முதல்வர் ஸ்டாலினுக்கும் மு.க.அழகிரிக்கும் இடையிலான சகோதர யுத்தம் உலகப் பிரசித்தம்.
கடந்த தேர்தலின்போது கூட "தி.மு.க. ஜெயிக்காது'’என்று பேட்டி கொடுத்து முறுக்கிக்கொண்டு நின்ற அழகிரியை, பா.ஜ.க.வில் இணையச் சொல்லி, டெல்லி பல்வேறு ஆப் சன்களைச் சொல்லி நிர்பந்தித்தது.
ஆனால் அழகிரியோ... "பா.ஜ.க.வில் நான் இணைவதா? அது ஒருக்காலும் நடக்காது. நான் கலைஞர் மகன்டா...'’என்று அதிரடியாக அறிவித்து, காவிகளின் முகத்தில் கரி பூசினார்.
தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் அமர்ந்த நொடியில் இருந்து, அழகிரி சைலண்ட்டாகி விட்டார். இந்த நிலையில்தான் அந்த அதிசயம் அரங்கேறியிருக் கிறது. அமைச்சர் பொறுப்பேற்ற பிறகு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட் டைத் தொடங்கி வைக்க முதல் முறையாக மதுரைக்குச் சென்றார் உதயநிதி. விமானநிலையத்தில் வந் திறங்கிய அவருக்கு, அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.தியாகராசன் மற்றும் மாவட்ட செயலாளர்கள் தளபதி, மணிமாறன் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் பெரும் வரவேற்பைக் கொடுத்தனர்.
இரவு ஓட்டலுக்குச் சென்ற வர், மறுநாள் காலையில்தான் ஜல்லிக்கட்டுக்கு ரெடியாவார் என்று தி.மு.க. நிர்வாகிகள் நினைத் திருக்க, அப்போதே திடீரென்று கிளம்பி, "வண்டியை அழகிரி பெரியப்பா வீட்டுக்கு விடுங்க'’என்று நிர்வாகிகளைத் திகைக்க வைத்தார் உதயநிதி. அவருக்கு முன்பாகவே அவர் வரும் தகவல் அழகிரி வீட்டிற்குச் செல்ல, அங்கு அழகிரி ஆதரவாளர்கள் குவியத் தொடங்கினர்.
உதயநிதியின் கார், அழகிரி வீட்டு வாசலுக்கு வந்து நிற்க, அவரை அழகிரி யும் அவர் மனைவி காந்தியும் வாசலுக்கே வந்து வாஞ்சையோடு வரவேற்றனர். அங்கே ஆரவாரமும் உற்சாகமும் கரை புரளத் தொடங்கியது. அழகிரி ஆதரவாளர்களும் தி.மு.க. நிர்வாகிகளும் கூட ஒருவரை ஒருவர் பார்த்து பழையபடி புன்னகைக்கத் தொடங்கினர்.
உதயநிதி தன் பெரியப்பா அழகிரி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க, கண்கலங்கினார் அழகிரி. அவர் வீட்டில் அவரது தீவிர ஆதரவாளர்கள் சூழ்ந் திருக்க, அவர்களை உதயநிதியிடம் காட்டிப் பேசத்தொடங்கிய அழகிரி...
""இதோ நிற்கிறானே முபாரக் மந்திரி. சுயேட்சையாக நின்று கவுன்சிலராக ஆகி யிருந்தாலும் என்றும் அவன் தி.மு.க. காரன். அவன் தம்பி நிக்கிறானே.. அவனுக்கு அப்பாவா பார்த்து பி.ஆர்.ஓ. போஸ்டிங் கொடுத்தார். இந்தா இருக்கும் இசக்கிமுத்து, என்னால் மூன்று முறை கட்சியைவிட்டு நீக்கப்பட்டவர். 78 வயசாச்சு 50 வருச மாக தீவிர தி.மு.க.காரர். இதோ... மன்னன். இந்த மன்னனைப் பற்றி உனக்கு நான் ஒன்றும் சொல்லத் தேவையில்லை. உனக்குத் தெரியும். இங்க இருக்கும் சலீம், பத்மநாதன், கோபி, எம்.எல்.ராஜ்சின்னான் எல்லோரும் பரம்பரை தி.மு.க.காரங்க தான்'' என்று அனைவரையும் அறிமுகப் படுத்தினார். பிறகு... ""இவர்கள் உடம்பில் தி.மு.க. இரத்தம் மட்டும்தான் ஓடுது. எனக்கு இருக்கும் ஒரே ஆசை, இவர் களை மீண்டும் தி.மு.க.வில் சேர்த்துக்கணும். கட்சிப் பணி செய்ய அனுமதிக்கணும்... அவ்வளவுதான்! எனக்கு வேற ஒன் றும் வேண்டாம்பா''’என்று தழுதழுத்தபடியே அழகிரி சொல்ல...
""பெரியப்பா எனக்குத் தெரியாதா... எல்லாம் நல்ல படியா நடக்கும்''’என்றபடி உதயநிதி, தன் பெரியப்பாவைக் கட்டிப்பிடித்தார். அருகில் இருந்த காந்தி அழகிரியின் காலைத் தொட்டு உதயநிதி வணங்க... காந்தியோ, உதயநிதியின் நெற்றியில் வாஞ்சையாக முத்தமிட்டார். ""சாப்பிட்டுட்டுத் தான் போகணும்''’என்று பெரியம்மா காந்தி உத்தரவிட, ""கட்டாயம்... உங்க கையால சாப்பிட்டு ரொம்ப நாளாகி விட்டது. திருநகர் வீட்டில் இருக்கும்போது இங்கேதானே விளையாடிக்கிட்டே கிடப்பேன்''’என்றார் நெகிழ்ச்சியாய்.
அழகிரி வீட்டில் தடபுடலாக விருந்து படைக்கப்பட் டது. உதயநிதி, சாப்பிட்டுவிட்டுக் கிளம்பும்போது, வெளியே இருந்த பத்திரிகையாளர்களிடம், ""நான் அமைச்ச ராகி முதன்முதலாக மதுரை வந்ததால் பெரியப்பாவிடம் ஆசிர்வாதம் வாங்க வந்தேன். அவரும் வாழ்த்தினார். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது''’என்றார். அப்போது பத்திரிகை யாளர்கள் அழகிரியைப் பார்த்து ’""உங்களுக்கு மகிழ்ச்சியா?'' என்று கேட்க, ""அப்புறம் இருக்காதா? நான் திருநகர் வீட்டில் இருக்கும்போது, எங்கள் வீட்டில் துரையோடு விளையாடிய உதயநிதி, இன்று அமைச்சராகி வந்திருக்கிறார் என்பது எனக்குப் பெருமை. என் தம்பி முதல்வராக இருக் கிறார். தம்பி மகன் அமைச்சர் என்றால், இதைவிட மகிழ்ச்சி என்ன வேண்டும்'' என்றார் உற்சாகமாக.
""நீங்கள் இனி கட்சியில் சேர்ந்து பணியாற்றுவீர்களா?'' என்று பத்திரிகையாளர்கள் அழகிரியிடம் கேட்க, அவரோ ""நான் திமுக.வில் மீண்டும் செயல்படுவது குறித்து அவர்கள்தான் சொல்ல வேண்டும்'' என்று உதயநிதியைக் காட்டிச் சொல்ல, சிரித்துகொண்டே கையை உயர்த்தி அங்கிருந்து விடைபெற்றார் உதயநிதி.
ஜனவரி ஒன்றாம் தேதி, அழகிரியைத் தொடர்பு கொண்டு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்தை முதல்வர் ஸ்டாலின் சொன்னதாகவும், அப்போது அழகிரி அவரிடம், "தனக்கு கட்சிப் பதவி எதுவும் வேண்டாம், தன் மகன் துரை யை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு ஸ்டாலின், கவலைப்படாதீங்க... நேர்ல வந்து பேசுகிறேன்' என்று சொன்னதாகவும், அழகிரி ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகச் செய்தி உலவுகிறது.
விரைவில் தென்மண்டல தி.மு.க.வினர் மத்தியில்... ’"அழகிரியண்ணன் வர்றார்.. பராக் பராக்...’என்ற குரலைக் கேட்கலாம்' என்கிறார்கள் மதுரை உடன்பிறப்புகள்.
ஒரு அதிரடி அத்தியாயத்தை மீண்டும் சந்திக்க இருக்கிறது மதுரை.