செங்கல் பட்டு மாவட் டம் மறைமலை நகர் சீதக்காதி தெருவை சேர்ந்த 26 வயது விக்னேஷ் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில் திடீரெனக் காணாமல் போனார். அவரை கண்டுபிடித்துத் தரக்கூறி அவரது தந்தை தங்கராஜ் மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீஸ் தனிப்படை அமைத்து விசாரணையில் இறங்கி, விக்னேஷின் நண்பர்களான விசு, 17 வயது சிறுவன், பீகாரைச் சேர்ந்த தில்கோஷ் குமார் ஆகியோரை கைது செய்து விசா ரணை நடத்தியதில், அனைவரும் கோகுலா புரம் ஏரியருகே மது அருந்தும்போது ஏற் பட்ட தகராறில் மூவரும் சேர்ந்து விக்னேஷை கத்தியால் வெட்டிக் கொலை செய்ததோடு, அப்பகுதியில் பள்ளம் தோண்டிப் புதைத்து விட்டதாக வாக்குமூலம் அளித்தனர். அவர்கள் அடையாளம் காட்டிய இடத்தில் விக்னேஷின் உடலைக் கண்டெடுத்தனர்.

ss

ராமேஸ்வரம் சம்பை கிராமத்தைச் சேர்ந்த நாகு என்பவரது மகன் விஜயகுமார் 2023-ல், திடீரெனக் காணாமல் போனார். விஜயகுமார் என்ன ஆனாரென்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் விஜயகுமாரின் நண்பர்கள் முத்துக்குமார், சஞ்சய் மற்றும் சிலர் ஊருக்கு அருகிலுள்ள காட் டில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், "விஜயகுமாரை அடித்துக் கொலை செய்து காட்டில் வீசிவிட்டோம், இதுவரை போலீசாரால் எங்களைக் கண்டுபிடிக்க முடிய வில்லை' என்று ஏகத்தாளமாகப் பேசியிருக் கிறார்கள். அவர்களுடன் மது அருந்திய சிலர் இதுகுறித்து காவல்துறைக்கு தெரியப்படுத்தினர். இறுதியில் காவல்துறையின் விசாரணையில் விஜயகுமாரின் உடல் எலும்புக்கூடாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா நகர் எம்.ஜி.ஆர். காலனி பகுதியைச் சேர்ந்த நரேஷ், இவரது தம்பி தினேஷ். இருவரும் ஆட்டோ டிரை வர்கள். இவர்களது நண்பரான துரைசாமியோடு சேர்ந்து ஆட்டோவில் அமர்ந்து மது அருந்தியதும் போதையில் ஒருவரையொருவர் ஆபாசமாகத் திட்டிக்கொண்டனர். பின்னர் அடிதடியாக மாற, ஆத்திரமடைந்த நரேஷ், தினேஷ் இருவரும் துரைசாமியை சரமாரியாகத் தாக்கினார்கள். தப்பியோடிய துரைசாமியை விரட்டிச்சென்று, பொதுமக்கள் முன்னிலையில் பாட்டிலால் குத்திக் கொலை செய்தனர்.

Advertisment

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி ஆற்றின் புதிய பாலத்தின் அடியில் ரத்தக் காயங்களுடன் ஒருவர் இறந்துகிடந்தார். இதுகுறித்து சத்தியமங்கலம் டி.எஸ்.பி. சரவணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி யதில், இருகலூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்கிற கந்தசாமி என்பது தெரியவந்தது. கந்த சாமி அடிக்கடி சத்தியமங்கலத்திலுள்ள நண்பர்களு டன் மது அருந்துவது வழக்கம். அப்படி பவானி ஆற்றுப் பாலத்தின் கீழ் மதுவருந்தியபோது ஏற்பட்ட தகராறில் அடித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் நல்லா கவுண்டன் பாளையம் சத்தியமூர்த்தியை கைது செய்துள்ளது போலீஸ். அதே மாவட்டத்திலுள்ள ஊஞ்சலூரைச் சேர்ந்த பாண்டியன், பனப்பாளை யம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் இருவரும் கார் டிரைவர்கள். இவர்கள் அடிக்கடி சேர்ந்து மது அருந்துவது வழக்கம். மணிகண்டன் குடும்பத்தினர், உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றபோது, மணிகண்டன் பாண்டியனுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது பாண்டியன் போதையில் புகையிலையை மென்று வீட்டுக்குள் துப்பியுள்ளார். இதில் தொடங்கிய தகராறில் மணிகண்டன் இரும்புக் கம்பியை எடுத்து பாண்டியனைத் தாக்க, பாண்டியன் அதைப்பிடுங்கி மணிகண்டனை கடுமையாகத் தாக்க, இந்த சண்டையில் மணிகண்டன் உயிரிழந்தார். பாண்டியன் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

dd

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியைச் சேர்ந்த மகாராஜனும், முத்துக்குமாரும் கட்டடத் தொழிலாளிகள். இருவரும் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் முத்துக்குமார், மகாராஜனை அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே மகாராஜன் இறந்தார். முறப்பநாடு போலீசார் முத்துக் குமாரை கைது செய்துள்ளனர். சென்னை குன்றத்தூர் ஒண்டி காலனியை சேர்ந்த விஜய் டிரைவராக வேலைசெய்கிறார். அவரது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் விஜய்யின் தலையில் கல்லைத் தூக்கிப்போட்டு கொலை செய்துள்ளனர். போலீசார் விஜய்யின் நண்பர்களைத் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.

Advertisment

விருத்தாசலம் அருகேயுள்ள எம்.வீரா ரெட்டி குப்பத்தை சேர்ந்த கதிர்காமன், கடந்த 14ஆம் தேதி, அவரது நண்பர்கள் பிரபாகரன், பாலகிருஷ்ணன், ஆகியோரோடு முந்திரிக்காட்டில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் பாலகிருஷ்ணன், கதிர்காமனை அடித்துக் கொலை செய் துள்ளார். அதோடு கதிர் காமன் உடலை முந்திரிக்காட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். போலீசார் பாலகிருஷ்ணனை கைது செய்தனர். விசாரணையில், கதிர் காமனை கொலை செய்ததும் டூ வீலரிலிருந்த பெட்ரோலை ஊற்றி எரித்ததாகக் கூறியிருக்கிறார். கைது செய்யப்பட்ட பாலகிருஷ்ணன், இந்திய ராணுவத்தில் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ss

"குடிப்பழக்கம், கஞ்சா, புகை யிலையால் ஓர் ஆண்டுக்கு ஒன்றே கால் கோடி பேர்களுக்கு மேல் இதய நோய் ஏற்பட்டு மரணங்கள் நிகழ்வதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித் துள்ளது. இந்தியாவில் கஞ்சாவுக்கு அடிமையானவர்கள் 87.5 லட்சம் பேர். ஓபியம் போன்ற கொடும்போதைப் பழக்கம் உள்ளவர்கள் 20.4 லட்சம் பேர். ஆங்கில உயிர் காக்கும் மருந்துகளையே போதைக்கு பயன்படுத்திக்கொண்டவர்கள் 2.9 லட்சம் பேர். ஆப்கானிஸ்தான், மியான்மர் போன்ற நாடுகளிலிருந்து பல நாடுகளுக்கு ஹெராயின் போன்ற போதைப்பொருட்கள் கடத்தப்படுகின்றன. அவை இந்தியாவிலும் ஊடுருவியிருப்பதை 2004ஆம் ஆண்டே ஐ.நா. அலுவலகம் நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்போது இது இன்னும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றின்மூலம் அரசுக்கு தினமும் சுமார் 145 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. கடந்த 2025 புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 30, 31 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் 430 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடை பெற்றுள்ளது. இப்படி மது விற்பனையின்மூலம் ஒரு ஆண்டு வருமானம் மட்டும் 45 ஆயிரத்து 855 கோடி ரூபாய் எனக் கணக்கிடப் பட்டுள்ளது. அண்டை மாநிலங் களை ஒப்பிடுகையில் தமிழகம் மது விற்பனையில் முன்னணியிலுள்ளது. இன்றைக்கு தமிழகத்தில் மது போதையினால் கிராமங்களில் கோஷ்டி மோதல், பெண்களிடம் பாலியல் வன்முறைகள், மது குடிக்க காசு தராததால் தந்தையை, தாயை, கொலை செய்யும் மகன்கள் என குடும்ப உறவுகளே சிதைந்துவருகின்றன. ஒருவரையொருவர் தாக்கிக் கொலை செய்யும் சம்பவங்கள் தினசரி புற்றீசல் போலப் பெருகி வருகின்றன இதற்கெல்லாம் அரசு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்'' என்கிறார் தமிழக வெற்றிக்கழக மங்களூர் ஒன்றிய செயலாளர் சீதாராமன்.

"மது போதையால் ஏற்படும் தகராறுகள் சார்ந்த வழக்குகள் நீதிமன்றங்களில் குவிக்கின்றன. அரசுக்கு டாஸ்மாக் மூலம் ஆண்டுக்கு 45 ஆயிரம் கோடி வசூல் என்றால், அதைவிட அதிக அளவில் காவல்துறையிலும் நீதிமன்றங்களிலும் செலவினங்கள் அதிகரிக்கின்றன. டாஸ்மாக் விற்பனைக்கு டார்கெட் நிர்ணயிக்கும் அரசு, குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வருபவர்களிடம் "டிரங்க் அண்ட் ட்ரைவ்' வழக்கு போட்டு பத்தாயிரம் அபராதம் விதிக்கிறது. ஒரு பக்கம் குடிக்க சொல்வதும், மறுபக்கம் அபராதம் விதிப்பதுமான செயல்பாடுகள் அரசுக்கு முரணாகத் தெரியவில்லையா? டாஸ்மாக்கை மூடினால் வீண் செலவுகள் மிச்சமாகும். காவல்துறை, நீதிமன்றங்களின் பணிச்சுமை குறையும். டாஸ்மாக் வருமானத்தை குறிவைக்காமல், தனியார் வளம்கொழிக்கும் கனிம வளத்தின்மூலம் வருமானமீட்ட அரசு முயற்சிக்க வேண்டும். தனியார் கனிம வளத்துறையில் கட்டப்பஞ்சாயத்து, மிரட்டு வது, கொலை செய்வதென இறங்குகிறார்கள். எனவே கனிம வளத்தை அரசு கையிலெடுக்க வேண்டும்.

எத்தனையோ வளர்ச்சித் திட்டங்களில் மற்ற மாநிலங்களை விடத் தமிழகம் முன்னோடியாகத் திகழ்வதாக மார்தட்டும் ஆட்சி யாளர்கள், மது குடிப்பதிலும், விற்பதிலும் முதல் மாநிலமாக மாறியுள்ளதையும் பெருமையாகக் கருது கிறார்களோ? இன்றைய நிலையில் நடை பெறும் குற்றச் சம்பவங்களில் மது போதையே முக்கிய காரணமாக இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. இப்படிப்பட்ட கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மதுக்கடைகளை மூடக்கோரி போராடி யதற்காக போலீசார் என் மீது வழக்கு போட்டுள்ளனர்'' என்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் விருத்தாசலம் வழக்கறிஞர் புஷ்ப தேவன்.

மது போதையால் ஏற்படும் சமூகச் சீர்கேடுகளைத் தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?