இந்தியாவின் கிழக்கு லடாக் பகுதியில், சீனா எல்லை அத்துமீறல்களில் ஈடுபட்டு கிட்டத்தட்ட 18 மாதங்களாகப் போகிறது. அந்த விவகாரம் இன்னும்கூட முழுமையாக முடிவுக்கு வரவில்லை. "லைன் ஆப் ஆக்சுவல் கண்ட்ரோல்' எனப்படும் தீர்வு காணப்படாத இந்திய சீன எல்லைப் பகுதியில், சீனா எட்டு இடங்களில் வீரர்கள் தங்குவதற்கான இடங்களைக் கட்டிவருவது இந்தியாவை கவலையடைய வைத்துள்ளது.
கால்வான் ஏரிப் பள்ளத்தாக்கு முதல் பல்வேறு இடங்களில் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான எல்லைத் தகராறு நீடித்து வருகிறது. கால்வான் ஏரிப்பகுதியில் சீனா வழக்கமான இடத்தி லிருந்து முன்னேறி வந்து கூடாரங்கள் அமைத்து ஆக்கிரமிப்பில் ஈடுபட முயல, இந்திய, சீன படை களுக்கிடையே உரசல் ஏற்பட்டது. அதில் குறுகலான இடத்தில் ஏற்பட்ட கைகலப்பில் இந்தியத் தரப்பில் 20-க்கும் அதிகமான வீரர்கள் பலியாகினர்.
சீனா அத்துமீறி இந்திய எல்லையை ஆக்கிரமித்திருப்பதை இந்தியத் தரப்பு ஆரம்ப கட்டத்தில் ஒப்புக்கொள்ளவே இல்லை. ஆனால், சீன வீரர்கள் இந்திய எல்லையிலிருந்து வெளியேற வேண்டும் என அறிக்கைகள், செய்திகள் வெளியாகின. இதையடுத்து இரு தரப்பிலிருந்தும் பேச்சுவார்த்தை மேற்கொண்ட நிலையில் சிறிது காலமாக இரு தரப்பிலும் அமைதி நிலவிவருகிறது.
இந்நிலையில் சீனா புதிதாக எல்லைப் பகுதியில் எட்டு இடங்களில் "பியூப்பிள் லிபரேஷன் ஆர்மி' எனப்படும் சீன ராணுவத்திற்காக கிழக்கு லடாக்கில் எல்.ஏ.சி.க்கு எதிராக வீரர்கள் தங்குவதற்கான இடங்களைக் கட்டிவருவதாக உளவுத்துறை கண்டறிந்துள்ளது
கிழக்கு லடாக்கின் கரகோரம் பாஸுக்கு அருகிலுள்ள வகாப் ஜில்கா, சுடு நீருற்றுகள், சங் லா, தஷி கோங், மன்ஷா, சுருப் என வடக்கிலிருந்து தெற்காக இந்த எட்டுக் குடியிருப்புகளும் கட்டப் பட்டுள்ளன. இது கடந்த வருடம் ஏப்ரல்- மே மாதத்தில் இரு நாட்டுப் படைகளும் தங்களது பழைய இடத்திலேயே நிலைகொள்ளவேண்டு மென்ற முடிவுக்குப் பின் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு தங்குமிடத்திலும் 80-க்கும் அதிகமான வீரர்கள் தங்கும் வசதி அமைந்துள்ளது.
மேலும், லைன் ஆப் ஆக்சுவல் கண்ட்ரோல் பகுதியில் சீனா மேலும் சில விமான தளங்கள் மற்றும் ஹெலிபேடுகளையும் கட்டியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. ரஷ்யாவில் தயாரான ஏவுகணைகளை வீழ்த்தும் ஆன்டி ஏர்கிராப்ட் கருவிகளையும் நிறுவியுள்ளது.
இந்த அனைத்துச் செய்திகளும் சொல்வது ஒரே விஷயத்தைத்தான். எல்லை விவகாரத்தை சீனா எளிதில் விடப்போவதில்லை என்பதே அது.
கிழக்கு லடாக் அருகே 50,000 வீரர்களையும், ஏவுகணை தடுப்பு சாதனம், போர் விமானங்களை சீனா குவித்துள்ளதையும், ஜின் ஜியாங்க் பகுதியில் 16,000 அடி உயரத்தில் இரவு நேர போர் ஒத்திகை செய்ததையும் கூர்மையான சொற்களால் இந்தியா விமர்சனம் செய்துள்ளது.