சரக்கு இருப்பு மோசடி புகாரில் சிக்கிய சேலம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி வழங்கியதில் பல லட்சம் ரூபாய் நூதனமாகச் சுருட்டியிருப்பது அம்பலமாகியுள்ளது.
சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில், 1956-ஆம் ஆண்டு முதல் சேலம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் இயங்கிவருகிறது. இக்கூட்டுறவு சங்கத்தில் 1558 கைத்தறி நெசவாளர் கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
ஒரு குடும்பமே நாள் தோறும் 12 மணி நேரம் வேலை செய்தால்தான் மாதத்திற்கு அதிகபட்சமாக 7500 ரூபாய் சம்பாதிக்க முடியும். அதனால் கைத்தறி நெசவாளர்களின் நலன் கருதி தமிழக அரசு, வெண்பட்டு துணிகளுக்கு நேரடியாக 20 முதல் 30 சதவீதம் வரை மானியம் வழங்குகிறது.
மேலும், வாடிக்கையாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் நிலையாக 10 சதவீதமும், சிறப்பு தள்ளுபடி யாக 10 சதவீதமும் வழங்கவேண்டும் என்று கூட்டுறவு சங்க விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால், சங்க ஊழியர்கள் சிறப்பு தள்ளுபடியில் 5 சதவீதம் மட்டுமே வழங்கிவிட்டு 10 சதவீதம் வழங்கியதாக முறைகேட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதுதொடர்பாக சேலம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகக் குழு இயக்குநர்களுள் ஒருவரான நரேந்திரசேகர், உறுப்பினர் தேவராஜ் ஆகியோர் நம்மிடம் பேசினர்.
"இந்தியாவிலேயே வெண்பட்டி னாலான வேஷ்டி, துண்டு, சட்டைத்துணிகளை கைத்தறியில் உற்பத்தி செய்யும் ஒரே இடம் சேலம் அம்மாபேட்டைதான். சவுராஷ்டிரா சமூகத்தினர் மட்டும்தான் இந்த தொழிலில் இருக்கிறார்கள். வெண்பட்டு உற்பத்திக்கென புவிசார் குறியீடும் உள்ளது.
கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை பாதுகாக்கத்தான் சேலம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் தொடங்கப் பட்டது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே இந்த சங்கத்தில் உள்ள மேலாளர் ரவிச்சந்திரன், அ.தி.மு.க. நிர்வாகக்குழுத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோரை கைக்குள் போட்டுக் கொண்டு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த ஆண்டு 1.10 கோடி ரூபாய்க்கு மேல் சரக்கு இருப்பில் மோசடி நடந்தது குறித்து "நக்கீரன்' இதழில் செய்தி வெளியானது. அதன்பிறகுதான் மோசடி செய்த ஊழியர் களிடமிருந்து அத்தொகை வசூலிக்கப்பட்டது.
வேறுசில முறைகேட்டிலும் கூட்டுறவு சங்க மேலாளர் ஈடுபட்டுள்ளது இப்போது தெரியவந்துள்ளது. அதாவது, வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு உருப்படிக்கும் சங்கம் நிலையாக 10 சதவீதம் தள்ளுபடியும், சிறப்புத் தள்ளுபடியாக 10 சதவீதமும் வழங்கவேண்டும். ஆனால், சிறப்புத் தள்ளுபடியில் 5 சதவீதம் மட்டுமே வழங்கி இன்வாய்ஸ் கொடுக்கிறார்கள்.
பிறகு ஒரிஜினல் ரசீது பதிவேட்டில், எல்லா வாடிக்கையாளர்களுக்கும் 10 + 10 என மொத்தம் 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டதாக போலியான விவரங்களை பதிவுசெய்து கொள்கிறார்கள்.
அதோடு, நெசவாளர்களுக்கு ஏற்படும் இழப்பைச் சரிக்கட்டுவதற்காக அரசு ஒவ்வொரு உருப்படிக்கும் 200 அல்லது 300 ரூபாய் தள்ளுபடி (ரிபேட்) வழங்குகிறது. அதிலும் முறைகேடு செய்துள்ளனர். இப்படி 5 சதவீதம் தள்ளுபடி முறைகேட்டில் மட்டும் கடந்த ஆண்டில் மட்டும் 50 லட்சம் ரூபாய் வரை சுருட்டியுள்ளனர்.
சங்க விதிகளின்படி மாஸ்டர் வீவர் எனப்படும் பெரிய பெரிய தறி முதலாளிகளிடம் வெண்பட்டு உற்பத்திகளை கொள்முதல் செய்யக்கூடாது. ஆனால் சங்க மேலாளர் ரவிச்சந்திரன், மாஸ்டர் வீவர்களிடம் வெண்பட்டு வேஷ்டி, அங்கவஸ்திரம், சட்டைத்துணிகளை கொள்முதல் செய்து, அதில் சங்கத்தின் லேபிள்களை ஒட்டி வியாபாரம் செய்கிறார். இதனால், ஓரிரு தறி மட்டும் வைத்துக்கொண்டு ஜீவனம் நடத்தும் 1000 நெசவாளர்களின் உருப்படிகள் விற்கமுடியாமல் தேக்கமடைகின்றன. தற்போது 3 கோடி ரூபாய்க்கு மேல் சரக்குகள் தேக்கமடைந்துள்ளன.
நெசவாளர்களுக்கு வழங்கப்படும் பாவு, பியூர் ஜரிகை, கோரா நூல் ஆகியவை டான்சில்க் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கு டான்சில்க் வழங்கும் கமிஷன், பாவு மற்றும் கோராவில் எடை மோசடி ஆகியவற்றில் மட்டும் மாதம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் ஊழல் செய் கின்றனர். மோசடிகளைக் கண்டுகொள்ளாமலிருக்க சங்க மேலாளர் ரவிச்சந்திரன், நிர்வாகக்குழுத் தலைவர் உள்ளிட்ட இயக்குநர்கள், நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கு மாதந்தோறும் கையூட்டு வழங்கிவிடுகிறார்.
இந்த மோசடிகள் குறித்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, கைத்தறி துணிநூல் துறை முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோருக்கும் புகார்கள் அனுப்பி வைக்கப்பட் டுள்ளன'' என்றனர்.
இந்தப் புகார்கள் குறித்து விளக்கம் கேட் பதற்காக நிர்வாக இயக்குநர் சையது தாவூதை அணுகி னோம். அவரோ, "நான் இன் னும் சில நாளில் வி.ஆர்.எஸ். ஸில் செல்ல இருக்கிறேன். இப்போதைக்கு இந்த விவ காரத்தை பத்தி எதுவும் எழுத வேணாம் சார்...'' என்று கூறி கும்பிடு போட்டார்.
இதையடுத்து, குற்றச் சாட்டுக்குள்ளான சங்க மேலாளர் ரவிச்சந்திரனிடம் புகார்களை முன்வைத்தோம்.
"இந்த கூட்டுறவு சங் கத்திற்கு எதிராக பெட்டி ஷன் அனுப்புறதுதான் தேவராஜுக்கு ஒரே வேலை. கூட்டுறவு சங்கம் என்றால் சில நெளிவுசுளிவுகளும், அட்ஜஸ்ட்மெண்டுகளும் இருக்கத்தான் செய்யும். அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆய்வுக்கு வந்துசெல் கிறார்கள். அவர்களுக்கு "மரியாதை' செய்யவேண்டும் என்றால் எங்கிருந்து எடுத்துக்கொடுப்பது? இது எல்லா கூட்டுறவு சங்கத்திலும் நடப்பதுதான்.
தேவராஜ், எதையோ எதிர்பார்த்து, மிரட்டும் நோக்கில் புகார் மனுக்களை அளித்துள்ளார். பழைய உருப்படிகள் லேசாக பழுப்பு ஏறிவிடும். அதனால் வாடிக்கையாளர் கள் வாங்க மறுப்பதால், தேக்கமடைந்துள்ளன''' என்றார் மேலாளர் ரவிச்சந்திரன். இது ஒருபுறமிருக்க, சங்க மேலாளரிடம் விளக்கம் பெறுவதற்காக நாம் சென்றிருந்தபோது தகவலறிந்து அங்குவந்த தி.மு.க. நெசவாளர் அணி நிர்வாகி சீனி என்கிற சீனிவாசன், புகார்தாரர் பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சித்தார். ஒருகட்டத்தில், நம்மை மிரட்டும் தொனியில், 'இதைப்பற்றி நானும் தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜேந்திரன் அண்ணனிடம் பேசிவிட்டேன். சரி.. பாத்துக்கலாம்னு சொல்லிட்டார். நீங்க போங்க'' என பேச்சிலும் உடல்மொழியிலும் மிரட்டலாகச் சொன்னார்.
இச்சங்கத்தின் மீதான முறைகேடு புகார்கள் குறித்து சேலம் மண்டல கைத்தறி துணிநூல் துறை துணை இயக்குநர் ஆனந்தனிடம் கேட்டபோது, "எனக்கு 35 வருஷம் அனுபவம் இருக்கு. எனக்குத் தெரிஞ்சு தப்பு நடக்க வாய்ப்பு இல்ல. ஒருத்தரு, பெட்டிஷன் போடுவதையே முழுநேர பணியாக வைத்திருக்கிறார். அவர் காசு கேட்டு மிரட்டுறார். இல்லாவிட் டால் ஊடகத்திடம் சொல்லிடுறார். நாங்க யாரிடம் சொல்வது? நான் 3 மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங் கங்களைப் பார்க்கணும். இந்த புகார் குறித்தெல்லாம் பார்க்க நேரமில்லை. இருந்தாலும், நீங்கள் சொன்ன தவறுகளை களைஞ்சிருவோம் சார்'' என்றார்.
சங்க மேலாளர் ரவிச்சந்திரனிடம் முதல்முறை விசாரித்துவிட்டு வந்த அன்று இரவே, தி.மு.க. நெசவாளர் அணி நிர்வாகி சீனிவாசன் நம்மை தொடர்புகொண்டு, "சங்கத்தில் எதற்காக விசாரித்தீர்கள்?''’என சம்பந்தமே இல்லாமல் பேசினார். மற்றொரு தி.மு.க. பிரமுகர் பி.வி.பிரகாஷ் என்பவரும் மேலாளருக்கு சப்போர்ட் செய்து பேசினார்.
ஒருவார இடைவெளியில் இரண்டாம் முறையாக நேரில் விசாரித்துவிட்டு வந்த போதும், ஒரு செய்தி சேனல் நிருபர் என்ற அறி முகத்துடன், உத்தரவேல் என்பவரின் மகன் விக்ரம், ''யார் புகார் கொடுத்தது? எதற்காக ரவிச்சந்திரனிடம் விசாரித்தீர்கள்? அவர் உங்களிடம் பேசும்படி சொன்னார். உங்களுக்கு என்ன வேண்டுமோ, அதைக் கேட்டால் செய்து கொடுக்க தயார்'' என்றார். நாம் பிடி கொடுக்கா மல் போகவே, "நானும் ஊடகத்தில் தான் இருக்கிறேன்'' என கோபமாகப் பேசிவிட்டு பேச்சைத் துண்டித்தார். முறைகேடு நடக்க வில்லை என்பவர்கள், எதற்காக பலர் மூலம் நம்மிடம் பேசவேண்டும்? நெளிவு சுளிவு, அட்ஜஸ்ட்மெண்ட் என்பதை கூட்டுறவு சங்க மேலாளர் மிகச்சாதாரணமாக கடந்துபோனார்.
"ஊரடங்கு காலத்தில் ஒரு நேர வயிற்றுப் பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடிய கைத்தறி நெசவாளர்களின் வயிற்றில் அடித் திருக்கிறது சேலம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம். சேலம் சங்கம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் அனைத்து நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிலும் உயரதிகாரிகள் ஆவ ணங்களை முழுமையாக ஆய்வு செய்யும்பட்சத் தில் மிகப்பெரிய அளவிலான மோசடி பூதம் வெளியாகலாம்'' என்கிறார்கள் நெசவாளர்கள்.