாறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை, தீவிர தேடுதல் வேட்டை நடத்தி புகாரில் தெரிவித்துள்ள முதல் நபரான பவனிந்தர்சிங் தத்தை உடனடியாக கைது செய்து, வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தது. இந்த நிலையில் சிறையிலடைக்கப்பட்ட பவனிந்தர்சிங், ஜாமீன் வழங்கக் கோரி தனது வழக்கறிஞர்கள் மூலம் வானூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த வானூர் நீதிமன்ற நீதிபதி வரலட்சுமி, பவனிந்தர்சிங்குக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த சுந்தர்சித்சிங் மகன் பவனிந்தர்சிங். இவரும் நடிகை அமலாபாலும் சேர்ந்து கடந்த சில ஆண்டுகளாக திரைப்படத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அதன் காரணமாக இரு வரும் நெருங்கிப் பழகியுள்ளனர். பவனிந்தர்சிங் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் அமலாபால் நட்புடன் பழகி, அவர்கள் குடும்பத்தினருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்து வந்துள்ளார். அதோடு பெரிய முதலியார்சாவடி பகுதியில் 2018-ஆம் ஆண்டு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அமலாபால், பவனிந்தர்சிங், அவரது உறவினர்களுடன் தங்கி திரைப்பட பிசினஸில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்வதாக முடிவுசெய்து நிச்சயதார்த்தம் வரை நடந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, பல லட்சம் பணத்தை பவனிந்தர்சிங் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி ஹெர்பல் பவுடர் நிறுவனம் தொடங்க மேலும் 5 லட்சம் கொடுத்ததாகவும், அந்த வீட்டுக்கு அட்வான்ஸ் தொகை 1,20,000 ரூபாயை அமலாபால் வழங்கியதாகவும் இருவரும் சேர்ந்து "கடாவர்' என்ற திரைப்படம் தயாரித்தனர் எனவும் அமலாபால் தரப்பில் சொல்லப்படுகிறது.
அமலாபால் கதாநாயகியாக நடித்த அந்தப் படம், சமீபத்தில் ஓ.டி.டி. இணையதளத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த போது அமலாபால், பவனிந்தர்சிங் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.
இப்படத்தை வெளியிடக்கூடாது என பவனிந்தர்சிங் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் அமலாபாலின் விளக்கத்தைக் கேட்ட நீதிமன்றம், அப்படத்தை வெளியிட அனுமதியளித்தது. அதன்பிறகே அந்த படம் ஓ.டி.டி.யில் வெளியாகி உள்ளது. இது சம்பந்தமான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில்... பவனிந்தர்சிங் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசில் திடீரென்று பொய்யான புகார் கொடுத்து அதன் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளார் பவனிந்தர்சிங்.
வானூர் நீதிமன்றத்தில் பவனிந்தர் சிங் தனது வழக்கறிஞர்கள் மூலம் இருவருக்கும் படத் தயாரிப்பு சம்பந்தமான கொடுக்கல்-வாங்கல், அது சம்பந்தமான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் நிலுவையில் உள் ளது குறித்தும் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்ததற்கான ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததால் நிபந்தனையின்றி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பிரபல நடிகை கொடுத்த புகாரில் எந்த அளவிற்கு உண்மைத் தன்மை உள்ளது என்பதை தீர விசாரிக்காமல் அவசரமாக 16 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது காவல்துறை. ஒரு வாரத்தில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீனில் வெளியே வந்தது தமிழக காவல்துறைக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது.